search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தை பருவ உடல் பருமனுக்கான காரணங்கள்
    X

    குழந்தை பருவ உடல் பருமனுக்கான காரணங்கள்

    • குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இந்தியாவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். உடல் பருமன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலமாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

    * துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவை விரைவாக உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * இன்றைய காலகட்டத்தில் தெருக்களில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வீடியோ கேம், செல்போன், டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களைத்தான் அதிகம் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதனால் உடல் ரீதியாக செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். சோம்பேறித் தனமும் சுலபமாக குடிகொண்டு விடுகிறது. இவை எளிதில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடுகின்றன.

    * ஆரம்ப நிலையிலேயே உடல் பருமன் பிரச்சினையை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், சுவாச மற்றும் செரிமான பிரச்சினைகள், பக்கவாதம், இதய நோய் போன்றவை இவற்றுள் அடங்கும். குழந்தை பருவத்திலேயே உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடாவிட்டால் மூன்று குழந்தைகளில் இருவர் வாழ்நாள் முழுவதும் உடல் பருமனுடன் காணப்படுவார்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா நீரிழிவு நோயின் தலை நகரமாக மாறி உள்ளது.

    * குழந்தை பருவ உடல் பருமன், பொது சுகாதார பிரச்சினையாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியமானது. அவற்றுள் சில வழிமுறைகள்:

    குழந்தைகளின் காலை உணவில் நார்ச்சத்து, புரதம் இடம்பெற செய்யுங்கள். இவை நீண்ட நேரம் உற்சாகமுடன் செயல்பட வைக்கும்.

    குழந்தைகள் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. உணவை பிரித்து ஐந்து, ஆறு வேளையாக சாப்பிடலாம். அவ்வாறு குறைவாக சாப்பிடுவது எளிதில் செரிமானம் ஆவதற்கு வித்திடும்.

    அந்தந்த பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட செய்யுங்கள். காய்கறி சூப்கள், பழ ஜூஸ்கள் வடிவிலும் உட்கொள்ளலாம். அவை ஊட்டச்சத்துக்களை சமமான அளவில் வழங்க உதவும்.

    உணவை வேகமாகவோ, மெதுவாகவோ சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பதற்கு டைனிங் டேபிளில் அமரும் வழக்கத்தை பின்பற்றலாம். சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும் பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு இனிப்பு பலகாரங்கள் மற்றும் பானங்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இயற்கை சர்க்கரை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வதற்கு ஊக்குவிப்பது நல்லது.

    தினமும் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் உடல் பருமனை தவிர்ப்பதற்கு உடல் செயல்பாடு முக்கியமானது. அவை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும். போதிய உணவு உட்கொள்வது, போதுமான நேரம் தூங்குவது, விளையாடுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவது என குழந்தைப் பருவம் முதலே ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவது உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    Next Story
    ×