search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை
    X

    முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை

    உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்.
    அடுத்தவர் குறையை சுட்டிக் காட்டும்போது எடுத்த எடுப்பிலேயே அவரிடம் இருக்கும் எதிர்மறை விஷயங்களை முதலில் குத்திக் காட்டாதீர்கள். அணு அளவும் நன்மையின்றி யாரையும் அல்லாஹ் படைக்கவில்லை. எல்லோரிடத்திலும் ஏதோ ஒரு நன்மை இருந்தே தீரும். எனவே ஒருவரிடம் இருக்கும் நேர்மறை விஷயங்களை முதலில் சுட்டிக் காட்டியபின் கூறவந்த எதிர்மறை விஷயங்களைக் கூறலாம். உண்மையில் இதற்கு கைமேல் பலன் இருக்கின்றது. நபிகளாரின் பாணி அவ்வாறுதான் அமைந்திருந்தது.

    பணியாளர் தாமதமாக வருகை தருகிறாரா..? எடுத்த எடுப்பிலேயே அதுகுறித்து உபதேசிக்க வேண்டாம். முதலில் அவரது பணியில் இருக்கும் சிறப்புகளை எடுத்துச் சொல்லுங்கள். அந்த சிறப்புக்களுடன் நேரம் தவறாமையும் சேர்ந்தால் மிக அழகாக இருக்கும் என்பதை உபதேசியுங்கள்.

    நண்பர் தொழுகையாளிதான் ஆனால் அதிகாலைத் தொழுகைக்கு மட்டும் ஏனோ வராமல் இருக்கின்றார். எனில், உடனடியாக ‘வழிகேடன்’ எனும் பட்டம் கொடுத்து அவரைப் படுகுழியில் தள்ளிவிட வேண்டாம். அவ்வாறு செய்தால் தொழுதுகொண்டிருந்த ஏனைய தொழுகைகளையும் விட்டுவிடும் அபாயம் ஏற்படலாம். ஆகவே அவரிடம் இருக்கும் தொழுகை எனும் நல்ல பண்புகளையும் இன்னபிற நற்குணங்களையும் முதலில் கூறுங்கள். பின்னர் உங்களைப் போன்ற மனிதர் அதிகாலைத் தொழுகையைப் புறக்கணிக்கலாமா என்று அறிவுரைக் கூறுங்கள்.

    இவ்வாறு நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டையும் ஒருசேரக் கூறுவதுதான் நீதிமிக்க உபதேசம். உபதேசம் என்ற பெயரில் குறைகளை மட்டும் கூறுவது மாபெரும் அநீதி. அணு அளவு நன்மையையும் அல்லாஹ் வீணடிக்க மாட்டான் என்பது நமக்குத் தெரியும். அப்படியிருக்க ஒருவரிடம் இருக்கும் ஏதோ ஒரு குறைக்காக அவரிடம் இருக்கும் ஒட்டுமொத்த நல்ல செயல்களையும் மறப்பதும் மறைப்பதும் முறையற்ற செயல் அல்லவா?.

    நமது பார்வையில் அவர் இன்னும் மதிப்பு மிக்கவராக இருக்கின்றார் என்று அவர் எண்ணும் அளவுக்கு நமது உபதேசங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது உபதேசங்கள் எடுபடும். இல்லையேல் மணிக்கணக்கில் உபதேசித்தாலும் காதில் வாங்கிக் காற்றில் கரைந்து விடும்.

    அடுத்தவர் குறையைச் சுட்டிக்காட்டும்போது பெருமானாரின் பாணியே தனிதான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்து இருக்கும்போது, வானை நோக்கி தமது பார்வையை உயர்த்தினார்கள். தொடர்ந்து கூர்ந்து நோக்கினார்கள். பின்னர் அச்சமூட்டும் செய்தி ஒன்றைக் கூறினார்கள்: “மக்களிடமிருந்து கல்வி எடுபட்டுப் போகும் நேரம் இது. இறைநெறியைப் பற்றிய அறிவு இல்லாமல் போகும் நேரத்தில்தான் இவ்வாறு நிகழும்”.

    (அதாவது மார்க்கம் குறித்தோ, குர்ஆனைப் புரிந்துகொள்வது குறித்தோ வரும் காலங்களில் மக்கள் அதிகம் முனைப்பு காட்டமாட்டார்கள் என்று பொருள்).

    உடனே அந்த சபையில் இருந்த ஸியாத் பின் லபீத் (ரலி) எனும் அன்சாரித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு எடுபட்டுப் போகும்? குர்ஆனை நாங்கள் ஓதிக்கொண்டிருக்கின்றோம். எங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கும் ஓதிக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வாறிருக்க, இறைநெறி பற்றிய அறிவு எப்படி இல்லாமல் போகும்?”

    பெருமானார் (ஸல்) அவர்கள் ஸியாத் (ரலி) அவர்களைப் பார்த்தார்கள். மார்க்கம் குறித்த ரோஷமும், கற்றுக்கொள்ளும் பேரார்வமும் முகத்தில் தெரிந்தது. அவரது தவறான புரிதலுக்கு சரியான விளக்கமளிக்க நாடினார்கள்.

    பின்னர் அவர்கள் கூறினார்கள்: “நன்றாக இருக்கிறது உன் கூற்று ஸியாதே! நான் உன்னை மதீனாவிலேயே மிகவும் புத்திசாலி என்றல்லவா நினைத்திருந்தேன்!”

    (அனைவருக்கும் முன்னிலையில் ஸியாத் (ரலி) அவர் களிடம் இருக்கும் திறமையைப் பெருமானார் (ஸல்) அவர்கள் புகழுகின்றார்கள். அதுவும் மதீனாவிலேயே புத்திசாலி என்று பாராட்டுகின்றார்கள்).

    பின்னர் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யூதர்களும், கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் எத்தனையோ முறை ஓதுகின்றார்கள் என்பதையும், பிறகு அவற்றின் அறிவுரைகளின்படி சிறிதளவும் அவர்கள் செயல்படுவதில்லை என்பதையும் நீர் பார்க்கவில்லையா?” (இப்னுமாஜா, திர்மிதி)

    அதாவது, குர்ஆன் நம்மிடம் வெறுமனே இருப்பதால் மட்டுமே எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. அதனை பொருளுடன் புரிந்து ஓதி செயல்படுத்தும்போதுதான் வெற்றி கிட்டும் எனும் கருத்தை மிகவும் அழகாக ஸியாத் (ரலி) அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்கள்.

    எடுத்த எடுப்பிலேயே ‘ஸியாதே! உமக்கு அறிவு இருக்கா...’ என்று கேட்கவில்லை நபிகளார். அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கூறுகின்றார்கள் பின்னரே விளக்கம் சொல்லப்படுகிறது. நிச்சயம் தமது தவறை ஸியாத் (ரலி) உணர்ந்து இருப்பார்கள். இதுதான் நீதிமிக்க உபதேசம்.

    உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×