என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர்ப்பவனி நாளை நடக்கிறது
    X

    கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர்ப்பவனி நாளை நடக்கிறது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) இரவு தேர்ப்பவனி நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பரத்திருப்பலி ஆகியவையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று 6-ம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு புன்னைநகர் இறைமக்கள், 8 மணிக்கு குருசடி திருஇருதய சபை அருட்சகோதரிகள், 9 மணிக்கு நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 10 மணிக்கு கோட்டார் கத்தோலிக்க ஆசாரிமார் சங்கம், 11.30 மணிக்கு வடசேரி, மீனாட்சிபுரம், கிருஷ்ணன் கோவில் இறைமக்கள் சார்பில் திருப்பலிகளும், மாலை 6.30 மணிக்கு ஆசிரியர்கள் சார்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு நடந்த திருப்பலியில் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) 7-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது.

    8-ம் நாள் திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற உள்ளது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 10 மணிக்கு தமிழில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறுகிறது.

    தேர்ப்பவனியின்போது பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் மாதா தேர்களின் பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் நடத்துவதும், தரையில் உருண்டு வேண்டுதல் செய்வதும் சிறப்பம்சமாகும். சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழா அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×