search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    உடற்பயிற்சியும்.. வியர்வையும்..

    உடலில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கவனத்தில் கொள்ளாவிட்டால் வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.
    உடற்பயிற்சி செய்யும்போது வழக்கத்தை விட வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். வியர்வையின் வழியாக எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் போன்றவையும் வெளியேறும் என்பதால் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்துகிறது. பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை எலக்ட்ரோலைட்டுகளில் உள்ளடங்கி இருக்கும்.

    எலக்ட்ரோலைட்டுகளில் ஏற்றத்தாழ்வு நிகழும்போது தசை பிடிப்பு, உடல் பலவீனம், பக்கவாதம், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படும். இதயம் செயலிழந்து மரணம் கூட ஏற்படக்கூடும். நீண்ட நேரம் வெயிலில் நின்று உடற்பயிற்சி செய்தால் உடல் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும். உடலில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கவனத்தில் கொள்ளாவிட்டால் வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.

    உடற்பயிற்சிக்கான நேரம்: கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் அதிகாலைதான். காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியாவிட்டால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

    ஆடைகள் தேர்வு: கோடை காலத்தில் அடர் வண்ணங்களை கொண்ட ஆடைகளை அணிவதுதான் சிறந்தது. அவை வெப்பத்தை உறிஞ்சக்கூடியவை. வெளிர் நிற ஆடைகள் வெப்பத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அதேவேளையில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அவை அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு உடலை வெப்பமாக்கிவிடும். சருமத்திற்குள் காற்று ஊடுருவுவதற்கு ஏதுவாக தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் பருத்தி ஆடைகளை அணிவதுதான் சிறந்தது. அது வியர்வையை உறிஞ்சக்கூடியது.

    சன்ஸ்கிரீன் பயன்பாடு: கோடைகாலத்தில் மட்டுமின்றி குளிர்காலத்திலும் வெளிப்புற பகுதிகளில் உடற்பயிற்சி செய்பவர்கள் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். சன்ஸ்கிரீனை முகத்தில் பயன்படுத்தாவிட்டால் காலப்போக்கில் முதுமையான தோற்றம் ஏற்படும்.

    தண்ணீர்: உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். உடற்பயிற்சிக்கு இடையேயும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். உடற்பயிற்சியை முடித்த பிறகு சிறிது நேரம் கழித்தும் தண்ணீர் பருகலாம். உடலில் எலக்ட்ரோலைட்டுகளை தக்க வைப்பதற்கு பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். குளிர்பானங்கள் உடலுக்கு ஏற்றதல்ல.

    அறிகுறிகள்: அளவோடு உடற்பயிற்சி செய்தால் போதுமானது. கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால் மயக்கம், குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பு, தலை பாரம், சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள்.
    Next Story
    ×