என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இறைநிராகரிப்பிலிருந்து செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் தானாவே அழிந்துவிடுமென்று ஆறுதல் அளித்தார்கள் நபிகளார்.
    காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக நின்றிருந்தபோது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையைத் தொழுவதைக் கண்டு, “தொழுகையில் ருகூவு ஸுஜூதில் (குனிந்து மண்டியிட்டு) இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை, அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்களின் அடுத்தத் தொழுகையின் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார்.

    ஆனால், அஸர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது. அந்த நொடியிலிருந்து காலித் இப்னு வலீத்துக்கு இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு வந்தது. இஸ்லாத்தால் கவரப்பட்டவர் இறைத்தூதரின் குணநலன்களாலும் கவரப்பட்டுத் தன்னுடைய நோக்கத்தைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார்.

    ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை நடந்து முடிந்ததும் அடுத்து என்ன முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்த காலித் பின் வலீத் அவர்களுக்கு மதீனாவிலிருந்து ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைக் காலித்தின் சகோதரர் எழுதியிருந்தார். அவர் ஏற்கெனவே இஸ்லாத்தை ஏற்றவர். கடிதத்தில் காலித்தை நலம் விசாரித்ததோடு இறைத்தூதர் அவர்களும் காலித்தை விசாரித்த செய்தியை அதில் குறிப்பிட்டிருந்தார்.

    அதைப் படித்து மகிழ்ந்த காலித் தமது குழப்பத்திலிருந்து விடுபட்டார். காலித் பின் வலீத் அவர்கள் என்றாவது ஒருநாள் இஸ்லாத்தை ஏற்பார் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில் அவர் சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

    குழப்பத்திலிருந்து விடுப்பட்டவராக காலித் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வாழ்க்கையின் திசை மாறப்போகிறது, ஒளிமயமாகப் போகிறது என்பதை உணர்ந்தவர் மதீனாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவரைப் போலவே இஸ்லாத்தை ஏற்க முடிவெடுத்த உதுமான் பின் தல்ஹா அவர்களும் அமர் பின் ஆஸ் அவர்களும் காலித் பின் வாலீத்துடன் இணைந்து கொண்டனர். இஸ்லாத்தை ஏற்க மதீனா விரைந்தனார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தன் வாளின் பலத்தால் தாம் இஸ்லாத்திற்கு இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரினார் காலித்.

    இறைநிராகரிப்பிலிருந்து செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் தானாவே அழிந்துவிடுமென்று ஆறுதல் அளித்தார்கள் நபிகளார். இருப்பினும் தமக்காகப் பிரார்த்திக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்ட காலித் பின் வலீத்(ரலி) அவர்களுக்காகவும், உதுமான் (ரலி) அவர்களுக்காகவும், அமர் பின் ஆஸ்(ரலி) அவர்களுக்காகவும் நபி(ஸல்) இறைவனிடம் அவர்களின் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுமாறு பிரார்த்தனை செய்தார்கள்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 4:102

    - ஜெஸிலா பானு.
    அவர் புகழைப்போற்றுவோம். அவர் காட்டிய வழியில் நாம் அனைவரும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவோம், ஆமீன்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 40-ம் வயதில் தன்னை ‘இறைவனின் தூதர்’ (நபி) என்று பிரகடனப்படுத்தினார்கள். அதற்கு முன்பும், அதன்பிறகும் மக்கள் மத்தியில், உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் உயர் பண்பு களை கொண்டு ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள்.

    இனிய குணமுடைய நபிகளாரின் சொல்லாற்றல் தெள்ளத் தெளிவாக, இலக்கிய நயத்துடன் இருக்கும். தம் வாழ்நாளில் ஒருபோதும் அவர்கள் இறைவனுக்கு இணை வைத்தது இல்லை. மது அருந்தியது இல்லை. பொய் சொன்னது இல்லை. அருவருப்பான, சொல், செயல் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை.

    மனிதாபிமானம் நிறைந்தவராக விளங்கிய நபிகளார் தன்னிடம் உதவிகேட்டு வருபவர்களுக்கு, ‘இல்லை’ என்று கூறாமல் உதவி செய்யக்கூடியவர்கள். தன்னிடம் இல்லையென்றாலும் பிறரிடம் பெற்று உதவிகேட்பவரின் கஷ்டத்தை போக்க கூடியவர்களாக இருந்தார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாக விளங்கினார்கள். பெருமை கொள்வதை விட்டும் விலகியே இருந்தார்கள். தன்முன் மற்றவர்கள் எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்தார்கள். அடிமைகள் விருந்துக்கு அழைத்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வார்கள். தம் தோழர்களோடு சரி நிகர் சமமாக அமர்ந்திருப்பார்கள்.

    வாக்குறுதிகளை தவறாது நிறைவேற்ற கூடியவர்களாகவும், கெட்ட செயல்களை கெட்ட செயல்கொண்டு சரி செய்ய மாட்டார்கள். அச்செயலை மன்னித்து மறந்து விடுவார்கள். சிரமங்களை தாங்கிக் கொண்டு தொண்டாற்றும் பழக்கம் உள்ளவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) மிளிர்ந்தார்கள்.

    தங்களுக்கு பணிவிடை செய்யக்கூடிய பணியாளரை ‘சீ’ என்று கூட கூறி உதாசீனப்படுத்தியதில்லை.

    தங்களது தோழர்களை அதிகம் நேசித்து அவர்களோடு அதிகம் பழகக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏழைகளை ஒருபோதும் இளக்காரமாக பார்க்கமாட்டார் கள்.

    பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். பேசினால், அந்தப்பேச்சு கருத்தாழம் மிக்கதாகவும், முழுமையான வார்த்தைகள் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.

    இறைவன் தந்தது எதுவும் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதித்து ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். எதையும் இகழமாட்டார்கள். பொருட்களை தேர்ந்து எடுப்பதில் இரண்டு வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அதில் மிக எளிமையானதையே தேர்வு செய்வார்கள். பாவமானதாக எதுவும் இருப்பின் அதை விட்டும் வெகுதூரம் சென்று விடுவார்கள்.

    நடுநிலையாளராக விளங்கிய நபிகளார், எல்லா நிலைகளிலும் சத்தியத்தை கடைப்பிடித்தார்கள். அந்த சத்தியத்தை மீறவும் மாட்டார்கள்.

    தன்னைவிட யாரும் நபியவர்களிடம் உயர்ந்தவர் இல்லை என்று எண்ணும் அளவிற்கு ஒவ்வொருவருடனும் மிக நெருக்கமாக பழகக்கூடியவர்கள். தங்களின் தயாளத் தன்மையையும் நற்குணத்தையும் அனைத்து மக்களுக்கும் விரிவுப்படுத்தி அம்மக்களுக்கு ஒரு தந்தையை போன்று விளங்கினார்கள்.

    அனைவரும் அவர்களிடம் உரிமையில், நெருக்கமானவர் களாக இருந்தார்கள். இறையச்சத்தைக் கொண்டே மக்களின் சிறப்புகள் நிர்ணயிக்கப்பட்டன, அவரது தோழர்கள் இறையச்சத்தால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் நடந்து கொள்வார்கள்.

    அவர்களின் சபை கல்வி, கண்ணியம், பொறுமை சகிப்புதன்மை, வெட்கம், நம்பிக்கை போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இருந்தது. முகஸ்துதி, தேவைக்கு அதிகமாக பேசுவது, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்து இறைவன் அருளால் நபிகளார் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.

    பிறரை பழிக்க மாட்டார்கள், குறைகூறமாட்டார்கள். அடுத்தவரின் குறையை தேடவும் மாட்டார்கள், நன்மையானதை தவிர வேறு எதுவும் பேசவும் மாட்டார்கள்.

    நற்பண்புகளில் நிகரற்று விளங்கிய நபி (ஸல்) அவர்கள் முழுமை பெற்ற தன்மையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். மிக அழகிய ஒழுக்கங்களை தானும் கடைப்பிடித்து, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

    அவர்களின் நற்குணம் குறித்து குர் ஆன் இவ்வாறு பேசுகின்றது:

    ‘நிச்சயமாக (நபியே) நீங்கள் நற்குணமுடையவர்களாகவே இருக்கிறீர்கள்’. (68:4)

    இந்த நற்பண்புகளே மக்கள் நபியவரின் மீது நெருக்கத்தையும், விருப்பத்தையும் ஏற்படுத்திட காரணமாக அமைந்தது. இன்னும் அவர்களை உள்ளம் கவரும் உயரிய தலைவராக திகழச்செய்தது.

    முரண்டு பிடித்த சமுதாய மக்களின் உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்ந்தது.

    இத்தகைய உயரிய நற்பண்புகள் கொண்ட நபிகளார் ஏகத்துவ பிரசாரம் மேற்கொண்ட போது பல்வேறு விதமாக கஷ்டங்களையும், சிரமங்களையும் எதிர் கொண்டார்கள். ‘இறைவன் ஒருவனே’ என்ற சத்தியத்தை சொன்னதால் அவர்களுக்கு கிடைத்த இன்னல்கள் பல.

    அவர் மீது குப்பையை கொட்டினார்கள். நடக்கும் பாதையில் முள்ளை நட்டார்கள். புழுதி மண்ணை மேனியில் வீசினார்கள். கல்லால் அடித்தார்கள், கடும் சொல்லால் வதைத்தார்கள். ஊரை விட்டே போகும்படி செய்தார்கள்.

    ஊரைவிட்டு சென்ற பின்பு அவர்கள் மீது போரை திணித்தார்கள். எல்லா கொடுமைகளையும் தாங்கி நின்று தனது சத்தியத்தாலும், நற்குணத்தாலும், பொறுமையினாலும் மூட பழக்க வழக்கங்களை ஜெயித்து நிறைவானதோர் இஸ்லாம் மார்க்கத்தை இந்த உலகிற்கு தந்து என்றும் அழியாத புகழை இறைவன் அருளால் பெற்றுக் கொண்டார்கள் நமது நாயகம் நபிகள் அவர்கள்.

    அவர் புகழைப்போற்றுவோம். அவர் காட்டிய வழியில் நாம் அனைவரும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவோம், ஆமீன்.

    -மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான்.
    முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் எதிரிகளின் பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் மற்றும் அடிப்படை நோக்கம் இஸ்லாமிய அழைப்புப் பணிதான். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்த துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.

    சமாதான ஒப்பந்தத்தின்படி பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்ளுதல் என்ற அம்சம் முக்கியமானது. இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாகப் போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அதனால் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பரப்புவதற்கு முஸ்லிம்களுக்குப் பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விடப் பல மடங்கு ஆர்வத்தை இஸ்லாமியர்கள் இப்பணியில் காட்டினர்.

    நபி (ஸல்) உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைக்க நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரசர்கள் முத்திரையிடாத எந்த மடலையும் படிக்கமாட்டார்கள்' என்று சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மது ரஸுலுல்லாஹ்' ('இறைத்தூதர் முஹம்மது') என்பதாகும். 'முஹம்மது' என்னும் சொல் ஒரு வரியிலும் 'ரசூலு' ('தூதர்') என்னும் சொல் ஒரு வரியிலும் 'அல்லாஹி' ('அல்லாஹ்வின்) எனும் சொல் ஒரு வரியிலும் பொறிக்கப்பட்டிருந்தது.

    பல நாட்டு மன்னர்களுக்கு நபிகளார் கடிதம் எழுதினார்கள். எகிப்து நாட்டு மன்னருக்கு எழுதியதாவது, “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

    நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

    வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே இசைவான ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; அதாவது நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறுங்கள்; இதன் பிறகும் நீங்கள் இதனைப் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று இருந்தது.

    இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். அக்கடித்தை புரிந்து கொண்ட மன்னர் முகவ்கிஸ், “இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றைத் தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாகப் பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்” என்று ஹாத்திபுக்குப் பதில் கூறினார்.

    “நபியே! உங்கள் இறைவனால் அருளப்பட்ட இந்த வேதமானது முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் இதை நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.” (அல்குர்ஆன் 18:29)

    ஆதாரம்: Volume :1:3:65, 3:57:3106, திருகுர்ஆன் 3:64, 18:29

    - ஜெஸிலா பானு.
    கும்பலாகச் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவோரை ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான நடைமுறையைச் செயல்படுத்துமுன் தோதுவான வழிமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
    குற்றச்செயல்களில் தனிமனிதனாக ஈடுபடுபவரைவிட கும்பலாக ஈடுபடுபவர்களே அதிகம். கும்பல் மனோபாவம் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். அசட்டுத் துணிச்சலையும் கொடுக்கும். மக்களிடையே வேகமாக வளர்ந்து வரும் இந்தக் கும்பல் மனோபாவம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, யார் குற்றவாளி என்றே தீர்மானிக்க முடியாது.

    அனாச்சாரமும், ஆபாசமும் நிறைந்த ஊருக்கு கும்பலாகச் செல்ல சிலர் நாடுகின்றனர்.

    என்ன செய்வது..? அங்கு செல்ல வேண்டாம் என்று உபதேசிக்கலாம். ஆயினும் நமது இரண்டொரு உபதேச வார்த்தைகளைச் செவியுறும் மனோநிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அது எப்பயனையும் தராது.

    கட்டை அவிழ்த்து விறகுகளைத் தனித்தனியாக பிரிப்பதுதான் ஒரே வழி.

    அவர்களிலேயே கொஞ்சம் புத்திசாலி யார் என்று கவனிக்க வேண்டும். பின்னர் அவரிடம் கருணை கலந்த உள்ளத்துடன் தனிமையில் பேச வேண்டும். அந்தத் தவறில் இருந்து கும்பலைத் தடுத்தால் அவர்கள் அனைவருக்குமான நற்கூலி உனக்குக் கிடைக்கும் என்று உபதேசிக்க வேண்டும்.

    நாம் சொல்வதை இவர் காதுகொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டால் அடுத்து வேறொரு நபரைத் தெரிவு செய்து அவரிடமும் இதைப் போன்றே பேசவேண்டும். பின்னர் மூன்றாவது நபர் என்று நமது திட்டத்தைச் செயல்படுத்தலாம். ஆயினும் நமது உபதேசம் குறித்தோ உரையாடல் குறித்தோ மூன்றாவது நபருக்குத் தெரியாமல் கவனமாக இருக்க வேண்டும்.

    மக்காவின் ஆரம்ப நாட்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் குறைஷி களுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியபோது நபிகளாரையும் பனூஹாஷிம் மற்றும் பனூதாலிப் குடும்பத்தினரையும் ஊர்விலக்குச் செய்யும் தீர்மானத்தை குறைஷிகள் முன்னெடுத்தனர். அதை ஒரு பொது அறிவிப்பாக எழுதி கஅபாவின் சுவரில் தொங்கவிட்டனர்.

    நபியும் குடும்பமும் விவசாயமோ விளைச்சலோ இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் ஊர்விலக்கு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இலை தழைகளை உண்ணும் அளவுக்கு பசிக்கொடுமை வாட்டி வதைத்தது. உணவின்றி குழந்தைகள் தவித்தனர். ஒன்றல்ல இரண்டல்ல பல மாதங்கள் இதே நிலை நீடித்தது.

    ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் கூறினார்கள் (இவரும் ஊர்விலக்கு செய்யப்பட்ட குடும்பத்தினருடன் அங்கு தான் தங்கியிருந்தார்): “சாச்சாவே! குறைஷிகள் எழுதித் தொங்கவிட்டிருக்கும் அந்த ஒப்பந்தத்தைக் கரையான் அரித்துவிட்டது. ‘பிஸ்மிக அல்லாஹும்ம’ என்ற அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எதுவும் அதில் மீதி இல்லை”.

    அபூதாலிப் அவர்களுக்கு அந்தச் செய்தி பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. பெருமானார் (ஸல்) அவர்களிடம், “உமது இறைவன் இதனை உமக்கு அறிவித்தானா?” என்று கேட்டார். நபிகளார், ‘ஆம்’ என்று கூறினார்கள்.

    அபூதாலிப்: ‘அவ்வாறெனில் அல்லாஹ்வின் மீது ஆணை! குறைஷிகளிடம் இந்த விஷயத்தைக் கூறிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’ என்றவாறு அங்கிருந்து எழுந்து சென்றார்.

    குறைஷிகளிடம் இது குறித்து கூறியபோது உடனே வந்து பார்வையிட்டனர். உண்மையை உணர்ந்துகொண்டனர். ஆயினும் பனூஹாஷிம் குடும்பத்தினர் மீது குறைஷிகளுக்கு கொஞ்சம்கூட இரக்கம் பிறக்கவில்லை. மாறாக மென்மேலும் வெறுப்பையே விதைத்தனர். ஊர்விலக்கு செய்யப்பட்ட பனூஹாஷிம் குடும்பத்தினருக்கோ நிலைமை மென்மேலும் சிக்கலாகிக்கொண்டே சென்றது.

    குறைஷிகளில்கூட ஒருசில நல்லவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஹிஷாம் பின் அம்ர்.

    ‘அவர்களைக் காப்பாற்றியே தீரவேண்டும். பனூஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்கு எதிராக அநீதி இழைப்பதில் குறைஷிகள் அனைவரும் ஒருமித்து நிற்கின்றனர். இதனை முறியடித்தே தீரவேண்டும். என்ன செய்வது?’ என்று யோசித்தார். ஒரு திட்டம் தீட்டினார். அவர், ஸுஹைர் அபீ உமைய்யா, முத்யிம் பின் அதீ, அபுல் பக்தரி பின் ஹிஷாம், ஸம் அத் பின் அல் அஸ்வத் ஆகியோருடன் சென்று தனது கருத்துக்கு ஆதரவு திரட்டினார்.

    ஐவரும் தயாராயினர். மக்காவின் ‘ஹுதமுல் ஹஜூன்’ எனும் உயரமான பகுதியில் இரவு வேளையில் ரகசியமாக ஒன்றுகூடினர். ஒப்பந்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்றும் கிழித்து எறிவது என்பது குறித்தும் திட்டம் தீட்டினர்.

    மறுநாள் காலை வேளையில் கஅபாவுக்கு அருகே குறைஷிகள் ஒன்று கூடும் சபைக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். ஸுஹைர் பின் உமைய்யாவும் அங்கு வந்தார். கஅபாவில் வலம்வந்துவிட்டு நேராக குறைஷிகள் இருக்கும் சபையை நோக்கி வந்து பெரும் சப்தத்தில் இவ்வாறு கூறினார்:

    ‘மக்காவாசிகளே! நமது ரத்த பந்த உறவுகள் அங்கே மடிந்துகொண்டிருக்க.. நாமோ நன்றாக உண்ணுகிறோம்.. அழகிய ஆடை அணிகிறோம். அவர்களுடன் எவ்வித கொடுக்கல்-வாங்கலையும் நாம் வைத்துக்கொள்ளவில்லை. பசியால் அவர்கள் அங்கே துடிதுடிக்க இங்கே நாம் சுகம் அனுபவிக்கின்றோம்.. இது அநீதி இல்லையா..? இறைவன் மீது ஆணை! இந்த ஒப்பந்தத்தைக் கிழித்து வீசிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’.

    இதைத்தொடர்ந்து ஸம்அத்பின்அஸ்வத், அல்பக்தரி முத்யிம் பின் அதீ ஆகியோர் ஸுஹைர் பின் உமைய்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

    பின்னர் ஹிஷாம் பின் அம்ர் அவர்களும் அவ்வாறே கூற, சபையில் சல சலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு கிளம்பியது. திகைத்தான் அபூஜஹ்ல். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் கூடி இருந்தவர்களை நோக்கிக் கூறினான்: ‘இது திட்டமிட்ட சதி. இந்தச் சதி இங்கு வைத்தல்ல.. இரவில் வேறு எங்கோ வைத்து தீட்டப்பட்டுள்ளது’.

    அபூஜஹ்லின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முத்யிம் பின் அதீ அவர்கள் கஅபாவை நோக்கி எழுந்து சென்றார். சென்றவர் நேராக கஅபாவில் தொங்கவிடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை கிழித்து வீசுவதற்காக அதை நோக்கி முன்னேறினார். ஆயினும் கரையான் அந்த ஒப்பந்தத்தை ஏற்கனவே தின்று முடித்திருந்தது. ‘அல்லாஹும்ம பிஸ்மிக’ என்ற வாசகத்தைத் தவிர.

    இறுதியில் அந்த ஐந்து நபர்களுடைய முயற்சியால் பனூஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்கு மூன்று வருடங்களாக குறைஷிக் கும்பலால் செய்யப்பட்டு வந்த பெரும் அநீதி முடிவுக்கு வந்தது.

    ஊசிபோடுவதாக இருந்தால் ஒரு புத்திசாலி மருத்துவர் என்ன செய் வார் ..? உடலில் எந்த இடத்தில் ஊசிபோடலாம் என்று தோதுவான இடத்தை விரலால் முதலில் தடவிப் பார்ப்பார். பின்னரே ஊசி போடுவார்.

    கும்பலாகச் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவோரை ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான நடைமுறையைச் செயல்படுத்துமுன் தோதுவான வழிமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கும்பலின் கட்டை அவிழ்த்துவிடுவதுதான் அதற்கான முதல்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி ஒருபோதும் நடைமுறைக்கு ஒத்துவராது. கைமேல் பலனும் கிடைக்காது.

    -மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    இறைநம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்;
    சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த காலக் கட்டத்தில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அல்லாஹ் இறைவசனத்தை அருளினான். அதில், "இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் 'ஹிஜ்ரத்' அதாவது மக்காவிலிருந்து தஞ்சம் புகுந்து மதீனா வந்தால் அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையின் உண்மை நிலையை அல்லாஹ்தான் நன்கறிவான்.

    மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்று உங்களுக்குத் தெரிந்தால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் இறை நிராகரிப்பாளர்களுக்கு மனைவியராக இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்குக் கணவர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்.

    ஆனால், இப்பெண்களுக்காக அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய 'மஹ்ரை' (திருமணக் கொடையை) கொடுத்து அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாகப் பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை அவர்கள் போய்ச் சேருவோரிடம் கேளுங்கள்;

    அதேபோல் இறைநம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் இவ்வாறே தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 60:10)

    இந்த இறைவசனத்தைக் கேட்டதும் உமர்(ரலி), இணைவைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களைத் தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொருவரை ஸஃப்வான் இப்னு உமய்யா அவர்களும் மணந்தார்கள்.

    பெண்களைப் போல் ஆண்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தனர். குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடுவதற்காக குறைஷிகள் இருவரை அனுப்பினர். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி மக்காவிலிருந்து வந்வரை எங்களிடம் திருப்பி அனுப்புங்கள்’ என்றனர்.

    உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் அபூ பஸீரை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், ஒரு மரத்தடியில் தங்கினார்கள். இருவரில் ஒருவரை கொன்றுவிட்டு அபூ பஸீர்(ரலி) தப்பினார். கொலையைப் பார்த்து பயந்த மற்றவர் நபி(ஸல்) ஓடி வந்து விஷயத்தை விவரித்தார். "அபூ பஸீர்! போர்த் தீயை மறுபடியும் மூட்ட காரணமாகாதீர்கள்" என்று நபிகளார் சொல்லக் கேட்டவுடன், அபூ பஸீர் தாம் மறுபடியும் குறைஷிகளிடம் ஒப்படைக்கப்படுவோம் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

    சமாதானம் பேச வந்த சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். அவரைப் போன்றே இஸ்லாத்தைத் தழுவிய மற்றவர்களும் மக்காவிலிருந்து தப்பிச் சென்று அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். அபூ பஸீருடன் ஒரு குழுவே திரண்டுவிட, வியாபாரக் குழுவினர் ஷாம் நாட்டைக் கடக்கவும் பயந்தனர்.

    எனவே, குறைஷிகள் அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்' என்றும் கூறிவிட்டனர்.

    “முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி ஏற்றுக் கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது சாந்தியையும் அமைதியையும் இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.” –திருக்குர் ஆன் 48:18

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:53:2731,2732, திருக்குர்ஆன் 60:10, 48:18

    - ஜெஸிலா பானு.
    இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் பனிரெண்டாம் மாதமான ஹஜ்ஜின், பத்தாம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ‘ஹஜ் பெருநாள்’ என்றும் ‘தியாகத் திருநாள்’ என்றும் போற்றப்படுகிறது.
    உலகின் முதல் இறையில்லமான ‘கஅபா’ சவுதி அரேபியாவின் மக்கா நகரில், முதல் நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. காலம் செல்லச் செல்ல பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த அவ்விடத்தைத் தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளையின்படி கட்டினார்கள்.

    இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ‘ஹஜ்’ என்பது, முஸ்லிம்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இந்த இறையில்லத்திற்கு ஒரு முறையேனும் சென்று வருவதாகும். ஏழ்மையில் வாடும் மக்களுக்கு இது கட்டாயக் கடமை இல்லையென்றாலும், வசதி படைத்த மனிதர்கள் தவறாமல் இந்தக் கடமையை ‘துல் ஹஜ்’ மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.

    எல்லாக் கடமைகளும் இறைவனுக்காகவே ஆற்றப்பட வேண்டுமென்றாலும் ஹஜ்ஜில் இறைவனை மட்டுமே முழுமையாகச் சார்ந்து அவன் கட்டளைக்கு முழுமையாகச் செவி சாய்த்த ஒரு மனிதர் மற்றும் அவர் தம் குடும்பம் செய்த தியாகம் பிணைக்கப்பட்டுள்ளது. அவர்தாம் நபி இப்ராஹிம் (அலை) அவர்களாவர்.

    நபியவர்களின் சிறப்பினை நம் நினைவில் வைப்பதற்காகவே ஐவேளைத் தொழுகைகளையும் ‘நிச்சயமாக என்னுடைய வணக்கமும், தியாகமும், எனது வாழ்வும், மரணமும் அகிலத்தின் அதிபதியான அந்த இறைவன் ஒருவனுக்கே’ என்ற அவர்களது பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கிறோம்.

    இதனாலேயே இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் பனிரெண்டாம் மாதமான ஹஜ்ஜின், பத்தாம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ‘ஹஜ் பெருநாள்’ என்றும் ‘தியாகத் திருநாள்’ என்றும் போற்றப்படுகிறது.

    ஹஜ்ஜின் பெரும்பாலான சடங்குகள் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தி அன்னாரைப் போல் இறைவனின்பால் பேரன்பு பெருக்கெடுத்து ஓடச் செய்வதற்காகவுமே அமைந்துள்ளன. இவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது நம் கடமையுமாகும்.

    இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அத்துடன் இறைக்கட்டளையை எவ்விதத் தயக்கமும் இன்றி மகிழ்வோடும், இதயபூர்வமாகவும் நிறைவேற்றுபவர்களாகவும் இருந்தார்கள். உலக மாந்தர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையே ஒரு படிப்பினைதான். தனித்தவனாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களை, ‘தன் நண்பர்’ என்று குர் ஆனில் குறிப்பிடுகிறான்.

    திருக்குர்ஆன் (4:125) கூறுகிறது: ‘மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்’.

    இறைவனுக்கு உவப்பானதை செய்வதில் மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டிருந்த அவர்கள், இறைவன் தடுத்தவற்றைத் தானும் வெறுத்தார். இந்தக் காரணத்தினாலேயே தன் பெற்றோரை விட்டு விலகினார்.

    இறைவன் அவர்களைப் பற்றி, திருக்குர்ஆனில் ‘இப்ராஹிம் ஒரு வழிகாட்டி என்றும், அவரை தான் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும்’ கூறுகிறான். ‘இன்னும் அவருக்கு அழகானவற்றைக் கொடுத்ததாகவும், மறுமையில் நல்லவர்களின் ஒருவராக அவர் இருப்பார்’ என்றும் கூறுகிறான். (16:120-122).

    தள்ளாத வயதில் அவருக்கு அல்லாஹ் ஒரு ஆண் மகனைத் தன் அருட்கொடையாக வழங்குகிறான். ஒரு நாள் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது. கிஞ்சித்தும் தாமதிக்கவில்லை. மனைவி ஹாஜரா அம்மையார், பாலகன் இஸ்மாயில் (அலை) இருவருடனும் 1500 மைல்கள் பயணித்து சவுதி அரேபியாவின், மக்காவில் சுடும் பாலை நிலத்தை வந்தடைகிறார்கள். தன்னிடம் மீதமிருந்த உணவையும், நீர் இருந்த தோல் பையையும் மனைவியிடம் தந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார்கள்.

    ‘எங்களை இந்த இடத்தில் விட்டுவிட்டு செல்கிறீர்களே, இது இறைக்கட்டளையா?’ என்று மனைவி கேட்க, ‘ஆம்’ என்று பதிலிறுத்து விட்டு விரைகிறார்கள். உடனே மனைவி, ‘அப்படியென்றால் இறைவனே எங்களுக்குப் போதுமானவன்’ என்று சொல்கிறார்கள்.

    அவர்களை விட்டு விலகி சிறிது தொலைவில் மண்டியிட்டு இறைவனிடம் அவர் செய்யும் பிரார்த்தனை எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

    ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஅபா) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!’ (திருக்குர்ஆன் 14:37).

    அல்லாஹ், இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்பதற்குச் சான்றாக பாலைவனமாக இருந்தாலும் மக்கா நகரம் செழிப்பானதாகவும், கனிவர்க்கங்கள் தடையின்றிக் கிடைக்கும் இடமாகவும் இன்று வரை திகழ்கிறது.

    மனித சஞ்சாரமே அற்ற இடம், கொதிக்கும் பாலைவனம். அவ்விடத்தில் இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக இறைவனின் பால் எல்லாப் பொறுப்பு களையும் சாட்டி துணைவியாரையும், பச்சிளம் பாலகனையும் விட்டு வருவதற்கு எப்படிப்பட்ட மனம் இருந்திருக்க வேண்டும். அன்னாரது மனைவியின் பொறுமையையும், பெருந்தன்மையையும் கூட வரலாறு தியாகமாகப் போற்றுகிறது.

    ஒரு முறை இப்ராஹிம் (அலை) அவர்கள், தம் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டார்கள். இது இறைவனின் கட்டளை என்பதை உணர்ந்து மகனைப் பலியிடுவதற்குத் தயாராகிறார்கள். இறைக்கட்டளைக்கு மனைவியும் உடன்படுகிறார்கள். மகனிடம் கனவின் விவரத்தை சொல்கிறார்கள்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (37:102) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “பின் (அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: ‘என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!’ (மகன்) கூறினான்; ‘என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்”.

    ஒட்டு மொத்தக் குடும்பமே இறைவனின் கட்டளையை மகிழ்ச்சியுடன் சிரமேற்கொள்கிறது. ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்ப உறுப்பினர்கள் இறைவனின்பால் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட பயிற்சியைத் தந்திருக்க வேண்டும் என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

    பலியிடும் இடத்தை தந்தையும், தனயனும் அடைகின்றனர். வழியில் ஷைத்தான் ஆசை வார்த்தைகள் கூறி இப்ராஹிம் (அலை) அவர்களின் மனதை மாற்றப்பார்க்கிறான். அவர்கள் அவனை கல்லெறிந்து விரட்டுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை ஷைத்தான் பின் தொடர்ந்து அவர் மனதை மாற்ற முயல்கிறான். மூன்று முறையும் கல்லெறிந்து விரட்டுகிறார்கள். இந்நிகழ்வை நினைவுகூரும் விதமாக அதே இடத்தில் ஹஜ் செல்பவர்கள் கல் எறிந்து ஷைத்தானை விரட்டும் சடங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தந்தை மகனைப் படுக்க வைத்து கத்தியை ஓங்குகிறார். இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; நாம் அவரை ‘யா இப்ராஹீம்’ என்றழைத்தோம்.

    ‘திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்’. (37:103-105)

    ‘மகனுக்குப் பகரமாக ஒரு ஆட்டினை அறுத்துப் பலியிடச் சொல்லி’ இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளை இடுகிறான்.

    இதுவே ஹஜ்ஜுப் பெருநாளன்று உலக முஸ்லிம்கள் ஒரு ஆட்டினையோ, ஒட்டகத்தையோ, அல்லது மாட்டினையோ அறுத்துப் பலியிடுவதற்கு காரணமாயிற்று. இப்பலியிடுதலுக்கு ‘குர்பானி’ என்று பெயர். குர்பானி இறைச்சியை மக்கள் மூன்றாகப் பங்கிட வேண்டும். ஒரு பங்கினை தமக்கும், ஒரு பங்கினை உறவினர்களுக்கும், இன்னொரு பங்கினை ஏழைகளுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும்.

    இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூருவதுடன், இறைவனின்பால் பேரன்பு, அவன் கட்டளைக்கு மாறு செய்யாதிருத்தல், இறையச்சம், இவற்றுடன் ஹஜ் செல்லக் கூடிய பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும், இந்த ஈகைத் திருநாளில் நமது பிரார்த்தனையாக இருக்கட்டும், இன்ஷா அல்லாஹ்!

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84.
    ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் மக்களுக்கு அதிருப்தி தந்த நிபந்தனை, 'மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவிற்கு வந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தாலும், அவரை மீண்டும் மக்காவிற்கே திருப்பியனுப்பி விட வேண்டும்' என்பது.
    ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் மக்களுக்கு அதிருப்தி தந்த நிபந்தனை, 'மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவிற்கு  வந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தாலும், அவரை மீண்டும் மக்காவிற்கே திருப்பியனுப்பி விட வேண்டும்' என்பது.

    குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த சுஹைல் இப்னு அம்ருடைய மகன் அபூ ஜந்தல் தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே தஞ்சம் புகுந்தவர். உடனே அவரின் தந்தையான சுஹைல், 'முஹம்மதே! ஒப்பந்தப்படி முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்' என்றார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே' என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், 'அப்படியென்றால், உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்' என்று கூறினார்கள்.

    அதற்கு சுஹைல், 'நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்' என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், 'நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்' என்று கூறினார். அபூ ஜந்தல்(ரலி), 'முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக உங்களிடம் வந்திருக்க, என்னை இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்' என்று வருந்தினார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

    உடனே உமர்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “நீங்கள் சத்தியமாக இறைத்தூதர் தானே? நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஆம், அதில் என்ன சந்தேகம்?” என்று பதிலளித்தார்கள்.

    அதற்கு உமர்(ரலி), 'அப்படியானால் இந்த நிபந்தனைகளை ஏற்று நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? விரைவில் நாம் இறையில்லம் கஅபாவை வலம் வருவோம்' என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், “ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?' எனக் கேட்டார்கள். உமர்(ரலி), 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை வலம்வருவீர்கள்' என்று கூறினார்கள்.

    பிறகு, நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, 'எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.

    இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் தம் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று மக்களின் அதிருப்தியையும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும் சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடியை களையப் புறப்படுங்கள். உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்' என்று ஆலோசனை கூறினார்கள்.

    உடனே, நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துவிட்டு, தலைமுடியைக் களைந்தார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 3:53:2731

    - ஜெஸிலா பானு.
    உங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.
    உங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.

    ஒருவரின் மன அழுத்தமும் கோபமும் வெறுப்பும் வேறொருவரின் வாழ்வில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே இடம்பெறுகிறது.

    என்னோடு இப்போது மதீனாவுக்கு வாருங்களேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையில் அன்றொருநாள் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிட்டு வரலாம்...

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கின்றார்கள். இஸ்லாம் மக்களிடையே வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். கோத்திரங்களின் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக வருகை தந்துகொண்டிருந்தனர். சிலர் மனம் திருந்தி வந்தனர். வேறு சிலரோ பொறாமையால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளுக்குள் வெறுப்பைச் சுமந்து இஸ்லாத்தை ஏற்றால் ஆதாயம் ஏதாவது கிடைக்குமா என்று லாபம் தேடி வந்தனர்.

    அவ்வாறு வந்தவர்களில் ஒருவர்தான் ஆமிர் பின் அத்துஃபைல். அரபுகுலத் தலைவர்களில் ஒருவர். தலைக்கனமும் பிடிவாத குணமும் மிக்கவர். இஸ்லாத்தில் சேரும்படி மக்கள் இவருக்கு உபதேசம் செய்தபோது அவர்களிடம் கூறினார்: ‘நான் மரணமடைவதற்கு முன்னர் இந்த அரபு குலம் முழுவதையும் எனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வருவேன். இது இறைவன் மீது ஆணை. அம்மக்கள் எனக்குத்தான் கட்டுப்பட வேண்டும். எனது ஆணைக்கே இணங்க வேண்டும். அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த இந்த குறைஷி இளைஞனை நான் பின்பற்றுவதா..?’.

    ஆயினும் இவரது சவாலுக்கான பதிலை காலம் வேறுவிதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தது. இஸ்லாம் இந்தப் பூமிப்பந்தில் உறுதியுடன் நிலைகொள்ளத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வரத் தொடங்கினர். வேறு வழியில்லை. என்ன செய்வது..? இந்த ஆமிரும் தனது வாகனத்தில் ஏறி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தார்.

    அவர் வருகை தந்த நேரம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தமது தோழர்களுடன் பள்ளி வாசலில் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே நுழைந்தார்.

    நுழைந்ததுதான் தாமதம், உடனடியாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஆமிர் அதிகார தோரணையில் கூறினார்: ‘முஹம்மதே, என்னோடு தனியாக வாருங்கள்’.

    இதுபோன்ற மனிதர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் சற்று எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.

    அவர் தொடர்ந்து வற்புறுத்தவே.. அண்ணலாரும் அவருடன் எழுந்து சென்றார்கள். இர்பத் என்ற தன் தோழரையும் ஆமிர் தன் கூடவே அழைத்து வந்திருந்தார். நபி (ஸல்) அவர்களிடம் தாம் பேசிக்கொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற தீய திட்டத்துடன் அவரை அழைத்து வந்திருந்தார்.

    இர்பத் மறைத்து வைத்திருந்த வாளில் தமது கையை வைத்தவாறு இருவரையும் பின் தொடர்ந்து சென்றார். ஒரு ஓரமாக இருவரும் ஒதுங்கிச் சென்றனர். இர்பத் தமது வாளை உயர்த்த நாடினார், முடியவில்லை. வாளை உருவ முற்படும்போதெல்லாம் கையை அதிலிருந்து எடுக்க முடியவில்லை.

    ஆமிர் இவரை நோக்கி கோபத்துடன் சைகை காட்ட இவரால் ஒன்றும் செய்ய முடியாமல் சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இர்பத் என்ன செய்கிறார் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.

    ஆமிரைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்: ‘துஃபைலின் மகன் ஆமிரே, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’.

    ஆமிர்: ‘முஹம்மதே, நான் இஸ்லாத்தை ஏற்றால் எனக்கு என்ன தருவீர்?’

    நபி (ஸல்) அவர்கள்: ‘முஸ்லிம்களுக்கு என்ன கிடைக்குமோ அதுதான் உமக்கும். அவர்களின் சாதக பாதகங்கள் உமக்கு உண்டு. அவ்வளவுதான்’.

    ஆமிர்: ‘நான் இஸ்லாத்தை ஏற்றால் உமக்குப்பின் இந்த ஆட்சி அதிகாரத்தை எனக்கு விட்டுத் தருவீரா..?’

    ஆமிரின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் தைரியமாக தமது பதிலை இவ்வாறு கூறினார்கள்: ‘உமக்கோ, உமது கூட்டத்தினருக்கோ அது இல்லை’.

    உடனே ஆமிர் தனது வேண்டுகோளின் அளவை சற்று குறைத்தார். ‘சரி.. நான் இஸ்லாத்தை ஏற்றால் கிராமப் புறங்களின் அதிகாரம் எனக்கும், நகர் புறங்களின் அதிகாரம் உமக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா..?’

    நடக்காத காரியத்தை ஆமிர் வலியுறுத்துகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட நபிகளார் மிகவும் ஆணித்தரமாக, ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

    அண்ணலாரின் பதிலைக் கேட்ட ஆமிரின் முகம் மாறியது. கோபம் தலைக்கேறியது. பெரும் சப்தத்துடன் கத்தினார்: ‘முஹம்மதே, உமக்கு எதிராக பெரும் குதிரைப்படையை நான் திரட்டுவேன். ஆயுதம் தரித்த ராணுவத்தை அனுப்புவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு பேரீத்த மரத்திலும் எனது குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். கத்ஃபானின் பெரும் படையைக் கொண்டு உமக்கு எதிராக நான் போர் தொடுப்பேன்’.

    காட்டுக் கத்தல் கத்தியவாறே தம்முடைய தோழர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் ஆமிர். தமது கிராமத்தை அடைந்து பெரும் படையைத் திரட்டி மதீனாவைத் தாக்க வேண்டும் என்று எண்ணியவாறு வேகமாக செல்லத் தொடங்கினார்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, ‘யா அல்லாஹ், ஆமிரின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக. அவருடைய கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

    ஆமிரோ.. வேக வேகமாக தனது ஊரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். பாதிவழி செல்லும்போதே வேகம் குறைந்தது. மனம் ஓய்வை நாடியது. ஓய்வெடுப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார். செல்லும் வழியில் இருந்த கிராமத்தில் கூடாரம் ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்று ஓய்வெடுக்க நாடினார். சலூலிய்யா எனும் ஒரு பெண்ணின் கூடாரம் அது. மக்களிடையே மோசமான பெண் என்று பெயர் பெற்றவள்.

    வேறு வழியின்றி ஆமிர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அவளுடைய வீட்டில் தங்கினார். அசதியில் தூங்கிவிட்டார். திடீரென தொண்டையில் ஒருவித வலி ஏற்படத் தொடங்கியது. சிறிது சிறிதாக வலி அதிகரிக்கத் தொடங்கியது. மரண பயம் கண்ணில் தோன்றியது. விப சாரியின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அது தனது பரம்பரைக்கே கேவலம் என்று எண்ணிய ஆமிர் படுக்கையில் இருந்து விழித்து எழுந்து அவசரமாகத் தம்முடைய குதிரையில் ஏறி புறப்பட்டார். குதிரையின் வேகமும் கழுத்து வலியின் வேதனையும் ஒருசேர அதிகரித்தது. தாங்க இயலாத வேதனையால் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் உடனே இறந்தார்.

    அவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய தோழர்கள் ஊருக்கு வந்தனர். இவர்கள் ஊருக்குள் நுழைந்ததும் இர்பதிடம் மக்கள் என்ன விஷயம் என்று வினவினர்.

    சற்றும் குறையாத அதே ஆணவத்துடன் இர்பத் தன் மக்களிடம் கூறினான்: ‘ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குமாறு முஹம்மத் எங்களை அழைத்தார். இறைவன் மீது ஆணை, அந்த முஹம்மத் மட்டும் இப்போது என் கையில் சிக்கினால் என்னுடைய அம்பால் ஒரே அடியாக அடித்தே கொன்றுவிடுவேன்’.

    இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களுக்குப்பின் இர்பத் தன்னுடைய ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பேரிடி ஒன்று அவன் தலையில் விழ கரிக்கட்டையாக செத்து விழுந்தான். இதுகுறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

    “ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்”. (13:10-14)

    கோபமும் வெறுப்பும் பிடிவாதமும் எப்போதும் அழிவையே அழைத்து வரும். அந்த அழிவு தனக்கு மட்டும் ஏற்பட்டால்கூட பரவாயில்லை. ஆனால் அது தம்மோடு இருப்பவரையும் சேர்த்தே சிலபோது அழித்துவிடும். அதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம். உண்மையில் இர்பத் என்பவனுக்கான மரணம் அவனே தேடியது அல்ல. மாறாக அவனது எஜமானின் கோபத்தின் விளைவு. அது அவனையும் பாதித்துவிட்டது.

    உன்னளவில் தெளிவாக இரு!

    உன்னுடன் இருப்பவர்களுடன் வெளிப்படையாக இரு!

    உன் ஆற்றல் என்ன என்பதைத் தெளிவாக அறிந்திடு!

    உனது எல்லை எது என்பதையும் தெரிந்திடு!

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    குறைஷிகள் உஸ்மான்(ரலி) அவர்களை உடனேயே விடுவித்ததுடன் சமாதான ஒப்பந்தம் செய்யவும் ஒப்புக் கொண்டனர்.
    குறைஷிகளிடம் செய்தி சொல்லச் சென்ற உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று செய்தி பரவியது. அதனால் முஸ்லிம்கள் குறைஷிகள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிவிட்டனர் என்ற செய்தி குறைஷிகளை எட்டியது. குறைஷிகள் உஸ்மான்(ரலி) அவர்களை உடனேயே விடுவித்ததுடன் சமாதான ஒப்பந்தம் செய்யவும் ஒப்புக் கொண்டனர்.

    குறைஷிகளின் சார்பாக சுஹைல் என்பவரை நபிகளாரிடம் குறைஷிகள் அனுப்பி வைத்தனர். சுஹைல் என்றால் இலகுவானது என்று பொருள். ஆகையால் அவர் சமாதானத்திற்காக வருகிறார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

    இரு தரப்பினரும் சமாதானத்திற்கான அம்சங்களை ஒப்பந்தப் பத்திரமாக எழுத முன் வந்தனர். இந்த ஒப்பந்தம் ஹுதைபிய்யா எனுமிடத்தில் நடைபெற்றதால் இதற்கு ஹுதைபிய்யா ஒப்பந்தமென்று பெயர்.

    நபி(ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அலீ இப்னு அபுதாலிப்(ரலி) அவர்களை எழுதச் சொன்னார்கள். அலீ(ரலி) ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ அதாவது அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் என்று எழுதும் போது அதனைத் தடுத்து சுஹைல், " ‘அல்லாஹ்வே உனது பெயரால்’ என்று மட்டும் எழுதுங்கள்‌. எங்களுக்கு ரஹ்மான் என்றால் யாரென்று தெரியாது"என்றார். அதனை ஏற்று நபி(ஸல்) அவர்களும் அலீ(ரலி) அவர்களை அவ்வாறே எழுதச் சொன்னார்கள்.

    அடுத்ததாக ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அலீ(ரலி) எழுத, இணைவைப்பவர்கள் இடைமறித்து, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மது’ என்று எழுதாதீர்கள், என்று சொல்லிவிட்டு முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி, 'நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்' என்று கூறி அதனை மாற்றி முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அதாவது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதச் சொன்னார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் இறைத்தூதர்தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றிவிடுகிறோம்’ என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை ஒருபோதும் அழிக்கப் போவதில்லை' என்று கூறி மறுத்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள்.

    பிறகு சுஹைலுக்கு நபி(ஸல்) அவர்கள், 'எங்களை இந்த ஆண்டு இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் வலம்வர விடாமலும் தடுக்கக் கூடாது' என்று எழுதச் சொன்னார்கள். உடனே சுஹைல், 'இதை ஏற்க முடியாது. இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால், நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை மட்டும் எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்; அவ்வாறே எழுதப்பட்டது.

    அடுத்த நிபந்தனை, இணைவைப்பவர்களிடையேயிருந்து அதாவது மக்காவாசிகளிலிருந்து மதீனாவுக்குத் தப்பித்து வருபவரை, அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட மக்காவாசிகளிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். மக்காவிற்கு வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள். இந்த நிபந்தனையைக் கேட்ட முஸ்லிம்கள் எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றிச் சமாதான ஒப்பந்தத்தை எழுத முடியாது என்று சுஹைல் தீர்மானமாக மறுத்துவிட்டார்.

    குறைஷிகளுடன் தகராறு செய்யாமல்விட்டுக் கொடுத்து ஒத்துப் போனதற்கான காரணம், 'அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட மக்கா நகரத்தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் வகுத்துக் கொடுப்பேன்' என்று முன்பே நபி(ஸல்) சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காக.

    ஸஹீஹ் புகாரி 3:53:2698,2731,2732

    - ஜெஸிலா பானு.
    ‘குர்பானி’ என்பது கூட்டுவாழ்க்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. நாம் வாழும் தேசத்தில் சாதி, மதம் கடந்து கூட்டு சேர்ந்து வாழ்ந்து கோடி நன்மைகளைப் பெற வேண்டும்.
    ஹஜ் மாதமான துல்ஹஜ் மாதமும், ஹஜ்ஜுப் பெருநாளும், ஹஜ்ஜின் கேந்திரமாகத் திகழும் மக்கா நகரமும் உலக மக்களுக்கு மனிதநேயத்தின் மாண்பையும், மனித உரிமைகளின் புனிதத்தையும் பறைசாற்றுகிறது.

    புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுவதன் அடிப்படையே மனிதநேயம் தான். மனிதநேயத்தின் மீதுதான் மக்கா நகர்வலம் வருதலும், ஹஜ்ஜும், ஹஜ்ஜுப் பெருநாளும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    ‘உலக நாட்களில் (துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்கள் மிகச்சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பாளர்-ஜாபிர் (ரலி), நூல்:ஜாமிஉஸ்ஸஃகீர்)

    நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கு பேரறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘பத்ஹல் பாரி’ எனும் நூலில் அழகான ஒரு விளக்கத்தை பதிவு செய்துள்ளார்கள்.

    ‘துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களும், அளப்பெரும் கடமைகளுமான 1) இறைநம்பிக்கை 2) தொழுகை 3) நோன்பு 4) ஸகாத் 5) ஹஜ் ஆகிய வணக்க வழிபாடுகள் சங்கமிக்கின்றன. வேறெந்த நாட்களிலும் இவ்வாறு ஐம்பெரும் கடமைகள் சங்கமம் ஆகாது. இந் நிலையைக் கருத்தில்கொண்டே அந்நாட்களுக்கு இப்படிப்பட்ட சிறப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன’.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். ‘நம்முடைய தொழுகையைத் தொழுது (அதன்பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்’ என குறிப்பிட்டார்கள்.

    அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே, இன்றையதினம் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். நானும், எனது குடும்பத்தாரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்’ என்றார்.

    அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்’ என்று கூறினார்கள்.

    பின்னர் அவர் ‘இறைத்தூதர் அவர்களே, என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?’ என்று கேட்டார்.

    ‘ஆம், இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பாளர் : பராவு பின் ஆஸிப் (ரலி), புகாரி : 983)

    ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முதன்முதலாக பெருநாளின் சிறப்புத் தொழுகையை தொழ வேண்டும். தொழுகைக்கு பின்பு அல்லாஹ்வுக்காக கால்நடைகளில் சாத்தியமான ஒன்றை குர்பானி கொடுக்க வேண்டும். பெருநாள் தொழுகைக்கு முன்னதாக அறுப்பது உணவுக்காக அறுக்கப்பட்டதாக அமையுமே தவிர குர்பானியாக அமையாது.

    ‘தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்கள் செய்யும் வணக்க வழிபாடுகளில் சிறந்தது குர்பானியே ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் குர்பானி கொடுப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. அப்போது, இறைவனின் உத்தரவுக்கு இணங்க, நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது அருமை புதல்வரை ‘மினா’ எனும் இடத்தில் அறுத்துப் பலியிட முன் வந்தார்.

    அவரின் இந்த மாசற்ற தியாகத்தை இறைவன் மெச்சும் வண்ணம் உருவானது தான் குர்பானி கொடுக்கும் வழக்கம். உலக முடிவு நாள் வரைக்கும் மக்கள் இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், முதன்முதலாக ஆட்டை அறுத்துப் பலியிட்ட அவரின் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் விதமாகவும் இந்த தியாகத்திருநாள் அமைந்திருக்கிறது.

    ஒருமுறை நபிகளாரிடம் அவரது தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, இந்த தியாகப் பிராணிகளின் கலாசாரம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘இது உங்களின் தந்தை இப்ராகீம் (அலை) அவர்களின் கலாசார வழிமுறை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்.

    ‘அவற்றிலிருந்து எங்களுக்கு என்ன பயன்?’ என மீண்டும் வினவ, ‘அவற்றின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு’ என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பாளர் : ஜைத் பின் அர்கம் (ரலி), நூல்: அஹ்மது)

    குர்பானியின் மாமிசங்களை தமக்குப் போக மீதமுள்ளவற்றை சொந்தங்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், ஏழை எளியோருக்கும் வழங்கி அனைவரும் கூடி, மகிழ்ந்து கொண்டாடப்படும் வழிமுறை கூட்டு வாழ்க்கையின் அவசியத்தை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது.

    ‘அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்’ (22:28) என்றும்,

    ‘அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்’ (22:36) என்றும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    குர்பானி கொடுப்பவர், கால்நடைகளின் தோல்களையும், அவற்றின் கடிவாளங்களையும், ஏழை எளியோருக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தானமாக வழங்கி அவர்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ‘நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள், அவற்றில் அறுபத்தி மூன்று ஒட்டகங்களை தமது திருக்கரத்தால் அறுத்தார்கள்; பிறகு அவற்றின் தோல்களையும், கடிவாளங்களையும் ஏழைகளுக்கு பங்கீடு செய்யும்படி என்னை வேண்டினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தியாகத் திருநாள் பண்டிகை முக்கியமான மூன்று அம்சங்களை வலியுறுத்து கிறது.

    முதலாவது, மனித நேயத்தை வலியுறுத்துகிறது. பெருநாள் தினம் புனிதமானது போன்று ஒவ்வொருவரின் உயிரும், உடமையும், மானமும் புனிதம் நிறைந்தது. யாரும் யாரின் மீதும் அத்துமீறி நடந்து கொண்டு அவர்களின் புனிதங்களை பாழாக்கிவிடக்கூடாது.

    இரண்டாவது, ‘குர்பானி’ என்பது கூட்டுவாழ்க்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. நாம் வாழும் தேசத்தில் சாதி, மதம் கடந்து கூட்டு சேர்ந்து வாழ்ந்து கோடி நன்மைகளைப் பெற வேண்டும்.

    மூன்றாவது, பசியையும், வறுமையையும் போக்க உதவும் தியாக திருநாளாக அமைகிறது.

    பசிக்கும், வறுமைக்கும் எதிராகப் போராடி வளமான உலகை கட்டமைப்பது நமது அனைவரின் கடமையாகும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

    ஒருவர் தவறான வழியில் சென்றாலும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை போற்றி, பின்னர் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினால், அவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்தி நல்வழியில் நடக்க முன்வருவார்.
    காலித் பின் வலீத் (ரலி) அவர்களைக் குறித்தோ அவரின் வீரம் குறித்தோ அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். காலித் (ரலி) இஸ்லாத்தை ஏற்றால் நன்றாக இருக்குமே என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

    ஆயினும் அது எவ்வாறு நடக்கும்? அவர்தான் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்துப் போரிலும் முன்னணியில் நின்று போரிடுகின்றாரே. மட்டுமல்ல உஹது போரில் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமே அவர்தானே.

    இவ்வளவும் ஏன்? கஸ்ஃபான் என்ற இடத்தில் வைத்து பெருமானார் (ஸல்) அவர்களையே கொலை செய்யவும் முயன்றார் இந்த காலித் (ரலி). அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பும் துவேஷமும் கொண்டிருந்தார்.

    அவரைக் குறித்துதான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர்களைவிட அவருக்கு நாம் அதிக சங்கை செய்வோம்”.

    காலித் (ரலி) அவர்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த நல்ல வார்த்தைகள் தான் அவரை இஸ்லாத்தின்பால் கொண்டுவந்தது.

    ஆயினும் இது எப்போது நடந்தது? எங்கு வைத்து? எந்த சந்தர்ப்பத்தில் கூறியது? வாருங்கள் பார்க்கலாம்.

    ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின்னர் குறைஷிகளின் செல்வாக்கும் மதிப்பும் அரபுகளுக்கு மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருவதை காலித் உணரத் தொடங்கினார். ஆனால், என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார்.

    முஹம்மதைப் பின்பற்றுவதா.. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதா.. அல்லது வேறு மதங்களை ஏற்றுக்கொள்வதா..? என்பது அவருக்கு புரியவில்லை.

    இந்த நேரத்தில்தான் ‘உம்ரா’ செய்வதற்காக முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை தந்தனர். இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் மக்காவில் வலம் வரும் முஸ்லிம்களைக் கண்ணால் காணும் மனோதிடம் காலித் (ரலி) அவர்களுக்கு இருக்கவில்லை.

    ஆகவே நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி இருந்த நான்கு நாட்களும் மக்காவை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    நபி (ஸல்) அவர்களும் தமது ‘உம்ரா’வை முடித்தார்கள். மக்காவின் வீதிகளில் உலா வந்தார்கள். பழைய நினைவுகள் திரும்பின. அத்துடன் காலித் பின் வலீதின் நினைவும் வந்தது.

    காலிதுடைய சகோதரர் வலீத் பின் வலீத் (ரலி), பெருமானாருக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். இவர் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்று நபிகளாருடன் உம்ரா செய்வதற்காக மக்காவுக்கு வந்திருந்தார்.

    வலீத் பின் வலீத் (ரலி) அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: ‘காலித் எங்கே?’

    பெருமானாரின் இந்தக் கேள்வி வலீத் (ரலி) அவர்களுக்கு வியப்பைத் தந்தது. தமக்குப் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் தந்த தனது சகோதரரைக் குறித்து நபிகளார் விசாரிக்கின்றார்கள். ஆயினும் அவர் ஓடிவிட்டார் என்று எவ்வாறு கூறுவது?.

    ஆகவே, ‘அவர் வருவார்.. அல்லாஹ்வின் தூதரே!’ என்று மட்டும் கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவரைப் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் இருக்கலாமா? அவருடைய போர் திறமையும், கூர்மையான அறிவும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பயனளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவருக்குத்தானே அது நன்மை. அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர்களைவிட அவருக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுப்போம்”.

    காலித் குறித்த அண்ணலாரின் செய்தியை அவரது சகோதரர் வலீத் (ரலி) அவர்களிடம் சமர்ப்பித்தாயிற்று. இனி என்ன..? வலீத் (ரலி) தமது சகோதரரை மக்காவின் வீதிகளில் தேடத்தொடங்கினார். கிடைக்கவில்லை. அவர் அங்கு இருந்தால் அல்லவா கிடைப்பதற்கு..? ஆகவே சகோதரர் காலிதுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்:

    “அல்லாஹ்வின் திருப்பெயரால்... இஸ்லாத்தைக் குறித்த உனது அறியாமை எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது காலித். உனது அறிவுத் திறமைபோல் யாருக்கும் வராது. உன்னைப் போன்றோர் இஸ்லாத்தைக் குறித்த அறியாமையில் இருக்கலாமா?. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘காலித் எங்கே?’ என்று உன்னைக் குறித்து விசாரித்தார்கள். ‘நிச்சயம் நீ வருவாய்’ என்று நான் கூறியுள்ளேன். அதற்கு, ‘அவர் மட்டும் நம்மிடம் வந்தால் ஏனையவர் களைவிட அவருக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுப்போம்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அருமைச் சகோதரரே..! தவறவிட்ட நன்மைகளைச் சம்பாதிப்பதற்கான காலம் கனிந்து நிற்கிறது. இனியும் தாமதம் வேண்டாம்”.

    சகோதரர் எழுதிய கடிதம் காலிதின் (ரலி) கரங்களுக்குக் கிடைக்கிறது. மனம் மாறத் தொடங்கியது. பின்னர் நடந்தவற்றை காலித் (ரலி) அவர்களே கூறுகின்றார்கள்:

    “என்னை வந்தடைந்த என் சகோதரரின் கடிதத்தைப் படித்தபோது, இஸ்லாத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதரே என்னை விசாரித்துள்ளார்கள் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. மதீனாவுக்குச் செல்ல தீர்மானித்தேன். தீர்மானத்தைச் செயல்படுத்தினேன்”.

    “மதீனா செல்லும் பாதையில் என்னுடன் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) மற்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோரும் இணைந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது சகோதரர் மூலம் எனது வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்டார்கள்”.

    “மதீனாவின் எல்லையில் எனது சகோதரர் என்னை வரவேற்று, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். நீ வருவது அவர் களுக்கு பெரும் மகிழ்ச்சி, வேகமாகச் செல்’ என்று கூறினார்”.

    “தூரத்தில் இருந்தே என்னைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், புன்னகை செய்தவராக என்னை நோக்கி வந்தார்கள். சந்தித்தோம். முழு மனதுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”.

    பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உனக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! நீ புத்திசாலி என்று எனக்குத் தெரியும். உனது புத்திசாலித்தனம் நன்மையின் பக்கம்தான் உன்னை அழைத்து வரும் என்றும் எனக்குத் தெரியும்’.

    பின்னர் நடந்தவை அனைத்தும் வரலாறுதான். காலிதின் (ரலி) வீரதீரச் செயல்களை எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

    ஆயினும், காலிதின் மனமாற்றத்திற்கான காரணம் என்ன..? தமக்கு எதிராக எவ்வளவுதான் எதிர்ப்பை காட்டியிருந்த போதிலும் அவரிடம் இருந்த நல்ல பண்புகளைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் முதலில் குறிப்பிட்டார்கள்.

    ஒருவர் தவறான வழியில் சென்றாலும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை போற்றி, பின்னர் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினால், அவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்தி நல்வழியில் நடக்க முன்வருவார். இந்த நிகழ்ச்சி கற்றுத்தரும் நமக்கான பாடமும் அதுதான்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்.
    அடுத்தவர் குறையை சுட்டிக் காட்டும்போது எடுத்த எடுப்பிலேயே அவரிடம் இருக்கும் எதிர்மறை விஷயங்களை முதலில் குத்திக் காட்டாதீர்கள். அணு அளவும் நன்மையின்றி யாரையும் அல்லாஹ் படைக்கவில்லை. எல்லோரிடத்திலும் ஏதோ ஒரு நன்மை இருந்தே தீரும். எனவே ஒருவரிடம் இருக்கும் நேர்மறை விஷயங்களை முதலில் சுட்டிக் காட்டியபின் கூறவந்த எதிர்மறை விஷயங்களைக் கூறலாம். உண்மையில் இதற்கு கைமேல் பலன் இருக்கின்றது. நபிகளாரின் பாணி அவ்வாறுதான் அமைந்திருந்தது.

    பணியாளர் தாமதமாக வருகை தருகிறாரா..? எடுத்த எடுப்பிலேயே அதுகுறித்து உபதேசிக்க வேண்டாம். முதலில் அவரது பணியில் இருக்கும் சிறப்புகளை எடுத்துச் சொல்லுங்கள். அந்த சிறப்புக்களுடன் நேரம் தவறாமையும் சேர்ந்தால் மிக அழகாக இருக்கும் என்பதை உபதேசியுங்கள்.

    நண்பர் தொழுகையாளிதான் ஆனால் அதிகாலைத் தொழுகைக்கு மட்டும் ஏனோ வராமல் இருக்கின்றார். எனில், உடனடியாக ‘வழிகேடன்’ எனும் பட்டம் கொடுத்து அவரைப் படுகுழியில் தள்ளிவிட வேண்டாம். அவ்வாறு செய்தால் தொழுதுகொண்டிருந்த ஏனைய தொழுகைகளையும் விட்டுவிடும் அபாயம் ஏற்படலாம். ஆகவே அவரிடம் இருக்கும் தொழுகை எனும் நல்ல பண்புகளையும் இன்னபிற நற்குணங்களையும் முதலில் கூறுங்கள். பின்னர் உங்களைப் போன்ற மனிதர் அதிகாலைத் தொழுகையைப் புறக்கணிக்கலாமா என்று அறிவுரைக் கூறுங்கள்.

    இவ்வாறு நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டையும் ஒருசேரக் கூறுவதுதான் நீதிமிக்க உபதேசம். உபதேசம் என்ற பெயரில் குறைகளை மட்டும் கூறுவது மாபெரும் அநீதி. அணு அளவு நன்மையையும் அல்லாஹ் வீணடிக்க மாட்டான் என்பது நமக்குத் தெரியும். அப்படியிருக்க ஒருவரிடம் இருக்கும் ஏதோ ஒரு குறைக்காக அவரிடம் இருக்கும் ஒட்டுமொத்த நல்ல செயல்களையும் மறப்பதும் மறைப்பதும் முறையற்ற செயல் அல்லவா?.

    நமது பார்வையில் அவர் இன்னும் மதிப்பு மிக்கவராக இருக்கின்றார் என்று அவர் எண்ணும் அளவுக்கு நமது உபதேசங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது உபதேசங்கள் எடுபடும். இல்லையேல் மணிக்கணக்கில் உபதேசித்தாலும் காதில் வாங்கிக் காற்றில் கரைந்து விடும்.

    அடுத்தவர் குறையைச் சுட்டிக்காட்டும்போது பெருமானாரின் பாணியே தனிதான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கும்போது, வானை நோக்கி தமது பார்வையை உயர்த்தினார்கள். தொடர்ந்து கூர்ந்து நோக்கினார்கள். பின்னர் அச்சமூட்டும் செய்தி ஒன்றைக் கூறினார்கள்: “மக்களிடமிருந்து கல்வி எடுபட்டுப் போகும் நேரம் இது. இறைநெறியைப் பற்றிய அறிவு இல்லாமல் போகும் நேரத்தில்தான் இவ்வாறு நிகழும்”.

    (அதாவது மார்க்கம் குறித்தோ, குர்ஆனைப் புரிந்துகொள்வது குறித்தோ வரும் காலங்களில் மக்கள் அதிகம் முனைப்பு காட்டமாட்டார்கள் என்று பொருள்).

    உடனே அந்த சபையில் இருந்த ஸியாத் பின் லபீத் (ரலி) எனும் அன்சாரித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு எடுபட்டுப் போகும்? குர்ஆனை நாங்கள் ஓதிக்கொண்டிருக்கின்றோம். எங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கும் ஓதிக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வாறிருக்க, இறைநெறி பற்றிய அறிவு எப்படி இல்லாமல் போகும்?”

    பெருமானார் (ஸல்) அவர்கள் ஸியாத் (ரலி) அவர்களைப் பார்த்தார்கள். மார்க்கம் குறித்த ரோஷமும், கற்றுக்கொள்ளும் பேரார்வமும் முகத்தில் தெரிந்தது. அவரது தவறான புரிதலுக்கு சரியான விளக்கமளிக்க நாடினார்கள்.

    பின்னர் அவர்கள் கூறினார்கள்: “நன்றாக இருக்கிறது உன் கூற்று ஸியாதே! நான் உன்னை மதீனாவிலேயே மிகவும் புத்திசாலி என்றல்லவா நினைத்திருந்தேன்!”

    (அனைவருக்கும் முன்னிலையில் ஸியாத் (ரலி) அவர் களிடம் இருக்கும் திறமையைப் பெருமானார் (ஸல்) அவர்கள் புகழுகின்றார்கள். அதுவும் மதீனாவிலேயே புத்திசாலி என்று பாராட்டுகின்றார்கள்).

    பின்னர் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யூதர்களும், கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் எத்தனையோ முறை ஓதுகின்றார்கள் என்பதையும், பிறகு அவற்றின் அறிவுரைகளின்படி சிறிதளவும் அவர்கள் செயல்படுவதில்லை என்பதையும் நீர் பார்க்கவில்லையா?” (இப்னுமாஜா, திர்மிதி)

    அதாவது, குர்ஆன் நம்மிடம் வெறுமனே இருப்பதால் மட்டுமே எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. அதனை பொருளுடன் புரிந்து ஓதி செயல்படுத்தும்போதுதான் வெற்றி கிட்டும் எனும் கருத்தை மிகவும் அழகாக ஸியாத் (ரலி) அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்கள்.

    எடுத்த எடுப்பிலேயே ‘ஸியாதே! உமக்கு அறிவு இருக்கா...’ என்று கேட்கவில்லை நபிகளார். அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கூறுகின்றார்கள் பின்னரே விளக்கம் சொல்லப்படுகிறது. நிச்சயம் தமது தவறை ஸியாத் (ரலி) உணர்ந்து இருப்பார்கள். இதுதான் நீதிமிக்க உபதேசம்.

    உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    ×