என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுப்பார் இயேசு.
    மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து வழக்கம் போல வெறுப்புக் கேள்வியை வீசினார்கள்.

    ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை விடுத்து நீர் பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்றார்கள்.

    இயேசு அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்:

    ‘ஒரு மேய்ப்பர் இருந்தார். அவருக்கு நூறு ஆடுகள் இருந்தன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போனார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை திரும்ப ஓட்டி வந்து ஒரு சமநிலப் பரப்பில் தங்க வைத்தார்’.

    ‘ஆடுகளை எண்ணிப் பார்த்தால், ஒரு ஆட்டைக் காணோம். அவர் என்ன செய்வார்? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே பாழ்வெளியில் விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டாரா?’

    ‘அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா... வழி தவறிப் போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டாரா? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டாரா?’

    இவ்வாறு இயேசு கேட்டதும் ‘வருவான்...’ என்று கூடியிருந்தவர்கள் பதில் சொன்னார்கள்.

    ‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து, வாருங்கள்; என்னோடு மகிழுங்கள். காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்வான் இல்லையா?’

    ‘ஆமாம். அதற்கென்ன?’

    ‘அதே போலத்தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’ என்றார் இயேசு.

    ‘வழி தவறிய ஆடு என்பவர் மேய்ப்பவனிடமிருந்து விலகிச் சென்றவன். அவனைத் தேடிச்சென்று மேய்ப்பன் மீட்கிறார். பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் இப்படித் தேடிச்சென்று மீட்பது தான் எனது பணி’ இயேசு சொன்னார்.

    பாவிகளோடு இயேசு பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவை எதிர்த்த மதவாதிகளுக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரை பாவிகள் நெருங்குவதற்கு அருகதையற்றவர்கள்.

    உண்மையில் தங்களை நீதிமான்கள் என நினைத்த அவர்களே பாவிகள் என்பதை இயேசு மறைமுகமாய் சுட்டிக்காட்டினார். ‘மனம் திரும்பத் தேவையில்லாத நீதிமான்கள்’ என அவர்களைப் பற்றி நகைச்சுவையாய் அவர் குறிப்பிட்டார்.

    இயேசு, மீண்டும் ஒரு கதையைச் சொன்னார்-

    ‘ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவள் கவலைப்பட்டாள். போனால் போகட்டும் என விட்டு விடவில்லை. விளக்கைக் கொளுத்தினாள். வீடு முழுவதும் நன்றாகத் தேடினாள். தேடிக் கண்டுபிடித்தபின்பு தான் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அப்படித் தான் மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து தூதர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்’.

    ‘ஆடு வழிதவறிப் போனபோது அது சத்தமிட்டது. அபயக் குரல் எழுப்பியது. மேய்ப்பன் அதைக் கண்டுபிடித்தார். காசு சத்தம் போடவில்லை. அது தொலைந்து போனதாக அதற்குப் புரியவேயில்லை. பாவத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத மக்களை அது குறிக்கிறது. அவர்களை இயேசு தேடி வந்து மீட்கிறார்’.

    இயேசுவின் இந்தப் போதனைகள் எல்லாம் மறைநூல் அறிஞர்களுக்கு எரிச்சலையே கொடுத்தன.

    இயேசு மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘மறைநூல் அறிஞர்கள் சட்ட நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதை நீங்கள் கடைப்பிடியுங்கள், தவறில்லை. ஆனால் அவர் களுடைய செயல்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எதையும் செய்வதில்லை. மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய் கிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும், தொழுகைக் கூடங்களில் முதல் இடத்தையும் விரும்புவார்கள். உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் தொண்டனாக இருங்கள். தம்மைத் தாமே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்றார்.

    இயேசுவின் இந்த தாக்குதல் மறைநூல் அறிஞர் களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. இயேசு அசரவில்லை, அவர்கள் பக்கம் திரும்பினார். ‘திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் நீங்கள் காற்றில் பறக்கவிடுகிறீர்கள். கையையும், பாத்திரத்தையும் கழுவுகிறீர்கள். உள்ளமோ இருண்டு கிடக்கிறதே. நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்றார்.

    எதிர்த்தவர்கள் அவ்விடம் விட்டு விலகிச் சென்றனர்.

    எத்தனை பெரிய பாவியாய் இருந்தாலும் மனம் திரும்பி தந்தையிடம் வரவேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் மையமாய் இருந்தது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) இரவு தேர்ப்பவனி நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பரத்திருப்பலி ஆகியவையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று 6-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு புன்னைநகர் இறைமக்கள், 8 மணிக்கு குருசடி திருஇருதய சபை அருட்சகோதரிகள், 9 மணிக்கு நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 10 மணிக்கு கோட்டார் கத்தோலிக்க ஆசாரிமார் சங்கம், 11.30 மணிக்கு வடசேரி, மீனாட்சிபுரம், கிருஷ்ணன் கோவில் இறைமக்கள் சார்பில் திருப்பலிகளும், மாலை 6.30 மணிக்கு ஆசிரியர்கள் சார்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு நடந்த திருப்பலியில் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) 7-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.

    8-ம் நாள் திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற உள்ளது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 10 மணிக்கு தமிழில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறுகிறது.

    தேர்ப்பவனியின்போது பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் மாதா தேர்களின் பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் நடத்துவதும், தரையில் உருண்டு வேண்டுதல் செய்வதும் சிறப்பம்சமாகும். சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழா அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாலை 5.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் லூயிஸ் அடிகளார் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை 5.15 மணிக்கு திருப்பலியும், மாலையில் 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும், சிறிய தேர்பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

    விழாவில் வருகிற 8-ந் தேதி காலை 6.30 மணிக்கு புதுச்சேரி கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்று மாலை 5.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெறும். வருகிற 9-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத் தேர் திருவிழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஈரோடு நகரில் உள்ள புனித அமல அன்னை ஆலயம் புகழ் பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடக்கும்.

    அதே போல் இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஈரோடு மறை மாவட்ட அதிபரும் ரெயில்வே காலனி பங்கு தந்தையுமான ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார்.

    8-ந் தேதி அமல அன்னை பெருவிழாவையொட்டி விஜய் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி மறைவுரை நடக்கிறது. 9-ந் தேதி பங்கு தந்தை அலெக்சிசுவும் 10-ந் தேதி ஆல்பர்ட் புஷ்பராஜிம் திருப்பலி நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

    வரும் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு படற்திருப்பலி கோவை தூய வளனார் இளங்குரு மடம் அதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மன்றாட்டு மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    இதில் அழகப்பபுரம் பள்ளிகள், பக்தசபையினர், பங்கு பேரவையினர், சவேரியார் நகர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். வருகிற 4-ந்தேதி மாலை ஆராதனை, 5-ந்தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி ஆகியோர் செய்துள்ளனர்.
    கத்தோலிக்க மதத்தின் தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னை மரியாளின் வாழ்வு மலர்பாதையில் நடந்து வந்தது அல்ல.
    உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவரை ஈன்று, வளர்த்து உலகுக்குத் தந்த அன்னை மரியாளை வழிபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆரோக்கிய அன்னை வேளாங்கன்னியாக அருள்பாலித்துவரும் மரியாளின், விண்ணேற்றப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அன்னை மரியாளின் பிறந்தநாளான செப்டம்பர் 8 ஆம் தேதியை ‘ ஆரோக்கிய அன்னை திருவிழாவாக’ கொண்டாடுகிறார்கள்.

    கத்தோலிக்க மதத்தின் தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னை மரியாளின் வாழ்வு மலர்பாதையில் நடந்து வந்தது அல்ல. ஒரு தன்னலமற்ற தாயாக அவர் இருந்தார். அவர் வாழ்ந்து காட்டிய முன்மாதிரி அபூர்வமானது.

    கண் முன்னால் ரத்தம் சொட்டச் சொட்ட சிலுவையைச் சுமந்தபடி கல்வாரி மலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட மகனைச் சந்தித்த தாயின் பார்வை மொழியை எண்ணிப்பாருங்கள்.

    பிறகு குற்றுயிரோடு கள்வர்கள் நடுவே மகன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டபோது எப்படித் துடித்திருப்பார். பிறகு அவர் உயிர் விட்டதும், சிலுவையிலிருந்து இறக்கிய மகனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டபோது அந்தத் தாயின் இதயத்தை சீமோன் குறிப்பிட்ட கொடுந்துயர் எனும் வாள் எத்தனையாவது முறையாக ஊடுருவிச் சென்றிருக்கும்? இறைமகனை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று, வளர்த்து பிறகு மரணத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பெண் அறிந்திருந்து வாழ்நாள் முழுவதும் துயர் கொள்வது எத்தனை பாரமானது? இத்தனை பாரங்களை மரியாள் சுமந்த காரணத்தால்தால் இன்று உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

    மீட்பராகிய தன் மகன் மீது மரியாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகும் அந்த விசுவாசம் தணிந்துவிடவில்லை. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின், ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடி வந்த உண்மையுள்ள சீடர்களுடன் அவரும் இருந்தாள். அவர் ஏற்றுக்கொண்ட வலிகள், அவரை வழிபாட்டுக்குரிய அன்னையாக மாற்றியிருக்கின்றன. இவர் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
    ரூ.500, 1000 நோட்டு பிரச்சினை காரணமாக நாகை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.
    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இதே போல் நாகூர் தர்காவும் சிறப்பு பெற்றது.

    வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் மற்றும் வன விலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். குறிப்பாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள், வெளி நாட்டினர் வருவார்கள்.

    சமீபத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வேளாங்கண்ணி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.கடற்கரையிலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்த பின்னர் தான் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    தஞ்சை பெரிய கோவில், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. பெரிய கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    அன்பே அனைத்திற்கும் அடிப்படை என்பதை இயேசு வலியுறுத்தினார். அன்பின் வெளிப்பாடு மன்னிப்பு வழியாய் மலர வேண்டும் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார்.
    இயேசு தனது போதனைகளில் அன்பையும், அதன் வெளிப்பாடான மன்னிப்பையும் தவறாமல் போதித்தார். தன்னைச் சுற்றி நின்ற சீடர்களிடம் ஒரு முறை இயேசு இப்படிச் சொன்னார்: ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்’. (மத்தேயு 5:44)

    அன்பே அனைத்திற்கும் அடிப்படை என்பதை இயேசு வலியுறுத்தினார்.

    ‘மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்’. (மத்தேயு 6:14,15)

    அந்த அன்பின் வெளிப்பாடு மன்னிப்பு வழியாய் மலர வேண்டும் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார். இயேசுவோடு இருந்த சீடர்களுக்கு இந்த போதனை விளங்கவில்லை.

    பேதுரு ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவிடம் கேட்டார், ‘ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?’.

    இயேசு அவரிடம், ‘ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்’ என்றார்.

    அதாவது, ‘கணக்கு பார்க்காமல் மன்னிக்க வேண்டும்’ என்பதே அதன் உள்ளார்ந்த பொருள்.

    எல்லோருக்கும் தெரிந்த பல உண்மைகள் உண்டு. அவற்றை நாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்று சொல்வோம். உதாரணமாக, இந்தியாவுக்கு மேற்கே இங்கிலாந்து இருக்கிறது என்று சொல்லலாம். அது பூலோக உண்மை.இரண்டு பங்கு ஹைட்ரஜனும், ஒரு பங்கு ஆக்சிஜனும் இணைந்தால் தண்ணீர் உருவாகும் என்பது விஞ்ஞான உண்மை.

    இப்படி நம்மைச் சுற்றி நிலவுகின்ற உண்மைகள் பல. சொல்பவருடைய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து அல்லது அவருடைய குணாதிசயத்தைப் பொறுத்து, இத்தகைய நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மாறப்போவதில்லை.

    ஆனால் அறநெறி உண்மைகள் அப்படியல்ல. ஒருவனுடைய வாழ்க்கையும், அவனுடைய போதனைகளும் நேர்கோட்டில் இல்லாவிட்டால் மக்கள் அவனுடைய போதனையை ஏற்றுக்கொள்வதில்லை.

    இயேசு மக்களுக்கு அன்பையும் மன்னிப்பையும் போதித்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் அவற்றை முழுமையாய்க் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் அவரது போதனைகள் வலுவிழந்திருக்கும், நிராகரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இயேசுவோ தனது வாழ்வில் எல்லாவற்றையும் இயல்பாகவே கடைப்பிடித்தார்.

    மனித இயல்புகள் அடிக்கடி மாறும். ‘நீ நல்லவனா இருந்தா நானும் நல்லவனா இருப்பேன், நீ மிருகமானா நானும் மிருகமாவேன்’ என்றும், ‘ஒரு மனுஷன் எவ்வளவு தான் பொறுத்துப் போவான்’ என்றும் மனித உணர்வுகள் பேசும்.

    ஆனால் இயேசு அப்படியல்ல. அதன் உயர்ந்தபட்ச உதாரணம் சிலுவைக் காட்சியில் நிகழ்ந்தது. இயேசுவின் மண்ணுலக வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அவரை சிலுவையில் அறைந்தார்கள். தாங்கள் செய்வது பாவம் என்பது கூட அந்த ஆணி அடித்த காவலர்களின் மனதில் உறைக்கவில்லை. அவரை துன்புறுத்திய மக்களுக்குப் புரியவில்லை. அவரை ஏளனம் செய்தவர்களுக்கு விளங்கவில்லை. எனவே அவர்கள் யாரும் இயேசுவிடம் மன்னிப்பைக் கேட்கவும் இல்லை.

    ஆனால், கேட்காமலேயே மன்னிப்பவர் இயேசு. ஒரு முறை 38 வருட காலம் நோயுற்று இருந்த மனிதனைத் தேடி சென்றார். அவரை யாரும் அழைக்கவில்லை. தாமாகவே சென்று அவருக்கு உதவி செய்தார். எழும்ப முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்தார்.

    இங்கே சிலுவையிலும் அதைத்தான் செய்தார். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என செபித்தார். வாழ்வின் ஓரத்திலும் அவர் மன்னிப்பின் ஈரத்தை விட்டு விடவில்லை.

    நமது வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் மக்களுக்கு நாம் உதவி செய்வதுண்டு. நம்மைத் தேடி வராதவர்கள் தேவையில் இருப்பதைக் கண்டால் நாமாகவே சென்று உதவுகிறோமா?.

    ஒரு நபர் தேவையில் இருக்கிறார் என்றால் அது நமக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு என்ன உதவி தேவை என்பதும் தெரியும். ஆனாலும் கண்டும் காணாததுமாய் சென்று விடுவோம். அது தவறு. இறைமகன் இயேசு நமக்குப் போதிப்பது நாமாகவே சென்று உதவும் பாடத்தையே!

    நாம் தவறு செய்த மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்கள் செய்த தவறுகள், அவர்கள் ஏற்படுத்திய வலிகள் நமக்குத் தெரிகின்றன. அதனால் தான் மன்னிப்பு நமக்கு எளிதாய் வருவதில்லை. அதை விடுத்து, இறைவனை நாம் பார்க்க வேண்டும். அப்போது பிறர் செய்த வலிகள் மறைந்து, இறைவன் செய்த பலி நினைவில் நிலைக்கும். மன்னிப்பு எளிதாக வரும். மன்னிப்புக்கு ஒரு ‘சிறப்பு சக்தி’ உண்டு. அது சமாதானத்தை தருகிறது. மன்னிப்பவருக்கும், மன்னிக்கப்படுபவருக்கும் அது நிம்மதியைத் தரும்.

    1832-ம் ஆண்டு பாரீஸ் நகரம் காலராவினால் கொடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களிடையே பணி செய்தார் அருட்சகோதரி மேரி. ஒரு நாள் மருத்துவப் பணிக்குச் செல்லும் வழியில் ஒரு மனிதர் அவரை தரக்குறைவாய் சபித்து, திட்டிக்கொண்டே இருந்தார். மேரி அமைதியாகச் சென்று விட்டார். நாட்கள் சென்றன, அதே மனிதர் காலராவினால் பாதிக்கப்பட்டார். அருட்சகோதரி மேரி அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் செய்தார்.

    எட்டு நாட்களுக்குப் பின், அவர் கண் விழித்தார். கண்ணீர் விட்டார். ‘என்னைக் காப்பாற்றிய அந்த தேவதையை என் கண்களில் காட்டுங்கள்’ என புலம்பினார். அருகில் இருந்த சகோதரிகள் சொன்னார்கள், ‘சகோதரி மேரி காலராவினால் பாதிக்கப்பட்டு நேற்றே இறந்து போனார்’.

    ‘மன்னிப்பை வழங்கியவர் மரித்துப் போகலாம், வழங்கிய மன்னிப்பு மரிப்பதில்லை’. நாம் மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். கேட்பவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் மன்னிப்பை வழங்குவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

    ஞா. வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    களைகளாய் வாழ்ந்தால் அழிவு நிச்சயம். பலன் கொடுக்கும் பயிராக இருந்தால் மட்டுமே நமக்கு விண்ணக வாழ்க்கை கிடைக்கும். நாம் இறை வார்த்தையின் படி உறுதியாய் வாழவேண்டும்.
    விதைப்பவன் ஒருவன் விதைப்பதற்குரிய விதைகளைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

    சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.

    இன்னும் சில விதைகள் பாறை நிலத்தில் விழுந்தன. மண் பிடிப்பு இல்லாத பாறை நிலத்தில் விதைகள் விரைவிலேயே முளைத்துவிட்டன. ஆனால் நிலத்தில் வேர் பிடிக்கவில்லை. சூரியன் வந்தபோது அதன் வெப்பத்தைத் தாங்க முடியாத அந்த முளைகள் எல்லாம் வெயிலில் காய்ந்து போய்விட்டன.

    சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. அவை முட்செடிகளிடையே விழுந்ததால் பறவைகளால் அவற்றை நெருங்க முடியவில்லை. அவை நிலத்தில் வேர்விட்டு முளைத்தன. நிலத்தில் வேரூன்றி விட்டதால் அவற்றைக் கதிரவனாலும் கருக வைக்க முடியவில்லை. ஆனால் வளர, வளர தன்னைச் சுற்றி நின்ற முட்செடிகளாலேயே அவை நெரிக்கப்பட்டு பலன் தராமல் போயின.

    சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மண்ணில் புதைபட்டதால் பறவைகளின் அலகுகளுக்குத் தப்பின, வளர்வதற்குத் தேவையான நீர் இருந்ததால் அவற்றைச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கவில்லை. நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்ததால் முட்செடிகள் எங்கும் இல்லை. எனவே அந்த விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்தன. அவற்றில் சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலனளித்தன.

    இயேசு, இந்த உவமையின் விளக்கத்தை மக்களுக்கு விளக்கினார்.

    வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள் இறையரசைக் குறித்த வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் காதுகளில் விழுந்த வார்த்தைகளை தீயவன் வந்து கவர்ந்து சென்று விடுவான். அது அவனுடைய உள்ளத்துக்குள் செல்லாது.

    பாறை நிலத்தில் விழுந்தவர்கள் இறை வார்த்தையை மிகவும் மகிழ்வுடன் கேட்டு உள்ளுக்குள் முளை விடுவார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே ஏதேனும் சோதனைகளோ, எதிர்ப்புகளோ வரும்போது எதிர்த்து நிற்கும் வலு இல்லாத தனால் வார்த்தைகளை இறக்க விடுவார்கள்.

    முட்செடிகளின் நடுவே விழுந்த விதையைப் போன்றவர்கள், இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து நல்ல முறையில் நடக்கத் தொடங்குவார்கள். ஆனால் உலகக் கவலைகள், பணம் சேர்க்கும் ஆசை, சிற்றின்ப மோகம் இவற்றால் நெரிக்கப்பட்டு பலனளிக்காமல் போவார்கள்.

    நல்ல நிலத்தில் விழுந்தவிதையைப் போன்றோர், இறை வார்த்தையைக் கேட்கும் முன்பாகவே தங்கள் மனதை அதற்கேற்பத் தயாரித்துக் கொள்வார்கள். பின் இறை வார்த்தையைக் கேட்டதும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள். அவர்களை உலகக் கவலைகளோ, சிற்றின்ப மோகங்களோ, எதிர்ப்பாளர்களின் போலிக்கூச்சல்களோ பின் வாங்க வைக்காது. அவர்கள் நிலைத்திருந்து செயல்களில் இறை வார்த்தையை வெளிப்படுத்துவார்கள்.

    அவர்களில், சிலர் முப்பது மடங்கு, சிலர் அறுபது மடங்கு, சிலர் நூறு மடங்கு என பயன் தருவார்கள். இயேசு சொல்ல, மக்கள் அனைவரும் தெளிவடைந்தார்கள்.

    ‘இன்னோர் உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்...’ இயேசு ஆரம்பித்தார்.

    ஒருவன் வயலில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அவன் தூங்கும் போது பகைவன் வந்து அவனுடைய வயலில் களைகளையும் விதைத்து விட்டுப் போனான். முளைத்து வருகையில் களையும் பயிரும் வித்தியாசம் காட்டவில்லை.

    வளர வளர களைகள் தங்கள் சுய முகத்தைக் காட்டத் தொடங்கின. பயிர்களோடு பயிர்களாக களைகள் வளர்ந்து பயிர்களின் சத்தையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதை வேலையாள் கண்டு தலைவனிடம் வந்தான்.

    ‘ஐயா... நீர் உமது வயலில் நல்ல விதைகளையல்லவா விதைத்தீர். களைகள் வந்திருக்கின்றனவே. நான் போய் களைகளை வெட்டி விடவா?’

    ‘வேண்டாம், நீ களைகளைப் பிடுங்குகையில் பயிரையும் கூட அழித்துவிடக் கூடும். அறுவடைக்காலம் வரை இரண்டுமே வளரட்டும். அறுவடை செய்யும்போது பயிர்களைத் தனியாகவும், களைகளைத் தனியாகவும் கட்டு. பயிர்களை என்னுடைய களஞ்சியத்துக்கு அனுப்பி வை. களைகளையோ அழியா நெருப்பில் சுட்டெரி’ தலைவன் ஆணையிட்டான்.

    இது தான் கடைசி காலத்தில் நடக்கும். இறை வார்த்தை பைபிளின் வழியாக எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. அதை சரியான முறையில் உள்வாங்கி, இதயத்தில் பதியனிட்டு, ஆழ வேர்பிடிக்க வைத்து, கனி கொடுக்க வைப்பவர்களே உண்மையில் இறைவனின் பிள்ளைகள். அத்தகைய மக்களைப் பார்த்தே இறைவன் பூரிப்படைகிறார்.

    களைகளாய் வாழ்ந்தால் அழிவு நிச்சயம். பலன் கொடுக்கும் பயிராக இருந்தால் மட்டுமே நமக்கு விண்ணக வாழ்க்கை கிடைக்கும். நாம் இறை வார்த்தையின் படி உறுதியாய் வாழவேண்டும்.

    ‘வார்த்தையின் மனித வடிவமே இயேசு’ என்கிறது பைபிள். அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றுவதே இறையரசில் நுழைவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்து செயல்படுவோம்.
    பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது.
    குளச்சலில் உள்ள பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கடந்த 11–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் பங்கு தந்தை பிரின்டோ குரியாஸ் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவின் 9–ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சூசைபுரம் மறைவட்ட பங்கு தந்தை ஆன்றனி ஜோஸ், தக்காளிவிளை பங்கு தந்தை லின்சிலால் மங்கலத்து ஆகியோர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.
    திருவிருந்து

    விழா நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு காலை ஜெபம், 10 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், அருட்தந்தை டோஜி பரம்பில் ஆகியோர் கலந்து கொள்ளும் திருப்பலி முதல் திருவிருந்து நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை திருக்கொடியிறக்கமும், இரவு 7.30 மணிக்கு மறை மாவட்ட மறைகல்வி மன்ற இயக்குனர் அருட்தந்தை அலெக்ஸ் புத்தேட் தலைமையில் மறைகல்வி ஆண்டுவிழாவும், தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. குளச்சல் ஜே.எஸ்.ஆர்.கேஸ் லிங்ஸ் உரிமையாளர் ஜான் சுந்தர்ராஜ் பரிசுகளை வழங்குகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய பங்குதந்தை பிரின்டோ குரியாஸ், அருட்சகோதரிகள், பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    ‘மேய்ப்பர்’ என்றால் ‘பாதுகாக்கிறவர்’ என்று அர்த்தம். ஒவ்வொரு நிமிடத்திலும் கர்த்தர் நமது மேய்ப்பராய் இருக்கிறார்.
    எல்லாவற்றையும் படைத்தவர் மாபெரும் தேவன். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லவர், எங்குமிருப்பவர். ஒரு மனிதனை சந்திப்பதும், வழிநடத்துவதும், பாதுகாப்பதும், ஆசீர்வதிப்பதும் மாபெரும் செயலாகும்.

    ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்’ (சங்.23:1).

    ‘மேய்ப்பர்’ என்றால் ‘பாதுகாக்கிறவர்’ என்று அர்த்தம். ஒவ்வொரு நிமிடத்திலும் கர்த்தர் நமது மேய்ப்பராய் இருக்கிறார்.

    ‘தாவீது’ என்றால் ‘அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்த தாவீதின் துயரங்களை தேற்றினார். துன்பங்களை மகிழ்ச்சியாக மாற்றினார். பெலவீனத்திலே பெலன் கொடுத்தார். பாவச் செயலை உணர்த்தி பரிசுத்தப்படுத்தினார். ஆபத்துகளில் பாதுகாவலராக இருந்தார். கொம்பு தைலத்தால் அபிஷேகம் செய்தார். இஸ்ரவேலின் ராஜாவாக மாற்றினார்.

    தாவீதை கர்த்தர் ஆசீர் வதித்து பரிசுத்த ஆவியினால் நிரப்பி ஆசீர்வாதங்கள் வழிந்தோடச் செய்தார். அவர் ஆத்மாவைத் தேற்றி நீதியின் பாதையில் நடத்தினார். தாவீதை, தேவன் பலம் மிக்கவராக ஆக்கினார். ‘என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும்’ என்றார். தாவீதை தேவன் பிரகாசமான பிரசன்னத்தால் நிரப்பி, தேவ வசனத்தால் போஷித்தார். தாவீதின் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்தார்.

    தாவீதின் எல்லா யுத்த களத்திலும் கர்த்தர் கூட இருந்து வெற்றிமேல் வெற்றி கொடுத்தார். எதிரிகளை வீழ்த்தி பாதுகாத்தார். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தபோதும் அவருக்கு பொல்லாப்பு நேரிடவில்லை. கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைக்கச்செய்து அவர் ஆசீர்வாதங்கள் பெருகி நிலைத்திருந்தது. கர்த்தர் தாவீதுக்கு எப்பொழுதும் பாதுகாவலராக இருந்தார்.

    அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி ‘தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்’ (ஆதி.41:39)

    ‘யோசேப்பு’ என்றால் ‘தேவன் பெருகச்செய்கிறார்’ என்று அர்த்தம்.

    யோசேப்பு தன் சகோதரர்களால் குழியில் போடப்பட்டார். பின்பு குழியிலிருந்து அவரை தூக்கி எடுத்து வேறு ஒருவரிடம் விற்றனர். ஆனால் யோசேப்பு தனது வாலிப வயதில் வந்த சோதனையை தேவ பிரசன்னத்தால் வென்றார். தவறு செய்யாத அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அவருடன் தேவன் இருந்தார்.

    தேவன் கொடுத்த விசேஷ ஞானத்தின் மூலமாக, பார்வோனுக்கு கனவின் அர்த்தத்தை கூறி சிறைச்சாலையிலிருந்து எகிப்தில் ராஜாவாக அரசாள்வதற்கு அழைத்து வரப்பட்டார். சோதனையை வென்ற பரிசுத்த ஜெப வீரர் அவர்.

    பார்வோன் யோசேப்பை நோக்கி, ‘சொப்பனத்தின் அர்த்தம் எல்லாவற்றையும் தேவன் உனக்கு வெளிப்படுத்தியபடியால் எகிப்து தேசம் முழுவதும் உன்னைப்போல விவேகமும் ஞானமுள்ளவன் வேறு ஒருவனும் இல்லை. ஆதலால் உன்னை ராஜாவாக உயர்த்துகிறேன்’ என்றான்.

    தேவன், அவருடன் இருந்து அனைத்தையும் கிடைக்கச் செய்தார்.

    சகோதரர்கள் அவருக்கு தீமை செய்தபோதும், தேவன் அந்த தீமையை நன்மையாக மாற்றினார். பஞ்சகாலத்தில் எகிப்து மக்கள் உயிரை காக்கும்படி தானியத்தை யோசேப்பு சேமித்து வைத்தார். எகிப்து தேசம் முழுவதிலும் யோசேப்பின் பெயர் உயர்ந்திருந்தது. தேவன் அவருக்கு நல்ல மேய்ப்பராகவே இருந்தார்.

    ‘உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும், புத்தியும், விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்’. (தானி.5:14)

    ‘தானியேல்’ என்றால் ‘நியாயபதி’ என்று அர்த்தம். சிறு வயதில் யூதேயாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ‘என்ன நேர்ந்தாலும் உயிருள்ளவரை கர்த்தரை பின்பற்றுவேன்’ என்று உறுதி பூண்டவர். ஐந்து வெளிநாட்டு அரசர்களிடம் பிரதான மந்திரியாக செயல்பட்டார். தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்து தேவனுக்கு மிகவும் பிரியமானவர் ஆனார்.

    தேவன், தானியேலுக்கு சகல தரிசனங்களின் மறை பொருள்களை வெளிப்படுத்தும் ஞானஅறிவை கொடுத்தார். தானியேலுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவியும், தேவர்களின் ஞானத்துக்கு இணையான ஞானம் இருந்தது. ஜெபிக்கக்கூடாது என்ற தரியு ராஜாவின் கட்டளையை மீறி மூன்று வேளையும் ஜெபம் செய்தார். ஆதலால் அவரை சிங்கங்கள் இருக்கும் கூண்டில் போட்டார்கள். தேவன் சிங்கத்தின் வாயை கட்டி ஒரு சேதமும் இல்லாமல் அவரை தப்புவித்தார்.

    ராஜா, தானியேலை ராஜ்ஜியம் முழுவதும் அதிகாரியாக உயர்த்தினார். தானியேல் தேவனை தரிசனமாக கண்டார்.

    ‘சணல் வஸ்திரந்தரித்து தங்ககச்சையை கட்டிக்கொண்டு இருந்த ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சை போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப் போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங் களைப் போலவும், அவருடைய புயங்களும் கால்களும் வெண்கல நிறத்தைப் போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போலவும் இருக்கக் கண்டேன்’ என்றார்.

    தேவன், தானியேலுக்கு எப்பொழுதும் பாதுகாவலராகவே இருந்தார். மூன்று பரிசுத்தவான்களுக்கும் கர்த்தர் ஒருவரே மேய்ப்பராக இருந்தார். நமது போக்கிலும், வரத்திலும், வீட்டிலும் கர்த்தர் ஒருவரே பாதுகாவலராக இருக்கிறார். ஆமென்.

    அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும்.
    கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். 2004 ஆம் ஆண்டு கணக்கின் படி1,098,366,000 விசுவாசிகளை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயபிரிவாகும்.
     
    மற்றைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்கள். பாப்பரசர் கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார். கத்தோலிக்க தேவாலயத்தின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க தேவாலயம் எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான இராயப்பரின் வழிவருபரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக பரிசுத்த பாப்பரசர் கொள்ளப்படுகிறார்.
     
    தற்போது 16 ஆம் ஆசீவாதப்பர் பாப்பரசராக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 265 ஆவது புனித பாப்பரசராவார். இத்திருச்சபை ஒரு, புனித, கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபையை (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) போதித்து வலியுறுத்துகிறது.
     
    செபங்களும் கோட்பாடுகளும் :
     
    சிலுவை அடையாளம் :

    பிதா/சுதன்/பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
     
    மங்கள வார்த்தை செபம் :

    அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே/ பெண்களுக்குள் ஆசிர்வதிக்க்கப்பட்டவள் நீரே/ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வாதிக்கப்பட்டவரே.
    அர்ச்சியஸ்ட மரியாவே/ சர்வேசுரனுடைய மாதவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
     
    திருத்துவப்புகழ் :

    பிதாவுக்கும் சுதனுக்க்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ ஆதியிலே இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
     
    கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குவிதிகள் :
     
    1. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணல்
    2. வருடத்திற்கு ஒருமுறையாவது, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தல்
    3. தவக்காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளல்
    4. மாமிச தவிர்ப்பு நாட்கள், ஒருசந்தி நாட்களை கடைப்பிடித்தல்
    5. சிறுவர் மற்றும் விகினஉறவுமுறைத் திருமணம் செய்யாமை
    6. ஆட்சியாளருக்கு நல்லுதவி செய்தல்

    மூவேளைசெபம் :

    ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை... இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை... வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை... கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
     
    செபிப்போமாக :
     
    இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென்.
     
    சுருக்கமான மனத்துயர் செபம் :

    என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக / உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். -
     
    விசுவாச முயற்சி :

    என் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
     
    நம்பிக்கை முயற்சி :

    என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
     
    அன்பு முயற்சி :

    என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்.
     
    தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம் :


    இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே / இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன். வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
     
    கிறித்து கற்பித்த செபம் :

    கிறிஸ்து கற்பித்த செபம்(பரலோக மந்திரம்) இயேசுவின் சீடர் எப்படி செபிப்பது என கேட்டபோது இயேசு சொல்லிக்கொடுத்த செபமாகும்.விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கைன்றபோதும் , கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர்.

    இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ,குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்த்வாறோ சொல்வது வழக்க்கமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை,பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
     
    விண்ணிருக்கும் எம் தந்தாய்!
    ஒளிரட்டும் நின் திருப்பெயரே!
    வருகவே உம் ஆட்சியே!
    விண்ணைப்போல மண்ணிலே!
    அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
    மன்னிப்பீரே எம் குற்றம்தனை!
    யாமும் பிறரை மன்னித்தவாறே!
    தூண்டற்கவே எம்மை தீவழியிலே!
    கடையேற்றுகவே எம்மை
    தீயனிடமிருந்து நீர்.
     
    ("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")
    ×