search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில் - திருச்சி
    X

    வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில் - திருச்சி

    முதலாம் ராஜேந்திரனின் பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முதலாம் குலோத்துங்கச் சோழன், சோழ நாட்டை ஆண்ட காலத்தில் கி.பி 1080-ம் ஆண்டு அழகாய் கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்களை நாம் அறியலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் ‘புள்ளம்பாடி’ என்றும், இது கானக்கிளியூர் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்த ஊர் என்றும், இந்த ஊரில் உள்ள சிவாலயத்தின் பெயர் ‘மதுராந்தக ஈஸ்வரம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதுராந்தகன் என்பது முதலாம் ராஜேந்திரனின் பெயர் ஆகும். எனவே இவர் பெயரால் இவரது பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் இது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆலயத்தின் வடபுறம் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில்.

    அழகிய முன் முகப்பைக் கடந்ததும், அகன்ற பிரகாரம் தென்படும். அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் நடுவே ஒரு பெரிய ஸ்தூபி உள்ளது. இந்த ஸ்தூபிதான் ஆதியில் சஞ்சீவி ராய பெருமாள் என்ற திருநாமத்தில் மூலவராய் அருள்பாலித்துக் கொண்டிருந்ததாக தல வரலாறு சொல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஸ்தூபியை மகா மண்டபத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, புதியதாக வரதராஜப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி விக்கிரகங்களை செய்து, கருவறையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    இந்த ஸ்தூபியின் நான்கு புறமும் சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர், இறைவனின் திருநாமம் காணப்படுகிறது. ஸ்தூபியானது நெடிந்துயர்ந்து, மகா மண்டபத்தின் உச்சி வரை உள்ளது. இந்த ஸ்தூபியின் அருகே மூலவரை தரிசித்தபடி சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். அடுத்து அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். ஆலயத்தின் தென்திசையிலும் வடதிசையிலும் மூன்று நிலை ராஜ கோபுரங்கள் அழகாக அமைந்துள்ளன.

    இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன், இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி விழாவும் மிகச்சிறப்பாக நடக்கிறது. விரைந்து திருமணம் ஆக வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், மீண்டும் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெண்ணெய் காப்பிட்டு, வெற்றிலை மாலை சூட்டி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், மார்கழி மாதத்தில் 30 நாட்களும் சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந் தேதி இந்த ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் மகா மண்டபத்தில் உள்ள மேடையில் பெரிய அளவிலான ஐயப்பன் படத்தை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். ஐய்யப்பன் விரதம் இருப்பவர்களும், பிற பக்தர்களுமாக பங்கேற்கும் இந்த நிகழ்வில் ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறும். ஆலயத்தின் எதிரே பெரிய திருக்குளம் உள்ளது. இரவு இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கும்.

    தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    வேண்டிய வரம் அருள்வதில் வரதராஜ பெருமாளுக்கு நிகரில்லை என்பது பக்தர் களின் நம்பிக்கை. நாமும் ஒருமுறை பெருமாளையும் தாயாரையும் சென்று சேவித்து வரலாமே!

    திருச்சி மாவட்டம் திருச்சி - அரியலூர் சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புள்ளம்பாடி கிராமம். திருச்சி மற்றும் அரியலூரில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.
    Next Story
    ×