என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இன்றைக்கு உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவை மரம் இருக்கிறது. அந்த கல்வாரியின் சமூகம் கசந்த வாழ்வை நிச்சயம் மதுரமாய் மாற்றும். ஆகவே கலங்காதிருங்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.
    உங்களுக்கு முன்பாக பலவிதமான சவால்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம். குடும்பத்தைக் குறித்த பாரம், பொருளாதாரப் பிரச்சினை மற்றும் சரீர பலவீனங்கள்... இப்படி அநேக காரியங்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம். இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன்.

    நெருக்கத்திலும் உங்களை நடத்துவார்

    ‘நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்’ (சங்கீதம் 118:5).

    இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் பலவிதமான நெருக்கடிக்குள்ளே நீங்கள் போய்க் கொண்டிருப்பதை தேவன் அறிவார். அதே நேரத்தில் நீங்கள் நெருக்கத்தில் இருப்பது தேவசித்தமில்லை என்பதை முதலாவது அறிந்து கொள்ளுங்கள்.

    அன்றைக்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கி பயணம் செய்யும் போது பார்வோன் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு வந்தான். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குப் பின்னாக பார்வோன் வருகிறதைக் கண்டு பயந்தார்கள், என பின்வரும் வசனம் தெளிவாக நமக்குக் கூறுகிறது.

    ‘பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்: அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்’ (யாத்திராகமம் 14:10)

    பார்வோன் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக் கொண்டு வந்தாலும் கர்த்தரை நோக்கி மோசே கூப்பிட்டபோது ‘இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்’ (யாத்திராகமம் 14:13).

    ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ (யாத்திராகமம் 14:14) என்ற வாக்குத்தத்தங்களைக் கூறி தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை நெருக்கத்திலும் வழிநடத்தினார்.

    சாத்தான் உங்களை நெருக்குகையில் சற்றே மனம் தளராமல் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் தமது வாக்குத்தத்தங்களின்படியே உங்களை கிருபையாக வழிநடத்துவார்.

    அதிசயமாய் நடத்துவார்

    நம் ஆண்டவர் அதிசயங்களைக் காணப்பண்ணுகிற தேவன். நாம் எதிர்பார்க்கிறதைவிட அவர் நடத்துகிற பாதை மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைக்கு உங்கள் முன்பாக இருக்கிற உபத்திரவங்களை அல்ல இனி நீங்கள் காணப்போகிற அதிசயத்தை நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். சத்துரு உங்களை மேற்கொள்வது போல இப்போது உங்களுக்குத் தோன்றலாம். மேலும் உங்கள் பிரச்சினைக்கு எவ்விதத்திலும் தீர்வு கிடைக்காது என நீங்கள் எண்ணக்கூடும்.

    ஆனால் இப்போது நான் ஒரு சம்பவத்தை வேதத்தில் இருந்து குறிப்பிடுகிறேன். அச்சம்பவம் நடந்தது எத்தனை உண்மையோ அப்படியே உங்களுக்கும் ஆண்டவர் அதிசயங்களைச் செய்வார்.

    யாத்திராகமம் 14:19-21 ஆகிய வசனங்களை உங்கள் வேதத்தை திறந்து வைத்து வாசித்துப் பாருங்கள். பார்வோனின் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக்கொண்டு வரும்போது அந்த பார்வோனின் சேனை இஸ்ரவேலின் சேனையை நெருங்க முடியாதபடிக்கு மேக ஸ்தம்பமும் அக்னி ஸ்தம்பமும் ஆச்சரியமாய் தேவபிள்ளைகளை பாதுகாத்தது.

    ‘பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை’ (யாத்திராகமம் 13:22)

    இவ்விதமாய் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் பண்ணி சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே தம்முடைய ஜனங்களை அதிசயமாய் நடக்கப் பண்ணினார்.

    அன்றைக்கு மட்டுமல்ல, அதிசயமானவர் இன்றைக்கும் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்திராத அதிசயங்களைச் செய்வார். ஆகவே கலங்காமல் கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள். மனம் தளராமல் அவரையே நம்பியிருங்கள்.

    சில வேளைகளில் நாம் நடந்து போகிற பாதை நமக்கு வறட்சியாகவும் வனாந்தரமாகவும் இருக்கலாம். இதனால் மனம் உடைந்து சோர்வினாலும், அவிசுவாசத்தினாலும் பயந்து கலங்கி நிற்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளையே, கர்த்தர் தம்முடைய ஜனமாகிய நம்மை ஒருநாளும் கைவிடமாட்டார். இன்று நீங்கள் செல்லுகிற பாதை ஒரு வனாந்தர பாதையாக இருக்கலாம்.

    ‘பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பயணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது: அதனால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது’ (யாத்திராகமம் 15:22,23)

    மேற்கண்ட வசனங்களில் மூன்று நாட்கள் தண்ணீரில்லா வனாந்தரத்தில் தேவபிள்ளைகள் நடந்து சென்றதாகவும், மாராவின் தண்ணீர் அவர்களுக்கு கசப்பாக இருந்ததாகவும் வேதம் கூறுகிறது.

    இதைக் கண்ட தேவ ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்ன குடிப்போம் என்றார்கள். ஆனால் கர்த்தருடைய தாசனாகிய மோசேயோ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் ஒரு மரத்தை மோசேக்கு காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்ட உடனே அது மதுரமான தண்ணீராய் மாறிற்று.

    உங்கள் வனாந்தர பாதையில் ஒருநாளும் கர்த்தரை முறுமுறுக்காதீர்கள். அன்றைக்கு மோசே கர்த்தரை நோக்கினான். கர்த்தர் மரத்தைக் காட்டினார்.

    இன்றைக்கு உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவை மரம் இருக்கிறது. அந்த கல்வாரியின் சமூகம் கசந்த வாழ்வை நிச்சயம் மதுரமாய் மாற்றும். ஆகவே கலங்காதிருங்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

    ‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்: நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’ (ஏசாயா 58:11).

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது. யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது.

    இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும். புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார்.

    அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.
    இயேசு ஒரு இடத்தில் போதனை செய்து கொண்டிருக்கிறார். மாலையாகிறது, கால்நடையாய் வந்த கூட்டம் பசியை மறந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

    இயேசு அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனும் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தினார். வந்திருந்தவர்களில் ஆண்கள் மட்டும் ஐயாயிரம் பேர்.

    கைவசம் இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும். அவற்றைக் கொண்டு அத்தனை பேருக்கும் இயேசு உணவளித்தார். இந்த அதிசய செயலை நான்கு நற்செய்தியாளர்களும் குறித்து வைத்திருக்கின்றனர்.

    அதன் பின்னர் மக்கள் இயேசுவின் போதனைகளை நாடாமல், உணவை நாடி அவரை அணுகினார்கள்.

    இயேசு அவர்களிடம் “உணவுக்காக என்னைத் தேடுகிறீர்கள், உண்மையில் நான் அழியாத உணவு” என தன்னையே உணவாக இயேசு அவர்கள் முன்னால் வெளிப்படுத்துகின்றார். அவரே உண்மையான உணவு.

    உண்மை என்பது வாய்மொழியால் வருவது மட்டுமல்ல, அது நிலையாக இருப்பது. அதனால் தான் இயேசு தன்னை ‘நானே உண்மை’ என்கிறார்.

    உண்மை என்பது எங்கு தொடங்கி, எதுவரை பயணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘கடவுள் உண்மையில் உயர்ந்தவர்’ என்கிறது சங்கீதம்.

    அதாவது ‘உண்மை’ யைப் பொறுத்தவரை அவரை விடப் பெரியவர் யாரும் இல்லை. உண்மையின் உச்சம் என்பதே இயேசு தான். இதுவே அதன் பொருள். இது கடவுளின் பண்புகளில் ஒன்று.

    “ஆண்டவரே உண்மையான கடவுள், அவரே வாழும் கடவுள், என்றும் ஆளும் அரசர்” என்கிறது எரேமியா 10:10.

    “அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” என்கிறது சங்கீதம் 146:6.

    “அவருடைய உண்மையானது தலைமுறை தோறும் உள்ளது” என்கிறது சங்கீதம் 100.

    இந்த உண்மையின் கடவுள், உண்மையில் உயர்ந்தவர், உண்மையைக் காக்கிறவர், தலைமுறை தோறும் உள்ள உண்மையின் கடவுள். அவர் தான் மனிதனாக மண்ணில் வெளிப்பட்டார்.

    உண்மை எனும் கடவுளின் சாயல், கிறிஸ்துவின் சாயலாக மண்ணில் வெளிப்பட்டது. “கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை” என இயேசு குறிப்பிடுவதில் கடவுளின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

    அவர் இப்படி மொழிகிற உண்மை, மக்களில் வெளிப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். “உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது” (எபேசியர் 4:21) என்கிறது விவிலியம்.

    கடைசியில் இயேசுவே அந்த உண்மை என்பதும் யோவான் நற்செய்தியில் தெளிவாகிறது. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவான் 14:6) என்றார் இயேசு.

    இயேசுவிடம் உண்மை இருந்தது, இயேசுவே அந்த உண்மை, இதுவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

    “வாழ்வு தரும் உணவு நானே” (யோவான் 6:35) என இயேசு தன்னைப்பற்றிக் கூறுகிறார். இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் அலைந்த காலத்தில் வானத்திலிருந்து ‘மன்னா’ என்ற உணவு கொடுக்கப்பட்டது. அதை மோசே கொடுத்ததாக மக்கள் கூறினர்.

    இயேசுவோ, ‘அதை மோசே கொடுக்கவில்லை, எனது பிதாவே அதைக் கொடுத்தார்’ என்றார்.

    இன்று அதே பிதா ‘உண்மை’ யாம் இயேசுவை உணவாக பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ‘மன்னா’ முடிவுடைய உணவு, மகனோ முடிவற்ற வாழ்வைத் தரும் உணவு.

    உண்மை நமக்கு முடிவற்ற வாழ்க்கையைப் பெற்றுத் தருகிறது, என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.

    உண்மை என்பது புதிய வாழ்க்கையின் அடையாளமாக விவிலியத்தில் சொல்லப்படுகிறது. அது புது வாழ்வு சார்ந்தது, புது வாழ்வுக்கான வழியைச் சார்ந்தது.

    “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” (1 யோவான் 1:9) என்கிறது விவிலியம். இந்த உண்மை நிரந்தர மாற்றத்தை நமக்கு பெற்றுத்தருகிறது.

    மீண்டும் பாவத்தில் விழாமல் நம்மைக் காக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. ‘உண்மை’ நம்மை பாவத்தில் விழாமல் காக்கிறது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.

    விலங்குகளின் ரத்தம் பாவத்திலிருந்து தற்காலிக தப்பித்தலைத் தந்தது, இயேசுவின் ரத்தம் மட்டுமே நிரந்தர மீட்பைத் தருகிறது.

    இயேசு உண்மையாக இருக்கிறார், தந்தையிடம் கற்ற உண்மையைப் பேசுகிறார். அவரை நாம் உண்மையுடன் அணுகவேண்டும். அப்போது உண்மையாகவே நமது பாவத்திலிருந்து மீட்பும், நிலைவாழ்வும் கிடைக்கும். 
    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை.
    கடவுளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். தன்னலத்தை துறந்து, பிறர் நலனுக்காக வாழ்பவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.

    இறைமகன் ஏசு தனது சீடர்களிடம்.., '' என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (லூக்.9:23) என்று கூறினார். அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக, தன்னலமற்று அர்ப்பணிப்பை முன்னெடுக்கும் எவருக்கும் அவமானமும், வேதனையும் கூடிய சிலுவை காத்திருக்கிறது. இந்த சிலுவையை நாள்தோறும் தூக்கிச் சுமந்து, அவருக்காகவே வாழுகிற மனிதன் தான் கிறிஸ்தவன்.

    கிறிஸ்தவத்தின் வெளி அடையாளங்கள், கடவுளையும், மனிதனையும் இணைக்க உதவாது. கடவுளின் வார்த்தைகளை அல்லது கட்டளைகளை வாழ்வாக மாற்றிக் கொள்ளும் போது தான், கடவுளால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.' நான் என் தந்தையின் கட்டளைகளை கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவான்.15:10) என்கிறார் ஏசு.

    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை. ஏசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த வாழ்வும், அவரது மரணமும், நமக்கு உணர்ந்தும் தெளிவான பாடங்கள் இவை. '' தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

    மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.'' (பிலிப்.2:7-9) எனவே நாமும் நம்மை தாழ்த்தி, தன்னலத்தை துறந்து, ஏசுவைப்போல வாழ்வோம். நம் வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கும். அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வார். நமக்குள் இறைவனின் அமைதி என்றும் இருக்கட்டும்.

    சகோதரி. ஆல்பெட்டினா
    தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தனிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தனிக்கவும் முடியும்.
    பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்து இருங்கள்... (யோவான் 15:9)

    பொதுவாக மனிதர்கள் பணம், பொருள், நல்ல வாய்ப்பு வசதி, சுகபோகங்கள் இவைகளைத்தான் விரும்பி தேடுவதைப்போல காணப்படுகிறார்கள். ஆனால், எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பைத் தேடுகின்ற ஒரு உணர்வு தான் அதிகமாகப் புதைந்து கிடக்கிறது. அன்பை குறித்த ஒரு ஏக்கம் மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கின்றது. தான் உண்மையாகவும், போதுமான அளவிலும் நேசிக்கப்படவில்லை என்ற உணர்வு அநேகரை மிகுதியாகப் பாதிக்கின்றது.

    சிலர் தங்கள் கணவர்மார்களாளோ, மனைவி மார்களாளோ, பெற்றோர்களாளோ, நண்பர்களாளோ மிகுதியாக நேசிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதாக உணர்வதில்லை. இது மற்றவர்களின் அன்பைக் குறித்து அறியாத நிலை என்று கூற முடியாது. இது ஒருவர் அன்பு விஷயத்தில் எளிதாக திருப்தியடையாத நிலையின் பிரதிபலிப்பாகும். ஏனென்றால், அன்பைக் குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளத்தில் காணப்படுவதால், மற்றவர்களின் மிகுதியான அன்பாலும் அங்கு திருப்தி ஏற்பட முடியவில்லை.

    தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் பாயும் வரை, எவ்வளவு பெரிய மனிததன்மையுள்ள அன்பினாலும் இருதயம் நிறைவடைய முடியாது. தேவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய இருதயங்களை திருப்தி செய்கின்ற அளவிற்கு வலிமையுடையதாகவும், உண்மை நிறைந்ததாகவும், நிறைவுடையதாகவும், இருக்கிறது. ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.

    தேவன் அன்பாகவே இருக்கிறார். இந்த தேவ அன்புதான் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கின்றவர்களின் இருதயத்தில் ஊற்றப்படுகின்றது. நம்முடைய ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தேவ அன்பு மட்டுமே ஈடுகொடுக்க முடியும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு அன்பைத்தேட வேண்டிய இடம் தேவ சமூகம்தானேயன்றி, மனிதர்களிடமிருந்து அல்ல. ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை தன்னுடைய வாழ்நாள் முடிவு வரையில் நேசித்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம் (யோவா - 13:1) ஏனென்றால் அவருடைய கவனம் அவர்களுடைய அன்பைப்பெறுவதில் இல்லாமல், அவர்களை உண்மையாக நேசிப்பதிலேயே இருந்தது.

    அவர் பிதாவாகிய தேவனுடைய அன்பை எப்போதும் இருதயத்தில் ருசித்துகொண்டிருந்தபடியால், அவர் அன்பை தேடுகிறவராக இல்லாமல், அன்பை தேடுகிறவர்களுக்கு அதனை வழங்குகிறவராக இருந்தார். தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தனிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தனிக்கவும் முடியும்.

    “ இறைவனை நோக்கிய உன் அன்பில் முழுமையில்லையேல்
    மனிதனை நோக்கிய உன் அன்பு அறைகுறையாகவே இருக்கும்“

    - சாம்சன் பால் 
    தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும்.
    விவிலியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

    இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.

    ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.

    உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர் இறைவன். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். ‘இறைவனை நேசி, சக மனிதனை நேசி’ என்பதே அவரது கட்டளைகளின் மையம்.

    இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரை களுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. ரெயில் சிநேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்சுகளும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலு விழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.

    இயேசு நம்மை அழைக்கிறார், உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

    1. தன்னோடான உறவு

    தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல. “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

    நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும்.

    2. உறவினரோடான உறவு

    நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.

    விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

    3. கணவன் மனைவி உறவு

    ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

    இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது, பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்” (எபேசியர் 5:24) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

    4. பிறரோடான உறவு

    சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ‘ஸ்டேட்டஸ்’ போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது.

    இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் அதைப் புரிந்து கொள்ள

    5. திருச்சபையோடான உறவு

    திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந் திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.

    தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.

    சேவியர், சென்னை. 
    கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் புதிய பீடத்தினை அர்ச்சிப்பு செய்த பின்னர் திருவிழா திருப்பலியினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து திருஇருதய ஆலயத்தில் திருப்பலியும் மறையுரையும் திண்டுக்கல் மறை மாவட்ட உதவி பங்குத்தந்தை சைமன் சேசு அந்தோணி வழங்கினார். பின்னர் சாரல் மழையில் இரவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை நேற்று அதிகாலை அடைந்தது. இதில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜா, உதவி பங்குத்தந்தைகள் சேவியர் அருள்ராயன், செல்வராஜ், முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இபுராகிம், எட்வர்ட், விழா கமிட்டி தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை திருஇருதய ஆலயத்தில் செபாஸ்டீன் ஆங்கிசாமியும் திருப்பலி வழங்கினார். கருணை இல்ல இயக்குனர் தாமஸ் தேசிய கொடி ஏற்றி திருப்பலி வழங்கினார். புனித சலேத் அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தைகள் ஜஸ்டீன் திரவியம், அருள் அந்தோணி, சேவியர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி வழங்கினர்.

    பின்னர் சப்பர பவனி திருஇருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை ஆலயத்தினை அடைந்தது. அங்கு நற்கருணை ஆசியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவில் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. 
    வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனியின் போது திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.

    விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர். 
    இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம்.
    உலகில் எந்த ஒரு உயிரும் இன்னொரு உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் காணப்படுகிறது. பூச்சிகள் பறவைகளைப் பார்த்து பயப்படும், பறவைகள் பூனைகளைக் கண்டு பயப்படும், மனிதர்கள் நோய் கிருமிகளைக் கண்டு பயப்படுவார்கள்.

    இப்படித் தான் மெய்யான வாழ்வுக்கும் ஒரு பகைவன் உண்டு. அவன் தான் சாத்தான்.

    யோவான் நற்செய்தியாளர் அதை மிக அழகாக முரண்களின் மூலம் விளக்குவார். ‘கடவுள் ஒளியாக இருக்கிறார், பாவம் இருளாக இருக்கிறது’ என்பது அதில் ஒரு சின்ன உதாரணம்.

    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பேச்சுடன் முடிந்து போவதல்ல. நாம் விசுவாசிப்பதன் படி வாழ்ந்து காட்டுவதில் தான் அது நிறைவடைகிறது. வாயின் வார்த்தைகளை வாழ்க்கை நிரூபிக்க வேண்டும்.

    கிறிஸ்தவ வாழ்க்கை ‘நடை’ என்று விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசுவை மீட்பராகக் கண்டுணரும் போது இந்த வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    ‘நடை என்பது நிற்பதற்கான குறியீடு அல்ல, முன்னேறுவதற்கான அழைப்பு. இறைவனின் சித்தம், நோக்கம், விருப்பம் எல்லாம் அவரது வார்த்தையின் வழியாக நாம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வது தான். அவர் தூயவராய் இருப்பதும், அவரது வார்த்தை தூயதாய் இருப்பதும் தான் அதன் காரணம்.

    தூய்மையற்றதை விவிலியம் மறைப்பதில்லை. ‘ஆபிரகாம், விசுவாசிகளின் தந்தை’ என குறிப்பிடும் விவிலியம் தான் ‘ஆபிரகாம் பொய்யன்’ என்றும் குறிப்பிடுகிறது. விடுதலை நாயகன் மோசே, ‘முரட்டாட்டமான மனிதன்’ என்கிறது. யோனா எனும் தீர்க்கதரிசியை, ‘கீழ்ப்படியாதவன்’ என்கிறது. சிம்சோனை, ‘பாவம் செய்தவன்’ என்றும், தாவீதை, ‘கொலையாளி’ என்றும் விவிலியம் மறைக்காமல் பேசுகிறது. மோட்சத்துக்குச் செல்லும் பாதை குறுகியது, அது விரிவான பாதை என விவிலியம் பொய் சொல்வதில்லை.

    கடவுள் எப்படித் தூயவரோ, விவிலியம் எப்படி தூயதோ, அதுபோல கடவுளுக்குள் வருபவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பிறக்கும் போது நம்முடன் தோன்றி வருகின்ற பாவம், பாவ இயல்பு என்கிறோம்.

    ஆவியினால் மறுபடியும் பிறக்கும் போது பெற்றுக்கொள்வது புதிய இயல்பு. இந்த இரண்டு இயல்புகளுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் உண்டு. நான் ஆவியினால் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அதைத் தக்க வைத்துக்கொள்ள பாவ இயல்போடு போராட வேண்டியிருக்கிறது.

    பாவ இயல்பு நம்மை தோற்கடிக்க முயல்கிறது, அதை தோல்வியடைய வைக்க நமக்கு தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது. சுய ஒழுக்கமோ, சட்ட திட்டமோ இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

    இந்த பழைய இயல்பை மறைக்க விரும்பும் விசுவாசிகள் பொய் சொல்பவர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் பிறரிடம் பொய் சொல்கின்றனர். பிறர் தன்னை ஆன்மிகவாதி என நம்பவேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள். தன்னை ஒரு ஆன்மிகவாதியாய்க் காட்டிக்கொள்ள ஆசைப்படும் மனம் பொய் சொல்கிறது. தான் இருளிலே நடந்தாலும், தான் ஒளியிலே நடப்பவனாக பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த பொய் பேசுதல் நடக்கிறது.

    பின்னர் தன்னோடு தன்னைப்பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் மனிதன். இது பிறரை ஏமாற்றும் நிலையல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலை. பாவத்தில் வாழ்ந்து கொண்டே, கடவுளுக்கும் தனக்கும் இடையே உறவு சீராக இருப்பதாக சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

    இந்த நிலையிலிருந்து தூய நிலைக்கு மனிதன் மாறவேண்டும். ‘கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை’ என்கிறது விவிலியம். இருளில் இருந்து நம்மை அவரது ஒளிக்கு இறைவன் அழைக்கிறார். அது தான் மீட்பின் முதல் நிலை. இப்போது நாம் ஒளியின் பிள்ளைகள் ஆகிறோம்.

    தீமை செய்பவர்கள் ஒளியைப் பகைக்கிறார்கள். ஆனால் ஒளி பிரகாசிக்கும் போது நமது உண்மையான சுபாவம் வெளிப்படுகிறது. நம்மிடம் பாவம் இல்லை என சொன்னால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் மாறிவிடுகிறோம். இறைவனுக்கு நமது பாவங்களைப் பற்றி தெரியும். ஆனாலும் இறைவனிடம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிட வேண்டும்.

    நீ எங்கேயிருக்கிறாய்? என ஆதாமிடம் கேட்டார் இறைவன். உன் பெயர் என்ன? என யாக்கோபிடம் கேட்டார். உன் கணவரை அழைத்து வா, என சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

    எல்லாமே இறைவனுக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனாலும் நாம் அதை சொல்லவேண்டும் என இறைவன் விரும்புகிறார். உண்மையை மறைக்காமல் பேசவேண்டும் என ஆசைப்படுகிறார்.

    பாவத்தை அறிக்கையிடுவது கடவுளுக்கு நம் பாவத்தைத் தெரியப்படுத்த அல்ல. நமது பாவத்தையும், பாவ இயல்பையும் நாம் உணர, வெளிப்படையாய் இருக்கிறோம் என்பதை இறைவனிடம் நிரூபிக்க.

    இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம். 
    பாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும்.
    படைப்பு இறைவனுடையது, புதுப்பித்தலும் அவரது சித்தத்துக்கு ஏற்ற ஒன்று. இறைவன் படைத்த இயற்கையை அழிப்பவர்களை எதிர்த்து நிற்க இறைவார்த்தை அறைகூவல் விடுக்கிறது.

    திருமறையில் நாம் கற்கின்ற அடிப்படை விஷயம் என்னவென்றால், கடவுள் ஒரு மக்களினத்தை தனக்குரிய சொந்த மக்களாக தேர்ந்தெடுக்கிறார். பின்னர் அவர்கள் மூலம் உலக மக்கள் முழுவதையும் தனக்குரியவர்களாக மாற்றுகிறார். பல அரசர்களுடைய வாழ்க்கை விவிலியத்தில் இப்படித் தான் விவரிக்கப்படுகிறது.

    ஆரம்பத்தில் இறைவனை அறியாமல் தவறான வாழ்க்கையும், தவறான வழிபாட்டு முறையும் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்த இறைவாக்கினர்கள், கடவுளுக்கு நேராக அவர்களைத் திருப்புகிறார்கள்.

    புதிய ஏற்பாட்டில் யூதர்கள், யூதரல்லாதோர் எனும் மாபெரும் இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். பேதுரு யூதருக்கானவர் என்றும், பவுல் யூதர்கள் அல்லாதவர்களுக்கானவர் என்றும் நற்செய்தி அறிவித்தலில் நாம் பிரித்துப் பார்ப்பதுண்டு.

    முழு மக்களினமும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் இறைவனின் ஆர்வமும், ஆதங்கமுமே இவற்றில் வெளிப்படுகிறது.

    ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவோ, நிராகரிக்கப்பட்டவர்களாகவோ எந்த மக்களினமும் இல்லை.

    “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்” என்கிறது திருவெளிப்பாடு 7:9

    மேசியாவின் ரத்தமும், வாழ்வும் தோல்விக்குரிய சிலுவைகளை வெற்றிகளாக மாற்றிவிட்டன. பாடுகளினாலும், துயரங்களினாலும் சோர்ந்து போனவர்கள், ரத்த காயம் அடைகிறார்கள். இப்படி வலியிலும், சோர்விலும் இருப்பவர்களை இன்னொரு தூய ரத்தம் கழுவுகிறது.

    விளைவு, இவர்கள் வெண்மையாகிறார்கள். பிறருக்காக இறைமகன் சிந்திய ரத்தம் அடுத்தவர்களை சிவப்பாக அல்ல, வெண்மையாக மாற்றுகிறது.

    தூயவர் தூய்மையான ரத்தத்தால் நம்மைக் கழுவுகிறார். ஆனால் அது எளிதாக நடைபெறுவதில்லை. அது பாடுகளின் வழியாக நாம் பயணிக்கும் போது தான் கிடைக்கிறது. அத்தகைய பாடுகளைச் சந்திக்கும் மன உறுதியை, ஆற்றலை தனது சீடர்களுக்கு இயேசு தருகிறார்.

    “தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” (மார்க் 3:14) என்கிறது விவிலியம். தீமையை விரட்டவும், தீமையைத் தாங்கவும் இயேசு சீடர்களை வலுவூட்டுகிறார்.

    “கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” (2 கொரி 1:7,8) எனும் வசனங்கள் தீமோத்தேயுவை பவுல் ஆயத்தப்படுத்தும் நிகழ்ச்சியை விளக்குகிறது.

    ஆண்டவர் தனது சீடர்களை வலுப்படுத்தியது போல, பவுல் தீமோத்தேயுவை பலப்படுத்துகிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தான் முன்மாதிரியாக பவுல் பயன்படுத்துகிறார்.

    எப்படி பிலாத்துவின் முன்னால் இறைமகன் இயேசு நின்றாரோ, அதே உறுதியோடு நிற்கவேண்டும் என பவுல் உற்சாகமூட்டுகிறார்.

    இயேசுவுக்காக பாடுகளையும், நிந்தைகளையும் அவரது சீடர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அதை நிராகரித்து விட்டு நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பயணிக்க முடியாது.

    பாடுகளின் வழியாக வெளிப்படுவது தான் நற்செய்தி. துன்புறுத்தப்படுவதும், பாடு அனுபவித்தலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இயேசு தனது நற்செய்தியில் தெளிவாக உரைத்திருக்கிறார்.

    “தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள்” என்கிறது மத்தேயு நற்செய்தி.

    பின்வாங்குவது எப்படி என்பதை யோசிக்க அல்ல, முன்னேறிச் செல்ல இயேசுவின் வார்த்தைகள் நமக்கு துணிச்சல் அளிக்க வேண்டும்.

    பாடுகளையும், துன்பத்தையும் ஏற்று நாம் உலகத்தலைவர்களின் முன்னால் நிற்கும் போது என்ன பேசவேண்டும் என்பதை தூய ஆவியானவர் உணர்த்துவார் எனும் இறை வார்த்தை நமக்கு ஆறுதலாய் இருக்கிறது.

    “ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை” என ஸ்தேவான் குறித்த இறைவார்த்தை நமக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறது.

    ‘இயேசுவுக்காக தனது உயிரையே கையளித்த முதல் ரத்த சாட்சி’ என கிறிஸ்தவ வரலாற்றில் ஸ்தேவான் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.

    நமது உடலைப் பாதுகாப்பது அல்ல முக்கியமானது, நமது ஆத்மாவை நாம் காத்துக்கொள்ள வேண்டும். பாடுகள் நமது உடலை ஊனமாக்கலாம், ஆனால் நமது ஆத்மாவை நாம் தூயதாகக் காத்துக் கொள்ள வேண்டும்.

    இயேசுவுக்காக மரித்த சீடர்களெல்லாம் மீட்பின் நிச்சயத்தோடு மரித்தார்கள். இறைவனோடு இணைந்திருப்போம் எனும் உறுதியுடன் தங்கள் உயிரையே கையளித்தார்கள்.

    அந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும். அதற்கு இறைமகனை விசுவாசித்து, அவரால் தூய்மையாக்கப்பட்டு, அவருக்காகப் பாடுகளில் பயணிக்க வேண்டும்.

    பாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும். 
    பொய்சொல்லி வாங்கியதை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, இறைப் பாதைக்கு மீண்டும் வந்தால் அவனது நாட்கள் முழுவதும் நன்மையால் சூழப்படும் என்றும் வேதம் வாழ்த்துகிறது.
    வாழ்நாள் முழுவதுமே இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர் என்று எவருமே சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனிதனுக்கு அப்படி ஒரு வாழ்வை இறைவன் நிர்ணயிக்கவில்லை. ‘எவ்வளவு உச்ச அந்தஸ்தைப் பெற்றவர் என்றாலும், அதற்கு ஏற்றபடியான உபத்திரவத்தின் நாட்களையும் சந்திக்க வேண்டியதுள்ளது’ (யோபு-30: 16,27) என்கிறது விவிலியம்.

    உலக வாழ்க்கையை இன்ப-துன்பங்கள், சுக-துக்கங்கள் நிறைந்த மாயையான நாட்களாகவே இறைவன் அமைத்துத் தந்துள்ளார். மகிழ்ச்சியான காலங்களில் மனிதன் தன்னைப் புகழவும், தாழ்ச்சி அடையும் காலகட்டங்களில் தன்னைத் தேடவும் அவர் செய்துள்ளார். இதில் துன்மார்க்கன், நீதிமான் என்ற விதிவிலக்கு கிடையாது.

    எந்த காலகட்டத்திலும் ஒருவன், தன்னால் படைக்கப்பட்டுள்ள மனசாட்சியின் பாதையில் நடக்க வேண்டும் அல்லது தான் வகுத்துள்ள கிறிஸ்தவ பாதையில் நடக்க வேண்டும். இதுதான் மனித குலத்தைப் பற்றிய இறைவனின் சித்தமாக உள்ளது. ஏனென்றால், இந்த பாதைகள்தான் ஒருவனை பாவமற்ற நிலையில் வாழச் செய்கின்றன.

    இவற்றில் ஏதாவது ஒன்றின்படி நடந்து குற்றமற்றவன் என்ற நிலையை எட்ட முயற்சிக்கிறோமா? என்பது ஒவ்வொருவரும் அவரவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

    மனசாட்சியின் பாதையைப் பொறுத்தவரை, அது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதனால் மழுங்கடிக்கப்படும் ஒன்றாகவே காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் அரிதாக ஏற்படும் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரும் பாவங்களில் மனிதன் விழுந்துவிடுகிறான்.

    ஆனால், மனசாட்சியின்படி நடப்பதால் தனக்கும் பிறருக்கும் ஒருவன் நன்மை அளிக்கிறான். உதாரணமாக, ஒரு பொய்யைச் சொல்லும் இக்கட்டான சூழல் நேரிடும்போது, ‘வேண்டாம்’ என்று மனசாட்சி உபதேசிக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் மனது, பொய் சொல்லாமல் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு அறிவை ஏவுகிறது.

    எனவே அந்த அறிவின்படி, தன் மீதுள்ள தவறை ஒப்புக்கொண்டோ அல்லது உண்மையை எடுத்துரைத்தோ அந்த மனசாட்சியுள்ள நபர் செயல்படு கிறார். ஆக, மனசாட்சியின் உபதேசத்தால் ஒரு பொய் கூறப்படாமல் நிறுத்தப் படுவதோடு, பொய்யால் மற்றவர்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு மற்றும் அதனால் வரும் தாக்கம், சாபம் போன்றவற்றுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

    உலகின் அனைத்து தரப்பு மனிதனுக்கும் பாகுபாடில்லாமல் இறைவனால் உட்புகுத்தப்பட்டுள்ள கருவிதான் மனசாட்சி. ஆனாலும், பாவங்களை செய்யாதபடி இறைவனால் தரப்படும் உபதேசங்களை மனிதனுக்கு மனசாட்சி சுட்டிக்காட்டத்தான் செய்யுமே தவிர, பாவங்கள் செய்யப்படுவதை தடுக்கும் சக்தி அதற்குக் கிடையாது.

    எனவேதான், பாவங்களை விரும்புகிறவர்களும், குற்றங்கள்-பொய்கள்-முறைகேடுகள் மூலம் சுயலாபம் ஈட்டும் நோக்கத்தில் உள்ளவர்களும் தங்களின் மனசாட்சியை எளிதாக புறந்தள்ளிவிட்டு அதுபோன்ற செயல்பாட்டில் இறங்கிவிடுகின்றனர்.

    மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியை இறைவன் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதற்காக மனித குலத்தின் அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற வகையில் கதைகள், நெடுங்கதைகள், சொற்பொழிவுகள், நீதி போதனைகள், வசனங்கள், பாடல்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகள், சித்திரங்கள் போன்றவற்றை சிலர் மூலம் உருவாக்கி அவற்றை அனைவரது காதிலும், மனதிலும், பார்வையிலும், உணர்விலும் விழச்செய் கிறார்.

    ஜாதி, மத பாகுபாடில்லாமல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருமே இவற்றைக் கேட்கும்போது, மனசாட்சியால் குத்தப்படுகிறார்கள். என்றாலும், பலர் அதை உணர்ந்தும் தங்களின் விருப்பம், உணர்ச்சி மற்றும் சுபாவங்களுக்கு ஏற்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டே செல்கின்றனர்.

    மனசாட்சிக்கு எதிராக நடந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயத்தினாலும் வரும் பாதிப்புகளை அவரும், குடும்ப உறுப்பினர்களும் பிற்காலத்தில் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பாதிப்புகள் நேர்ந்த பிறகும் அதை பல வழிகளில் சரிக்கட்டத்தான் முயற்சிக்கிறார்களே தவிர, அதன் மூலம் புத்தி அடைந்து மனசாட்சியின் வழிக்கு பலர் வருவதில்லை.

    அதுபோலவே, இறைநீதியின்படி (கிறிஸ்துவின் போதனைகள்படி) நடக்கும் உண்மையான கிறிஸ்தவனுக்கும் ஏற்ற இறக்கங்கள் நேர்கின்றன. உண்மை கிறிஸ்தவனை நீதிமான் என்று வேதம் குறிப்பிடுகிறது. இயேசு சொன்னபடி ரட்சிப்பின் நிலையை அடைந்த நீதிமான், ஏற்கனவே உள்ள மனசாட்சியோடு இறைவனால் அனுப்பப்படும் பரிசுத்த ஆவியின் போதனைக்கு உட்படுத்தபடுகிறான்.

    பரிசுத்த ஆவியின் ஆட்கொள்ளுதலுக்கும், மனசாட்சிக்கும் வித்தியாசங்கள் உண்டு. பாவங்கள் செய்யப்படாத வண்ணம் போதிப்பதோடு, அதை தவிர்க்கக்கூடிய பலத்தையும் அளிக்கும் வல்லமை பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் உண்டு. ஆனால் போதனை அளிப்பதோடு மனசாட்சி நின்றுவிடும்.

    எனவேதான், உலகில் ஒருவன் பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், இயேசு காட்டியுள்ள வழியில் நடந்தால் மட்டுமே முடியும் என்று வேதம் போதிக்கிறது. இது உலகமக்கள் அனைவருக்கும் விடப்பட்டுள்ள அழைப்பு.

    மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், நீதிமான் சில நேர்வுகளில் தன்னையும் அறியாமல் சிறிய குற்றங்களை (திட்டமிட்ட கொலை, விபசாரம் போன்றவை தவிர்த்து) உணர்ச்சி வேகத்திலோ, உந்து தலுக்கு உட்பட்டோ செய்யும்போது, பரிசுத்த ஆவி அவனது மீறுதலை அவனது இதயத்துக்கு தெரியப்படுத்துகிறது.

    பின்னர் அவனை கண்டிக்கிறது. அதை அவன் உணர்ந்து, யாருக்கு எதிராக மீறுதலில் ஈடுபட்டானோ அவனிடம் சென்று, இயேசு வகுத்துள்ள வழியின்படி ஒப்புரவாகவும் பரிசுத்த ஆவி வழிநடத்துகிறது. அதற்கான காலசூழல்களும் இறைவனால் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அந்த வகையில், நீதிமானின் வாழ்க்கையில், பிதா (இறைவன்), குமாரன் (இயேசு), பரிசுத்த ஆவி என்ற முப்பரிமாணம் (திரித்துவம்) செயல்படுகிறது.

    ஆனால் இந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டு மீறுதலில் நீதிமான் தொடர்ந்து ஈடுபட்டால், அவனது ஆத்மா பட்டயத்துக்கு இரையாகும் என்று வேதம் எச்சரிக்கிறது (யோபு36:7-12).

    பொருளாதார ஆசையை நோக்கி வழிகளைத் திருப்பிக்கொண்ட பல இறைப்பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையில், தண்டனைகளையும், குறைச்சல்களையும் இறைவன் அனுமதித்ததையும், அதன் முடிவையும் நம்மில் பலர் கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் இருக்கிறோம்.

    இதை புரிந்துகொண்டு உடனடியாக நீதிமார்க்கத்துக்கு பக்தர்கள் திரும்ப வேண்டும். பொய்சொல்லி வாங்கியதை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, இறைப் பாதைக்கு மீண்டும் வந்தால் அவனது நாட்கள் முழுவதும் நன்மையால் சூழப்படும் என்றும் வேதம் வாழ்த்துகிறது. இதை நாம் அனைவரும் உணர்வோம், திருந்துவோம். 
    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து அருட்பணியாளர் ஷாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    11-ந் தேதி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    12-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆக்னஸ் மறையுரையாற்றுகி றார். அதன் பிறகு நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.

    13-ந் தேதி அமராவதிவிளை பங்குத்தந்தை அந்தோணியப்பன் திருப்பலியும், அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் மரியதாஸ் நிறைவேற்றுகிறார். தாமஸ் அருளானந்தம் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி காலையில் தார்சியுஸ்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதனையடுத்து சேவியர் மறையுரையாற்றுகிறார். இதே போல் மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு ஆன்டனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். சேவியர் சுந்தர் மறையுரையாற்றுகிறார்.

    16-ந் தேதி அருட்பணியாளர் அந்தோணிபிச்சை தலைமையில் திருப்பலியும், சேவியர் சுந்தர் தலைமையில் மறையுரையும் நடக்கிறது. 17-ந் தேதி திருப்பலிக்கு ஐசக்ராஜ் தலைமை தாங்குகிறார். மரியசூசை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி காலையில் பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையிலும், மாலையில் சேவியர் பெனடிக்ட் தலைமையிலும் திருப்பலி நடக்க இருக்கிறது. இதே போல் அமலதாஸ் டென்சிங் மற்றும் ஜெகத் கஸ்பார் ஆகியோர் மறையுரையாற்றுகிறார்கள்.

    விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு ஜோக்கின் தலைமை தாங்குகிறார். திருவிழா திருப்பலியையும், மறையுரையையும் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரிஸ் நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியன நடக்க உள்ளன.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரவிகாட்சன் கென்னடி, பங்கு பேரவையினர், பங்கு மக்கள், அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள். 
    ×