search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்
    X

    சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்

    • கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
    • அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை.

    திருவள்ளூரில் இருந்சேல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் (பூண்டி) கிராமத்தில் அமைந்துள்ளது, மின்னொளி அம்மாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் ஊன்றீஸ்வரர், வெண்பாக்கநாதர், ஆதாரதண்டேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும். கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்கள் பெற்ற 276 சிவாலயங்களில், இது 250-வது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதேநேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17-வது தேவாரத் தலம் இது.

    இந்த ஆலயத்துதின் தீர்த்தம் கயிலாய தீர்த்தம் கொசஸ்தலை ஆறு, தல விருட்சம் இலந்தை மரமாகும். கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் ஊன்று கோல் கொடுத்து உதவியதால். இங்குள்ள இறைவனுக்கு 'ஊன்றீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

    கோவிலின் வெளிப்புற தோற்றம்

    இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் திருவுளம்புதூர் என்ற ஊரில் இருந்தது. 1942-ம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவுளம்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.


    திருவுளம்புதூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக. புதிய கோவில் கட்டுவதற்காக திருவெண்பாக்கத்தில் (பூண்டி) மாற்று நிலத்தை அரசு வழங்கியது.

    திருவுளம்புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர், தூண்கள். சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய கோவிலுக்கு 1968-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தின் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

    தலவரலாறு

    சைவ குரவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருவாரூரில் பரவை நாச்சி யாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டா வது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்.

    சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சி யாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது 'இனிமேல் முதல் மனைவியான பரவை நாச்சியாரை பார்க்கச்செல்லக்கூடாது' என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன்' என்று கூறினார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம், நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது எனக் கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார்.

    உடனே சுந்தரர், அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியில் நின்று, 'உன்னை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

    அதனால் சிவபெருமானுக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார் சுந்தரர், திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும்படி செய்து விட்டார்.

    சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தர வில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.

    இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவபெருமான் இரங்கினாலும், அவருக்கு கண்களை தருவதற்குப் பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார்.

    தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தாருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்று கோலைத் தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தி மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது.

    கொம்பு உடைக்கப்பட்ட நந்தி சிலை

    இதைக்கண்டு சிவபெருமான் ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மனோ, 'தவறு செய்வது மனித இயல்பு எனக்கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தடுமாறிய போது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டி செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன், அம்பாளைத் தடுத்து விட்டாராம்.

    இதனை உணர்த்தும் விதமாக இவ்வாலயத்தில் அருளும் அம்மனின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின்னர் அம்பாள் சுந்தரரிடம், 'மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்ப நிகழ்கிறது.

    தற்போது உன்னுடைய கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினையே. எனவே கலங்காது செல். தகுந்த காலத்தில் ஈசனின் அருளால் உன் பார்வை திரும்பும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்களால் சுந்தரரை சாந்தப்படுத்தினார். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி காட்டினாராம்.

    இதனால் இத்தல அம்மன் 'மின்னொளி அம்பாள்' என்றும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கனிவாக பேசி அருளியதால் `கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பின்னர் இத்தலத்தில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கிய சுந்தரர், காஞ்சிபுரம் சென்றார். அங்கு ஏகாம்பரநா ரை பாடிப்பரவி இடது கண்ணும், திருவாரூருக்கு சென்று தியாகேசனைப் பாடி வலது கண்ணும் பெற்று, பின்னர் பல தலங்களை வழிபட்டு வெள்ளை யானையில் கயிலாய மலையை சென்றடைந்தார் என்பது வரலாறு.

    இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தல மூலவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஆலயத்தில் வழித்துணை விநாயகர், கணபதி, பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகவேலவர், வள்ளி, தெய்வானை, லிங்கோத்பவர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற திருமேனிகளும் உள்ளன.

    இவ்வாலய இறைவனுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இத்தல சுவாமிக்கும், அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் படிப்படியாக பார்வை குறைபாடு நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    Next Story
    ×