என் மலர்
பொது மருத்துவம்

நீரிழிவு நோயை தடுக்க இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகளை பயன்படுத்தலாம் - மருத்துவ நிபுணர்கள்
- இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு பண்டிகை நாளிலும் ‘அளவுக் கட்டுப்பாடு' முக்கியம்.
நீரிழிவு நோயை தடுக்க இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கடந்த 2023-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 2021-ம் ஆண்டிலேயே இந்தியாவில் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள், 13.6 கோடி முன்-நீரிழிவு நோயாளிகள் மற்றும் 31.5 கோடி உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் 'லோகல் சர்கிள்ஸ்' என்ற நிறுவனம் நடப்பு ஆண்டு நடத்திய ஆய்வில், 74 சதவீத நகர்ப்புற குடும்பத்தினர் மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளை உண்கிறார்கள் எனவும், திருவிழா காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர 5 சதவீதம் பேர் தினமும் சர்க்கரை உட்கொள்கிறோம் என்றும், 26 சதவீதம் பேர் மாதத்திற்கு 15 முதல் 30 முறை வரை சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 43 சதவீதம் பேர் தங்களின் குடும்பத்தில் பெரும்பாலானோர் ''சர்க்கரை அடிமைகள்'' என்று கூறியுள்ளனர். அதேசமயம், 70 சதவீதம் பேர் ''சர்க்கரை அளவு 30 சதவீதம் குறைந்த மாற்று தயாரிப்புகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்துவோம்'' எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டாக்டர்கள், நிபுணர்கள், தீபாவளி பண்டிகையால் இந்தியாவில் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரித்து உள்ளது என்றும், அதனால் நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள் இனிப்புகளோடு சாக்லெட், பிஸ்கட், கேக் போன்ற இனிப்புகளையும் அடிக்கடி உண்பதாக தெரியவந்துள்ளது. தீபாவளி என்றாலே இனிப்புகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை தான் மக்கள் அதிகம் எடுத்து கொள்கின்றனர்.
இதோடு இறைச்சி வகைகள் மற்றும் பிரியாணியும் முக்கிய உணவாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தீபாவளி காலத்தில் நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி இனிப்புகளை அதிக அளவில் எடுத்து கொள்வதுதான்.
சமீபகாலமாக சிலர் இனிப்புகளுக்கு பதிலாக பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை பரிசாக வழங்க ஆரம்பித்து உள்ளார்கள். இது நல்ல முன்னேற்றம். உப்பு இல்லாத பருப்புகள் நல்லது. இனிப்புகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்தது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியோடு இனிப்புகளை அனுபவிப்பது தவறு அல்ல.
ஆனால் அவற்றை அளவுக்கு மிஞ்சாமல் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனமான வழி. இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு பண்டிகை நாளிலும் 'அளவுக் கட்டுப்பாடு' முக்கியம். திருவிழாக்கள் மகிழ்ச்சியை தரட்டும். ஆனால் நோய்களை அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






