என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.
    இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்கள் அடங்கியுள்ளன. இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையிலும் அபூர்வமான, ஆச்சரியமான, தத்துவரீதியான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    அவற்றில் குறிப்பிடத்தக்கது தொழுகை. தொழுகை ஏன் கடமையாக்கப்பட்டது?

    இறைவனை நினைவு கூர்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு, அவற்றில் சிறந்தது தொழுகை. பாவங்களிலிருந்து ஒரு முஸ்லிமை பாதுகாக்கும் சாதனம் தொழுகை. இவற்றை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    ‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்’ (20:14).

    “இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்’ (29:45)

    ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரத்தை தேடுவதிலிருந்து ஆன்மாவைக் கட்டுப்படுத்தாத வரை தொழுகையை நிறைவு செய்யமுடியாது.

    அடுத்தது நோன்பு. அந்த நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

    மனித உள்ளங்களில் இறையச்சத்தை ஏற்படுத்தவும், மனித நெஞ்சங்களில் ஷைத்தானின் வீண் சந்தேகங்களை அப்புறப்படுத்தவும் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது.

    ‘நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது’. (திருக்குர்ஆன் 2:183)

    அதுபோல ‘ஜகாத்’ ஏன் கடமையாக்கப்பட்டது தெரியுமா?

    உள்ளங்களை தூய்மைப்படுத்துவதற்கும், ஆன்மாக்களை அழகுபடுத்துவதற்கும் தான் ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. உள்ளும், புறமும் ஜகாத்தினால் தூய்மை அடைகிறது.

    ‘(நபியே) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக’ (திருக்குர்ஆன் 9:103)

    அடுத்து வருவது ஹஜ். இந்த ‘ஹஜ் பயணம் கடமையாக்கப்பட்டதற்கு பலவிதமான தத்துவ காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.

    புனித ‘மக்கா’ சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வது ‘ஹஜ்’ என்று அழைக்கப்படுகிறது.

    உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.

    ‘இன்னும் அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்தல் அதன்பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’ என்பது திருக்குர்ஆன் (3:97) வசனமாகும்.

    புனித ஹஜ் பயணம் தொடர்பான நபிமொழிகள் வருமாறு:-

    “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமை இல்லை) என பதிலளித்தார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி).

    “ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அமர் பின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்)

    “ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டில் ஒன்றை மற்றொன்றோடு பின்பற்றுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு ஆகியவைகளின் அழுக்குகளை கொல்லனின் நெருப்பு போக்குவது போன்று, அவ்விரண்டும் ஏழ்மை மற்றும் பாவத்தையும் போக்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி)

    “ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால், அதை அவன் ஏற்றுக் கொள்கிறான், இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால், அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ, இப்னுமாஜா)

    “ஹஜ் பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப்பாதையில் ஏழுநூறு மடங்கு செலவு செய்வதைப் போன்று ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல் : அஹ்மது)

    இஸ்லாமியக் கடமைகளை நான்கு விதமாக கூறலாம். 1) உள்ளம் சார்ந்தது. இதுதான் அடிப்படை. இதற்கு ஈமான் (இறை நம்பிக்கை) என இஸ்லாம் கூறுகிறது.

    2) உடல் சார்ந்தது. இது தொழுகை மற்றும் நோன்பை குறிக்கிறது.

    3) பொருள் சார்ந்தது. இது ஜகாத் மற்றும் ஸதகா, அன்பளிப்பு, வக்ப், அழகிய கடன் போன்ற பொருளாதாரம் சார்ந்த கடமைகளை குறிக்கிறது.

    4) உடல் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கடமை தான் புனித ஹஜ் எனும் கடமையாகும். உடல் பலமும், பணபலமும் ஒன்று சேர பெற்றவர்களுக்குத்தான் ஹஜ் கடமை. இரண்டு தகுதிகளையும் பெறாதவர் அல்லது இரண்டில் ஒரு தகுதியை பெறாதவர் மீது ஹஜ் கடமையாகாது.

    இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் தெளிவுபடுத்துகிறது.

    “அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை” (திருக்குர்ஆன் 3:97)

    ஹஜ் என்பது உள்ளம் ஆசைப்படும் வணக்கம், உயிரோட்டமான வணக்கம். அது ஒரு உலக மகாநாடு. அங்கு சகோதரத்துவம் வெளிப்படுகிறது, சமாதானம் நிலவுகிறது. அன்பு பெருகுகிறது, அமைதி நிலவுகிறது.

    தேசம், இனம், மொழி, நிற வேறுபாடுகளைக் களைந்து ஒரேவிதமான வெண்மை நிற சீருடைகளை அணிந்து இறையில்லத்தில் கூடி தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

    பல உள்ளார்ந்த தத்துவங்களை புனித ஹஜ் பயணம் எடுத்துரைக்கிறது. இத்தகைய தத்துவங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் தமது உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி இஸ்லாமும் விரும்புகிறது. அதுவே இறைவனின் விருப்பமும், இறைத்தூதரின் விருப்பமும் ஆகும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த 24-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை மற்றும் குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் புத்தாடை அணிந்து, தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தி, பெண்கள் வழி நெடுகிலும் குலவையிட்டு வந்தனர்.

    இன்று அதிகாலை 5.20 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    வருகிற 23-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. கலெக்டர் நடராஜன் தர்காவிற்கு வந்து பாதுஷா நாயகம் அடக்கஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். விழா ஏற்பாடுகளை கோர்ட்டு ஆணையர் மாவட்ட நீதிபதி (ஓய்வு) தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு தலைமையில் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    கீழக்கரை தாசில்தார் தமீம்ராஜா, மாவட்ட காஜி சலாஹூத்தீன், முன்னாள் தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் அம்ஜத் ஹூசைன், துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம்,அரூஸி, செய்யது சிராஜ்தீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அசன் இபுராகிம், முகம்மது பாக்கீர் சுல்த்தான், கோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை செய்யது இபுராகிம், ஹாஜி செய்யது ஹூசைன், மெடிக்கல் அகமது இபுராகிம், அ.தி.மு.க. கிளை செயலாளர் அஜ்முல் ரக்மான் நியூ மணீஸ் பேக்கரி நிறுவனர் ஜெயபிரகாஷ் மற்றும் ஹக்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் தனபதி, ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல்ஜாமியா, பாண்டி ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின் வசதி, சுகாதார பணிகள் செய்யப்பட்டன. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தர்கா வளாகத்தில் மதுரை மதினா லைட் நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமையில் மின் அலங்காரம் செய்யப்பட்டு தர்கா மின் அலங்காரத்தால் ஜொலித்தது.

    ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஸ்மீனா உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், கீழக்கரை டி.எஸ்.பி.,பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் பால்பாண்டி, சத்தியபிரபா, திலகவதி, கணேசன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ‘போர் நிறுத்த உடன்படிக்கை செய்ய நபிகளார் விரும்புகிறார், அவர்களது நோக்கம் உம்ரா செய்வது மட்டுமே’ என்று குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரான உர்வா இப்னு மஸ்வூத் தமது கூட்டத்தினரிடம் எடுத்துரைத்தார்.
    உம்ரா செய்வதற்காக நபி முஹம்மது (ஸல்) தமது தோழர்களுடன் மக்கா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய வழியில் காலித் இப்னு வலீத் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

    மலைகளுக்கிடையில் கரடு முரடான கற்களும், பாறைகளும் நிறைந்த பாதை வழியே, ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாக இருந்தது. இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித், குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

    ‘போர் நிறுத்த உடன்படிக்கை செய்ய நபிகளார் விரும்புகிறார், அவர்களது நோக்கம் உம்ரா செய்வது மட்டுமே’ என்று குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரான உர்வா இப்னு மஸ்வூத் தமது கூட்டத்தினரிடம் எடுத்துரைத்தார்.

    போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்து, அந்த இரவே முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்வதற்காகக் கிட்டத்தட்ட எழுபது நபர்கள் முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கிப் பாய்ந்தனர். ஆனால், பாதுகாப்புக்காக நபிகளாரால் நியமிக்கப்பட்ட படை வீரர்கள் எதிரிகளைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். நபி (ஸல்) அவர்கள் உம்ராவை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததால் சமாதானமாகி அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள்.

    அப்போது இறைவசனம் அருளப்பட்டது, அதில் “மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்” என்ற இறைவசனம்  நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நடவடிக்கையைப் பற்றியதாக இருந்தது.

    குறைஷிகள் புரிந்து கொள்ளாமல் சதி செய்வதால் நபி(ஸல்) தமது தோழர் உஸ்மான் இப்னு அஃபானை அனுப்பி “நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று குறைஷிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மக்காவிலிருக்கும் முஸ்லிம்களிடம், ‘அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது’ என்ற நற்செய்தியைக் கூறுங்கள்” என்று உஸ்மானை அனுப்பி வைத்தார்கள்.

    உஸ்மான்(ரலி) அவர்கள் குறைஷிகளிடம் தகவல் தந்தார்கள். செய்தியைக் கேட்ட குறைஷிகள் உஸ்மானை மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். ஆனால், உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று செய்தி பரவியது. ஆகையால் முஸ்லிம்கள் கொதித்தனர். நபி தோழர்களில் ஒரு கூட்டம் “மரணம் வரை போர் புரிவோம்” என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

    முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல என்று உடனடியாக உஸ்மான்(ரலி) அவர்களை அனுப்பி விட்டனர்.

    உடன்படிக்கைக்குக் குறைஷிகள் ஒப்புக்கொண்டனர்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 48:24

    - ஜெஸிலா பானு.
    நபிகளாரின் வாக்குக்கிணங்க முஸ்லிம்கள் தயாராகினர். சிலர் தயங்கினர். நபிகளாருடன் அவர்களது மனைவி உம்மு சல்மாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களும் மக்காவிற்குப் புறப்பட்டனர்.
    மதீனாவிலிருந்து பரவத் தொடங்கிய இஸ்லாம், அரபு தீபகற்பகத்தில் சுடர்விட்டு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறியது. இருப்பினும் மக்காவில் உள்ள புனித பள்ளியான மஸ்ஜிதுல் ஹரமில் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் அனுமதிக்கவில்லை.

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அப்பள்ளியில் நுழைவது போலவும், கஅபாவின் திறவுகோலை பெறுவது போலவும், அனைவரும் சேர்ந்து கஅபாவை வலம் வந்து உம்ரா நிறைவேற்றுவதையும் தம் கனவில் கண்டார்கள். அந்தக் கனவை தோழர்களுடன் மகிழ்ச்சியாக நபி(ஸல்) பகிர்ந்தபோது தோழர்களும் அகம் மகிழ்ந்தனர். கனவை நிறைவேற்ற தயாராகும்படி தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நபிகளாரின் வாக்குக்கிணங்க முஸ்லிம்கள் தயாராகினர். சிலர் தயங்கினர். நபிகளாருடன் அவர்களது மனைவி உம்மு சல்மாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களும் மக்காவிற்குப் புறப்பட்டனர். நபிகளார் போகும் வழியில் ‘துல் ஹுலைஃபா’வில் உம்ராவிற்கான ஆடையை மாற்றினார்கள். நபி முஹம்மது(ஸல்), பலி பிராணிகளுக்கு மாலையிட்டு, மக்களிடம் ‘நாம் போர் செய்யப் புறப்படவில்லை’ என்பதை உறுதியாக அறிவித்து, அவர்களைப் பீதியிலிருந்து வெளியாக்கினார்கள்.

    நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் எப்படியாவது முஸ்லிம்களைக் கஅபத்துல்லாஹ்விற்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று ஒருவர் நபிகளாரிடம் அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    காலித் பின் வாலித் தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், ’தொழுகையில் ருகூவு ஸுஜூதில் (குனிந்து மண்டியிட்டு) இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்களின் அடுத்தத் தொழுகையின் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம்’ என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான்.

    அந்த இறைவசனத்தில், ”நபியே! போர் முனையில் அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து தொழுகையை முடித்ததும் அவர்கள் விலகிச் சென்று உங்கள் பின்புறம் உங்களைக் காத்து நிற்கட்டும்; அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்.

    ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றி கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்கி விடலாமென்று இணைவைப்பவர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் கையில் பிடிக்க இயலாது கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இணைவைப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்” என்ற இருந்தது.

    முஸ்லிம்கள் இந்த இறைவசனத்தின் அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

    குறைஷிகளுக்குப் போரின் காரணமாகக் கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருந்தது. நபிகளார் ஒரு குறிப்பிட்ட காலம் வரை போர் நிறுத்த உடன்படிக்கை, இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது என்ற உடன்படிக்கை செய்து தருவதாகச் சில நிபந்தனைகளை முன் வைத்தார்கள்.

    உம்ரா செய்வது மட்டுமே நபிகளாரின் குறிக்கோளாக இருந்த்து.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 4:102

    - ஜெஸிலா பானு.
    கர்வம் கொண்டவர்கள் இவ்வுலகிலும் கண்ணியம் குறைக்கப்பட்டு அழிவை தேடிக்கொள்வார்கள். மறுமையிலும் நரகத்தில் புகுத்தப்படுவார்கள் என்றால் அவர்கள் வாழ்ந்து தான் என்ன பயன்?
    ஊற்றுக்கண்ணில் இருந்து உபநதிகள் உற்பத்தியாகி ஓடி வருவது போல ‘கர்வம்’ என்ற ஊற்றுக்கண்ணில் இருந்து தான் ஆணவம், அகம்பாவம், இறுமாப்பு, தலைக் கனம், பெருமை, மமதை என்கின்ற அத்தனை கெட்ட குணங்களும் மனித உள்ளங்களில் உற்பத்தியாகிறது.

    அவை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வெளிப்பட்டு மனிதனை தவறான வழியில் நடக்கச்செய்து பாவம் என்ற படுகுழியில் தள்ளு கிறது.

    இது இப்போது தோன்றியது அல்ல. எப்போது ஆதிபிதா படைக்கப்பட்டார்களோ, அதற்கு முன்பே கர்வம், பெருமை போன்ற குணாதிசயங்கள் தோன்றி விட்டன.

    சொர்க்கத்தில் சிறந்த அறிவு ஜீவியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்க்காத காரணத்தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் கர்வம் என்ற பண்பு.

    அதை திருக்குர்ஆன் விவரிக்கும் போது: “நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்’ எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை”. (7:11)

    “(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) ‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?’ என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)’ என்று (இறுமாப்புடன்) கூறினான்”. (7:12)

    இப்படி கர்வம் என்ற பண்பு எப்படி உருப்பெற்றது என்பதை மிக தெளிவாக எடுத்துரைக்கிறது திருமறை.

    அதுபோல ‘பெருமை கொண்டு கர்வத்துடன் திரிபவர்களை இறைவன் நேசிப்பதில்லை’ என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (31:18)

    கர்வம் கொண்டவரால் உயிர் போகும் நிலையிலும் கூட தன் சுய கவுரவத்தை விட்டு கொடுக்க இயலாது. இதற்கு ஒரு சரித்திர சம்பவம் உதாரணமாய் இருக்கிறது.

    பத்ர் யுத்த களத்தில் ஆக்ரோஷமான போர் நடக்கிறது. தளபதி அபு ஜஹில் கால்கள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக போர்க்களத்திலே வீழ்த்தப்பட்டு கிடக்கின்றான்.

    அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்கள் தங்கள் வாளால் அவனது தலையை கொய்ய வருகிறார்கள். இன்னும் சில நிமிடங்கள் அவன் கதை முடிந்து போகும்.

    அந்த கடைசி நேர சந்தர்ப்பத்திலும் கூட, அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்களை அபு ஜஹில் தடுத்து நிறுத்தி, ‘என் தலையை கொய்ய நீதானா கிடைத்தாய்? குரைசியர் குலத்தின் தலைவன் என்ற கிரீடத்தை சுமந்த என் தலை உன் துருப்பிடித்த உடைந்த கத்தியாலா வெட்டப்படவேண்டும்? திரும்பி செல்! நல்ல ஒரு வீரனை அனுப்பு. நல்ல உடைவாளால் என் தலை சீவப்படுவதை நான் விரும்புகிறேன். அதன் மூலம் என் குலத்தின் பெருமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் என் பேரவா’ என்றான்.

    உயிர் மூச்சு நிற்கும் அந்த இறுதி நிலையிலும் தன் கர்வத்தை விட்டு கொடுக்க மறுத்தவன் அபு ஜஹில்.

    தலைக்கனம், ஆணவம் என்பது ஒருவனை எந்த அளவிற்கு வழி கேட்டில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு அபுஜஹில் வரலாறு ஒரு உதாரணம். நரகம் உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தன் கர்வத்தை அவன் விட்டுக் கொடுக்கவில்லை.

    அதை திருக்குர் ஆன் (2:206) எடுத்துச் சொல்லும் போது: “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்” என்று மிக தெளிவாக விளக்குகிறது.

    கர்வம் கொண்டவர்களுக்கு எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அப்பால் ஒரு தண்டனையை அல்லாஹ் நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றான். அந்த தண்டனை எப்படிப்பட்டது என்பதை திருக்குர்ஆன் (34:9) இவ்வாறு எச்சரிக்கிறது:

    “வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவைகளை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர் களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது”.

    உயிரோடு மண்ணில் புதைந்து போவதென்பது வேதனையின் உச்சம் என்றால், வானம் இடிந்து விழுந்து அழிந்து போவது அதைவிட கொடுமையானது.

    ஒருமுறை கண்மணி நாயகம் கூறும்போது, ‘பாவம் செய்பவர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள். நன்மை செய்யும் நல்லடியார்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்’ என்று சொன்னார்கள்.

    உடனே அருகில் இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நாயகமே! பாவம் செய்பவர் களைத் தானே எச்சரிக்க வேண்டும். நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயம் சொல்ல வேண்டும். தாங்கள் மாற்றிச் சொல்வதில் ஏதாவது உட்கருத்து பொதிந்து உள்ளதா?’ என்று வினவினார்கள்.

    கருணை நபிகள் நாதர், ‘ஆயிஷாவே! பாவம் செய்பவர்கள் பாவத்தை உணர்ந்து தவ்பா செய்து கையேந்தி விட்டால் வல்ல ரஹ்மான் மனம் இளகி அவர்களை மன்னித்து புனிதப் படுத்தி விடுவான். ஆனால் நல்லடியார்கள், ‘எப்போதும் நாம் நன்மையைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்’ என்ற நினைப்பில், அது ஒரு எல்லையைத் தாண்டும் போது மமதை என்ற பெருமையை சைத்தான் அவர்கள் மனதில் விதைத்து விட்டால், அது வழி கேட்டில் கொண்டு விட்டு விடும். அதனால் அத்தனை நன்மைகளும் வீணாகி விடும். எனவே தான் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றேன்’ என விளக்கினார்கள்.

    கர்வம் என்ற பாவம் அணு அளவேனும் நம்மில் வந்து விடாமல் காத்து கொள்வதே நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும்.

    தழைய தழைய கரண்டைக்காலுக்கு கீழே ஆடை அணிவதும் கூட கர்வத்தின் அடையாளம். அதற்கான தண்டனை மிக கடுமையானது.

    அல்லாஹ் தனது திருமறையில் (39:60) மிக தெளிவாக சொல்லி விட்டான்: ‘கர்வம் கொண்டவர்கள் செல்லுமிடம் நரகம் மட்டுமே’.

    கர்வம் கொண்டவர்கள் இவ்வுலகிலும் கண்ணியம் குறைக்கப்பட்டு அழிவை தேடிக்கொள்வார்கள். மறுமையிலும் நரகத்தில் புகுத்தப்படுவார்கள் என்றால் அவர்கள் வாழ்ந்து தான் என்ன பயன்?

    ‘கர்வங்களை களைவோம், கருணை கொண்டு பிறரோடு சேர்ந்து வாழ்வோம்’.

    வல்ல ரஹ்மான் அத்தகைய வளம் நிறைந்த வாழ்க்கையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    எப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்கத் தொடங்கினார்களோ அவர்கள் அப்போது எல்லோரும் ஓரணியில் ஒன்றிணைந்து இஸ்லாத்தையும் நபிகளாரையும் எதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
    நாம் பல்லின சமூகத்தில் வாழ்கிறோம். ஆகவே சர்வ சாதாரணமாகச் செய்யும் நமது செயல்கள் சகோதர சமூகத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

    தனியொரு முஸ்லிம் ஒரு செயலைச் செய்தால் அதனை ஒரு தனிமனிதரின் செயல் என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூறுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தோடு தொடர்புபடுத்தித்தான் அதனைப் பார்ப்பார்கள்.

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கூட நிலைமை இவ்வாறுதான் இருந்தது. அப்போது அங்கே கிறிஸ்தவர்கள், யூதர்கள், இப்ராஹீமிய்யாக்கள், சிலை வணக்கம் செய்பவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆயினும் அவர்களுக்கு இடையே எவ்வித சமயம் சார்ந்த கைகலப்போ சண்டையோ நடந்த தில்லை. (தனிப்பட்ட கோத்திரச் சண்டைகளைத் தவிர).

    எப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்கத் தொடங்கினார்களோ அவர்கள் அப்போது எல்லோரும் ஓரணியில் ஒன்றிணைந்து இஸ்லாத்தையும் நபிகளாரையும் எதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

    அன்று அந்த சமூகத்தில் இஸ்லாத்திற்கான எதிர்ப்பு இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். இது இயற்கை. இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த தனியொரு முஸ்லிம் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்றாரா இல்லையா என்றெல்லாம் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பார்ப்பதில்லை. மாறாக அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம் தனிமனிதனே இஸ்லாத்தின் வெளிப்பாடு.

    நாமே இதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். மது அருந்தும் ஒரு முஸ்லிமைக் குறித்தோ அல்லது பொய் சொல்லும் ஒரு முஸ்லிமைக் குறித்தோ சகோதர சமயத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘இவர் உங்களைப் போல் நல்ல முஸ்லிம் இல்லையே. இவரும் எங்களைப் போன்றுதான் எல்லாவற்றையும் செய்கிறார்’.

    சில காலம் முன்புவரை இப்படித்தான் கூறினார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல.. இப்போது என்ன கூறுகின்றார்கள்? ‘முஸ்லிம்களில் கூட உங்களைப் போன்ற நல்லவர்களும் இருக்கின்றார்கள்’.

    இரண்டு வாக்குமூலத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது நல்ல முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று பொருள். எவ்வளவு பெரிய (ஏ)மாற்றம். அவர்களுடைய இந்தப் பார்வைக்குக் காரணம் யார்? நமது பொறுப்பற்ற தன்மைதானே!

    பிற சமூகத்தினரைப் போன்று இஸ்லாமிய சமூகம் குறிப்பிட்ட தவறை செய்திருக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். காரணம், ‘முஸ்லிம்களின் மார்க்கம் அவ்வாறு தவறு செய்வதற்கு இடம் கொடுக்காது. பின் ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள்..?’ என்ற கண்ணோட்டத்துடன்தான் அவர்கள் நம்மைப்பார்க்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் ஒட்டுமொத்த சமூகமும் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறது.

    நம்மை சாட்சியாளர்களாக அல்லாஹ் படைத்துள்ளான். ஆகவே முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனையும் இஸ்லாத்தின் சாட்சியாளர்களாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள். நாம் தவறாக நடந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் களையும் குற்றவாளிக் கூண்டில்தான் ஏற்றுவார்கள். அதைத்தானே அல்லாஹ், ‘நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும்..’ (2:143) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

    முஸ்லிம் என்றால் நேர்மையுடன் இருப்பார்.. தூய்மையுடன் இருப்பார்.. என்பன போன்ற சிந்தனைகளே ஏனைய சமூகத்தினரின் உள்ளங்களில் நம்மைக் குறித்த நல்லெண்ணமாக உள்ளது.

    அந்தத் தாக்கம் தனி மனிதனால் நாசம் செய்யப்படும்போது ஒட்டுமொத்த சமூகம் குறித்த பார்வையும் நாசமாகிவிடுகிறது. எனவே முஸ்லிம் என்பவன் மிகமிக கவனமுடனும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

    நமது வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. வசிக்கும் இடங்களில் முடிந்தவரை கூட்டாகவே வசிக்கிறோம். பள்ளியில் தொழும்போது கூட்டமாகத் தொழுகிறோம். நோன்பை கூட்டாக வைக்கிறோம். ஹஜ்ஜை கூட்டமாக செய் கிறோம். பயானுக்குக் கூட்டம், ஜும் ஆவுக்குக் கூட்டம் என்று அனேக வணக்கங்களைக் கூட்டாகத்தானே செயல்படுத்துகிறோம்.

    எனவே நம்மில் ஒருசிலர் செய்கின்ற சிறு தவறுகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கே கெட்ட பெயர். ஆகவே ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதனும் சமூகப் பொறுப்புணர்வை தமது கடமையாகக் கருதவேண்டும்.

    உயர் பதவியில் இருப்பவர் அல்லது மக்களுக்கு அறிமுகமானவராக இருக்கும் ஒரு முஸ்லிம் இந்தப் பொறுப்புணர்வு விஷயத்தில் அதிக கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் மிகமிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுடைய செயல்பாடுகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    “ஒரு முஸ்லிம் வியாபாரியின் ‘ஈமான்’ (இறையச்சம்) எங்கே இருக்கிறது என்றால்.. தராசின் ஊசி முனையில் இருக்கிறது” என்பார்கள். ஒரு முஸ்லிம் மளிகைக்கடைக்காரரின் ஈமான் அவரது நம்பிக்கை மற்றும் நாணயத்தில் இருக்கிறது. இதுதான் சமூகப் பொறுப்புணர்வு. இதனை உணராமல் ஒருசிலர் செய்யும் தவறுகள்தான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கெட்ட பெயரை வாங்கித் தரு கிறது.

    எங்கு செல்கிறோம் நாம்?

    ‘ஃப அய்ன தத்ஹபூன்’ என்று குர்ஆன் கேட்கிறது. அதாவது ‘நீங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’ (81:26) என்று பொருள். வீட்டைவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ‘இன்று நான் எங்கே செல்கிறேன்..?’, ‘இப்போது செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல் மூலம் நான் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன்..?’.

    நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்விகள் இவை. இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் நாம் எங்கே போகின்றோம் என்று கேட்கவேண்டும். அதுதான் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு.

    ஆக.. ‘இது அப்துல்லாஹ்வின் செயல்..’, ‘இது இப்ராஹீமின் செயல்..’ என்று தனிமனிதச் செயல்களாகப் பார்க்கப்படுவதைவிட சமூகம் சார்ந்த செயலாகவே நமது செயல்கள் பார்க்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால் பெரும்பான்மை நாட்டில் வாழும் முஸ்லிமைவிட சிறுபான்மையினராக வாழும் நாட்டில்தான் ஒரு முஸ்லிம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்களது வருகையின் நோக்கமே நமது நோக்கமாகவும் இலக்காகவும் இருக்க வேண்டும். நபியின் வருகையின் நோக்கம் என்ன? ‘நற்பண்புகளை பூரணம் செய்யவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள். இதுதான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒரு முஸ்லிமின் நோக்கமும் இதுதான். தோற்றத்தாலோ, ஆடையாலோ, மொழியாலோ, தொழிலாலோ, குடும்பத்தாலோ ஒரு முஸ்லிமுக்கு எந்த சிறப்பும் கிடையாது.. கிடைக்காது. மாறாக சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய நடத்தைதான் அவரை நல்ல மனிதனாக அடையாளப்படுத்தும்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    மக்களின் கோபத்தை உணர்ந்த பிறகு நபி(ஸல்) அவர்கள், எவரையும் சித்திரவதை செய்யவேண்டாமெனத் தடுத்துக் கொண்டும், மாறாகத் தர்மம் செய்யுமாறும் தூண்டிக் கொண்டு இருந்தார்கள்.
    ’உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் விளைநிலங்கள் இல்லை. நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்கள்” என்று கூறினர். தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்தியவர்களை நபிகளாரும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் மதீனாவில் தங்கினர்.

    ஆனால் அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பம் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்துக்குட்பட்ட ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களுடைய உபயோகத்துக்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். “ஒட்டகங்கள் மேயும் இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நிவாரணம் கிடைக்கும்” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர். அவர்கள் கருங்கற்கள் நிறைந்த 'ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக மதம் மாறிவிட்டனர்.

    மேலும், நபி(ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் யஸார் (ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களைத் தங்களுடன் ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்களைத் தேடிப் பிடித்து வர நபி (ஸல்) இருபது தோழர்களை, குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.

    அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்ட போது அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைச் சித்திரவதைச் செய்துக் கொலை செய்தார்களோ அவ்வாறே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று அவர்களின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு வைத்தும,  அவர்களின் கை கால்கள் வெட்டியும் மதீனாவின் புறநகரான 'ஹர்ரா' பகுதியில் அவர்களை விட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டும் போயினர்.

    மக்களின் கோபத்தை உணர்ந்த  பிறகு நபி(ஸல்) அவர்கள், எவரையும் சித்திரவதை செய்யவேண்டாமெனத் தடுத்துக் கொண்டும், மாறாகத் தர்மம் செய்யுமாறும் தூண்டிக் கொண்டு இருந்தார்கள்.

    அகழ் போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததால் இறைமறுப்பாளர்களின் ஆற்றல்கள் சரியத் தொடங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டனர். இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில் இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

    இஸ்லாமின் முன்னேற்றத்தை ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ மூலம் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

    ஸஹீஹ் புகாரி 4:64:4192.

    - ஜெஸிலா பானு.
    உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்.
    ஆயிஷா(ரலி) அவர்களின் மீது சுமத்தப்பட்ட அவதூறை நிவர்த்தி செய்யும் வகையில் இறை வசனங்கள் அருளப்பட்டன.

    “உங்கள் கூட்டத்தினரும் பழி சுமத்தினார்கள். முஸ்லிமான ஆண்களும் பெண்களுமாகிய நீங்கள், உங்களைப் போன்ற முஸ்லிமானவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? சாட்சியில்லாத அவதூறுகளை நம்பியிருக்கக் கூடாது. உண்மையில்லாத ஒன்றை உங்கள் நாவுகளால் சொல்லித் திரிகின்றீர்கள்.

    இல்லாத ஒன்றை திரித்துப் பேசுவது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய பாவமானதாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் இத்தகைய மானக்கேடான விஷயங்களைப் பரப்பினால் அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு. பழி சுமத்திய ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் அதற்கொப்ப தண்டனை இருக்கிறது.

    அப்பழி சுமத்தியவர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் யாவும் அறிந்தவன், விவேகம் மிக்கோன். இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் உங்களை வேதனை தீண்டியிருக்கும். மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனங்களின் மூலம் ஆயிஷா(ரலி) அவர்களின் குற்றமற்ற நிலை தெளிவாகியது.

    இந்தச் சம்பவத்தை இட்டுகட்டிய மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக மூல காரணமாக இருந்த அப்துல்லாஹ் இப்னு உபைக்குத் தண்டனை வழங்கவில்லை. உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு விடுகிறதோ அவர்கள் மறுமையில் தண்டிக்கப்பட மாட்டார்கள். மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென அல்லாஹ் திருக்குர்ஆனில் இவனைப் பற்றிச் சொல்லிவிட்டதால், இவனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை குலத்தைச் சேர்ந்தவர்கள் அவனுக்காகப் பரிந்து பேசியமைக்காக வெட்கப்பட்டனர்.

    அவதூறு சம்பவத்தை இட்டுகட்டிய மிஸ்தஹுக்காக ஆயிஷா(ரலி) அவர்களின் தந்தை அபூ பக்ர்(ரலி) அவன் ஏழை என்பதாலும் தம் உறவினர் என்பதாலும் அவனுக்கு உதவித் தொகை தந்து வந்தார்கள். தன் மகளைப் பற்றித் தவறாகப் பேசியதால் செலவு செய்வதை நிறுத்துவதாக அறிவித்தார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்.

    அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் அதனை மன்னித்துப் பிழைகளைப் பொருட்படுத்தாமல்விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்' என்னும் திருக்குர்ஆனின் வசனத்தை அருளியதும், அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறி, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள்.

    ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சனையால் உண்டான சந்தேகங்கள், குழப்பங்கள், அவதூறுகள் மதீனாவை விட்டு முற்றிலுமாக அகன்றன.

    ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141, 5:65:4750, திருக்குர்ஆன் 24:11-25

    - ஜெஸிலா பானு.
    இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில் ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது;
    ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு காரணமாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியைப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள்.

    உஸாமா(ரலி) அவர்களிடம் கேட்டபோது நபிகளாரின் குடும்பத்தார் மீது தாம் கொண்ட பாசத்தை வைத்து, “இறைத்தூதர் அவர்களே! தங்களின் துணைவியரிடம் நல்ல குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை' என்று உஸாமா கூறினார்கள். அலீ(ரலி) அவர்களோ, நபி(ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்” என்று சொல்லியதோடு,“பணிப்பெண் பரீராவைக் கேளுங்கள்” என்று ஆலோசனை வழங்கினார்.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பணிப்பெண் பரீராவை அழைத்துக் கேட்டபோது, “இறைவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய கவனக்குறைவான இளவயது பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

    தனது ஈரல் பிளந்துவிடும் அளவுக்கு அழுது கொண்டிருந்த ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ஆயிஷாவிடம் நபிகளார், “உன்னைக் குறித்து எனக்குச் சில செய்திகள் வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிடு. பாவத்தை ஒப்புக் கொண்டு மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னித்துவிடுவான்” என்று கூறினார்கள்.

    அதற்கு ஆயிஷா, “நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனக்கும் உங்களுக்கும், யூசுஃப்(அலை) அவர்களின் தந்தை நபி யாகூப்(அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். அதாவது இதைச் சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” என்று கண்ணீர் மல்க மிகத் திடமாக திருக்குர்ஆனின் 12-ஆம் அத்தியாயத்தின் 18-வது இறைவசனத்தை நினைவுபடுத்தினார்.

    அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில் ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

    அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, 'ஆயிஷா! அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்' என்று கூறினார்கள். உடனே ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் ஆயிஷாவை அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்லச் சொன்னார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்' என்றார்கள்.

    ஆயிஷா(ரலி) அவர்களின் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் பத்து வசனங்களை அருளியிருந்தான் 24:11-20.

    அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

    ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141, 65:4750

    - ஜெஸிலா பானு.
    புகழ்வாய்ந்த ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடிஏற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் அடக்கமாகி உள்ள மகான் குத்புசுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாவின் 843-வது வருட உரூஸ் என்ற சந்தனக்கூடு திருவிழா வருகிற 15-ந் தேதி மாலை தொடங்கி 16-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி புனித மவுலீது ஓதும் நிகழ்ச்சி தொடங்கி தினமும் மாலை தர்காவில் மகானின் புகழ் பாடப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடிஏற்றத்திற்காக தர்காவின் முன்புறம் அடிமரம் ஏற்றப்பட்டது. சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடிஏற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, ஏர்வாடியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் அனைத்து சமுதாய மக்கள் ஊர்வலமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானையில் இளம்பச்சை வண்ண நிறத்திலான கொடி எடுத்து வரப்பட்டது.

    ஊர்வலத்தில் குதிரைகள் முன்னால் அணிவகுத்து சென்றன. வாண வேடிக்கைகள், தாரைதப்பட்டைகள் முழங்க கொடி ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது. இந்த ஊர்வலம் தர்காவை 3 முறை வலம்வந்தபின் உலக அமைதிக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி சலாகுதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    இதனை தொடர்ந்து தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு ஆகியோர் மேற்பார்வையில், தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடிஏற்றப்பட்டது.
    எதிரியாக இருந்தாலும் ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் ஒருபோதும் வெளிவராது என்பதும் சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமே.
    ‘சமூகப்பொறுப்புணர்வு யார் மீது கடமை?’ என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் கடமை. ஒவ்வொருவருடைய தகுதி, தொழில், அங்கீகாரம், திறமை, ஆற்றல் என்பதைப் பொறுத்து இதன் பரிணாமங்கள் மாறுபடலாம். ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவர் மீதும் இது கடமையே.

    ‘நான் ஒரு சாதாரணமானவன் தானே, எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை’ என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.

    ‘ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவன் யார்? எனில் தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    சமூகப் பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. உண்மையில் இது அருவருப்பான விஷயம். ஆயினும் பேசியே ஆகவேண்டிய விவகாரம். சர்வ சாதாரணமாக நாம் காறி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறோம். ஏனையவர்களுக்கு அது எவ்வாறு இடைஞ்சலைத் தரும் என்பது குறித்து கவலைப்படுவதில்லை.

    நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூடிவிட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபின்னரே பெருமானாருக்கு அது நினைவுக்கு வந்தது. ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு பள்ளிவாசலுக்கு அருகே வந்து துப்பலைத் தேடினார்கள். அதனை மண்போட்டு மூடினார்கள்.

    பின்னர் இவ்வாறு கூறினார்கள்: ‘இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்’ (பத்ஹுல் பாரி).

    இந்த ஒரு சிறிய செயலின் மூலம் எவ்வளவு பெரிய சமூகப்பொறுப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் இங்கே வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

    ‘நகத்தை வெட்டினால் கூட புதைக்க வேண்டும்’ என்று இஸ்லாம் கூறுகிறது. ‘வெட்டப்பட்ட முடி களையும் நகங்களையும் மண்ணில் புதைத்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்’ (தபரானி).

    அவ்வாறு செய்வது மார்க்க கடமை என்பதற்காக அல்ல, மாறாக சமூகப் பொறுப் புணர்வு. அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்கவியல்.

    அடுத்தவர் அருகில் இருக்கும்போது சப்தமாக உரையாடுவதும் அவ்வாறே அனுமதிக்கப்பட்டதல்ல. குர்ஆன் ஓதும்போதுகூட அதிக சப்தமாக ஓதக்கூடாது என்று இஸ்லாம் கற்றுத்தருகிறது என்று சொன்னால், சமூகப் பொறுப்புணர்வு என்பது முஸ்லிமின் மீது கட்டாயக் கடமை என்பதையே இவை வலியுறுத்துகின்றன.

    சமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு பக்கம்தான் அடுத்தவரை புன்னகையுடன் எதிர்கொள்வது. ‘உங்கள் சகோதரரைப் பார்த்து புன்னகைப்பது ஒரு தர்மம்’ என்று இஸ்லாம் கற்றுத் தருவதன் பொருள் என்ன? நான் உங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறேன் என்றால் அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

    உதாரணமாக, ‘நான் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறேன் என்றால்... உங்களைப் பார்ப்பதில் நான் மகிழ்வுறுகிறேன், நான் சந்தோஷமாக இருக்கின்றேன், உங்களோடு உரையாட விரும்புகின்றேன், உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த பகையும் கிடையாது, உங்களுடன் உறவை வளர்க்க விரும்புகின்றேன்...’ என்று ஆயிரம் மொழிகளை அந்தப் புன்னகை சொல்லிச் செல்கிறது.

    அவ்வாறே ‘நோவினை தரும் பொருட்களைப் பாதையில் இருந்து அகற்றுவதும் ஒரு தர்மமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். சமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு கோணம் இது. நோவினை தரும் பொருட்களை நீக்குவது தர்மம் என்றால், அவற்றை பாதையில் போடுவது அதர்மம் அல்லவா..! நமது வீதிகளை குப்பைகளாலும் சிறுநீராலும் நிரப்புவது சமூகப் பொறுப்பற்ற தன்மையின் கடைசி இழிநிலை. பொறுப்பற்ற தன்மையை இதைவிட மோசமாக வெளிப்படுத்த முடியுமா என்ன!

    மனித வாழ்வு என்பது மனம்போன போக்கில் வாழ்வதோ, வீண் விளையாட்டுமோ அல்ல. எதை வேண்டுமென்றாலும் செய்யலாம், எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல. சமூகப் பொறுப்புணர்வை எந்த அளவுக்கு இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்றால்...

    ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’ என்று திருக்குர்ஆன் (49:12) கூறுகிறது.

    பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. சந்தேகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் எதையும் துருவித்துருவி ஆராயச் சொல்லும். இவ்வாறு ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம் பேச வழிவகுக்கும். புறம் பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை கொலைக்கு வழி வகுக்கும்.

    ஆக, பிறர் குறித்த கெட்ட எண்ணம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். எனவே நாம் நினைப்பது போன்று கெட்ட எண்ணம் என்பது வெறுமனே ஒரு எண்ணம் அல்ல. அதுசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். அடுத்தவர் குறித்த நல்லெண்ணம் கொள்ளுதலும் சமூகப் பொறுப்புணர்வே.

    ‘ஒரு முஸ்லிமை இழிவாக எண்ணுவதே மனிதனுக்கு தீமையால் போதுமானதாகும்’ என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் இன்னொரு அமுத வாக்காகும். (திர்மிதி)

    எதிரியாக இருந்தாலும் ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் ஒருபோதும் வெளிவராது என்பதும் சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமே.

    மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடம் அனுப்பி வைத்தபோது, ‘மென்மையாகவும் கனிவாகவும் அவனிடம் பேசுமாறு’ அல்லாஹ் ஆணை பிறப்பிக்கின்றான்.

    ஏனெனில் கடுமையான பேச்சு என்பது பொறுப்பற்ற செயலின் வெளிப்பாடே.

    எனவே சமூகப் பொறுப்புணர்வு என்பது நல்லெண்ணத்தில் தொடங்கி பின்னர் சொல்லாகவும் செயலாகவும் பரிணாமம் பெறுகிறது.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே இருந்து வந்தது. தான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான், அதை அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் ஆயிஷா(ரலி).
    முஹம்மது நபி (ஸல்) மற்றும் படையினர் மதீனா திரும்பிய பிறகும் ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு அடங்கியபாடில்லை. தீயவன் அப்துல்லாஹ் இப்னு உபை கதைகள் புனைந்தபடி இருந்தான்.

    ஆனால் வதந்திகளைப் பற்றிய செய்தி எதுவுமே ஆயிஷா(ரலி) அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஒரு மாத காலம் நோயுற்று இருந்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபிகளார் வழக்கமாகக் காட்டுகிற பரிவைக் காட்டத் தவறியிருந்தார்கள். அதனை நன்கு உணர்ந்திருந்த போதும்,  ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அதற்கான காரணம் மட்டும் விளங்கவில்லை. முஹம்மது நபி(ஸல்) ஆயிஷா அவர்களிடம் செல்வார்கள், சலாம் சொல்வார்கள், நலம் விசாரிப்பார்கள், பிறகு போய்விடுவார்கள்.

    அந்தக் காலகட்டத்தில் வீடுகளுக்கு அருகில் கழிப்பிடங்களை அமைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி அமைப்பதை தொந்தரவாகக் கருதி வந்தனர். அதனால் இதற்காகவென்று இரவு நேரங்களில் ‘மனாஸிஉ’ எனப்படும் புறநகர்ப் பகுதிக்குச் செல்வார்கள். நோயிலிருந்து குணமடைந்து ஆயிஷா(ரலி), கழிப்பிடமிருக்கும் புறநகர்ப் பகுதிக்கு மிஸ்தஹின் தாயாரின் துணையுடன் சென்றார்கள்.

    ஆயிஷா(ரலி) அவர்களின் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியின் மகள்தான் மிஸ்தஹின் தாயார். அவருடன் உரையாடிக் கொண்டே செல்லும்போது அவர் ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று தன் மகனையே சபித்தார். உடனே ஆயிஷா(ரலி) மறுத்து “மிக மோசமான சொல்லை சொல்லி ஏசுகிறீர்கள்” என்றார்.

    அதற்கு மிஸ்தஹின் தாயார் “மக்கள் பேசும் அவதூறுகளை நீங்கள் கேள்விப்படவில்லையா? என் மகன் என்ன கூறினார் என்று தெரியாதா?” என்று வினவினார். அதன்பிறகு அவரே அத்தனை அபாண்டத்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு கதிகலங்கிய ஆயிஷா(ரலி) அவர்களின் உடல்நிலை இன்னும் மோசமானது. தமது தாய் தந்தையரிடம் செல்ல அனுமதி கேட்டார்கள் ஆயிஷா(ரலி). நபிகளார் அனுமதி தரவே, தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்ற ஆயிஷா(ரலி) நேராகத் தன் தாயாரிடம் சென்று “அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டார்.

    அதற்கு அவருடைய தாயார் தன் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக “அன்பு மகளே! இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே, சக்களத்திகள் பலரும் இருக்க, உன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசமாலிருந்தால்தான் வியப்பு” என்று கூறி மழுப்பினார்கள். இருப்பினும் ஆயிஷா(ரலி) அவர்களுடைய மனம் ஒப்பவில்லை. மக்கள் தன்னைப் பற்றித் தவறாகப் பேசுவதை எண்ணி அழுதார்கள், கண்ணீர் வடித்தார்கள். இரவு முழுக்க உறங்காமல் அழுதார்கள்.

    அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே இருந்து வந்தது. தான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான், அதை அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் ஆயிஷா(ரலி).

    (தொடரும்).

    ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141                        

    - ஜெஸிலா பானு.
    ×