search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தலவரலாறு
    X

    ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தலவரலாறு

    • ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக கூறுகின்றனர்.
    • கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன.

    கோவில் வரலாறு:

    இந்த ஆலயமானது கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன் இந்த ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளவை போன்ற முழு கல்வெட்டுகள் இல்லை. மேலும் கோயிலின் கட்டிடக் கலையில் பல்லவர்கள் அமைப்பையோ, சோழர்கள் அமைப்பையோ காண முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

    16-ஆம், 17-ஆம் நூற்றாண்டின் தூண் வேலைப்பாடுகள் (பிற்கால விஜயநகர முறையில்) காணப்படுகின்றன. மேலும் 1921-ல் சாந்தோம் மாதாகோவில் அருகே மயிலையைப் பற்றிய 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட செய்திகள் மூலம் கபாலீச்சரம் கடற்கரையில் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததென்றும், அது காலப்போக்கில் கடல் கொண்டதால் இப்பொழுது உள்ள இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

    இப்பொழுது இக்கோவில் மதில்சுவரின் உட்பகுதியில் 2 கல்வெட்டுக்களும், முருகன் சந்நிதியில் ஒரு கல்வெட்டும், அம்பாள் சந்நிதியின் உட்புறத்தில் இரண்டு கல்வெட்டுக்களும் வடக்கு- வெளிப்பிர காரத்தில் வடக்கு நோக்கி, 8 கற்களில் தொடர்பின்றிச் சிதறுண்ட கல்வெட்டுக்களும் உள்ளன. இவைகள் எல்லாம் முன்பு கடற்கரை ஓரம் இருந்த கோவிலில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சில, சாந்தோம் மாதா கோவிலில் இருந்த பெரிய பாதிரியாரான பிஷப் வீட்டில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கந்தபுராணம், கூர்ம புராணம், வராக புராணம் ஆகியவற்றில் கபாலீஸ்வரர் ஆலய மகிமைகள் கூறப்பட்டுள்ளதன் மூலம் இத்தலத்தின் தொன்மை உணரப்படுகிறது.

    தல புராணம் 1:

    கயிலையங்கிரியில் ஒரு சமயம் சிவபெருமானிடம் உமா தேவியார், மகிமை பொருந்திய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபிரானும் சொல்லத் தொடங்கினார். அக்கறையாக கவனித்து வந்த தேவியின் கவனத்தை ஒரு மயிலின் நடனம் திசை திருப்பியது. இதை கவனித்த முக்கண்ணர் "எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கினாயோ அந்த மயிலாகவே பிறக்கக் கடவது" என சபித்தார்.

    சாப விமோசனம் அருளுமாறு அம்பிகை வேண்ட ஈசனும், "தொண்டை மண்டலத்தில் புன்னை மரத்தடியில் மயிலாய் நீ எமை பூஜிக்க, அங்கே வந்து ஆட்கொள்வோம்" என்றருளி மறைந்தார். அவ்வாறே அன்னையும் பூஜிக்க சிவபிரானும் தான் கூறியவண்ணமே ஆட்கொண்டார். மயில் பூஜித்த பதியானதால் மயிலாப்பூர் என்னும் நாமதேயம் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் காபாலிகர்கள் ஈசனை அனுதினமும் ஆராதித்து வந்ததால் கபாலீச்சரம் என்னும் நாமதேயம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    தல புராணம் 2:

    அடி முடி காண இயலாத அண்ணாமலை ஜோதியின் முடியை தான் கண்டதாக தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் சொன்னார் பிரம்மா. பொய் சொன்ன பிரம்மனின் தலையை கிள்ளி வீசினார் ஈசன். ஆனால் அந்த கபாலமோ கீழே விழாமல் ஈசனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் நான்முகன் படைப்பாற்றலை இழந்தார். பிறகு புவியில் வந்து தவமிருந்து பூஜைகள் செய்து மீண்டும் படைப்பாற்றலை பெற்றார். ஈசனை ஸ்தோத்தரித்து வணங்கிய பிரம்மன் அவரிடம், "எனது கபாலத்தை சிறிது காலம் தாங்கியதால் அந்த பெயருடன் சேர்த்து தாங்கள் அழைக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். அவ்வாறே அவரும் கபாலம் + ஈஸ்வரர் கபாலீஸ்வரர் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனின் நாமம் ஸ்ரீ கபாலீஸ்வரர், இறைவியின் நாமம் ஸ்ரீ கற்பகாம்பிகை.

    பிற பெருமைகள்:

    சமயக் குரவரான திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப் பதிகம், திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், கபாலீஸ்வரர் பஞ்ச ரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்காரவேலர் வெண்பா, திருமயிலை யமக அந்தாதி முதலிய பிரபந்தங்கள் இத்தல மூர்த்திகளின் மகிமையை நன்கு விளக்குவன.

    "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்." -திருஞானசம்பந்தர்

    என்ற பதிகத்தை தலத்துப் பாடலாக திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ளார்.

    சென்னை மாநகரிலுள்ள மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் கிழக்கு மாடவீதியில், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் சிறப்புற விளங்குகிறது. கோபுரத்தின் உயரம் சுமார் 40 மீட்டர். எழு நிலைகள்,ஒன்பது கலசங்களுடன் கம்பீரமாய் பக்தர்களை வரவேற்கிறது. இது 1902ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பகீரதன் தவம், சிவபிரானின் எட்டு வீரச் செயல்கள், காளியுடனான போட்டி, அப்பர், சம்பந்தர், அப்பூதி அடிகள், கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள், போன்ற பல சிற்பங்கள் கண்களை கவருவதாக உள்ளன.

    நர்த்தன கணபதி

    பிரதான வாயில் வழியாக நுழைந்தால் எதிரே நர்த்தன விநாயகர் ஒய்யாரமாக வீற்றிருக்கிறார். இவரது நர்த்தன கோலத்திற்கும் சுவையான காரணத்தைக் கூறு கிறார்கள். ஒரு சமயம் முருகன் சிவபிரானின் திருக்கையால் வேல் வாங்கு வதற்காக இங்கு வந்தாராம்.

    சிவபிரானும் அவருக்கு வேலினைவழங்கி ஆசிர்வதித்ததோடு 'தமை யனிடமும் ஆசிர்வாதத்தை வாங்கிக்கொள்' என்றாராம். அவ்வாறே தம்பியால் வணங்கப்பட்டதும் ஆனந்தக் கூத்தாடினாராம் விநாயகர். அதே நர்த்தன கோலத்தில் காட்சி யளிக்கிறார் என்று தல புராணம் விளக்குகிறது.

    ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் சன்னிதி நர்த்தன கணபதி சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு அண்ணா மலையார் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதே சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்புரியும் உண்ணா முலை அம்பாளை சிறிய துவாரத்தின் வழியாகவும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இங்கு கார்த்திகை தீபத்தன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது.

    சிங்கார வேலவர்

    அடுத்து கருங்கல் தளவரிசை அமைக்கப் பட்டுள்ள தெற்குப் பிராகார சுற்றில் அருள்மிகு சிங்காரவேலர் வீற்றிருக்கிறார். மேற்கு பார்த்த திருக்கோல காட்சி. வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் மீதமர்ந்து பக்த கோடிகளுக்கு அருள்புரிகிறார். கபாலீஸ்வ ரரின் கருவறை விமானத்தை விட சிங்கார வேலவரின் கருவறை விமானம் சற்றே உயரமானது. காரணம், ஆதியில் சிங்கார வேலவரின் கோவில் மட்டுமே இங்கிருந்தது. மூன்று முறை கடல் பொங்கி நிலப்பகுதியை அபகரித்துக் கொண்டதால், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்வள்ளல் நயினியப்ப முதலியாரின் புதல்வர் முத்தியப்ப முதலியார் இக்கோயிலை அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

    பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார், வில்வமரம் வடக்கு நோக்கி இருக்கும் அருள்மிகு பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார் சந்நிதிகளை அடுத்து பரமனுக்குப் பிரியமான வில்வ மரமும் காணப்படுகிறது.

    மவுனமாகவே இருந்து பகவானை ஆராதித்து வந்ததால் வாயிலார் நாயனார் என்ற ழைக்கப்பட்டார். மயிலையில் பிறந்தவரான இந்த சிவபக்தர், சிவ பெருமானை உள்ளம் என்ற கோவிலில் இருத்தி, ஞானமாகிய சுடர் விளக்கேற்றி, அன்பாகிய அமுதத்தை நிவேதித்து, பல நாளாக ஞானபூஜை செய்து, சிவபெருமானின் அருள் பெற்றவர். அத்தகைய பெருமைமிகு பக்தருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

    Next Story
    ×