search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்...!
    X

    சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்...!

    • சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும்.
    • வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேராக பார்த்திருக்கிறாள்.

    `அந்த காலத்துல ராமபிரான் வனவாசம் செஞ்ச தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்துல கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த பொய்கைக்குக் கலசரஸ்னு பேரு. அந்த குளத்தோட கரையிலே நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டாங்க. அவங்களில் ஒருத்தர்தான் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கவுஸ்திமதி ரிஷின்னு ஒருத்தர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

    `இந்த சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா...! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்'னு வித்வஜிஹ்மர்கிட்ட கேட்டார்.

    `சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைன்னு கஷ்டப்படுறத விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்யறேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே' என்றார் வித்வஜிஹ்மர்.

    `நமக்கு தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்...! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செஞ்சிருக்காங்க. சுப்ரமணியனும் விநாயகனும், ஐயப்பனும் கூட மணம்புரிந்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள்.

    உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவங்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி. அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏத்துக்குங்க!' அப்படின்னார். அதுக்கு `மார்க்கண்டேயர், துர்வாசர், சனக் குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா?

    அவங்க ஏன் கல்யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்கு சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்'னு சொன்னார் வித்வஜிஹ்மர்.

    கவுஸ்மதி முனிவர் தன்னோட தவ வலிமைய பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

    அதற்கு நாராயணன் `நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

    அதேபோல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம்னு அவங்க ஒருநாளும் நினைக்கலையே...! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

    துர்வாசரும் குந்திதேவிக்கு குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களை தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா...?

    மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம்னு பிரம்மா நினைச்சார். லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார் என்று போய் ஜிஹ்மர்கிட்ட சொல் அவர் வசுமதியைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.

    பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

    கவுஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

    அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராகப் பார்த்திருக்கிறாள்.' சிவராத்திரி அன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×