search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று தீர்த்தவாரி
    X

    ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று தீர்த்தவாரி

    • இன்று ராமபிரான் தங்க கருட வாகனத்தில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இரவு 8 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழா 5-வது நாள் நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி பிரகாரங்களிலும் ஏராளமான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரம் வந்துள்ளனர்.

    Next Story
    ×