என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருத்தோலை பவனி வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 1-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 25-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, வழி நெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.



    இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாள் கொண்டாடுகின்றனர். இந்த திருநாள் ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

    அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவர்கள் அவற்றை கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத்தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, முந்தைய நாள் மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 25-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    பகைமையால், பொறாமையால் மனத்தாங்கல்களால் விலகிப்போன உறவுகளை நமது இறங்கி வரும் செயல்பாடுகளால் மீண்டும் புதுப்பிப்போம்.
    விண்ணும் மண்ணும் ஒன்றாக, மண்ணில் பேதங்கள், பிணக்குகள் களையப்பட, விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்தது மட்டுமின்றி மண்ணின் மைந்தனாக மாறியவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓர் இணைப்பு பாலமாக இருந்தார். தந்தையாம் இறைவனின் அன்பை சுமந்து, சிலுவைச்சாவின் வழியே தன்னை உலகுக்கு அர்ப்பணித்து, அதன்மூலம் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

    அதுமட்டுமின்றி மக்களின் பாவங்களுக்காக குற்றமேதும் அறியாத அவர், சிலுவையிலே தன்னை பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார். தந்தையாம் இறைவனுக்கும், அவரின் மக்களான மண்ணுலகில் உள்ள அனைவருக்கும் இணைப்பு பாலமாக சிலுவையிலே தொங்கி புது உறவின் அச்சாரமாக மாறினார். இதைத்தான் தவக்காலத்தில் நினைவு கூறப்படும் இயேசுவின் பாடுகள் நமக்கு உணர்த்துகிறது.

    எல்லோரையும் ஒன்றாக்க இயேசு பட்ட பாடுகள், நம்மில் இருக்கும் பிளவுகளை களைந்து, விருப்பு, வெறுப்புகளை வேரறுத்து, உறவுக்கு முன்னுரிமை தரும் உன்னத வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் தவ முயற்சிகள், ஒறுத்தல்கள் ஆகியவை கடவுளோடு நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவது போல, நமக்கு அடுத்து இருப்பவர்களிடமும் உறவு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ஆண்டவர் இயேசு, கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை விட்டு சாதாரண மனிதரின் தன்மை கொண்டது போல, தலைவராக இருந்தும், தன் சீடர்களின் காலடிகளை அடிமை போல கழுவிட இறங்கி வந்தது போல, நாம் கொண்டிருக்கும் வறட்டு கவுரவங்களை, வீண் பெருமைகளை விட்டு இறங்கி வந்து உறவுகளை வலுப்படுத்துவோம்.

    பகைமையால், பொறாமையால் மனத்தாங்கல்களால் விலகிப்போன உறவுகளை நமது இறங்கி வரும் செயல்பாடுகளால் மீண்டும் புதுப்பிப்போம். உறவுப்பாலங்களாக மாறுவோம்.

    அருட்பணி. பால் பெனடிக்ட், சேசு சபை, திண்டுக்கல்.
    நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது.
    பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது.

    நிசான் மாதத்தின் 16-ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்தேகோஸ்தே விழா கொண்டாடப்படுகிறது.

    முதற்பலனில் இறைவனுக்கு பார்லி படைக்கப்பட்டது, அது இறைமகன் இயேசுவைக் குறிப்பதாய் அமைந்தது. இப்போது ஐம்பது நாட்கள் கழிந்து வருவது கோதுமை அறுவடையின் காலம்.

    கோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது. ‘பெந்திகோஸ்தே’ எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த பெந்தேகோஸ்தே எனும் பெயர் வந்தது. இதற்கு ஐம்பது என்பது பொருள்!

    முதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஏழு’ என்பது முழுமையின் குறியீடு. அடிமைத்தனத்திலிருந்து மனிதன் முழுமையாய் மீட்படைந்ததன் அடையாளம் இது.

    இதைக்குறித்து இறைவனின் கட்டளை இவ்வாறு கூறுகிறது.

    “ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

    நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு பலியாகக் கொண்டு வாருங்கள். ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள்.

    உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும், சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!”

    விளைச்சலின் பயனை இறைவனுக்குப் படைக்கும் விழாக்கள் உலகெங்கும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அறுவடை விழாவும் சுமார் 3500 ஆண்டுகளாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

    இதுவும் இறைமகன் இயேசுவைக் குறியீடாய் கொண்ட ஒரு விழாவே. முதற்பலனாக இறைமகன் இயேசு இருக்கிறார், இரண்டாவதாக இந்த அறுவடை விழா மனிதர்களை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வின் குறியீடு.

    எனவே தான் இங்கே புளிப்பான மாவு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்தைக் குறிப்பது. பாவியாகிய நம்மை மீட்டுக்கொண்ட இறைவனின் திட்டம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தேர்ந்து கொண்ட இஸ்ரேல் இனமும், தேர்ந்து கொள்ளப்படாத பிற இனங்களும் இறைவன் முன்னில் இணையும் குறியீடே இரட்டை அப்பங்கள்.

    மோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார். அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார்.

    இறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர் களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார். இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.

    மோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும், நெருப்பும் இருந்தன. புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.

    மோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.

    “எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு” (2 கொரி 3:6) எனும் இறைவார்த்தை நிறைவேறும் நிகழ்ச்சியே இதில் மறைந்துள்ள மறை உண்மை.

    புதிய ஏற்பாட்டில் அறுவடை என்பது தானிய அறுவடை என்பதைத் தாண்டி, இதயங்களை இறைவனிடம் கொண்டு வரும் நிகழ்வு எனலாம். “உங்களை மனிதரைப் பிடிப்போர் ஆக்குவேன்” என இறைமகன் இயேசு நற்செய்தி அறிவிக்க சீடர்களை அழைத்தார். முதற்பலனான இறைமகன் உயிர்த்து விட்டார், இப்போது இரண்டாம் பலனான நாம் கிறிஸ்துவின் அன்பில் இணையவேண்டும். அதுவே இந்த புதிய அறுவடை.

    சுயநலமற்ற சிந்தனைகளோடு இறைமகனிடம் நம்மை நாமே அர்ப்பணிப்பதே இந்த விழாவின் இன்றைய சிந்தனை.
    இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.
    தூய்மைமிகு இறையுறவில் நிலைத்திருக்கவும், மாட்சிமிகு நிறைவாழ்வை இலக்காகக் கொண்ட இறை வழியில் பயணிக்கவும், இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துவது வேண்டுதல்கள் ஆகும்.

    ‘வேண்டுதல் கிறிஸ்தவர்களின் சிறப்பு உரிமை’ என்கிறார் மார்ட்டின் லுத்தர் அவர்கள். வேண்டு தல்கள் நம் மனித வாழ்வை புனிதப்படுத்த வேண்டுமானால், அது இறைவனுக்கு ஏற்புடையதாயிருத்தல் வேண்டும்.

    ‘இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்’ எதுவென்பதை இறைமகன் இயேசு ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய உவமையில் எளிமையாக விளக்குகிறார்.

    பரிசேயரும் வரிதண்டுபவரும்

    இறைவனிடம் வேண்டுதல் செய்ய இருவர் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

    பரிசேயர் நின்று கொண்டு, ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று வேண்டினார்.

    ஆனால், வரிதண்டுபவரோ தொலைவில் நின்று கொண்டு தம் மார்பில் அடித்தவராய், ‘கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்’ என்று வேண்டினார்.

    ‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என்றார் ஆண்டவர் இயேசு.

    பரிசேயர்

    முதலாவது வருகின்றவர் திருச்சட்டத்தைக் கற்றுத் தேறினவர்களான பரிசேயர். ‘பரிசேயர்’ எனும் வார்த்தை ‘பரிசோஸ்’ என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து உருவானதாகும். இது, ‘தலைமை ஆசாரியர்’, ‘பரிசேயர்’ என்ற இரு பொருளைத் தருகிறது.

    இவர்கள், ‘திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதே மானிட வாழ்வின் தலையாய இலக்கு’ என்ற கருத்தாக்கமுடையவர்கள் (மத்தேயு 23:23). அப்படியே திருச்சட்டத்தை கடுகளவும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். எனவே, ‘தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள்’ என்று நினைப்பவர்கள்.

    இங்கே கூறப்படும் பரிசேயருடைய நன்றியுரை அல்லது மன்றாட்டு போலியானது என்று கருத முடியாது. ஏனெனில் இது யூத குருமார் களின் இயல்பான மன்றாட்டு தான்.

    சிமியோன் பென் யோகாய் என்ற யூத குருவானவர் தனது நூலில், ‘இவ்வுலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால், அது நானும் என் மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான் தான்’ என்கிறார்.

    இந்த மனநிலை தான் ஒவ்வொரு பரிசேயர்களிடமும் காணப்பட்டது. இந்த பரிசேயரும் தன் மன்றாட்டில் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தியதோடு, கடவுளுக்கு முன்பாகத் தன்னை நீதிமானாகக் கருதுவதோடு, பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.

    இறைவனை நோக்கி மன்றாடுவதற்கு பதிலாக, தன் புகழைக்கூறி, சுய நீதியை நிலை நாட்டும் ஒரு செயலை செய்கிறார்.

    இவர் கடவுளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் தான் ஏற்கனவே ‘முழுமையானவன்’ என்ற நினைவு அவரிடம் மிகுந்திருந்தது.

    வரி தண்டுபவர்

    மற்றொருவர் வரி தண்டுபவர். ‘வரி தண்டுபவர்’ எனும் வார்த்தை ‘டோலோனஸ்’ எனும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதாகும்.

    புதிய ஏற்பாட்டு காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவரி மற்றும் நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது.

    இப்பணியில் பெரும்பாலும் யூதர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் மிகவும் இழிநிலையோராய் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர் (லூக் 19:7).

    ஏனெனில் வரி செலுத்துவதை யூதர்கள் இறைவனுக்கு எதிரான பெருங்குற்றமாக கருதினர். இவர்கள் விபசார கூட்டத்தோடு சேர்க்கப்பட்டனர்.

    இங்கே வரி தண்டுபவர் ‘தூய்மை நிறைந்த இறைவனின் முன்னிலையில், மாசு நிறைந்தவனாய் நிற்கின்றேன்’ என்ற குற்ற உணர்வு மிகுந்திட, அவரை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு, தூரத்தில் நின்று மன்றாடுகிறார்.

    இவர் இறைவனின் திருவடியினில் தன் தீய ஆன்மாவை ஒப் படைத்து, செருக்கை விடுத்து, சுயத்தை அர்ப்பணிக்கிறார். இறைவனிடம் கருணையும், பாவமன்னிப்பும் பெற்றிட வேண்டி கதறு கிறார். இறைவனின் கருணையால் கிடைக்கப்பெறும் தூய்மையான நிறைவாழ்வுக்காகப் போராடுகிறார்.

    இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்

    யூதர்களின் பார்வையில் உயர்நிலையினராய் கருதப்பட்ட பரிசேயர், இழிநிலையோராய் எண்ணப்பட்ட வரிதண்டுபவர் ஆகிய இருவர் மீது விழுந்த இயேசுவின் புதிய பரிமாணப் பார்வையினை இந்த உவமையில் காணலாம்.

    இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்டத் தன்மையுடையவர்கள். பரிசேயர் என்பதை அன்றைய கால பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாகவும், வரிதண்டுபவரை யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.

    மனித ஞானத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இரண்டு உண்மைகள் இங்கே புலப்படுகின்றது. மாபெரும் புனிதராய் கருதியவர் நீதியற்றவராய் புறக்கணிக்கப்பட, ஏழைப் பாவியர் நீதியராய், தூயராய் ஏற்கப்படுகின்றனர்.

    பரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்தம் தற்புகழ்ச்சியும், தன்னலமும் நிறைந்த வேண்டுதல் இங்கே நிராகரிக்கப்படுகிறது. இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.

    ‘செருக்குற்றோரைக்கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்வு நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’, (1 பேதுரு 5:5).

    அருட்பணி.ம.பென்னியமின், பரளியாறு.
    நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன.
    “என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.” (யோவான் 5:30). கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு எப்படி பட்டதாக இருக்கிறது? வாழ்க்கையை இருத்தல், பிழைத்தல், வாழ்தல் என்று 3 விதமாக வாழலாம். இருத்தல் என்பது சராசரித்தனமான காரியங்களை செய்து கொண்டு, நம் மனித மாண்பின் மேன்மையை உணராமல் வாழ்ந்து மடிவது.

    உதாரணமாக “எப்படி இருக்கிறீர்கள்”? என்று யாராவது கேட்டால், “ஏதோ இருக்கிறோம்” என்று பதில் சொல் கிறோமே அது போன்றது. பிழைத்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் வாழாமல் ஏதோ “இந்த உலகத்திற்கு வந்துவிட்டோம்” என்று அரைகுறை முயற்சிகளுடன் வாழ்வது. உதாரணமாக எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டால், என்ன பிழைப்பு சார் இது! என்பதை போன்றது.

    வாழ்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக வாழ்வது. முழுமனிதர்களாக வாழும் போது முழு ஈடுபாட்டுடன் வாழ்வோம். முழு ஈடுபாட்டுடன் வாழும் போது முழு மகிழ்ச்சியை கண்டுகொள்வோம். அப்பொழுது வாழ்வின் நிறைவை கண்டு கொள்வோம். இத்தகைய வாழ்வு இறைவனிடமிருந்தே வருகிறது.

    நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன. நமது சொல்லும், செயலும், சிந்தனைகளும், நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைகின்றனவா? அப்படியென்றால் இந்த கடவுள் கொடுத்த வாழ்க்கையில் இருக்காமல், பிழைக்காமல், வாழ முற்படுவோம். ஏனென்றால் உண்ணுவதும், உறங்குவதும் தான் என்றால் அதை மண்ணும் செய்யும், மரமும் செய்யும். நாம் மனிதர்கள். வாழ பிறந்தவர்கள்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை.
    அன்பு நெஞ்சங்களே! எப்படிப்பட்ட பாவங்களை நாம் செய்திருந்தாலும், கருணையின் கடவுள் நம்மை மன்னிக்க தயாராக உள்ளனர்.
    ஒரு பள்ளியில் மாணவன் தினமும் யாருக்கும் தெரியாமல் பள்ளி இடைவேளை நேரத்தில் மறைமுகமாக புகைப்பிடித்து வந்தான். இதை நேரடியாக தலைமை ஆசிரியர் பார்த்த வுடன் அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கி விட்டார். இந்த நிகழ்வை ஒருமுறை மறைக்கல்வி வகுப்பில் பகிர்ந்துவிட்டு, தலைமை ஆசிரியர் செய்தது சரியா? தவறா? என்று கேட்க, அனைவரும் சரி என்று கூறினர்.

    பின்பு ‘இயேசு அந்த தலைமைஆசிரியர் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்’? என்று கேட்டார். ஒரு மாணவன் சத்தமாக சொன்னான். ‘இயேசு அந்த மாணவனை மன்னித்து இனியும் இந்த தவறை செய்யாதே என்று சொல்லியிருப்பார்’ என்று கூறினான். சற்று நேரம் எல்லோரும் பிரமித்து போயினர். ஆம், அன்பு நெஞ்சங்களே! எப்படிப்பட்ட பாவங்களை நாம் செய்திருந்தாலும், கருணையின் கடவுள் நம்மை மன்னிக்க தயாராக உள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட இந்த இரக்கத்தை, கருணை உள்ளத்தை நாம் பாவம் செய்வதற்கு உரிமமாக பயன்படுத்த கூடாது. எனவே தான் சீராக் புத்தகம் 5:4-ல் கூறப்பட்டிருக்கிறது.

    “நான் பாவம் செய்தேன். இருப்பினும் எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? எனக் கூறாதே. ஆண்டவர் பொறுமை உள்ளவர்”. 5:6 வசனத்தில் “அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன”. எனவே, கடவுளின் இரக்கத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி நல்ல மனமாற்றம் பெறுவோம்.

    -சுந்தர், கப்புச்சின் சபை, சிவபுரம்.
    போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆசீர்வதித்த மாதா சிலைக்கு மதுரை ரோடு சவேரியார் பாளையத்தில் மும்மத தலைவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    போர்ச்சுகல் நாட்டில், கடந்த 1917-ம் ஆண்டு பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா, லூசியா என்ற 3 சிறுவர்களுக்கு மாதா காட்சியளித்தார். மாதா காட்சியளித்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதனை நினைவு கூறும் வகையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், 4 மாதா சிலைகளை ஆசீர்வதித்து உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு அனுப்பி வைத்தார். அங்கு, மக்கள் பார்வைக்காக மாதா சிலை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லுக்கு வந்த மாதா சிலைக்கு மதுரை ரோடு சவேரியார் பாளையத்தில் மும்மத தலைவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அதன்பிறகு பூச்சிநாயக்கன்பட்டி பிரிவு, பேகம்பூர் பெரிய மசூதி, மணிக்கூண்டு அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டு, திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மாலையில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திண்டுக்கல் மறைமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதா சிலையை வணங்கினர். இன்று மேட்டுப்பட்டி தேவாலயத்தில் மாதா சிலை மக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதாக பங்குத்தந்தையர்கள் கூறினர்.
    நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது.
    இலவசங்களை எதிலும் எப்போதும் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்க கூடாது. ஒரு முறை ஒரு இசைக்கலைஞர் வெகு விமரிசையாக வயலின் இசைத்து கொண்டிருந்தார். அந்த இசையை ரசித்த இன்னொருவர் அந்த கலைஞருக்கு ரூ.ஆயிரம் அன்பளிப்பாக வழங்கினார். கலைஞர் அதை பெற மறுத்தார். “எனக்கு ஏன் உங்கள் அன்பளிப்பு? என் இசை உங்களை மகிழ்வித்தது என்றால் எனக்கும் மகிழ்ச்சியே.

    அதற்கு ஏன் அன்பளிப்பு வழங்குகிறீர்கள்? இந்த பணிக்கு எனக்கு ஊதியம் கிடைக்கிறது. அதுபோதும் எனக்கு. உங்களுக்கு நன்றி” என்று இலவசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த கலைஞரைப் பற்றிய பார்வை அருகில் இருந்த பலரின் எண்ணங்களில் ஓங்கி உயர்ந்து நின்றது. ஏன் இலவசங்களை பெற வேண்டும்? இலவசங்களை பெறும்போது நாம் ஒரு வகையில் நம் உரிமைகளை அடகு வைத்துவிடுகிறோம்.

    ஆதாம், ஏவாளை, பரம தந்தை நினைத்திருந்தால் இலவசமாக எக்காலமும் சிங்கார வனத்தில் வாழ வைத்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் பாவம் செய்தபோது தண்டனை வழங்கினார். வாழ்வை மீண்டும் பெற, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டார். உழைத்து உண்பது பாவமா? இல்லையே! உழைக்காமல் உண்பது தான் பாவம்.

    இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார். தன் ரத்தத்தை சிந்தினார். சிலுவையில் மரித்து உயிர் நீத்தார். இயேசுவின் சிலுவை சாவுதான் மீட்பின் விலையாக அமைந்தது. நாமும் மீட்பை இலவசமாக பெறக்கூடாது.

    அதனால் தான் ஆண்டவர் இயேசு சொன்னார், “என்னை பின்பற்ற விரும்புபவர், தன்னலம் துறந்து, தன் சிலுவையை சுமந்து வர வேண்டும் (மத் 16:26)” என்று. நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது? முள் இல்லாத ரோஜா மலர் இல்லை. இரவு இல்லாத பகல் இல்லை. பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை.

    - குழந்தை, காணியிருப்பு.
    தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. அப்போது திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் 8-ந் தேதி புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மார்ச் மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.

    இதில் பாலக்காடு கிறிஸ்து அரசர் ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் பூண்டி மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், ஆலயத்தின் தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தைகள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ஆண்டவரை அன்பு செய், அடுத்தவரை அன்பு செய். இதுவே நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு கொடுக்கும் புதிய கட்டளை.
    ‘கடவுள் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதை நீ கணக்கிட முடியாது‘. அன்பு என்பது தெய்வமானது. அன்பு என்பது இன்பமானது. அன்பே அனைத்து வகையான அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஊற்றானது. ஆண்டவரை அன்பு செய், அடுத்தவரை அன்பு செய். இதுவே நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு கொடுக்கும் புதிய கட்டளை.

    தன்னை அன்பு செய்பவரால் மட்டுமே, தனக்கு அடுத்து இருப்பவரையும் அன்பு செய்ய முடியும். அன்பு செய்கின்ற உள்ளம், ஆண்டவன் வாழும் இல்லம். அன்புக்கு, அன்பு காட்டுபவன் மனிதன். அயலார்க்கு அன்பு காட்டுபவன் புனிதன். பகைவருக்கும் அன்பு காட்டுபவன் தெய்வம். அடுத்தவரில் ஆண்டவனை கண்டு அவர்களின் தேவையை நிறைவேற்றும் போது தான் கடவுளின் அன்பை சுவைக்க முடியும்; நட்பையும், பாரத்தையும் வெளிப்படுத்தி உறவை வளர்க்க முடியும்.

    அன்பை, உடனிருப்பதாலும், உறுதியூட்டும் வார்த்தைகளாலும், நம்பிக்கையூட்டும் செயல்களாலும் வெளிப்படுத்தும் போது உயிர் தரும் அன்பிற்கு சாட்சியான இயேசுவின் உற்ற தோழர்களாக நாம் மாற முடியும்.

    ‘அன்பு செய்‘. புதிய சமூகத்தை உருவாக்க இயேசு கொடுத்த அன்பு கட்டளை இது. ஏற்றத்தாழ்வுகளை களைந்து கடவுளிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் நம்மை பிரிக்கும் வேற்றுமைகளை வேரறுத்து, தன்னலமற்ற அன்பினால் கிடைக்கும் அருள் வாழ்வை இம்மண்ணில் சுவைக்க முயல்வோம்.

    அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள் என்ற இறைவார்த்தை, நம் இதயத்தில் அன்பை ஊற்றெடுக்க செய்யட்டும். அன்பை ஆணிவேராகவும், அடித்தளமாகவும் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடருவோம். இறையருள் என்றும் நம்மோடு.

    அருட்சகோதரி, பிரமிளா, சி.ஐ.சி., தாமரைப்பாடி, திண்டுக்கல்.

    பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.
    இலையுதிர் காலத்தில் திடீரென்று ஒரே சாரல் மழை. பூமி நனைகிறது. மண் மணக்கிறது, தளிர்கள் அரும்புகின்றன. மரங்கள் பசுமை போர்த்துகின்றன. பூக்கள் மலர்ந்து வசந்தத்தை அறிவிக்கின்றன. மனம் குளிர்ந்து போகிறது. ஒரே ஒரு மழையால் எத்தனை நன்மைகள். அவ்வாறே, தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம். மனிதர்களுக்கு பல நன்மைகள் தருகின்ற காலம்.

    இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.

    இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.

    பிறருக்கு எதிராக குற்றம் இழைக்கிற போது, அது இறைவனுக்கு எதிரான குற்றம் என்பதை ‘கடவுளுக்கு எதிராகவும், உமக்கும் எதிராகவும் பாவம் செய்தேன்’ (லூக்கா 15:21) என்று இயேசுவின் ஒரு உவமை உறுதிப்படுத்துகின்றது. பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.

    இவையனைத்தும் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: சமூகத்தை உள்ளடக்காத மனமாற்றமும், சமூக அக்கறையற்ற நற்செயல்களும் பொருளற்றவை. எனவே, இத்தவக்காலத்தில் முப்பரிமாண ஆன்மிகத்தில் வேரூன்றி வளர்வோம். பிறருக்கு உதவிகள் செய்வோம்.

    அருட்பணி. அ.ஸ்டீபன் மார்ட்டின், சே.ச. திண்டுக்கல்.
    உண்ணா நோன்பைவிட இத்தகைய தவங்கள் நமது அகவலிமையை அதிகப்படுத்தி, நம்மை சிறந்த பண்பாளர்களாக மாற்றும் என்பது உறுதி.
    பிறப்பு, இறப்பு என்கிற சக்கர சுழற்சியிலிருந்து விடுபடவே மனிதர்கள் விரும்புகின்றனர். எப்பாடுபட்டாவது சொர்க்கத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதே மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரின் அசைக்க முடியாத விருப்பம். அந்த விருப்பத்தினால் தான், அனைத்து மதங்களிலும் நோன்பு காலம் என்கிற தயாரிப்பு நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அதுவே சொர்க்கத்தின் நுழைவு சீட்டை பெற தன்னை தகுதியாக்கும் காலம் ஆகும். நோன்பு, தவம், புலனடக்கம், பிரார்த்தனை என அனைத்து மதத்தவரும் தம்மை தகுதியாக்கி, பாவத்திலிருந்து விடுபடும் கருவியாக தவ நாட்களை பயன்படுத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உயர்ந்த தலைவர் போப் பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்து கனிவான வார்த்தைகளை பேசுவதும், கோபத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடிப்பதும், சுயநலத்தை தவிர்த்து பிறரன்புக்கு முக்கியத்துவம் தருவதும், குறை சொல்வதை தவிர்த்து இருப்பதில் நிறைவடைந்து நன்றியுணர்வோடு இருப்பதும் நன்று.

    அதேபோல், வஞ்சகம், பழிவாங்குவதை தவிர்த்து மன்னிப்பதும், நல்லுணர்வை வளர்ப்பதும், பிறரைப்பற்றி இகழ்ந்து பேசுவதை தவிர்த்து அவர்களின் நற்செயல்களை பாராட்டுவதும், கவலைப்படுவதை தவிர்த்து கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதும் அர்த்தமுள்ள தவமுயற்சிகளாகும்.

    உண்ணா நோன்பைவிட இத்தகைய தவங்கள் நமது அகவலிமையை அதிகப்படுத்தி, நம்மை சிறந்த பண்பாளர்களாக மாற்றும் என்பது உறுதி. தவிர்க்க வேண்டியதை தவிர்த்து, மாற்ற வேண்டியதை மாற்றுவதே தவக்காலத்தின் நோக்கமாகும். எனவே தவக்காலத்தில் அகவலிமையை அதிகரிக்கும் தவமுயற்சிகளில் நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வோம்.

    அருட்சகோதரி. செலஸ்டினா, மரியின் ஊழியர் சபை,

    வளனகம், திண்டுக்கல்.
    ×