search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரையில் நேற்று குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரையில் நேற்று குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று தசரா திருவிழா கொடியேற்றம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று அனுமதி இல்லாததால் நேற்றே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு இருக்கும் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் வலம் வருகிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவிழா நடைபெறும் 12 நாட்களில் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் அனுமதி கிடையாது. அதாவது, திருவிழா நடைபெறும் 12 நாட்களில் 5 தினங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, இன்று கொடியேற்றம் நடைபெறும் போது அனுமதி இல்லை என்பதால் நேற்றே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அங்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு, கடற்கரையில் புனித நீராடினார்கள். நேற்று இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    Next Story
    ×