search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
    X

    மலை உச்சியில் மகா தீபம் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

    • மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும்.
    • 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்களும், கடந்த 6-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்பட்ட போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் தீபத்திருவிழா நடைபெற்றதால் கடந்த காலங்களை விட அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதன் அடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக தீயணைப்பு துறை ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் 5 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாட வீதி மற்றும் கிரிவலப்பாதையில் உடனுக்குடன் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அரசு அலுவலர்கள் கொண்ட 96 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்தனர்.

    மேலும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பஸ்கள் 6 ஆயிரத்து 520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.

    கடந்த 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 36 சிறப்பு ரெயில்கள் உட்பட 75 ரெயில்கள் இயக்கப்பட்டன. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 85 மருத்துவ குழுக்கள் 680 மருத்துவர் மற்றும் மருத்துவர் சார்ந்த பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டன.

    இம்மருத்துவ முகாம்களில் சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான மாத்திரை, மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. 20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 15 பைக் ஆம்புலன்ஸ் மற்றும் 5 மலையேறும் அவசர கால மருத்துவ குழுக்கள் செயல்பட்டு சுமார் 400 நபர்கள் வரை பயனடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 13 ஆயிரத்து 61 போலீசார் ஈடுபட்டனர். 500 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. 85 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

    15 ஆயிரம் குழந்தைகளின் கைகளில் செல்போன் எழுதப்பட்ட டேக் கட்டப்பட்டது. இதன் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளையும், வசதிகளையும் முறையாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தர தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்- அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை, சட்டமன்ற துணை சபாநாயகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×