என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    கைபர் போரில் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறாதவர்கள் கால்நடைச் செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருடகள் ஆகியவற்றையே பெற்றிருந்தனர்.
    கைபர் வெற்றி கொண்டபின் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ‘வாதில் குரா’ எனும் இடத்திற்குச் சென்றார்கள். அங்கு, தமது அடிமைகளில் ஒருவரான ‘மித்அம்’ என்பவரை எங்கிருந்தோ வந்த அம்பு தாக்கிக் கொன்றது. இதைக் கண்ட மக்கள் அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டதாகப் பேசி வாழ்த்தினர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இல்லை, இவர் போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அதிலிருந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அந்தப் போர்வை அவரின் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது’ என்றார்கள்.

    இதைக் கேட்ட மக்கள் பீதியடைந்தனர். கைபர் போரில் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறாதவர்கள் கால்நடைச் செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருடகள் ஆகியவற்றையே பெற்றிருந்தனர். சிறிய பொருள்தானே என்று அலட்சியமாக எடுக்கப்பட்ட பொருட்களையெல்லாம் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கேட்டதும் மக்கள் கொண்டு வந்து கொட்டினர்.

    ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு செருப்பு வாரைக் கொண்டு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரணச் செருப்பு வாராக இருந்திராது. மாறாக, நெருப்பு வாராக மாறியிருக்கும்' என்று கூறினார்கள்.

    வாதில் குரா என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதனால் யூதர்களும் ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணடைந்தார்கள். நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதாவது நிலங்களில் பயிரிட்டு உழைத்துக் கொள்ளலாம். விளைச்சலில் பாதி உழைப்புக்குரியவர்களும் மீதி அரசுக்கு நிலவரியாகச் செலுத்தப்பட வேண்டுமென்றும் ஒப்பந்தமானது.

    ஒப்பந்தத்திற்குப் பின் நபி(ஸல்) மதீனாவிற்குத் திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கில் உள்ள மேடான பகுதியில் ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும் மக்கள் குரலை உயர்த்திக் கூறினர்.

    அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் இறைவனான அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

    மக்களும் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையின்படி தங்களது குரலைத் தாழ்த்தி கொண்டனர்.

    ஸஹீஹ் புகாரி 7:83:6707, 3:56:2992

    - ஜெஸிலா பானு.
    இஸ்லாத்தின் கொள்கைகளை, அதன் சிறப்புகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்வோம், அனைவரோடும் இணைந்து வாழ்வோம்.
    மனிதர்களின் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமற்றது. ‘அல்லாஹ் ஒருவனே இறைவன்’ என்று ‘ஈமான்’ கொண்ட ஒருவரின் வெற்றி மறுமையில் தான் நிச்சயம் செய்யப்படும். இந்த உலகை விளைநிலமாக பயன் படுத்தி, அதில் விளைவிக்கின்ற நன்மைகளின் பொருட்டால் மட்டுமே மறுமையின் வெற்றியை ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

    தீமைகளைத் தடுப்பதிலும், நன்மையைச் செய்ய ஆர்வமூட்டுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய் கிறவர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார்கள். அதற்கான சிறந்த வழிமுறையாக அல்லாஹ் தன் அருள்மறையிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், நற் செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொரு வர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரைக் கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (திருக்குர்ஆன்: 103:3)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட அல்லாஹ் இந்த கட்டளையத் தான் சொன்னான். ‘வஹி’ மூலம் சொல்லப்பட்ட நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் செய்யும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றே நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான்.

    இதையடுத்து நபிகளார் அன்றைய அரபு மக்களிடம் தனது ஏக இறைக்கொள்கையை எடுத்துக்கூறினார்கள். ‘நீங்கள் வணங்கும் உருவங்களுக்கு எந்தவித ஆற்றலும் இல்லை. அவைகள் மனிதனால் படைக்கப்பட்டவை. சக்தியற்ற அதனை விடுத்து எல்லா சக்திகளும் ஒருங்கே கொண்ட ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்க வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த மக்கள் அதை ஏற்கவில்லை. நபிகளாரை துன்புறுத்தினார்கள்.

    இதனால் கலங்கிய நபிகளாரிடம் அல்லாஹ் ஆறுதல் கூறுகையில் ‘நபியே! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். எனது கட்டளைகளை எடுத்தியம்புவதே உங்களின் கடமை. அந்த மக்களில் யாரை, எப்போது எப்படி நேர்வழிப்படுத்த வேண்டும் என்பது என் கைவசம் உள்ளது’ என்றான்.

    அதோடு இன்னும் சேர்த்து சொல்கிறான், “இந்த கட்டளையை நீங்கள் நிறைவேற்றும் போது சந்திக்கின்ற துன்பங்களையும், தொல்லைகளையும் பொறுமையோடு சகித்து கொள்ளுங்கள். அல்லாஹ் முடிவான வெற்றியை உங்களுக்கே அளிப்பான்”.

    எனவே சோதனைகள் பல வந்தாலும் நபிகளார் எதற்கும் கவலைப்படாமல் இறைவன் கட்டளையை தொடர்ந்து நிறைவேற்றினார்கள்.

    ஒரு முஸ்லிமின் கடமை, தான் மட்டும் ஈமான் கொண்டு ஈடேற்றம் பெற்றுக்கொள்வதோடு நின்று விடுவதில்லை. அவன் அறிந்திருக்கின்ற அல்லாஹ்வைப் பற்றிய அத்தனை உண்மைகளையும், அவன் கட்டளைகளையும் பிறருக்கு எடுத்துச் சொல்லி அவர் களையும் நன்மையின் பக்கம் அழைப்பதே அவனின் முழுமையான வாழ்வின் அடையாளமாக அமையும்.

    அரபா மைதானத்திலே, அந்த கடைசி பேருரையிலே அண்ணல் நபிகள் சொன்னார்கள், ‘அல்லாஹ் இன்றோடு இந்த புனித இஸ்லாத்தின் கோட்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்து விட்டான். யாரெல்லாம் இந்த செய்தியை செவிமடுத்தார்களோ அவர்கள் பிறருக்கும் இதனை அறிவியுங்கள்’ என்று தன் மீது விதிக்கப்பட்ட கட்டளையை தன் மக்கள் மீது சாட்டி விட்டு சென்று விட்டார்கள்.

    அன்றைய கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ, எந்த திசையில் நின்றார்களோ அப்படியே அந்த திசையிலேயே பயணத்தை தொடர்ந்து விட்டார்கள். உலகெங்கும் இன்று இஸ்லாம் இந்த அளவு நிலை பெற்றிருக்கிறது என்றால் அன்று அந்த சஹாபாக்கள் செய்த தியாகம். அவர்கள் இறைவனின் கட்டளையை, நபிகளார் எடுத்து சொன்ன முறையில் நடை முறைப்படுத்தியதால் இன்று இத்தனை பெரிய வெற்றியைக் கொண்டு இஸ்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய உண்மைக்கு புறம்பான அவதூறுகள் பரப்பப்பட்டாலும், சத்தியத்தை எடுத்துச் சொல்லும் அந்த பக்குவத்தால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. நன்மைகளை நடைமுறைப்படுத்தி, தீமைகளை தடுத்தாண்டு கொண்டிருக்கும் நல்லவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது தான் இதற்கு காரணமாகும்.

    மூஸா நபியவர்கள் ஏக இறை கொள்கையை எடுத்தியம்பிய காலகட்டத்தில், ஒரு கூட்டத்தினர் அவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தனர். அப்போது அவர்களிடையே இருந்த நல்லவர் ஒருவர் அவர்களை நோக்கி, ‘அல்லாஹ் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்து விடலாமா? அவரோ உங்கள் இறைவனிடமிருந்து பல அத்தாட்சிகளை கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய் சொல்பவராயிருந்தால் அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ அவர் சொல்லும் வேதனைகளில் பல உங்களை வந்து அடைந்து விடுமே’ என்று சொன்னார். (திருக்குர்ஆன் 40:28)

    இன்றைய சூழ்நிலையில் இஸ்லாம் பற்றிய அவதூறுகள் பரப்பப்படுவதற்கு காரணம் இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள், சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றை பிறரிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லப்படாததால் தான். அதனால் இஸ்லாத்தின் கொள்கைகளை, அதன் சிறப்புகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்வோம், அனைவரோடும் இணைந்து வாழ்வோம்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு யூதப் பெண்ணொருத்தி நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.
    கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு யூதப் பெண்ணொருத்தி நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.

    அழைப்பை ஏற்றார்கள் நபிகளார். அந்த யூதப் பெண்மணி விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது தோழர்கள் சாப்பிட அமர்ந்தனர். நபிகளாருக்கு ஆட்டின் எந்தப் பகுதி பிடிக்குமென்று அறிந்து தெரிந்து கொண்டு அந்தப் பாகத்தில் அதீத விஷத்தைத் தடவியிருந்தார் அந்தப் பெண். அன்போடு பரிசளிக்கப்பட்ட ஆட்டிலிருந்து நபி(ஸல்) சிறிது உண்டார்கள்.

    இறைச்சியை வாயில் போட்டு சுவைக்கும் முன்பே அதில் விஷம் இருப்பதை அறிந்து கொண்ட நபி(ஸல்) அவர்கள் தோழர்களை நோக்கி “இதைச் சாப்பிடாதீர்கள், இதில் விஷம் தடவப்பட்டுள்ளது” என்று தடுத்து விட்டு  'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்' என்றார்கள்.

    ஒன்று திரட்டி கொண்டு வரப்பட்ட யூதர்களை நோக்கி நபி(ஸல்), 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அப்போது கூட்டத்திலிருந்த அந்த யூதப் பெண்மணி தைரியமாக, 'ஆம் கலந்திருக்கிறோம்' என்று பதில் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நீங்கள் பொய்யராக இருந்து விஷத்தின் மூலம் இறந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அந்த விஷமானது தீங்கு செய்யாது' என்று பதிலளித்தார்கள்.

    நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் கொந்தளித்தனர். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபிகளாரோ, 'வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள்.

    நபி (ஸல்) அவர்களுடன் விருந்தில் இருந்த பிஷ்ர் இப்னு பரா (ரலி) என்ற தோழர் அந்த விஷம் கலந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் மரணித்து விட்டார். மரணித்துவிட்டதால் அப்பெண்மணிக்குத் தண்டனை தந்தே ஆக வேண்டுமென்று தோழர்கள் வலியுறுத்தினர்.

    நபிகளாரால் மன்னிக்கப்பட்டவர், அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரலி) இறந்துவிட்டதால் அவளுக்குத் தண்டனைத் தரப்பட்டது என்று சில அறிஞர்களின் வரலாறு குறிப்பில் உள்ளது.

    நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களது மரணப்படுக்கை வரை தொடர்ந்தது.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:51:2671, 3:58:3169, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு.
    தொழுகைபோன்ற வணக்கத்தில் ஈடுபடும் ஒருவர் அதன் நிபந்தனைகளை அடிபிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார்.
    ஸுப்யானுஸ் ஸவ்ரி என்ற அறிஞரிடம் ஒருவர் கேட்டார்: “அறிஞரே! கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவதா..?”

    அறிஞர் கூறினார்: “நீ உண்ணும்ரொட்டித் துண்டு ஆகுமான வழிமுறையின் மூலம் (ஹலால்) கிடைத்ததா? அல்லது தவறான வழிமுறையின் மூலம் (ஹராம்) கிடைத்ததா? என்பதில் கவனம் செலுத்து. அவ்வாறெனில் வரிசையில் எங்கு நின்று தொழுதாலும் பிரச்சினை இல்லை. சிலபோது எங்கு தொழவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பாய். ஆனால் அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குக் காரணமாக அமையும் உணவு குறித்து கவனம் செலுத்தியிருக்க மாட்டாய்”.

    எவ்வளவு பெரிய உண்மையை அந்த அறிஞர் கூறியிருக்கின்றார் பாருங்கள்.

    தொழுகைபோன்ற வணக்கத்தில் ஈடுபடும் ஒருவர் அதன் நிபந்தனைகளை அடிபிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார். நல்ல விஷயம்தான். அதேவேளை அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் உண்ணும் உணவும் நல்ல வழிமுறையினூடாக (ஹலால்) வந்திருக்க வேண்டும் என்பதில் எத்தனை பேர் கவனம் செலுத்துகின்றோம்?

    அடுத்தவர் பொருளை அபகரித்துத் தின்றுவிட்டு முதல் வரிசையில் நின்று தொழுவதால் என்ன பயன்? அனுமதிக்கப்பட்ட உணவை உண்டபின் செய்யும் வணக்கங்களை மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற அடிப்படை அறிவை மனதில் இருத்த வேண்டாமா? அவ்வளவு ஏன் .. தவறான முறையில் ஈட்டிய உணவை உண்டபின் செய்யும் பிரார்த்தனைகளைக்கூட இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை”. (முஸ்லிம்)

    வெகு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைக் குறித்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவருடைய தலை முடி கலைந்துள்ளது. உடலில் புழுதி படிந்துள்ளது. வானை நோக்கி கரங்களை ஏந்தியவாறு, ‘என் இறைவா..! என் இறைவா..!” என்று இறைஞ்சுகின்றார். (ஆயினும் அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) இறைவன் எப்படிஅந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? அவனது உணவு ஹராம். அவனது பானம் ஹராம். அவனது உடை ஹராம். ஹராமிலேயே வளர்ந்திருக்கின்றான். பின் எப்படி அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?” (புகாரி)

    கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இதுதான். விழுந்து விழுந்து சிலர் தொழுகின்றார்கள். ஆயினும் தங்களது உணவும், உடையும் ஆகுமான வழிமுறைகளின் மூலம் வந்ததுதானா? என்று யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

    ஓய்வு ஒளிச்சல் இன்றி பணியாளர்களிடம் வேலை வாங்கியபின் எவ்வித நியாயமும் இன்றி பணியாளர் களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பவர், பள்ளிவாசலில் தொழுவதால் என்ன பயன்?

    பணிப்பெண்களிடம் நாள் முழுக்க வீட்டு வேலை வாங்கிவிட்டு, சம்பளத் தேதி வந்துவிட்டால் ‘பின்னர் ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று கூறுபவர் எந்த தைரியத்தில் இறைவனின் சன்னிதியில் பிரார்த்தனைக்காக இருகரம் ஏந்துகின்றாரோ தெரியவில்லை. அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து ஏமாற்றுவது போன்று ஆண்டவனின் உண்டியலில் எதையாவது போட்டுவிட்டால் ஆகவேண்டியதை அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று நினைத்துக்கொள்கின்றனரோ?

    ‘பூனையைக் கட்டிப்போட்டு உணவளிக்காமல் அதற்கு அநீதி இழைத்தமைக்காக ஒரு பெண்ணுக்கு இறைவன் நரகத்தைக் கொடுத்தான்’ என்ற செய்தி நாம் அறிந்ததுதானே. ஒரு மிருகத்துக்கு அநீதி இழைக்கும்போதே நரகம் எனில் மனிதனுக்கு அநீதி இழைப்பவருக்கு என்ன தண்டனை என்பதை எண்ணிப்பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

    ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்: “இறைத்தூதரே! எனது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்”.

    ‘இறைவா! ஸஅதுடைய பிரார்த் தனையை நீ அங்கீகரிப்பாயாக!’ என்று நபிகளாரும் பிரார்த்தனை செய்திருக்க முடியும். ஆயினும் தோழர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள்.

    ஆம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸஅதே! தூய்மையானவற்றை மட்டும் உண்ணுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்”.

    பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் படாமல் இருக்கின்றது என்றால் பிரார்த்தனையில் கோளாறு கிடையாது. மாறாக பிரார்த்தனை செய்யும் நபரிடத்தில்தான் கோளாறு. ஒரு சில வேளைகளில் மனம் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

    நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்றுமுதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார். காரணம் அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம்தான்.

    உணவின் விஷயத்தில் நமது முன்னோர்கள் எந்த அளவு தூரம் கவனம் செலுத்தி வந்தார்கள் என்றால், நேரடியாகத் தமக்குத் தொடர்பு இல்லாதவையாக இருந்தாலும்கூட அதையும் தவிர்த்துக்கொண்டனர்.

    அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய அபூபக்கர் (ரலி) அவர்களுக்குத் தனது சம்பாத்தியத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திவந்தான். அபூபக்கர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டுவந்தார்கள். ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை, “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்கர் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள்.

    அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லி வந்தேன். எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை நான் ஏமாற்றிவிட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்” என்று சொன்னான்.

    உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் கையை வாய்க்குள் நுழைத்து தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டார்கள். (புகாரி).

    பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கான முதல் அடையாளம் உணவு தூய்மையாக இருத்தல்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்' என்றார்கள்.
    மதீனாவிலிருந்து வடக்கே 80 மைல் தொலைவிலுள்ள ஊரான கைபர் முற்காலத்தில் விவசாயப் பூமியாகத் திகழ்ந்தது. குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதியாகினர். ஆனால் கைபர்வாசிகள் முஸ்லிம்களுக்குப் பெரும் தொல்லை கொடுப்பவர்களாகவே திகழ்ந்தனர். குறைஷிகளையும் பிற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போரை ஏற்பாடு செய்ததே இந்தக் கைபர்வாசிகள்தான்.

    முஸ்லிம்களுடனான யூதர்களின் ஒப்பந்த மீறலுக்கும் காரணமானவர்கள் இவர்கள்தான். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களைத் தேடி அவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்து முஸ்லிம்களைச் சிரமங்களுக்கு உள்ளாக்கியவர்கள். அதனால் இவர்களுடன் போர் புரியும் கட்டாயத்திற்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.

    “ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். இதை முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் இவ்வாறு அருள் புரிந்தான்” என்ற இறை வசனம் அச்சமயத்தில் அருளப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள் போர் புரிய ஆசையுள்ளவர்களை மட்டும் கைபர் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்கள். கிட்டத்தட்ட 1400 தோழர்கள் இப்போரில் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் அபூஹுரைரா(ரலி) இஸ்லாமை ஏற்று மதீனாவிற்கு வந்தார்கள். எல்லாரும் சேர்ந்து கைபரை நோக்கிப் புறப்பட்டனர்.

    நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் (காலை நேரத் தொழுகை) வரும் வரை யாரையும் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு அதாவது தொழுகைக்கான அழைப்பு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.

    இரவு நேரத்தில் கைபரை அடைந்தவர்கள் ஸுபுஹ் நேரம் வரை காத்திருந்து, பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் போருக்குத் தயாராக வாகனத்தில் ஏறினார்கள். அவர்களை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கைபர்வாசிகளும் போருக்குத் தயாராக மண் வெட்டிகளையும், மரக்கால் போன்றவைகளையும் ஆயுதமாகச் சுமந்து தாக்க வந்தனர்.

    நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் கிலியுடன் 'அதோ முஹம்மத்! அவரின் படை!' என்று பீதியடைந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்' என்றார்கள்.

    கைபரை முஸ்லிம்கள் கைப்பற்றினர். எந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டாலும் அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விடும், அதே போல் கைபர் கைப்பற்றப்பட்டதும் யூதர்களை நாடு கடத்திட இருக்கும்போது, யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம்.

    இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் நிலக் குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்' என்று கூறி அனுமதி அளித்தார்கள்.

    கைதிகளிலுள்ள 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

    திருக்குர்ஆன் 48:20. ஸஹீஹ் புகாரி 1:10:610, 1:8:371, 2:41:2338

    - ஜெஸிலா பானு.
    ‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    ‘தனக்கு கடன் கொடுப்பதும் பிடிக்காது, கடன் வாங்குவதும் பிடிக்காது’ என்று சிலர் கூறுவதுண்டு. சிரமத்தில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பது என்பது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகும்.

    கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் அனுமதிக்கும் இஸ்லாம், அதற்கான விதிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “நம்பிக்கையாளர்களே, நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக்கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவரோ அல்லது வாங்கியவரோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதியோடு எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதியாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக்கொடுக்கவும்.

    தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள்.

    அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல்-வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுதமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும்.

    இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை.

    ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல்-வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன். (2:282)

    கடன் கொடுப்பவரும், கடன் வாங்குபவரும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை இதைவிட தெளிவாக யாரும் சொல்லமுடியாது.

    கடன் வாங்கியவர் குறித்த காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் இருந்தால் அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். இது மறுமையில் மிகுந்த நன்மையைக்கொடுக்கும். இதுபற்றிய நபிமொழிகள் வருமாறு:-

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) இவ்வாறு அறிவித்தார்:

    “(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் ‘இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும்’ என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்”.

    மேலும் ‘உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒருவரிடம் (மறுமை நாளில்) கேள்வி, கணக்கு கேட்கப்படும். அப்போது அவரிடம் நன்மை எதுவும் இருக்காது. அவர் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்து வந்தவர். அவர் துன்பப்படுவோருக்கு கடனை தள்ளுபடி செய்திட தன் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இதன் காரணமாக மறுமை நாளில் - தள்ளுபடி செய்வதில் இவரை விட நானே அதிக தகுதி படைத்தவன். எனவே அவருடைய பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ மஸ்ஊது (ரலி).

    அல்லாஹ் தன் அடியர்களில் ஒருவருக்கு செல்வம் வழங்கியிருந்தான். (மறுமையில்) அவரிடம், ‘உலகில் என்ன நற்காரியம் செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். அவன் ‘இறைவா! எனக்கு உன் செல்வத்தை வழங்கி இருந்தாய். அதன் மூலம் மக்களிடம் நான் வியாபாரம் செய்தேன். தர்மம் கொடுப்பது என் குணத்தில் இருந்தது. வசதியானவர்களிடம் இலகுவாக நடந்து கொண்டேன். துன்பப்பட்டவருக்கு கால அவகாசம் அளித்தேன்’ என்று கூறுவார். அப்போது இறைவன், ‘உன்னை விட நான் கொடையளிப்பவன். ஆகவே என் அடியாளின் பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள்’ என (வானவர்களுக்கு) இறைவன் கூறுவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி)

    ‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

    கடன் கொடுத்தவர் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கியவர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்து கொள்ளும் போது இறைவனின் அருளும், மன்னிப்பும் கிடைக்கும்.

    இந்த மறுமை நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு இருசாராரும் நடக்கும் போது இம்மையும், மறுமையும் நலமாக அமையும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    -எஸ். அமீர் ஜவ்ஹர், காரைக்கால்.
    உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.
    ‘இருவரைக் கடந்துவிட்டால் எதுவும் ரகசியமல்ல’ என்று பழைய சொலவடை ஒன்று இருக்கிறது. ‘யார் அந்த இருவர்?’ என்று ஒருவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இரு உதடுகள் மீது விரல் வைத்து ‘இவர்கள்தான்’ என்று சுட்டிக் காட்டினார். உண்மைதான் இரு உதடுகளைக் கடந்துவிட்டால் எதுவும் ரகசியமல்ல.

    தெரிந்த ரகசியத்தை வெளியே சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் மனோநிலையில்தான் இன்று அனேகமானவர்கள் அலைகின்றனர். அதைப்போன்று அடுத்தவர் ரகசியத்தை அறிந்துகொள்வதில் நாம் காட்டும் ஆர்வம் இருக்கிறதே அப்பப்பா... நமது சொந்த விவகாரங்கள் குறித்துகூட நாம் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

    நமது கவலைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடம் மனம்விட்டுப் பேசுகின்றோம். பேசி முடித்த பின்னர் இதை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் நாம் சொல்லியிருப்போம்.

    அவரோ, ‘எனது வலக்கையில் சூரியனையும் இடக்கையில் சந்திரனையும் கழுத்தில் கத்தியையும் வைத்தால் கூட என் உதட்டில் இருந்து உங்களைக் குறித்து ஒரு வார்த்தைகூட வெளியே வராது, கவலைப்படாதீர்கள்’ என்று கூறி வழியனுப்பி வைப்பார். ஆனால் நமது தலை மறையும்வரைதான் அவரது அந்த வாக்குறுதி நீடித்திருக்கும். நாம் வீடு சென்று சேர்வதற்குள் ஊருக்கே நமது ரகசியம் தெரிந் திருக்கும்.

    நம்மை நம்பியவனுக்குத் துரோகம் இழைப்பதும்.. அவனது ரகசியத்தை வெளியே கசியவிடுவதும் ஒரே தரத்தில் இருக்கும் குற்றச் செயல்தான். ஒருவரைக் குறித்த ரகசியத்தைப் பேணுதல் என்பது ஆண்மையின் அடையாளம். உயர் குணத்தின் பிரதிபலிப்பு. கீழ்த்தரமான மனோபாவம் கொண்டவர்களே அடுத்தவர் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்துவார்கள்.

    ரகசியங்களை வெளியே சொல்வது தீய குணம். அதன் மூலம் எத்தனை, எத்தனை நபர்களுடைய வாழ்வு பாதிக்கப் படுகிறது. ரகசியம் என்ற பெயரில் நாம் வெளிப்படுத்தும் ஒரேயொரு செய்தி மூலம் ஒருவருடைய தன்மானம், கண்ணியம், கற்பு, நல்லொழுக்கம், நல்லெண்ணம் அத்தனையும் அடித்து நொறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே இதன் ஆபத்து புரியவரும்.

    அனஸ் (ரலி) அவர்களை (இறைத்தூதரின் பணியாளர்) நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் ஒரு பணி நிமித்தமாக வெளியே அனுப்பினார்கள். செல்லும் வழியில் தமது தாயாரைச் சந்திக்கின்றார் அனஸ் (ரலி).

    அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் கேட்டார்கள்: ‘எங்கு செல்கின்றீர்?’

    அனஸ் (ரலி): ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வேலை நிமித்தமாக என்னை அனுப்பியுள்ளார்கள்’.

    தாயார்: ‘என்ன வேலை?’

    அனஸ் (ரலி): ‘அது ரகசியம். அல்லாஹ்வின் தூதருடைய ரகசியத்தை நான் வெளியே சொல்லக் கூடாது. சொல்லவும் மாட்டேன்’.

    தாயார்: ‘அவ்வாறெனில் யாரிடமும் அதை நீ கூற வேண்டாம்’. (புகாரி, முஸ்லிம்)

    தமது சொந்தத் தாயாரிடம் கூட அந்த ரகசியத்தை அனஸ் (ரலி) கூறவில்லை என்பதும், அனஸ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பினார்கள் என்பதும் இறுதிவரை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டதும் ரகசியம் பேணுவதின் முக்கியத்துவத்தை உணர்த்திச் செல்கிறது.

    இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடும் பயிற்சியும். அதிலும் குறிப்பாக நமது குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனும் பாடத்தையும் பயிற்றுவிக் கிறது.

    தொலைத் தொடர்பு சாதனங்களைவிட வேகமாக பிறரின் ரகசியத்தைப் பரப்பும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அனைவரைவிடவும் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்களே. இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற தினத்தில் தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உடனடியாக மக்காவின் வீதிகளில் ஒலிக்க வேண்டும் என்பதை விரும்பினார். ஆயினும் இன்றைய நாட்களைப் போன்று தொலைதொடர்பு சாதனங்கள் அன்று இருக்கவில்லையே. என்ன செய்தார் தெரியுமா..? பரம ரகசியம் என்று சொன்னால் உடனடியாக அதை அடுத்தவரிடம் பரப்பும் நபர் யார் என்று விசாரித்தார். ஜமீல் பின் மஅமர் என்பவரைக் குறித்து கேள்விப்பட்டார்.

    நேராக அவரிடம் சென்று, ‘உன்னிடம் ஒரு ரகசியம் சொல்வேன். நீ யாரிடமும் கூறக்கூடாது’ என்று கூறினார்.

    ‘என்ன ரகசியம்?’ என்று அவர் கேட்டார்.

    ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். ஆயினும் இதை நீ யாரிடமும் கூறிவிடாதே’ என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

    உமர் (ரலி) அவர்களின் தலை மறைந்ததுதான் தாமதம் ஜமீல் பின் மஅமர் எழுந்து, ‘உமர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.. உமர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்’ என்று கூறியவாறே மக்காவின் வீதிகளில் கண்ணில் படும் அனைவரிடமும் கூறியவாறு ஓடத் தொடங்கினான்.

    கொஞ்ச நேரத்தில் மக்காவாசிகள் அனைவரும் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்துகொண்டனர். உமர் (ரலி) அவர்களும் இதைத்தான் விரும்பினார்கள்.

    இதுபோன்ற மனிதர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களை இனம்கண்டு ஒதுக்கிவிட வேண்டும். அடுத்தவர் ரகசியங்களைப் பரப்புவதில் ‘செல்போன் டவர்’களைவிட அதிவேகமாக ஒருசிலர் செயல்படுகின்றனர்.

    எவ்வளவு தூரம் நீங்கள் ரகசியத்தைப் பேணுகின்றீர்களோ அவ்வளவு தூரம் மக்கள் உங்களை நம்புவார்கள். இதயங்களில் இடம் தருவார்கள். உங்களைக் குறித்த மதிப்பு அவர்களிடம் உயரும். ‘நம்பிக்கைக்கு உரியவர்கள்’ என்று உங்களைக் கருதுவார்கள். எனவே முடிந்தவரை உங்கள் ரகசியங்களை உங்கள் மனங்களிலேயே பூட்டி வையுங்கள். கூடவே பிறரது ரகசியங்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒருபோது வெளிப்படுத்தாதீர்கள்.

    ஏனெனில் உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள்.
    இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள். நபிகளாரின் கடிதத்தைப் படித்ததுமே அவர் இஸ்லாமிய மார்க்கத்தால் கவரப்பட்டார். நபி(ஸல்) அனுப்பிய தூதர் மூலம் இஸ்லாம் பற்றி மேலும் தெரிந்து கொண்டு பின்பற்றலானார்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதி இஸ்லாமை ஏற்க முன்வராதவர்களை என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தார். அதற்கு நபி(ஸல்) எழுதிய பதில் கடிதத்தில் ‘இஸ்லாமை ஏற்றவர்களுக்கு எல்லா உரிமைகளையும் வரிவிலக்குகளையும் தர வேண்டுமென்று” குறிப்பிட்டிருந்தார்கள். அதனால் இஸ்லாமை ஏற்காதவர்கள் வரி செலுத்த வேண்டியவர்களாக ஆனார்கள்.

    அவ்வாறான இஸ்லாமிய அழைப்பு யமாமா, ஸிரியா மற்றும் ஓமன் நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சிலர் இஸ்லாமை ஏற்றனர், சிலர் மறுத்தனர். ஓமன் நாட்டு அரசர்களான ஜைஃபர் மற்றும் அப்துவுக்குக் கடிதம் சென்ற போது அரசர் அப்து இஸ்லாத்தை பற்றி விரிவாகக் கேட்டார். இஸ்லாமிய அழைப்பு விடுக்க ஓமனுக்குச் சென்ற அமர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களிடம் “நபி(ஸல்) எதைச் செய்யும்படி ஏவுகிறார்? எதைச் செய்வதிலிருந்து தடுக்கிறார்?” என்று அப்து வினவினார்.

    அதற்கு அமர்(ரலி) “அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். பெற்றோருக்கு உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபச்சாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.

    அதற்கு அரசர் அப்து, “நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது ஆனால் என் சகோதரர் பதவி ஆசை கொண்டவர், எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாரே” என்றார்.

    “உங்கள் சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்பக் கொடுத்து விடுவார்கள்” என்று அமர்(ரலி) விளக்கமளித்தபோது, ‘தர்மம்’ என்பதே அப்துவுக்குப் புதிதாக இருந்ததால் அதைப் பற்றியும் விளக்கம் கேட்டார். ஸகாத் என்கிற ஏழைவரி பற்றி அமர்(ரலி) விவரித்தார்கள்.

    ஏழைவரி நல்ல விஷயமாக இருந்தாலும் தன் சகோதரர் அதனை ஏற்க மாட்டார் என்று அப்து சொல்லிவிட்டார். சிறிது நாட்கள் அங்கு தங்கிவிட்டு இஸ்லாமை அவர்கள் ஏற்கவில்லை என்றானதும் அங்கிருந்து அமர்(ரலி) புறப்பட இருந்த போது ஆழமாக யோசித்துப் பார்த்த அரசர்கள் மறுநாள் அமர்(ரலி) அவர்களை அழைத்து அரசர்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதாகவும், நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொள்வதாகவும், ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

    இப்படியாக நபி(ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை அனுப்பிய வண்ணமிருந்தார்கள். இஸ்லாமின் கோட்பாடுகள் பிடித்திருந்தாலும் தனது ஆட்சி பறிபோய்விடுமென்றே சிலர் நிராகரித்தனர் ஆனால் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் இஸ்லாமிய மார்க்கமும் நிராகரித்தவர்களிடமும் நன்கு அறிமுகமாகி விட்டிருந்தது.

    (ஆதாரம்: ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.
    இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கடமைப்பட்டிருப்பது நமது பெற்றோர்களுக்குத்தான். நமக்கு பெயரும், முகவரியும் கொடுத்து, நம்மை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது நமது பெற்றோர்களே.

    இறைவன் தமக்கு அடுத்த அந்தஸ்தில் பெற்றோரை நிறுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதை, பணிவிடை செய்வதை, பணிந்து நடப்பதை கடமையாக ஆக்கியுள்ளான். இது குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

    “என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விரு வருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17: 23,24)

    இப்னுமஸ்ஊத் (ரலி) அறிவிப்பதாவது:-

    “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அதன்பிறகு எது?’ என்று கேட்டேன். ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது’ என பதில் கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம், புகாரி)

    அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்குப் பிறகு, பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகள் மற்ற அனைத்து செயல்பாடுகளை விடவும் சாலச்சிறந்ததாக அமைந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.

    இறைவனுக்கு அடுத்தபடியாக உலகில் தாய்க்கு நிகர் வேறு எவரும் இல்லை. பிள்ளைகள் அதிகம் பணிவிடை செய்வதற்கும், அதிக நேரம் உறவாடி மகிழ்வதற்கும் தகுதியான நபர் தாயே. இது குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்தை கேட்கலாம்.

    “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். ‘பிறகு யார்?’ என அவர் கேட்க.... ‘உமது தாய்’ என நபி (ஸல்) கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

    இங்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று நிலைகளையும் தாய்க்கு வழங்கிய பிறகுதான் நான்காவது அந்தஸ்தை தந்தைக்கு வழங்கியிருப்பது சிந்திக்கத்தக்கது.

    “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இறையருளைப் பெற ஆசைப்பட்டு நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வதையும், அறப்போர் புரிவதையும் தங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன்’ என்று கூறினார். இதை கேட்ட நபியவர்கள் ‘உனது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்’ என்று அவர் கூறினார். ‘அப்படியானால் இறையருளை நீர் தேடவேண்டுமா?’ என நபி (ஸல்) அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்போது, அவர் ‘ஆம்’ என்று பதில் கூறினார். அப்படியானால் ‘நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று, அவ்விருவரிடமும் அழகான முறையில் தோழமையுடன் நடந்து கொள்வீராக’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

    பெற்றோருக்கு பணிவிடை செய்வது போர்க்களம் சென்று போர் புரிவதற்கு நிகரான நன்மை பயக்கும் காரியமாகும். ஆதலால்தான் பெற்றோர்களை அன்புடன் கவனிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ‘பெற்றோர் சுவன வாசல்களின் மத்திய பகுதி உடையவர்கள். நீ நாடினால் அதை வீணடித்துக் கொள், அல்லது அதை பாதுகாத்துக்கொள்’ என்பது நபி மொழியாகும். (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி) நூல்: இப்னுமாஜா)

    சொர்க்கத்திற்கு பல வாசல்கள் உண்டு. அதில் சிறந்தது அதன் மத்திய பகுதிதான். அந்த பகுதியை அடைவதற்கு ஒரே வழி பெற்றோரைப் பேணுவதுதான். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும், பணி விடைகளையும் ஒழுங்காக குழந்தைகள் நிறைவேற்றினால், நிச்சயம் அவர்கள் சொர்க்கத்தின் சிறந்த மையப் பகுதியை அடைவார்கள். இதில் குறை வைப்பவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதையும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

    கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம், ஒருவர் தனது பெற்றோரைப் பேணி நடக்கமுடியும்.

    பெற்றோர்களை மதித்து நடப்பது. அவர்களை அவர்களுக்கு தகுதியான ஆசனத்தில் அமரவைப்பது. அவர்களுக்கு பணிவிடை செய்வது. அவர்களுக்கு தகுதியில்லாததைக் கொண்டு பரிகாசம் செய்வதை தவிர்ப்பது. அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதங்களில் நடந்து கொள்ளாமல் இருப்பது.

    பெற்றோர்கள் சபைக்கு வரும்போது, நாம் நமது இடத்திலிருந்து எழுந்து, மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்பது. நடந்து செல்லும் போது அவர்களுக்கு முன்னே செல்லாமல் இருப்பது. அவர்களை விட உயர்ந்த இடத்தில் அமரக்கூடாது. அவர் களுக்கு முன்னால் கால் நீட்டவும் கூடாது, காலுக்கு மேல் கால் போடவும் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையில் தூங்குவதோ, படுப்பதோ கூடாது.

    பெற்றோர்களை நோக்கி கை நீட்டி பேசக்கூடாது. அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையிலிருந்து வெளியேறக் கூடாது. அவர்களின் பேச்சை புத்திக் கூர்மையுடன், செவி தாழ்த்தி, மன ஓர்மையுடன் கேட்கவேண்டும். அவர்களின் அனுமதியின்றி பேச்சை தொடங்கக்கூடாது.

    பெற்றோர்களிடம் தேவையில்லாமல் அதிக கேள்வி கேட்கக் கூடாது. அவர் களின் கைகளை முத்தமிட வேண்டும். அவர்களுடன் பேசும் போது பணிவுடன் பேச வேண்டும். பேசும்போது பேச்சை முறித்து, முதுகை திருப்பக்கூடாது. பாவமான காரியங்களை தவிர்த்து மற்ற விஷயங்களில் அவர்களை பின்பற்ற வேண்டும்.

    வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

    இவ்வாறு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றி வந்தால், அவர்களின் எதிர்காலம் நல்லவிதமாக அமைவதுடன், அவர்களின் இவ்வுலக வாழ்வும் சிறக்கும், மறுவுலக வாழ்வும் சிறக்கும். இரு உலக நற்பேறுகள் கிடைத்திட ஈடில்லாத ஒரே வழி பெற்றோரைப் பேணுவது மட்டுமே.

    பெற்றோரைப் பேணுவோம், நற்பேறுகளை பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். இப்போது நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்' என்றார் மன்னர்.
    முஹம்மது நபி(ஸல்) ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸுக்குக் கடிதம் எழுதி இஸ்லாத்திற்கு வரும்படி அழைத்தார்கள்.

    ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்லவர். கவலையுடன் காணப்பட்ட மன்னர் தம் கவலைக்கான காரணம் ‘தாம் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக’ அறிந்ததாகக் கூறினார். “யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை.

    உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரகளுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிட்டு விடுவோம்’ என்று சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும் ரோமாபுரியின் மாமன்னர் ஹெர்குஸிலின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் ஆலோசனை வழங்கினார். அப்போதுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் வந்தது. அப்போது விருத்த சேதனம் செய்து கொள்வது யூதர்கள் மட்டுமல்ல அரபிகளின் வழக்கமும் என்று அறிந்த மன்னருக்கு விடை கிடைத்தது.

    அங்குத் தங்கி முகாமிட்டிருந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான குறைஷியர்களை - இறைநிராகரிப்பாளர்களை - மன்னர் வரவழைத்தார். அவைக்கு வந்து சேர்ந்த குறைஷிகளிடம் மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரின் மூலம் பேசத் தொடங்கினார். 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். அபூ சுஃப்யான் தான் முஹம்மதுக்கு நெருங்கிய உறவினர் என்று சொன்னதும், மன்னர் அவரைத் தன் அருகில் அழைத்து, அபூ சுஃப்யானுடன் வந்திருப்பவர்களை அவருக்குப் பின்னால் நிறுத்த ஆணையிட்டார்.

    'நான் அந்த மனிதரைப் பற்றி அபூ சுஃப்யானிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும். அபூ சுஃப்யான் தாம் பொய் கூறினால் மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணத்தால் உண்மையை மட்டும் சொல்ல ஆயத்தமானார்.

    பிறகு மன்னர் அபூ சுஃப்யானிடம் கேட்ட முதல் கேள்வி, 'உங்களில் அவரின் குலம் எத்தகையது?' அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றார். இவ்வாறு மன்னருக்கும் அபூ சுஃப்யானுக்குமான கேள்வி பதில் உரையாடலாகத் தொடர்ந்தது.  இறுதியாக மன்னர், 'அவர் அப்படி என்னதான் போதிக்கிறார்?' என்று கேட்டதும் 'அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள்' என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்’ என்று இதையெல்லாம் ஒரு குறையாகச் சொன்னார் அபூ சுஃப்யான்.

    எல்லாவற்றையும் கேட்ட மன்னர் 'அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன்.

    அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன்.

    இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை துவக்கத்தில் பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள்.

    அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நினைவு பெறும் வரை அப்படித்தான் வளர்ந்து கொண்டே இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் உறுதியானது.

    அவர் எப்போதேனும் வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். இறைவனின் திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.

    நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் ஒரு காலத்தில் என்னுடைய இரண்டு பாதங்களுக்கும் இடையிலுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். இப்படிப்பட்ட ஓர் இறைத்தூதர் வெகு விரைவில் தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் அரபிகளாகிய உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை.

    அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். இப்போது நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்' என்றார் மன்னர். இதைக் கேட்டுக் குறைஷிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கூச்சல்களும் அதிகரித்தது. அவையிலிருந்து குறைஷிகள் வெயேற்றபட்டனர்.

    ஸஹீஹ் புகாரி 1:1:7

    - ஜெஸிலா பானு.
    கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு கிஸ்ராவின் மகன் தனது தந்தையையே கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.
    ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்லாமிய அழைப்புப் பணியில் முஸ்லிம்கள் தீவிரமாக இருந்து வந்தனர்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,  அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாமிய அழைப்பை விடுவித்தார்கள். எகிப்து நாட்டு மன்னருக்கு நபிகளார் எழுதிய கடிதத்திற்கு யோசித்துப் பதிலளிப்பதாகச் சொன்ன மன்னர் முகவ்கிஸ் நபிகளாருக்கு மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும், நபிகளார் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளித்தார்.

    அதேபோல முஹம்மது நபி(ஸல்) பாரசீக மன்னர் கிஸ்ராவிற்கும் கடிதம் எழுதினார்கள். அதில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

    நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறை நிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் நெருப்பை வணங்குபவர்களின் குற்றமெல்லாம் உங்களையே சாரும்” என்று எழுதி அனுப்பினார்கள்.

    கிஸ்ரா அதைப் படித்து விட்டுக் கிழித்தெறிந்து, பெருமையுடன் “எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?” என்று கூறினான். கிஸ்ரா தனது கவர்னருக்குக் கடிதம் எழுதி, அதில் ‘முஹம்மது தன்னை வந்து பார்க்கட்டும்’ என்று வீரர்கள் மூலம் சொல்லி நபிகளாரை அழைத்து வரச் சொல்லி இருந்தான்.

    கிஸ்ராவின் கவர்னர் பாதான் அனுப்பிய வீரர்கள் அச்செய்தியை நபிகளாருக்கு தெரிவித்ததோடு நபி(ஸல்) அவர்களை எச்சரித்தும் சில வார்த்தைகளைக் கூறினர். நபி(ஸல்) எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்கள். நபி(ஸல்) அனுப்பிய கடிதத்தைக் கிஸ்ரா கிழித்தெறிந்தான் என்று அறிந்ததும் “அல்லாஹ் அவனது ஆட்சியைக் கிழித்தெறியட்டும்” என்று கூறியதோடு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்வீரர்களிடம் கூறினார்கள்.

    கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு கிஸ்ராவின் மகன் தனது தந்தையையே கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். மறுநாள் வீரர்கள் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் அதிர்ச்சியடைந்து அதை நம்ப முடியாமல் கவர்னருக்கு எழுதி அனுப்பியதோடு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டுத் தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் கிஸ்ராவின் மகனுடைய கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: “நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது அடுத்தக் கட்டளை வரும் வரை எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. அவரைப் பழித்துப் பேசிவிடாதே” என்று எழுதப்பட்டிருந்தது.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி

    - ஜெஸிலா பானு.
    பதவியின் மீது பேராசை கொள்ளாத.. கிடைத்ததைப் பொருந்திக்கொண்ட அபூ உபைதாவைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமிதம் கொண்டார்கள்.
    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு என்றைக்காவது சென்றிருக்கின்றீர்களா..? புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் அங்கு எவ்வாறு வாழ்வைக் கடத்துகின்றார்கள் என்று என்றைக்காவது கண்ணால் கண்டதுண்டா..?

    எதற்காக அந்த மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்? நல்ல மனோநிலையில்தான் நாம் இருக்கின்றோமா என்பதை பரிசோதிப்பதற்காகவா..? இல்லை இல்லை..! இறைவன் நமக்குத் தந்திருக்கும் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக. இறைவன் வழங்கியிருக்கும் எண்ணிலடங்கா அருட்பேறுகளை நினைத்துப் பார்ப்பதற்காக. வாழ்நாளில் ஒருதடவையேனும் அங்கு கண்டிப்பாகச் சென்று வரவேண்டும். கண்ணால் காண்பதைப் போன்று வாழ்க்கைப் பாடத்தை வேறெதுவும் கற்றுத்தர முடியாதல்லவா.

    தன் உடலை தானே கை களால் கீறிக்கொள்ளும் சிலர். சுவரில் தலையால் முட்டி மண்டையில் இருந்து ரத்தம் வழிந்தோடும் நிலையில் சிலர். ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை காக்கை வலிப்பு போன்று தொடர்ந்து கை கால்களை இழுத்து இழுத்து பாதிக்கப்பட்ட நிலையில் சிலர். என்ன பேசுகின்றோம், எதற்காக சிரிக்கின்றோம் என்று அறியாமலேயே சுற்றித் திரியும் சிலர். தினமும் எத்தனை முறை ஆடை அணிவித்தாலும் ஒவ்வொரு முறையும் ஆடையைக் களைந்து நிர்வாணமாக நிற்கும் பணக்கார முதியவர். தூங்கும் இடத்திலேயே மலஜலம் கழிக்கும் சிலர். அப்பப்பா.. சொன்னால் சொல்லி முடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனதை ரணப்படுத்தும் சோகக் காட்சிகள் இழைந்தோடும்.

    இதுபோன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனேகமானவர்கள் பெரும் பணக்காரர்கள். ஆம், வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஆயினும் ஏதோ ஒரு நெருக்கடியில் அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனநலம் குன்றியவர்களாக மாறியவர்கள். தன்னை மறந்து தன் சுற்றத்தை மறந்து என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று எதுவும் தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் துர்பாக்கியவான்கள். இவர்களைப் பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு பாக்கியவான்கள் என்பது தெரியவரும்.

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களைப் போன்று இருக்கும் இவர்களை சந்திக்கும்போதுதான் அந்த ஆண்டவனுக்கு ஆயிரம் தடவை நன்றி கூறவேண்டும் என்ற உண்மையான எண்ணம் தோன்றுகிறது. அதுவும் ஒன்றல்ல இரண்டு, பத்து, இருபது வருடங்களாக மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது என்பது எவ்வளவு கொடுமை..?!

    இறைவன் நமக்கு அனேகமானவற்றைத் தந்துள்ளான். அவன் நமக்கு எதையெல்லாம் தரவில்லை என்று எண்ணிப்பார்த்து கவலைப்படுவதைவிட, எதையெல்லாம் தந்திருக்கின்றான் என்பதை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே நல்ல மனிதனுக்கு அடையாளம்.

    செல்வம் இல்லையா.. ஆரோக்கியம் இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளுங்கள். ஆரோக்கியம் இல்லையா.. அறிவு இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளுங்கள். பேரறிவும் இல்லையா.. யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல மனிதனாக இருக்கின்றேனே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுங்கள். ஏனெனில் நல்ல மனிதனாக இருத்தல் என்பதே இன்றைய பொழுதில் பெரும் அருட்கொடைதான். எனவே இருப்பவற்றை வைத்து போதுமாக்கி அவற்றுக்கு நன்றி செலுத்தும் மனோபாவம் வளர்ப்போம்.

    நபித்தோழர்களைப் பாருங்கள். அடுத்தவரிடம் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பின்னர் அதை நினைத்துக் கவலைப்படுபவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒன்றைப் பெறவேண்டுமென்றால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். கிடைக்கவில்லையா.. மூலையில் முடங்கிப்போக மாட்டார்கள். கிடைத்ததைப் பொருந்திக்கொள்வார்கள். இல்லாததை நினைத்துக் கவலைப்படாமல்.. இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைபவர்களாகவே நபித்தோழர்கள் இருந்துள்ளனர்.

    தாதுஸ் ஸலாசில் எனும் போருக்காக அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுடைய தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை அங்கு சென்றபின்னரே முஸ்லிம்கள் அறிகின்றனர். உதவி கோரி அல்லாஹ்வின் தூதருக்கு தூது அனுப்பினார்கள்.

    அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

    படையினர் விடை பெறும் வேளையில் அபூ உபைதா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இருவரும் (நீங்களும் அம்ர் பின் அல்ஆஸ் அவர்களும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்”.

    படை சிரியா வந்து சேர்ந்தது. உதவிக்கு வந்து சேர்ந்த படையை வரவேற்ற பின்னர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அபூ உபைதா (ரலி) அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளர்கள். ஆகவே நான்தான் இங்கு பொறுப்புதாரி”.

    அபூ உபைதா (ரலி) கூறினார்: “இல்லை. என்னுடன் வந்த படையினருக்கு நான் பொறுப்புதாரி. உங்களுடன் இருக்கும் படைக்கு நீங்கள் பொறுப்புதாரியாக இருங்கள்”.

    பொதுவாக அபூ உபைதா (ரலி) மென்மையான சுபாவம் கொண்டவர். உலக விவகாரங்கள் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்ளமாட்டார். எனவே அமீராகவும் பொறுப்புதாரியாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. என்றாலும் தம்மோடுவந்த படையினருக்கு தாம்தானே பொறுப்பாளராக இருக்க முடியும் என்பதற்காகவே அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அவ்வாறு கூறினார்.

    அம்ர் (ரலி): “இல்லை. நீங்கள் எனக்கு உதவியாகவே வந்துள்ளர்கள். ஆகவே நான் தான் பொறுப்புதாரி” என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

    அபூஉபைதா (ரலி): “அம்ரே! நாங்கள் இங்கு புறப்பட்டு வரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்’ என்று என்னிடம் உபதேசித்தார்கள். ஆகவே உங்களோடு நான் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டேன். நமக்கிடையே கருத்து மோதல் வேண்டாம். உங்களுக்கு நிச்சயம் நான் கட்டுப்படுவேன்”.

    மீண்டும் அம்ர் (ரலி) அவர்கள்: “அவ்வாறெனில் நான் தான் அமீர். நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக வந்தவர்கள்”.

    ஒப்புக்கொண்டார் அபூ உபைதா (ரலி). போர் முடிந்தது. போர்களத்தில் இருந்து மக்கள் மதீனாவுக்குத் திரும்பினர். அவர்களில் ஆரம்பமாக மதீனாவை வந்தடைந்தவர் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) ஆவார். வந்தவர் நேரடியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து சிரியாவில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் விவரித்தார்.

    அனைத்தையும் செவியுற்ற பின்னர்.. பதவியின் மீது பேராசை கொள்ளாத.. கிடைத்ததைப் பொருந்திக்கொண்ட அபூ உபைதாவைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமிதம் கொண்டார்கள். பின்னர் அருகில் இருந்த தோழர்களிடம் கூறினார்கள்: “அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! அல்லாஹ் அவருக்கு அருள்பாலிப்பானாக!. அவர் எப்போதும் நன்மையை நாடக் கூடியவராகவே இருந்துள்ளார்”.
    ×