என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்லதை புரிந்து கொள்ளவில்லையே
    X

    நல்லதை புரிந்து கொள்ளவில்லையே

    “உன்னுடைய கருத்துகள் எத்தனை பேருக்குப் பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
    “என் சொல்லை கேட்டு கிரேத்தா தீவை விட்டுப்புறப்படாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது”அப்போஸ்தலர்-27:21.

    நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகின்றோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம், பிறராலும் அவ்விதமாகவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது.

    எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை வெளியிடுகின்ற, நல்லெண்ணங்களை கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும்வரை நாம் சாந்தமான மனநிலையுடன் பொருத்திருக்க வேண்டியது அவசியம். சில விஷயங்களை மற்றவர்களால் சரியென்று உணர்ந்து ஏற்றுக்கொள்ள சிறிது காலமோ, சற்று நீண்ட காலமோ ஆக முடியும்.

    பல நேரங்களில் நாம் சொன்ன நல்ல விஷயங்களை, கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும், ஆத்திரமும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிற தல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம். இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா?



    குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. குழந்தையின் நலத்திற்காக தாய், செய்யும் எத்தனையோ நல்ல செயல்களுக்கு குழந்தை எதிர்ப்புக்காட்டி அழுகின்றது. ஆயினும் குழந்தையின் மேல் தாய் ஆத்திரப்பட்டு நலமல்லாததைச் சிந்திப்பாலோ? ஒருநாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களையெல்லாம் இப்போது அது தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.

    கலிலியோவும், கோப்பர்நிக்கசும் கூறிய சரியான வானவியல் உண்மைகளை உடனே யாரும் சரியென ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவை உணர ஒரு காலம் வராமல் போய்விடவில்லை. ரோமாபுரியை நோக்கி கப்பல் பிரயாணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பிரயாணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ளத் தாமதம் ஆனாலும் பொறுமையாய் இருப்போமாக.

    “உன்னுடைய கருத்துகள் எத்தனை பேருக்குப் பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”

    - சாம்சன் பால்
    Next Story
    ×