search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பக்தர்கள் இன்றி நடந்த பழனி தைப்பூச தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பழனியில் நடைபெறும் தேரோட்டம் கருதப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வர்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக, பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து திண்டுக்கல், பொள்ளாச்சி, தாராபுரம் சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்தனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது.

    இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பழனி தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

    இதேபோல் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை கோவிலில் வழிபாட்டுக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

    தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பழனியில் நடைபெறும் தேரோட்டம் கருதப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வர்.

    கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு தேரோட்டத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தைப்பூசத்தையொட்டி பழனியில் நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது.

    வழக்கமாக ஒவ்வொரு தைப்பூச திருவிழாவின்போதும் விநாயகர், சண்டிகேசுவரர் சிறிய தேரிலும், முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை ஆகியோர் பெரிய தேரிலும் வலம் வருவர்.

    இந்த தேரோட்டமானது, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணதிர 4 ரதவீதிகளில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்கள் இன்றி, கோவில் உட்பிரகாரத்தில் சிறிய தேரில் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.

    முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 15 நிமிடத்தில் முடிவடைந்தது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க கோவில் வாசல் பூட்டப்பட்டது.

    கோவிலில் தரிசன தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்தனர்.

    மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் அவர்கள் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதேபோல் அதிகாலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் சூரியனையும் வழிபட்டனர்.

    தரிசன தடை நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்வதற்காக பழனியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளனர். சில பக்தர்கள், சாலையோரம் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டனர்.
    Next Story
    ×