search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர் குழந்தைகளை எப்படி கண்டிக்க வேண்டும்?
    X
    பெற்றோர் குழந்தைகளை எப்படி கண்டிக்க வேண்டும்?

    பெற்றோர் குழந்தைகளை எப்படி கண்டிக்க வேண்டும்?

    குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது என குழந்தைகளை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
    குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல. இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை. அதனால் அவைகளை குழந்தைகள் அதிகமாக செல்கின்றன. இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை.

    பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.

    நடத்தைகளை குறைக்க உளவியல் இரண்டு விஷயங்கள் உண்டு. முதலாவது நடத்தைக்குறைப்பிகள் (Negative Reinforcement) இரண்டாவது தண்டனை, முகத்தை சுழிப்பது, பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் முகபாவனை, திட்டுதல், விலகிச் செல்லுதல், எந்த எதிர்வினையும் புரியாமல் இருத்தல், உன் நடத்தை எனக்கு பிடிக்க வில்லை என நேரிடையாகக் கூறுதல் ஆகியவை நடத்தை குறைப்பிகள் ஆகும். அடித்தல், கிள்ளுதல், தள்ளி விடுதல், சூடு வைத்தல் போன்றவை தண்டனை வகையில் அடங்கும்.

    நடத்தை குறைப்பிகளை பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு உடல்ரீதியான தீங்கு ஏதும் ஏற்படாது. ஆனால் தண்டனையைப் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு வலி போன்ற உடல் தீங்குகள் ஏற்படும். மேலும் இதுவரை நடத்தப்பட்டுள்ள உளவியல் ஆய்வுகள் அனைத்துமெ தண்டனையைப் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை, அதனால் கெட்ட நடத்தைகள் குறைவதே இல்லை என்றே கூறுகின்றன.

    குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இவ்வாய்வு முடிவுகள் பொருந்தும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற ரீதியில் தண்டனையளிக்கும் நாடுகளில் கூட குற்ற எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறதே தவிர குறைவதில்லை. குழந்தைகள் படிக்கவில்லை என்ற காரணத்திற்காக அடித்தல், சூடுபோடுதல் போன்ற தண்டனைகளை அளிப்பது நம் கலாச்சாரத்தில் சாதாரணாமாக நடப்பது. படிப்பது போன்ற திறமைகளை கற்றுக் கொள்ளும் விஷயத்தில் தண்டனை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அடிவாங்கிய குழந்தைக்கு பாடத்தின் மீது வெறுப்பு ஏற்படுமே தவிர, அதனை விரைவில் சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது.

    தண்டனை கொடுக்கக்கூடாது என்ற நிலையில் எதிர்மறை நடத்தைகளை குறைக்க நடத்தைக் குறைப்புகளே சிறந்த வழி. அத்தகைய நடத்தை குறைப்புகளில் பாராட்டாமல் விடுதல், வாய் திறந்து நேரிடையாக நீ செய்வது தவறு என கூறுவது ஆகிய இரண்டும்தான் உளவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரண்டுமே மிகச் சிறந்த முறையில் கெட்ட நடத்தைகளை குறைக்கின்றன என்பது உளவியல் ஆய்வு முடிவு எதிர்மறை நடத்தைகளை மேற்கொள்ள நடத்தைக் குறைப்பிகளைக் கொண்டு குறைக்க முயற்சி செய்யும் அதே சமயத்தில் கெட்ட நடத்தைகளின் விளைவுகளை சரியான அறிவுரையாக, விபரமாக குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். பெரியவர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு.

    அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.
    Next Story
    ×