என் மலர்

    ஆன்மிகம்

    கர்த்தர் உனக்கு மேய்ப்பராக இருப்பார்
    X

    கர்த்தர் உனக்கு மேய்ப்பராக இருப்பார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘மேய்ப்பர்’ என்றால் ‘பாதுகாக்கிறவர்’ என்று அர்த்தம். ஒவ்வொரு நிமிடத்திலும் கர்த்தர் நமது மேய்ப்பராய் இருக்கிறார்.
    எல்லாவற்றையும் படைத்தவர் மாபெரும் தேவன். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லவர், எங்குமிருப்பவர். ஒரு மனிதனை சந்திப்பதும், வழிநடத்துவதும், பாதுகாப்பதும், ஆசீர்வதிப்பதும் மாபெரும் செயலாகும்.

    ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்’ (சங்.23:1).

    ‘மேய்ப்பர்’ என்றால் ‘பாதுகாக்கிறவர்’ என்று அர்த்தம். ஒவ்வொரு நிமிடத்திலும் கர்த்தர் நமது மேய்ப்பராய் இருக்கிறார்.

    ‘தாவீது’ என்றால் ‘அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்த தாவீதின் துயரங்களை தேற்றினார். துன்பங்களை மகிழ்ச்சியாக மாற்றினார். பெலவீனத்திலே பெலன் கொடுத்தார். பாவச் செயலை உணர்த்தி பரிசுத்தப்படுத்தினார். ஆபத்துகளில் பாதுகாவலராக இருந்தார். கொம்பு தைலத்தால் அபிஷேகம் செய்தார். இஸ்ரவேலின் ராஜாவாக மாற்றினார்.

    தாவீதை கர்த்தர் ஆசீர் வதித்து பரிசுத்த ஆவியினால் நிரப்பி ஆசீர்வாதங்கள் வழிந்தோடச் செய்தார். அவர் ஆத்மாவைத் தேற்றி நீதியின் பாதையில் நடத்தினார். தாவீதை, தேவன் பலம் மிக்கவராக ஆக்கினார். ‘என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும்’ என்றார். தாவீதை தேவன் பிரகாசமான பிரசன்னத்தால் நிரப்பி, தேவ வசனத்தால் போஷித்தார். தாவீதின் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்தார்.

    தாவீதின் எல்லா யுத்த களத்திலும் கர்த்தர் கூட இருந்து வெற்றிமேல் வெற்றி கொடுத்தார். எதிரிகளை வீழ்த்தி பாதுகாத்தார். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தபோதும் அவருக்கு பொல்லாப்பு நேரிடவில்லை. கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைக்கச்செய்து அவர் ஆசீர்வாதங்கள் பெருகி நிலைத்திருந்தது. கர்த்தர் தாவீதுக்கு எப்பொழுதும் பாதுகாவலராக இருந்தார்.

    அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி ‘தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்’ (ஆதி.41:39)

    ‘யோசேப்பு’ என்றால் ‘தேவன் பெருகச்செய்கிறார்’ என்று அர்த்தம்.

    யோசேப்பு தன் சகோதரர்களால் குழியில் போடப்பட்டார். பின்பு குழியிலிருந்து அவரை தூக்கி எடுத்து வேறு ஒருவரிடம் விற்றனர். ஆனால் யோசேப்பு தனது வாலிப வயதில் வந்த சோதனையை தேவ பிரசன்னத்தால் வென்றார். தவறு செய்யாத அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அவருடன் தேவன் இருந்தார்.

    தேவன் கொடுத்த விசேஷ ஞானத்தின் மூலமாக, பார்வோனுக்கு கனவின் அர்த்தத்தை கூறி சிறைச்சாலையிலிருந்து எகிப்தில் ராஜாவாக அரசாள்வதற்கு அழைத்து வரப்பட்டார். சோதனையை வென்ற பரிசுத்த ஜெப வீரர் அவர்.

    பார்வோன் யோசேப்பை நோக்கி, ‘சொப்பனத்தின் அர்த்தம் எல்லாவற்றையும் தேவன் உனக்கு வெளிப்படுத்தியபடியால் எகிப்து தேசம் முழுவதும் உன்னைப்போல விவேகமும் ஞானமுள்ளவன் வேறு ஒருவனும் இல்லை. ஆதலால் உன்னை ராஜாவாக உயர்த்துகிறேன்’ என்றான்.

    தேவன், அவருடன் இருந்து அனைத்தையும் கிடைக்கச் செய்தார்.

    சகோதரர்கள் அவருக்கு தீமை செய்தபோதும், தேவன் அந்த தீமையை நன்மையாக மாற்றினார். பஞ்சகாலத்தில் எகிப்து மக்கள் உயிரை காக்கும்படி தானியத்தை யோசேப்பு சேமித்து வைத்தார். எகிப்து தேசம் முழுவதிலும் யோசேப்பின் பெயர் உயர்ந்திருந்தது. தேவன் அவருக்கு நல்ல மேய்ப்பராகவே இருந்தார்.

    ‘உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும், புத்தியும், விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்’. (தானி.5:14)

    ‘தானியேல்’ என்றால் ‘நியாயபதி’ என்று அர்த்தம். சிறு வயதில் யூதேயாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ‘என்ன நேர்ந்தாலும் உயிருள்ளவரை கர்த்தரை பின்பற்றுவேன்’ என்று உறுதி பூண்டவர். ஐந்து வெளிநாட்டு அரசர்களிடம் பிரதான மந்திரியாக செயல்பட்டார். தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்து தேவனுக்கு மிகவும் பிரியமானவர் ஆனார்.

    தேவன், தானியேலுக்கு சகல தரிசனங்களின் மறை பொருள்களை வெளிப்படுத்தும் ஞானஅறிவை கொடுத்தார். தானியேலுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவியும், தேவர்களின் ஞானத்துக்கு இணையான ஞானம் இருந்தது. ஜெபிக்கக்கூடாது என்ற தரியு ராஜாவின் கட்டளையை மீறி மூன்று வேளையும் ஜெபம் செய்தார். ஆதலால் அவரை சிங்கங்கள் இருக்கும் கூண்டில் போட்டார்கள். தேவன் சிங்கத்தின் வாயை கட்டி ஒரு சேதமும் இல்லாமல் அவரை தப்புவித்தார்.

    ராஜா, தானியேலை ராஜ்ஜியம் முழுவதும் அதிகாரியாக உயர்த்தினார். தானியேல் தேவனை தரிசனமாக கண்டார்.

    ‘சணல் வஸ்திரந்தரித்து தங்ககச்சையை கட்டிக்கொண்டு இருந்த ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சை போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப் போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங் களைப் போலவும், அவருடைய புயங்களும் கால்களும் வெண்கல நிறத்தைப் போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போலவும் இருக்கக் கண்டேன்’ என்றார்.

    தேவன், தானியேலுக்கு எப்பொழுதும் பாதுகாவலராகவே இருந்தார். மூன்று பரிசுத்தவான்களுக்கும் கர்த்தர் ஒருவரே மேய்ப்பராக இருந்தார். நமது போக்கிலும், வரத்திலும், வீட்டிலும் கர்த்தர் ஒருவரே பாதுகாவலராக இருக்கிறார். ஆமென்.

    அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    Next Story
    ×