என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.
    எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும்.

    உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம்.

    அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்). உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம்.



    கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.

    ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.

    அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

    பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
    பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.

    உடற்பயிற்சி செய்வதால் உடல் வலி, அசதி, தேவையற்ற கொழுப்புகள் சேருவது போன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.

    கண்களுக்கு உடற்பயிற்சி: நமது இரு உள்ளங்கைகளையும் இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்தி கொள்ளவும். ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விடவும். இது போன்று 15 முதல் 20 முறை தொடர்ந்து செய்யவும். இதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலை கொண்டு கண்களை மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் நனைத்த டவலை கொண்டு கண்களை மசாஜ் செய்யவும். இதன் மூலம் கண்களின் அயர்வு அகன்று புத்துணர்வு பெருகும்.

    முழங்காலுக்கு உடற்பயிற்சி: தினந்தோறும் மாடிப்படிகளில் ஏறுதல் மூலம் நமது கலோரி குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுகிறது. மாடிபடி ஏறுதலை சற்று வேகமாக மேற்கொண்டால் அது மிக சிறந்த உடற்பயிற்சி. மூட்டுவலி உள்ள பெண்கள் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டாம்.



    குதிகால்களுக்கு உடற்பயிற்சி: பெண்கள் ஒரு சேரில் அமர்ந்தவாறோ அல்லது படுத்து கொண்டோ இந்த உடற்பயிற்சியை செய்யலாம். சேரில் அமர்ந்து கால்களை நேராக இருக்க செய்து பாதத்தின் பின்புறம் குதிகால்களை மட்டும் மேல் தூக்கி இறக்கவும். இது போல் ஒரு நிமிடம் செய்தாலே மேலும் பல தசைகள் நல்ல வலுப்பெறுவதுடன், குதிக்கால்களின் வலி குறையும்.

    கைவிரல்களுக்கான பயிற்சி: பெண்கள் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, கைகளை பயன்படுத்தியே அதிகப்பணிகளை மேற்கொள்ளுவதால்,கைவிரல்கள் வலுவிழந்து, அவ்வப்போது வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும். இதனை போக்க கைகளை அகல விரித்து விரல்களை மட்டும் நன்கு மடிக்கவும். விரல்களின் அடிப்பகுதியை தொடும் அளவிற்கு விரல்களை மடக்கவும்.

    முதுகெலும்புக்கு உடற்பயிற்சி: சம்மணமிட்டு நேராக அமர்ந்து கொள்ளவும். இடது கையை வலது முட்டி பகுதியில் வைத்து கொண்டு வலது கையை எடுத்து பின்புற தரையில் வைக்கவும். பின் அதுபோல் வலது கையை இடது முட்டி பகுதியில் வைத்து இடது கையை பின்புற தரையில் படும் படி வைக்கவும்.இதன் மூலம் முதுகெலும்பு சுழல வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் மூச்சு நன்றாக இழுத்து விட்டு பிறகு சாதாரண நேர் நிலைக்கு வரவும். இதன் மூலம் பெண்களின் இடுப்பு ஓரப்பகுதிகளில் சதை போடாது. எப்போது மெல்லிய இடுப்பாகவும், முதுகெலும்புகள் வலுவாகவும் இருக்கும்.

    கழுத்திற்கு பயிற்சி: பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எழும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நின்று தலையை மெதுவாக சுழற்றவும். இது போல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் காட்சி தரும்.
    காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
    இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

    காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
     
    மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் ( norepinephrine) எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன் (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.

    உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் (blood vessel ) உருவாகும்.


     
    கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்தஅளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.

    முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
     
    தீவிர நோய்களுக்கு உள்ளானவர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்டநாட்களாக இருந்து வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம் உள்ளிட்ட தீவிரநோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; இதன் மூலமாக நோயின் தாக்கம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.
    இந்த ஆசனம் இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் கீல்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.
    செய்முறை

    விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில், கைகளையும் கால்களையும் நீட்டவும். வலதுகாலை நீட்டி, வலதுகாலின் கணுக்கால் தரையில் அழுந்தியவாறு இருக்க வேண்டும். இப்போது இடது கை பெருவிரலால், இடதுகாலை மேலே உயர்த்திப்பிடிக்க வேண்டும். இடது கை நேராக இருக்குமாறு எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி காலை பிடிக்க வேண்டும்.

    இடுப்பு, தோள்கள் ஒரே நேர்க்கோட்டில் விரைப்புடன் இருத்தல் நல்லது. பின்னர் மெதுவாக கைகளையும் கால்களையும் தளர்த்தியவாறு ஆரம்ப நிலைக்கு வரவேண்டும். இதேபோல் மறுபக்கமும் செய்ய வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.



    பலன்கள் :

    இடுப்பு மண்டலத்தை சீரமைக்க உதவுவதோடு, கீழ் முதுகுப்பகுதி தளர்வடைகிறது. இதனால் கீழ் முதுகில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. ஹெர்னியா இறங்குவதை தடுக்கிறது. இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் கீல்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

    இடுப்பு மற்றும் கீழ் முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகள் வலுவடைகின்றன. இதனால் இடுப்புவலி குறைகிறது. மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் இடுப்பு வலிக்கும் இந்த ஆசனம் நல்ல தீர்வு.    
    கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கழுத்து வலி வரும். இந்த வலி வராமல் தடுக்க, பயிற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.
    கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கழுத்து வலி வரும். கம்ப்யூட்டருக்கும் கழுத்துக்கும் என்ன தொடர்பு? சரியான நிலையில் உட்காராததால் வலி வரும். அதுபோல், ஒய்வில்லாமல் வேலைசெய்யும்போதும் கழுத்துவலி வரும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இந்த வலி வராமல் தடுக்க, பயிற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.

    பயிற்சி 1:  முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும் படி சேரில் அமர வேண்டும். பின்னர் வலது கன்னத்தில் வலது கையை பதிக்க வேண்டும். இடது பக்கம் மெதுவாக கழுத்தை திருப்பவும். ஐந்து நொடிகளில் பழைய நிலைக்குத் திரும்பலாம். இதேபோல, இடது பக்கமும் செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் 10 முறை செய்ய வேண்டும்.

    பயிற்சி 2: முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும் படி நாற்காலியில் அமர்ந்து, இரு கைகளையும் கோத்து கொள்ளவும். கட்டை விரல்களை தாடையின் அடியில்வைக்க வேண்டும். தாடையில் கை வைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

    பயிற்சி - 3 : இதேபோல, தலையின் பின்னால் கைகளை கோத்து, கழுத்தை மெல்ல கீழே அழுத்த வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    மூளையில் உள்ள நரம்பு செயல்பாடுகள் சீராகி நரம்புகளைத் தூண்டிவிடும். மூளைக்கு புத்துணர்வு கிடைக்கும். அடிக்கடி வரும் கழுத்துப்பிடிப்பு பிரச்சனை சரியாகும். கழுத்து வலி வராமல் தடுக்கும்.
    உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.
    * உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. முறையற்ற பயிற்சிகளால் எலும்புகளில் உட்காயம் எற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உயரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள்தான்.

    * பெண்கள், அனைத்து வகையான பயிற்சிகளையும் செய்தால் ஆண்களைப்போல தசை வளர்ச்சி பெறுவார்கள் என்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், முறையான பயிற்சியாளர் இருந்தால் பெண்கள் கருவுற்ற நிலையிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

    *  உடற்பயிற்சி செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். ஆணுறுப்பும் ஒரு தசைதான். முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறுமே தவிர, பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. மருத்துவரின் அனுமதி இன்றி வரம்புமீறி ஹார்மோன் மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.



    *  எந்த சிறப்பு உணவைப் பயன்படுத்துவதற்கு முன்பும் அது உங்கள் உடலுக்கு ஏற்றதா, இலக்கை அடைய சரியான தேர்வா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.உடற்பயிற்சிகள் செய்தால் முடி உதிரும் என்பதும் தவறான கருத்து.

    *  பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள். அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

    *  'வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா' என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள். அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.
    உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது என்பது சரியானதாக இருக்காது. முழு உடலுக்கும் செய்வதன் மூலமே உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும்.
    * பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு.

    * சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள். இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது.

    * சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது. ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்.

    * பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.  ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை.

    * உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்.

    * ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.

    * இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம்.

    * பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.
    விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை பார்க்கலாம்.
    ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு, தொப்பை. விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகள் இங்கே…

    பேக் எக்ஸ்டென்ஷன் ஸ்ட்ரெச் (Back Extension Stretch)

    தரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்புறம் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, கைகளை ஊன்றியபடி தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி,  மெதுவாக மூச்சை இழுத்துவிட வேண்டும். பின்னர் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    முதுகுத்தண்டு நேராகும். கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் ஃபிட்டாகும்.

    உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும்.

    அப்பர் ஆப் கன்ட்ரோல் (Upper Ab Control)

    தரையில் கால்களை நேராக நீட்டிப் படுக்க வேண்டும். கால் முட்டியை மடக்கிவைக்க வேண்டும். தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, கைகளால் முட்டியைத் தொட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    மேல் வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்கும். முதுகுத்தண்டு மற்றும் கால் பகுதிகளில் உள்ள சதைப் பிடிப்புகள் நீங்கும்.



    ஆல்டர்நேட் லெக் (Alternate Leg)

    பயிற்சி 1: முட்டி போட்டு உட்கார்ந்து, கைகளை தொடை மீது வைக்க வேண்டும். பின்பு, இடது கால் முட்டியின் மீது அமர்ந்து, வலது காலை நேராக நீட்ட வேண்டும். உடலை வளைத்து, வலது கையால் வலது காலைத் தொட வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர் இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும். இது ஒரு செட். இதேபோல், மூன்று முறை செய்ய வேண்டும்.

    பயிற்சி 2: தரையில் முட்டி போட்டு நிமிர்ந்து நிற்க வேண்டும். இடுப்பில் கைகளை வைக்க வேண்டும். இப்போது, இடது காலை நேராக நீட்டி, இடது கையால் கால் விரல்களைத் தொட வேண்டும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது பக்கம் செய்ய வேண்டும். இதை மூன்று முறை செய்யலாம்.

    பலன்கள்:

    இடுப்புப் பகுதியில் உள்ள சதைப் பிடிப்புகள் நீங்கும். தசைகள் ஃபிட்டாகும்.

    குதிகால் நரம்புப் பிடிப்புகள் நீங்கும்.
    பெரியவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
    பெரியவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. எந்த வகையினராக இருந்தாலும் பயிற்சிகளைத் தொடங்கும் முன்னே அவர்களை டாக்டர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்டிடம் அனுப்பி அவர்களின் உடலை முழுவதும் பரிசோதனை செய்தபின் அவர்களது வழிகாட்டுதல்பேரில்தான் பயிற்சிகளைத் அளிக்கத் தொடங்க வேண்டும்.

    முதலில் எளிய வகை வார்ம் – அப் பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகி, பயிற்சிக்காகத் தசைநார்கள் தயாராகும். அதன் பின்னர் சில ‘ஸ்ட்ரெட்ச்’ வகைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.

    கால்ஃப் முறை (Calf stretch)

    முதலில் ஒரு சுவரின் அருகில் நேராக நிற்கவும். ஒரு காலை நன்றாகத் தரையில் ஊன்றிக் கொண்டு இன்னொரு காலைப் படத்தில் காட்டி உள்ளபடி சுவற்றில் வைக்கவும். சுவரைத் தொட்டபடி இருக்கும் காலுக்கு மெதுவாக அழுத்தம் கொடுத்துப் 10 முதல் 20 வினாடிகள் வரை நிற்கவும்.

    பிறகு கால்களை மாற்றி இதேபோல மீண்டும் செய்யவும். இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

    பலன்கள் :

    ரத்த ஓட்டம் சீராகும், பயணங்களின் போது கணுக்கால் மற்றும் பாதங்களைச் சுற்றி ஏற்படும் வீக்கம் குறையும். குதிக்கால் வலி நீங்கும்.
    புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
    புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே.

    அதேபோல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும்படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெறவேண்டும்.

    அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. செய்துவிட்டு, நாளுக்குநாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

    நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.
    இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதால் இரைப்பை, குடல் போன்ற செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. மேலும் வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவை போக்குகிறது.
    செய்முறை

    விரிப்பில் மல்லாந்து கைகள் உடலை ஒட்டிய படியும், கால்கள் இணைந்து நீட்டியிருக்குமாறும் படுக்கவும். கால்பாதங்கள் இரண்டையும் மூச்சை இழுத்தபடியே சுமார் 45 டிகிரிக்கு உயர்த்தவும். தலை, மார்பு, கை, முதுகுப் பகுதிகளை உயர்த்தி கை நீட்டிய நிலையில் கால் முட்டிகளுக்கு மேல் இணையாக உள்ளங்கை முட்டியை பிடித்தவாறு வைக்கவும். இந்நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். மூச்சை வெளியேற்றியவாறே ஆரம்ப நிலைக்கு வரவும். இதுபோல் 3 லிருந்து 5 முறை செய்யலாம்.

    பலன்கள்

    * அடிவயிற்றுக்கான சிறந்த யோகா பயிற்சியாகும் இது. வயிறில் உள்ள அனைத்து பகுதிகளும் அழுத்தம் பெறுவதால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.

    * கணையங்களின் செயற்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

    * குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த யோகாசனப்பயிற்சி உதவுகிறது.

    * இதை தினமும் தொடர்ந்து செய்வதால் இரைப்பை, குடல் போன்ற செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. மேலும்
    வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவை போக்குகிறது.

    * மலச்சிக்கலுக்கான இயற்கை வைத்தியமாக செயல்படுகிறது.

    * அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

    * கர்ப்பிணிகள் செய்யும் போது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்.
    இந்த ஆசனம் முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்துகிறது. இறுக்கமான முதுகுத் தண்டுவடத்தை சீரமைத்து, நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
    விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக நீட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு இடதுகாலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை அபானாசனத்தில் செய்ததுபோல் மார்பை நோக்கி மடக்க வேண்டும். இப்போது வலதுகாலை இடப்புற பக்கவாட்டில் மடக்கிய நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்.

    இடது கையால் வலக்காலை பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கை வலப்பக்கம் தரையில் நீட்டியவாறும், தலை வலப்பக்கம் அதாவது எதிர்த்திசையில் திரும்பிய  நிலையில் இருக்க வேண்டும். 10 நொடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும்.இப்போது இதேபோல இடது காலை வலப்பக்கமாகவும், இடது கை இடப்பக்கம் நீட்டியவாறும், தலையை இடப்புறம் திரும்பியவாறும் இருக்க வேண்டும். வலது கையால் இடது காலை பிடித்த நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும். இருபுறமும் மாற்றி மாற்றி 5 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்

    முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்துகிறது. இறுக்கமான முதுகுத் தண்டுவடத்தை சீரமைத்து, நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
    * இறுக்கமான தோள்களை தளர்வடையச் செய்கிறது.
    * முதுகெலும்புகள் இணைந்து, தசைகள் நீட்சி அடைகின்றன.
    * செரிமான மண்டலத்தில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதோடு குடல் இயக்கங்களை வேகப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்துவருவதால் வயிற்றில் அதிகப்படியாக சேர்ந்து அழுத்தம் கொடுக்கும் வாயுவை எளிதாக வெளியேற்ற முடிகிறது.
    * அடிவயிற்று உறுப்புகளை மசாஜ் செய்கிறது மற்றும் வயிற்று தசைகளை உறுதிப்படுத்துகிறது.
    ×