search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பூப்படைதல் : சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை
    X
    பூப்படைதல் : சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை

    பூப்படைதல் : சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை

    பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.
    பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. ‘செகண்டரி செக்சுவல் சிம்டம்ஸ்’ எனப்படும் மார்பக வளர்ச்சி, உறுப்பு பகுதியில் ரோமவளர்ச்சி போன்றவை சிறுமிகளுக்கு ஏற்படும் காலத்தில் அவர்களுக்கு பூப்படைதல் பற்றி சொல்லிக்கொடுக்க தொடங்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    இந்த உடலியல் மாற்றங்கள் பொதுவாக சிறுமிகளுக்கு 8 முதல் 9 வயதில் ஏற்படும். சிறுமிகள் பெண்ணாகும் இயற்கையான உடல் வளர்ச்சி மாற்றம்தான் பூப்படைதல் என்பதையும், அதை மனப்பூர்வமாக வரவேற்க தயாராக இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி, சிறுமிகளுக்கு தன்னம்பிக்கையூட்டவேண்டும். பூப்படையும்போது ரத்தம் போன்ற திரவம் வெளியேறும், அது இயற்கையானது என்றும் கூறவேண்டும்.

    பின்பு மகளை, தாய் தன் அருகில் இருத்தி உடற்கூறு விஞ்ஞானம் பற்றி எடுத்துரைப்பது அவசியம். அதாவது ‘இன்னும் கொஞ்சகாலத்தில் நீ என்னைப் போன்று பெரிய பெண்ணாக வளரத் தொடங்கிவிடுவாய். குறிப்பிட்ட இடங்களில் ரோமம் வளரும். மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும்போது சிறிதளவு ரத்தம் வெளியேறும்’ என்பதை எல்லாம் நிதானமாக எடுத்துரைக்க வேண்டும். இவைகளை சொல்லிக்கொடுக்க நிறைய படங்களும், வீடியோக்களும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. மகளை அருகில் உட்காரவைத்து அதனைக் காட்டி விளக்குவது நல்லது. அப்போது ‘குட் டச்’ எனப்படும் நல்ல தொடுதல், ‘பேடு டச்’ எனப்படும் தவிர்க்கப்படவேண்டிய தொடுதல் பற்றியும் கூறிவிடலாம். உடையால் மூடப்பட்டிருக்கும் உடல் உறுப்பு பகுதிகளை மற்றவர்கள் தொடுவது மோசமான தொடுதல் என்றும், அதற்கு ஒருபோதும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்றும் கூறவேண்டும். இதன் மூலம் சிறுமிகள் பாலியல் வன்முறையில் சிக்காமல் பாதுகாக்கலாம்.

    சில சிறுமிகள் தாய்மார்கள் இது பற்றி சொல்லிக்கொடுக்கும் முன்பே, பூப்படைதல் தொடர்பான விஷயங்களை கேட்கத் தொடங்குவார்கள். அப்போது ஒரு சில தாய்மார்கள் ‘இப்போது இதெல்லாம் கேட்கக்கூடிய விஷயமா?’ என்று நறுக்கென்று கடிந்துகொள்வார்கள். அப்படி கடிந்துகொள்ளக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, வயதுக்கு வருதல் பற்றிய அனைத்து தகவல்களையும் உடலியல் விஞ்ஞானபூர்வமாக விளக்கிச்சொல்ல முன்வரவேண்டும். அப்படி தாய்மார்கள் விளக்கிச்சொல்லாவிட்டால் அந்த சிறுமிகள், தவறானவர்களிடம் கேட்டு, தவறான தகவல்களை பெற்று குழம்பிப்போவார்கள்.

    உடலியல் பற்றி சிறுமிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடைசொல்ல முடியாத நிலை சில தாய்மார்களுக்கு ஏற்படலாம். அப்போது அவர்கள், தங்களுக்கு தெரியாததை ‘தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளவேண்டும். பின்பு அதற்கான விடையை தங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து, மகளுக்கு விளக்கவேண்டும். இது தொடர்பான இயல்பான உரையாடல் தாய்- மகளுக்கு இடையே ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குள் தோழமை உணர்வு தோன்றிவிடும்.

    மகள்கள் எழுப்பும் சில கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அப்போது கோபம் கொள்ளாமல், ‘உன் வயதில் நானும் இப்படிப்பட்ட கேள்விகளைதான் கேட்டேன். அதற்கு காரணம் நமது உடலை பற்றி நாம் அறியாமல் இருந்ததுதான். இப் போது நான் அம்மாவாகிவிட்டதால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன’ என்று கூறி, சிறுபிள்ளைத்தனமான அந்த கேள்விகளையும் எதிர்கொண்டு விளக்கம் அளிக்கவேண்டும்.

    இப்போது பெரும்பாலான சிறுமிகள் அதிக உடல்வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். தங்களுக்கு ஜீன்ஸ் அணிவது சவுகரியமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் பூப்படையும் காலகட்டத்தில் சிறுமிகள் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படி தவிர்க்கவேண்டியதில்லை. பூப்படையும் காலகட்டத்திற்கும்- ஜீன்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் இறுக்கமான உடைகளை பெண்கள் தவிர்க்கலாம்.
    Next Story
    ×