என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம்,  யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று முன்தினம் இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 10.30 மணி அளவில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்க காலை 11.35 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, மகா சக்தி என்று பக்தி கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக தேர் வலம் வந்து மாலை 4 மணி அளவில் நிலையை அடைந்தது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று தேரோட்டம் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே சமயபுரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி, கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து இருந்தனர். கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படும் பக்தர்களை மீட்கும் வகையில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைபேட்டை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்து இருந்தது.

    இன்று (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×