search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்
    X

    அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலை படத்தில் காணலாம்.

    அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

    • இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
    • அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.

    வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.

    மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.

    அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.

    ஆஞ்சநேயருக்கு கோவில்

    கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள்

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.

    Next Story
    ×