search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் இருமுடி கட்டுடன் தரிசனதிற்காக காத்திருக்கும் பக்தர்கள்.
    X
    சபரிமலையில் இருமுடி கட்டுடன் தரிசனதிற்காக காத்திருக்கும் பக்தர்கள்.

    சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கலாம், பம்பையில் குளிக்கலாம்

    சபரிமலை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக இந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

    அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்களும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து வெளிமாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானத்திற்கு பாரம்பரிய பாதையான நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக செல்வதை அதிகம் விரும்புவார்கள். இது மலைபாங்கான பாதையாகும்.

    கேரளாவில் பெய்த மழை காரணமாக இந்த பாதையை பக்தர்கள் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது மழை குறைந்து விட்டதால் நீலிமலை பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக இந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அப்பாச்சி மேட்டில் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுபோல பம்பையில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல அவர்கள் ஆற்றில் பலிதர்ப்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கண்காணித்து பக்தர்கள் குளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.

    சபரிமலை சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அங்கு இரவு நேரத்தில் தங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு 500 அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த அறைகளில் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி அறைகளில் தங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×