search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் மங்கும் மனித வளம்
    X
    மாணவர்களின் மங்கும் மனித வளம்

    மாணவர்களின் மங்கும் மனித வளம்

    மாணவர்கள் மனோபாவங்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி, சீர்த்திருத்தி, நல்வழிப்படுத்தித் தகுதியுள்ளவர்களாக உருவாக்க எவ்விதமான முயற்சியும் பெரியதாக மேற்கொள்ளப்படவில்லை.
    “நல்லதோர் வீணைச் செய்தே, அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ..” என்றான் பாரதி. இதே போல், கேட்பாரற்ற நிலையில்தான் இளைஞர்கள் உள்ளனர். “இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். சக்தி மிக்க அவர்களே நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் வல்லமை மிக்கவர்கள்” என்கிறோம். ஆனால், யதார்த்தத்தில், எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் பெருத்துள்ளனர். மாறாக, தனிமனித ஒழுக்கமோ, இனம், மொழி, நாட்டுப் பற்றோ, சமூக அக்கறையே சிறிதும் இல்லாதவர்கள். இவர்களின் மனோபாவங்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி, சீர்த்திருத்தி, நல்வழிப்படுத்தித் தகுதியுள்ளவர்களாக உருவாக்க எவ்விதமான முயற்சியும் பெரியதாக மேற்கொள்ளப்படவில்லை.

    இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும், நீதி மன்றங்களிலும், சிறைச்சாலைகளிலும், கோடிக் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டு குற்றவாளி கூண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இவர்களுக்காக அரசாங்கம் பல கோடிகளைச் செலவுச் செய்கிறது.

    18 வயதில் இருந்து 35 வயதுள்ளவர்களில் பெரும்பாலானோர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல வருடங்கள் படித்தவர்கள். ஆனாலும், மனசாட்சிக்கு விரோதமான குற்றங்களைச் செய்து விட்டு இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படியென்றால், தொடக்கக் கல்வியிலிருந்து பள்ளி ஆசிரியர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் சரியாக இவர்களுக்கு வழிகாட்டவில்லை என்பது உறுதியாகிறது.

    ஆரம்பப் பள்ளியிலிருந்தே, ஒவ்வொரு குழந்தையின் மீதும் மிகுந்த அக்கறையும், எதிர்காலத்தில் ஆர்வமும் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட்டிருந்தால் அவர்கள் சமூகத்திற்கெதிரானவர்களாக மாறியிருக்க மாட்டார்கள். பெருமளவில் இழப்பைத் தவிர்த்திருக்கலாம். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் பெருகிக் கொண்டிருக்கும் காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும், சிறைச்சாலைகளையும் கண்டிப்பாகக் குறைக்க முடியும்.

    சமூகத்திற்கெதிரான செயல்களில் படித்த மாணவர்களும் ஈடுபடுகின்றனர். அப்படியென்றால், ஒருவன் மனசாட்சிக்கெதிராக, அடுத்தவர்களைத் துன்புறுத்தி, குறுக்கு வழியில் முன்னேற மிகக் கொடுமையான காரியங்களை நிகழ்த்துகின்றான், என்றால் கற்றக் கல்வி அவனைச் சிந்திக்கத் தூண்டவில்லை.

    மருந்து, மாத்திரைகள் நோயைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், வீரியத்தை இழந்து விட்டன என்று பொருள். அதேபோல்தான் சிந்திக்கத் தூண்டாது கல்வி முறையும் காலாவதியாகி விட்ட மருந்து மாத்திரைகளைக் கண்ணாடி நிலைப் பேழைகளில் வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவார்கள். அதே போன்று, மாணவர்களைச் சிறிதும் சிந்திக்கவோ, மேம்படுத்தவோ வாய்ப்பில்லாத கல்வி முறையை வைத்துக் கொண்டு அடுத்தத் தலைமுறையினரை ஏமாற்றி வருகிறோம்.

    அதே போல், மாணவர்களைச் சிந்தித்கத் தூண்டும் பயிற்சி முறைகள் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். உலகளவில் சாதித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கடந்து வந்த பாதைகள் சொற்பொழிவுகளாக மாணவர்களால் கேட்கப்பட வேண்டும். பயிற்சிகளும், சொற்பொழிவுகளும் உள்ளத்திலும், உடலிலும் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமைக் கொண்டவை.

    பல அரசுப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்களே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், இடிந்த நிலையில் இருக்கும். மாணவர்கள் ஒரு பக்கம் படித்துக் கொண்டிருப்பர். அடுத்தப் பக்கமோ ஆடுகளும், மாடுகளும் மேய்ந்துக் கொண்டிருக்கும். உள்ளூர் மக்களோ பள்ளி வளாகத்திற்குள் குளித்துக் கொண்டிருப்பர். இத்தனைக்கும், அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் பலர் கட்டுமானப் பணிகளில் (கொத்தனார்) திறன் உள்ளவர்களாக இருப்பர்.

    இவர்களின் மனித வளத்தைப் பயன்படுத்திப் பள்ளிச் சுவரைக் கட்டுவதற்கு முதல்வரோ, தலைமையாசிரியரோ ஏன் முயற்சிக்கக் கூடாது? மாணவர்களின் திறன்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்காக, உள்ளூர் மக்கள் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. மாணவர்களின் பொறுப்புணர்ச்சியும் மேலோங்கும். அதேபோல், பல அரசுப் பள்ளி மாணவர்களிடம் வண்ணம் (பெயிண்ட்டிங்) அடிக்கும் திறன் இருக்கும். அவர்களைப் பயன்படுத்திப் பள்ளிச் சுவர்களுக்கு வண்ணமடிக்க முயற்சிக்கலாம்.

    எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்தால் காரியம் நிறைவேறாது. அரசு, உள்ளூர் மக்களின் நிதி, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களின் மனித வளம் முதலானவற்றை ஒருங்கிணைத்தால் பள்ளிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மாணவர்களைக் கொண்டே உருவாக்க முடியும். மாணவர்களிடம் பொதிந்துள்ள ஆற்றல்களை, திறன்களை, மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுகூட மனித வளத்திற்கு எதிரானது. தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் மட்டுமே வாளின் கூர்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும். மழுங்கிப் போன வாளால் பயனில்லை. அதேபோல் திறன்களில்லாதவர்கள் முழு மனிதர்கள் அல்லர்.

    ஒவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். பேச்சுப் போட்டிகள் பரிசுகளுக்காக மட்டுமல்ல. வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கக் கூடியது. மாணவர்களிடமுள்ள அறிவையும், தன்னம்பிக்கையும், ஆளுமைத் திறன்களையும் கண்டறிவதற்கான வாய்ப்பாக எண்ணிப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.

    ஆசிரியர்களின் பங்களிப்போடு சிறு சிறு முயற்சிகள் தொடக்கப் பள்ளியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டால், மாணவர்களின் மனித வளம் பாதுகாக்கப்படும். அடுத்த நொடியே கரைந்துப் போகின்ற வெற்று உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முட்டாள்தனமான சிந்தனை மாணவர்களிடம் இருக்காது. திரையரங்குகளும், மதுக்கடைகளும் மூடப்படும்.

    அரசியல்வாதிகளுக்குப் பின்னால் கைகளில் கொடிகளோடு அணிவகுத்துச் செல்லும் முட்டாள்தனமான போக்கு இருக்காது. இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பார்கள். வெற்றுப் பேச்சுக்களும், வீண் முழக்கங்களும் இருக்காது. இந்திய அரசின் நிதியும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும். அதோடு, காவல் நிலையங்களையும், சிறைச்சாலைகளையும், நீதிமன்றங்களையும் மேம்படுத்தவோ, அதிகரிக்கவோ அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படாது.

    இந்திய இளைஞர்களின் மனித வளத்தை அளவிட வேண்டுமென்றால் மூடியுள்ள சாராயக்கடைகளுக்கும், மதுக்கடைகளுக்கும், திரையரங்குகளுக்கும் முன்னால் ஆர்வத்தோடு காத்திருப்பவர்களைப் பார்த்தாலே புரியும். ஆனால், திறந்திருக்கும் நூலகங்களிலோ கூட்டமிருக்காது. இந்த இழி நிலை மாறாத வரை தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் விடிவுக் காலமில்லை.

    மதுவின் கொடுமைகளைப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். மதுவால் குடல் சரிந்து ஒரே மகனைப் பறிகொடுத்த தாயின் வேதனைகள் காணொலிக் காட்சிகளாகப் பள்ளிகளில் ஒளிப்பரப்ப வேண்டும். ஆனால் செய்வதில்லை. காரணம், இந்த முறை, பாடத்திட்டத்தில் இல்லை. குடிகாரர்களைக் கதாநாயகர்களாகவும், வீரம் மிக்கவர்களாகவும், காதல் ரசனைக் கொண்டவர்களாகவும், தவறைத் தட்டிக் கேட்கும் தைரியம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கும் திரைப்படக் காட்சிகள் உள்ளவரை, இளைஞர்களின் மனித வளத்தைத் திசை மாற்றிச் சீர் செய்ய முடியாது.

    அரிமதி இளம்பரிதி, எழுத்தாளர், புதுச்சேரி.
    Next Story
    ×