search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரியான பள்ளியை தேர்வு செய்வது எப்படி?
    X
    சரியான பள்ளியை தேர்வு செய்வது எப்படி?

    சரியான பள்ளியை தேர்வு செய்வது எப்படி?

    கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.
    பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது பெற்றோர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று. அதற்கான முதல்படி அவர்களுக்கு ஏற்ற சரியான பள்ளியை தேர்வு செய்வது ஆகும். இன்றைய சூழலில், கல்வி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை சமச்சீர், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி, சிஐஇ என பல்வேறு பாடத்திட்ட முறைகள் உள்ளன. இதில் உங்கள் பிள்ளையின் எதிர்கால கனவிற்கு ஏற்ற பாடத்திட்டம் கொண்ட பள்ளியை தேர்வு செய்யுங்கள். போட்டித் தேர்வுகள், வெளிநாட்டில் மேற்படிப்பை தொடர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் என பலதரப்பட்ட தேர்வுகளை திறனுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் விதமாக அந்த பாடத்திட்டம் அமைந்திருப்பது அவசியம்.

    பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தினமும் பயணம் செய்வது என்பது உங்கள் குழந்தைக்கு உடல் சோர்வுடன் மனச்சோர்வையும் ஏற்படுத்தி விடும். ஆகையால் முடிந்தவரை வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியை தேர்வு செய்வது நல்லது.

    பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதற்கு முன்னதாக அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை தேர்வு பட்டியலில் வைக்காதீர்கள். 20 முதல் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதம் உள்ள பள்ளியில் தான் ஆசிரியரின் கவனம் மாணவர்கள் மீது முழுமையாக கிடைக்கும். போட்டி அதிகம் இருக்கும் வகுப்பு என்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பள்ளியில் சேர்த்தால் குழந்தை கூட்டத்தில் ஒருவராக மாறி வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதில் சிக்கல் உருவாகலாம்.

    காற்றோட்டமாக அமைதியான சூழலே கல்வி கற்பதற்கு ஏற்றது. எனவே வகுப்பறை கணினி அறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரடியாக சென்று பாருங்கள். கழிவறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் கவனித்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.

    கல்வி என்பது ஏட்டு கல்வியை மட்டும் குறிப்பது அல்ல. அதனால் அந்த பள்ளியில் விளையாட்டு மற்றும் மாணவர்களின் பிற திறன்களை வளர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கவனியுங்கள். மாணவர்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை தருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.
    Next Story
    ×