என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இயர்போன் பயன்பாடு பலமடங்கு அதிகரிப்பு - காதுகளை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை
    X

    'இயர்போன்' பயன்பாடு பலமடங்கு அதிகரிப்பு - காதுகளை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை

    • வயர் அசவுகரியமாக தெரிந்ததால் ‘புளூ டூத்’ வசதியை அறிமுகம் செய்தார்கள்.
    • பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    யாராவது தெருவில் தனியாக நடந்து செல்லும்போது சிரித்துக் கொண்டே நடந்தாலோ அல்லது பேசிக்கொண்டே நடந்தாலோ அய்யோ பாவம்.... ஏதோ ஆகி விட்டது என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது அந்தக் காலம்.

    ஆனால் இன்று யாரை பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நல்லாத்தான் இருக்கிறார்கள். என்ன சொல்வது...? காலம் மாறி போச்சு.

    செல்போன் வந்ததும் காதில் நீண்ட நேரம் வைத்து பேசும்போது சூடாகிறது. இது காதுக்கு நல்லதல்ல என்றார்கள்.

    அதை தவிர்ப்பதற்காக வயருடன் கூடிய இயர்போன் வந்தது. செலபோனில் ஒரு முனையை சொருகி விட்டு மறுமுனையில் இருக்கும் இரண்டு இயர்போன்களையும் இரண்டு காதுகளிலும் மாட்டி கொண்டார்கள்.

    பின்னர் வயர் அசவுகரியமாக தெரிந்ததால் 'புளூ டூத்' வசதியை அறிமுகம் செய்தார்கள். இப்போது செல்போனில் புளூ டூத்தை ஆன் செய்து வைத்து விடுகிறார்கள். காது கேட்கும் கருவி போல் இருக்கும் சிறிய அளவிலான இயர்போனை காதுக்குள் சொருகி கொள்கிறார்கள்.

    காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அதை மாட்டுகிறார்கள். இரவு வீடு திரும்பும் வரை அது காதுகளில் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை மட்டுமல்ல வேலை பார்ப்பவர்கள் கூட காதுக்குள் வைத்திருக்கிறார்கள்.

    கையில் போனை எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் எந்த நேரமும் நினைத்த மாதிரி இனிமையான பாடல்களையோ, நகைச்சுவைகளையோ போட்டு கேட்டு ரசித்தபடியே இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது வேலையில் எந்த அளவு கவனம் இருக்கும்? நடந்து செல்லும்போது சுற்றிலும் நடப்பது அல்லது நெருங்கி வரும் ஆபத்துகளை எப்படி உணர முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால் இதுபற்றி இயர்போனை பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் ஒரு காதில்தான் மாட்டியிருக்கிறோம். மற்றொரு காதில் வெளி உலகில் நடப்பதை கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். இந்த மாதிரி ஒற்றை இயர்பட் என்பது இப்போதெல்லாம் புதிய சமூக அடையாளமாக மாறி விட்டது.

    சிலர் பேசுவது எரிச்சலூட்டும்போது இயர்போன் வழியாக காதில் விழும் மெல்லிய பின்னணி இசை அதில் இருந்து மீட்பதாக கூறுகிறார்கள். நாங்கள் இங்குதான் இருக்கிறோம். ஆனால் இல்லை என்ற ரீதியில்தான் ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள்.

    பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    வெளியில் இருந்து ஒலி பெருக்கி சத்தமோ அல்லது அதிகமான ஏதாவது ஓசையோ கேட்டால் செவிப்பறை கிழிந்து விடும் போல் இருக்கிறது என்று சலித்து கொண்டவர்கள்தான் இப்போது ஒலியை சிந்தாமல், சிதறாமல் அப்படியே காதுக்குள் பாய்த்து கொள்கிறார்கள். இது காதை பாதிக்காதா? என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. பல நேரங்களில் இயர்போன் வழியாக வெளியேறும் ஒலியின் அளவை பொறுத்து போனில் எச்சரிக்கை வருகிறது. "அதாவது அளவுக்கு அதிகமான சத்தம் வருகிறது. ஒலியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கும்.

    ஆனால் அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாத கணக்கில், ஆண்டு கணக்கில் இப்படியே பழக்கப்பட்டால் காது என்னவாகும்? செவி மடல் பாதிக்காதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருக்கிறது.

    இவ்வாறு பயன்படுத்துவது நல்லதல்ல. வாகனங்களில் செல்லும்போதும் பேசிக்கொண்டோ, பாடல்கள் கேட்டுக்கொண்டோ செல்வதால் கவன சிதறல் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம்.

    காது பகுதி மிகவும் சென்சிட்டிவான பகுதி இந்த பகுதிக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் ஒலி மாசு நிச்சயம் செவித்திறனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    Next Story
    ×