search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    17 ஆண்டுகளுக்கு பிறகு  கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்
    X

    17 ஆண்டுகளுக்கு பிறகு கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
    • தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் ராமாயண கால புராண வரலாறு கொண்ட சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    அரசர் காலத்தில் இருந்து தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி போன்ற நான்கு நாட்டைச் சேர்ந்த சுமார் 170 கிராமங்களை சேர்ந்த வர்களுக்கு தலைமைக் கோவிலாக இந்த கோவில் விளங்கியது. இக்கோவில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் தேர்வடம் பிடித்து இழுப்பதில் கருத்து 1998-ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடை பெற்றது.

    கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்த வில்லை. இதையடுத்து பல லட்சம் செலவில் புதிய தேர் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப் படவில்லை, ஒவ்வொரு முறையும் வெள்ளோட்டம் நடக்க முற்படும் பொழுது ஒவ்வொரு காரணங்களால் தடைபட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தேர் வெள்ளோட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

    பல்வேறு தடைகளை தாண்டி ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் புதிய தேர் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறப்பு யாக வேள்விகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு கோவில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. தேரை அறநிலை துறை பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து அறநிலை பணியாளர்கள் வர வழைக் கப்பட்டு இருந்தனர். தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தேர் நகன்றதும் அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க சொர்ணமுர்த்தீஸ்வரா ... என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் முன்பும், வழித்தடத் திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை காண சுற்றி உள்ள கிராமங்களி லிருந்து ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். அவர் கள் தீவிர சோதனைக்கு பின் தேர் வெள்ளோட்டத்தை காண அனுமதிக்கப்பட்னர்.

    தேர் வெள்ளோட்டத்தை காண வந்த பக்தர்கள் இந்த வெள்ளோட்டத்தை போல தேரோட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.


    Next Story
    ×