search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் தோற்றம், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்
    X
    கோவில் தோற்றம், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்

    ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

    குரு பரிகாரத் தலமாக விளங்குவது ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குருபார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஜோதிட வாக்கு. குருவின் திருவருளால் திருமணம் கைகூடும், காரியத்தடை நீங்கி இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    அப்படிப்பட்ட குரு பரிகாரத் தலமாக விளங்குவது ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். இங்கே தென்திசை நோக்கி அமர்ந்தருளும் தட்சிணாமூர்த்தி தான், சிறப்பு மூர்த்தியாக போற்றப்படுகிறார்.

    இத்தகு பெருமைமிகு தலம் செல்லுவோர், அதனருகில் திகழும் திருமாலின் திருத்தலத்திற்கும் சென்று வழிபட்டால், அனைத்து நற்பலன்களும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆம்.. நீடாமங்கலம் - குடந்தை சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் அருகிலேயே மரச்சோலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது அபயவரதர் திருக்கோவில்.

    கோபுரம் இல்லாத வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்தால் தகதகவென்று மின்னும் இருபது அடி உயரமுள்ள கொடிமரமும், அருகே பலிபீடமும் உள்ளன. கடந்து சென்றால் கருடன் மூலவரைப் பார்த்து தொழுதபடி நிற்கிறார்.

    சுவாமி சன்னிதி வாசலின் வலப்புறம், விநாயகர் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற பெயரில் நமது தோப்புக்கரண சேவையை ஏற்றுக்கொள்கிறார். இன்னொருபுறம் நாகர் நிற்கிறார்.

    கருவறைக்குள் ஏழடி உயரத்தில் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்படி கம்பீரமாக கருத்த திருமேனியுடன் காக்கும் கடவுளான பெருமாளின் திருக்காட்சி நம்மை சிலிர்க்கச்செய்கிறது.

    இடதுகரத்தை இடையில் வைத்தபடி, வலது கரத்தை உயர்த்தி அபயம் அளித்து அபயவரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். மேல் இடக்கரத்தில் வலம்புரிச்சங்கும், மேல் வலக்கரத்தில் சக்கரப்படையையும் ஏந்தியுள்ளார். இந்த சக்கரம் இங்கே சுழன்று பிரயோகிக்கும் நிலையில் இருப்பது தனிச்சிறப்பு. சுவாமியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் - பூதேவியும் அழகுடன் அருட்காட்சி நல்குகின்றனர்.

    பேரொளிப்பெருமாள்

    ஒரு யுகத்தில் திருமால் - திருமகள் திருமணம் இங்கே நடைபெற்றது. அத்திருக்காட்சியைக் காண தேவரெல்லாம் கூடியிருந்தனர். ஆனால் இரு தேவதைகள் மட்டும் சேர்ந்து வரத்தயங்கினர். அவர்கள் சூரியனும், சந்திரனும் ஆவர்.

    திருமால் அவர்களைக் காரணம் கேட்க, சூரிய சந்திரர்கள் ஒன்றாக இணைந்தால் அன்று அமாவாசை தினமல்லவா. எனவே பெருமாள் தனது திருமேனியில் இருந்து கோடி பிரகாசத்தை வெளியிட்டு எங்கும் ஒளிமயமாக்கினார். அதனால் சூரிய - சந்திரர்கள் தரிசனத்துக்கு ஒன்றாக வந்தனர் என்கிறது தலபுராணம்.

    இதைச் சித்தரிக்கும் வகையில் மூலவரின் விமானத்துக்கு வலதுபுறமுள்ள தனிச் சன்னிதியில் பேரழகுடன் திகழும் பெருந்தேவித் தாயாரின் கருவறையில், சூரிய சந்திரர்கள் ஒன்றாக காட்சி தருகின்றனர்.

    சுவாமி சன்னிதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு திசை பார்த்த வண்ணம் லட்சுமி தேவியுடன் நரசிம்மர் தோற்றமளிக்கிறார். இதிலும் மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து காட்சிதரும் லட்சுமி தேவியை, இங்கு சுவாமி வலதுபுறத்தில் அமர்த்தி கைகளால் அணைத்தபடி காட்சி தருவது வேறெங்கும் காணமுடியாதது.

    கணவரின் வலப்புறம் மனைவி இருப்பது திருமணமான கோலத்தைக் காட்டுவதாகக் கொள்வது நமது நடைமுறை. எனவே இவர் ‘கல்யாண லட்சுமி நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார்.

    திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.

    நரசிம்ம மூர்த்திக்கு உகந்த பிரதோஷ காலம், சுவாதி நட்சத்திரம் அல்லது தங்களது ஜென்ம நட்சத்திரத்தில் கல்யாண நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    கோவில் வளாகத்தில் வலதுபுறத்தில் தனிக்கோவிலில் மேற்கு பார்த்தபடி பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சுதர்சனராக அருள் வழங்குகிறார். அவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.

    இவர்கள் தங்கள் பக்தர்களின் பகை, ஏவல், கண்ணேறு போன்ற தீவினைகள் தீர அருள்பாலிக்கிறார்கள்.

    சுதர்சன சன்னிதிக்கு எதிரேதான் தல நாயகியான பெருந்தேவித் தாயார் கோவில் கொண்டுள்ளார். இரண்டுக்கும் நடுவே தல விருட்சமான பலாமரம் உள்ளது. கோவிலின் வடபுறம் தல தீர்த்தம் லட்சுமி தீர்த்தமாக விளங்குகிறது.

    தெற்கு பார்த்த கோவிலில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் சென்று சிதையைக் கண்டு தூதுரைத்து எரியூட்டிய இலங்கைத் தீவு தென்திசையில் தானே இருக்கிறது.

    சோழர் காலத்தில் நிறுவப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்ட அபய வரதராஜப் பெருமாள் ஆலயம் அறநிலையத் துறையின் கீழ் குரு ஸ்தலத்துடன் இணைந்த கோவிலாகும்.

    இந்த ஆலயம் தினசரி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ஆலங்குடி குருபகவானைத் தரிசிக்கச் செல்பவர்கள் அருகே நடக்கும் தூரத்தில் உள்ள அபயவரதரையும் சேவித்தால் இருமடங்கு பலன்கள் கிடைக்குமல்லவா.

    டாக்டர் ச.தமிழரசன்
    Next Story
    ×