search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் நலனை பாதிக்கும் மனஉளைச்சல்
    X

    உடல் நலனை பாதிக்கும் மனஉளைச்சல்

    உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான். அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா? குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.

    * வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.

    * சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.

    * தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.

    * நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.

    * எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

    * பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.



    * மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.

    * சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.

    * உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

    மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக. 
    Next Story
    ×