search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்
    X
    மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

    மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

    மதுரையில் பெய்த மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். மாசி வீதிகளில் உலா வராததால் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் 4 மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் காலை, இரவு என இருவேளையும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனை காண மாசி வீதிகளில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
     
    இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் 7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்கள்.

    பின்னர் அவர்கள் வீதி உலாவிற்கு தயாரான போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சிறிது நேரம் அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் முன்பு சுவாமி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுவாமி வருகைக்காக பக்தர்களும் மாசி வீதியில் கூடியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.

    அதை தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அங்கேயே சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா வருவது தடை செய்யப்பட்டதால் பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கல்யாணம் நடைபெறும் இடங்கள், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.
    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×