என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    சுரண்டை அருகே தூய யோவான் ஆலய திருவிழாவில் புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    சுரண்டை அருகே வாடியூர் தூய யோவான் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து, நற்கருணை பவனி நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர் பவனி, கும்பிடு சரணம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா நடந்தது.

    மாலை 4 மணிக்கு புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் ஆகியோர் தனித்தனியே எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் கமிட்டி தலைவர் ஜேசுராஜன், தர்மகர்த்தா மிக்கேல் ராஜ், கட்டளைதாரர் அந்தோணி சவரிமுத்து, உபதேசியார் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். 
    ‘நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. யோவேல் 2:26
    அன்பான சகோதரனே, சகோதரியே, இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!

    ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.’ ஏசாயா 48:17

    நம் தேவன் நம்மை நடத்துகிறவர். பலவிதமான குடும்ப சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, தனிமையான சூழ்நிலை... இவைகளின் மத்தியிலே நான் எப்படி வாழப் போகிறேன். என்னை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கவலையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா?

    கவலைப்படாதீர்கள். இம்மட்டும் உங்களை நடத்தின தேவன் இனிமேலும் நடத்த மாட்டாரா? நிச்சயம் அழகாக நடத்துவார். நம் தேவன் எப்படி நடத்துவார் தெரியுமா? நேர் வழியில் நடத்துவார். ‘... என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரித்தேன்.’ ஆதியாகமம் 24:48

    ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடுவதற்காக தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பிய போது ஆண்டவர் அவரை நேர்வழியாய் நடத்தி, ரெபெக்காளை தெரிந்தெடுக்க கிருபை செய்தார். ஆபிரகாமின் மனவிருப்பங்களையும் நிறைவேற்றினார். ஊழியக்காரனுடைய ஜெபத்தையும் கேட்டு ஆச்சரியமாய் காரியங்களை வாய்க்கப் பண்ணினார்.

    பிரியமானவர்களே, குறிப்பாக உங்கள் பிள்ளைகளுடைய திருமணக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா? நிச்சயம் உங்களை ஆண்டவர் நேர்வழியாய் நடத்தி ஏற்ற நேரத்தில் ஏற்றத் துணையைக் கொண்டு வந்து உங்களை ஆசீர்வதிப்பார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    நித்தமும் நடத்துவார்

    ‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.’ ஏசாயா 58:11

    பிரியமானவர்களே, பொருளாதாரப் பிரச்சினையினால் கலங்கி, என் தேவைகளை யார் சந்திப்பார்? எப்படி இந்த தரித்திரம் மாறும்? கடன் பாரம் மறையுமா? என கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

    ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை சந்தித்து, வறட்சி வந்தாலும் உங்களை நடத்தி செழிப்பான நாட்களுக்குள் உங்களைக் கொண்டு வருவார். நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல இருப்பீர்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாய் தேவன் உங்களை மாற்றுவார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    நித்திய வழியில் நடத்துவார்

    ‘வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.’ சங்கீதம் 139:24

    இந்த உலக வாழ்வு ஒருநாள் முடிந்துபோகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதன்பின் நம் செய்கைக்குத் தக்க நாம் பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல வேண்டும். பரிசுத்தமாய், தேவனுக்குப் பிரியமாய் வாழ்ந்தால் தான் நம்மை பரலோகத்திற்கு நேராக நித்திய வழியில் நடத்துவார். ஆகவே, அவரையே நோக்கிப் பாருங்கள். அவரே நம்மை முற்று முடிய நடத்த வல்லவராயிருக்கிறார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    ‘நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. யோவேல் 2:26

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை-54. 
    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. அருட்பணி செல்வராஜ் கொடியேற்றி வைக்கிறார். அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு அன்பு விருந்தும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு மறைமாவட்ட முதன்மை குரு வி.ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி டயனிஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.

    9-ந் தேதி 10-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.45 மணிக்கு ஜெபமாலையும், பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. அருட்பணி ரால்ப் கிராண்ட் மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பி.பிரபு, பங்கு இறைமக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள். 
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தையர்கள் ஆன்றனி அல்காந்தர், ஜோசப் ரொமால்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    2-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்தந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள், கைப்பந்து போட்டி, கபடி போட்டி ஆகியவை நடைபெறுகிறது.

    8-ந் தேதி காலை 7 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஆராதனை ஆகியவை நடக்கிறது.

    9-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஆக்னல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராஜ், பங்கு பேரவையினர், ஊர் பொதுமக்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    திருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயம் வீரமாமுனிவர், புனிதஅருளானந்தர் போன்ற பல முக்கியஸ்தர்கள் பணியாற்றிய 345 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலய திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு மாதா கொடியினை புனிதப்படுத்தி,கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பின்னர் நடைபெற்ற கூட்டுபாடல் திருப்பலியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், மாதாபுரம், காமராஜபுரம், கல்லக்குடி, விரியூர் பகுதி மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை தினமும் மாலை நடைபெறும் திருப்பலியில் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    வருகிற 7-ந் தேதி மாலை ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. இதில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொள்கிறார்். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர சப்பர பவனியும் 8-ந் தேதி காலை திருவிழா திருப்பலியும் மாலை 4 மணிக்குதிருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு சப்பர பவனியும் நடைபெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் அருட்தந்தை தங்கசாமி, உதவி பங்குத்தந்தை நேசமணி, திருச்சிலுவை கன்னியர்கள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகிற 7-ந்தேதி(வெள்ளிக் கிழமை) பெரிய தேர் பவனி நடைபெற உள்ளது.
    நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஆன்மிக சுற்றுலா தலமாகும். கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.

    கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உண்டு. இந்தியாவில் பிரம்மாண்டமான கட்டிட அமைப்புடன் கூடிய 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயமும் ஒன்றாகும். புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றி கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

    வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங் கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கியமாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.



    கொடி ஊர்வலம் தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.40 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்தார்.

    கொடியேற்றத்தின்போது பேராலயத்தின் அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒளிர விடப்பட்டன. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “மரியே வாழ்க” என சரண கோஷம் எழுப்பினர். கொடியேற்றத்தையொட்டி வாணவேடிக்கையும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். இதனால் பேராலய வளாகம், கடற்கரை என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அலை கடலென திரண்டிருந்தனர். கொடியேற்று விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
    தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, பேராலய புதுமை மாதாவின் பிறப்பு திருவிழாவை தொடங்கி வைப்பார்.

    இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் சுற்றுவட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நவ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் சிறிய சப்பரத்தில் மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற உள்ளன. கன்னி மரியாள் பிறந்த நாளான அடுத்த மாதம் 8-ந் தேதி அன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும்.

    புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா பேராலய ஆண்டு திருவிழாவாக ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பேராலய ஆண்டு திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பேராலய முகப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேராலய அதிபர், பங்குதந்தைகள், உதவி பங்குதந்தைகள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.

    விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் தினமும் மாலையில் தேர்பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    வேளாங்கண்ணி பேராலயம் முன்பு உள்ள கடற்கரையில் திரண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் அனைத்து அரசு அலுவலர்களும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதை கண்காணிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

    விழாவை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயம் சார்பாக பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஆங்காங்கே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 
    கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்லம் அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருளானந்தம் அருளுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி மற்றும் பங்கு மக்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    4-ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, 8-ம் திருவிழாவன்று மாலையில் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு தாழையான்கோணம் பங்கு தந்தை சூசை தலைமை தாங்குகிறார். மார்த்தால் பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி நடக்கிறது.

    9-ம் திருவிழாவன்று காலை 6.30 மணி முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். புனித ஜெரோம் கல்லூரி ஆக்னஸ் அமலன் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஜெபமாலைக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். புனித ஞானப்பிரகாசியார் இளம் குருமடம் ஜெரி வின்சென்ட் அருளுரையாற்றுகிறார். இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதற்கு சின்னவிளை பங்குதந்தை ஆன்றனி கிளாரட் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்லம் அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட் சகோதரிகள், பங்குதந்தை அந்தோணி பிச்சை செய்து வருகின்றனர். 
    பழைய ஏற்பாடு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சட்டங்களால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. ஆனால் இறைமகன் இயேசுவின் பலியோ தடுப்பை உடைத்து நம்மை அவரோடு இணைக்கும் பணியைச் செய்தது.
    ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை வளர்த்த பவுலின் இயற்பெயர் சவுல். அவர் பென்யமின் கோத்திரத்திலிருந்து வந்தவர். அதனால் இஸ்ரவேல் குலத்தின் முதல் மன்னனின் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

    பவுல் கீழ்ப்படிதல் உள்ளவராக இருந்தார். இயேசுவால் சிறைபிடிக்கப்பட்டவர் எனும் பெயர் இவருக்கு உண்டு. பிற இனத்தவருக்கு இவர் அப்போஸ்தலராக, கிறிஸ்துவின் தொண்டனாக மாற்றப்பட்டவர். அதுதான் இறைவன் அவரை மனம் மாற்றியதன் அடிப்படைக் காரணம்.

    ரோம பேரரசு முழுவதையும் அவர் சுற்றித்திரிந்து மூன்று முறை பயணம் செய்கிறார். எபேசுவில் முதலில் பணியாற்று கிறார், ஆனால் அங்கே தங்கவில்லை. மூன்றாவது பயணத்தில் எபேசுவில் இரண்டு ஆண்டுகள் தங்கினார். எபேசு முழுவதையும் சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கே நற்செய்தி பரவியிருந்ததை அவர் புரிந்து கொண்டார்.

    டயானா எனும் பெண் கடவுளுக்காய் அர்ப்பணிக்கப்பட்ட நகரில் இயேசுவின் திருச்சபையைக் கட்டினார். அதன் பின் பத்து ஆண்டுகளுக்குப் பின் எபேசுவுக்கு அவர் கடிதம் எழுதுகையில் அவர் ரோம அரசினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். மக்களை திருப்பணிக்கு அர்ப் பணிக்க இந்த எபேசியர் நூலை எழுதுகிறார்.

    இந்த நூலில் ‘கிருபை’ எனும் வார்த்தை பனிரண்டு முறை குறிப்பிடப்படுகிறது. தகுதியற்ற மக்களுக்கு கடவுள் தருகின்ற தயவு தான் கிருபை. கிறிஸ்துவோடு இணைய தகுதியற்ற மக்களை இயேசுவின் தயவின் மூலம் அவரோடு இணைக்கின்ற பணி தான் நற்செய்தி அறிவித்தல்.

    இயேசு கிறிஸ்துவுக்குள் எனும் பதமும் இந்த நூலில் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் கிருபையினால் இயேசு கிறிஸ்துவுக்குள் இணைக்கப்படுவதைத் தான் இந்த கடிதம் பேசுகிறது.

    மொத்தம் ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலின், முதல் மூன்று அதிகாரங்கள், கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள் என்ன என்பது சொல்லப்படுகிறது.

    பிதாவிடமிருந்து, குமாரனிடத்திலிருந்து, தூய ஆவியிடமிருந்து எதையெல்லாம் பெற்றுக் கொள்கிறோம் என்பதை இந்த அதிகாரங்கள் விளக்குகின்றன. இவை தான் கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள்.

    நான்கு முதல் ஆறுவரையுள்ள அதிகாரங்கள், கிறிஸ்துவுக்காய் நாம் செய்ய வேண்டிய பணிகளை விளக்குகிறது. ஐக்கியத்திலே நடக்க வேண்டும், தூய்மையிலே நடக்க வேண்டும், இசைவாய் நடக்க வேண்டும், வெற்றியிலே நடக்க வேண்டும் என்கிறது அது.

    ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறான் எனில் அவனுடைய வாழ்க்கையின் முடிவு வெற்றியாய் இருக்க வேண்டும் என்பதே பவுல் சொல்ல வரும் செய்தி.

    யூதரில் பாவிகளுக்கு எவற்றையெல்லாம் கடவுள் செய்திருக்கிறார், பிற இனத்தவரான பாவிகளுக்கு கடவுள் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை பவுல் தனித் தனியே எழுதுகிறார். யூதர் இறைவனோடு இணைக்கப் படுவது, பிற இனத்தார் யூதரோடு இணைக்கப்பட்டு வேறுபாடின்றி வாழ்வது எனும் இரண்டு நிலைகளை அவர் விளக்குகிறார்.

    மரித்தவன், கீழ்ப்படியாதவன், சீரழிந்தவன், ஆக்கினைக்கு உட்பட்டவன் இது தான் ஒரு பாவியின் நிலை. கடவுள் இத்தகைய பாவிகளிடையே செயல்புரிபவராக இருக்கிறார். அதன் மூலம் நேசிக்கிறார், உயிர்ப்பிக்கிறார், உயர்த்துகிறார், பாதுகாக்கிறார் எனும் நிலைக்கு பாவிகளை மாற்றுகிறார். இது பொதுவான பாவிக்கு தரப்படும் பாக்கியம்.

    இயேசு யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. “யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள்” (ரோமர் 9:24,25) என்கிறது விவிலியம். “தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்” என்கிறது அப்போஸ்தலர் 10:45. கடவுள் அன்பைப் பொழிவதிலும், அருளைப் பொழிவதிலும், ஆவியைப் பொழிவதிலும் வேறுபாடு காட்டுவதில்லை.

    முன்பு பிற ஜாதியினர் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால். கிறிஸ்துவைச் சேராதவர்களாக இருந்தார்கள். டயானா எனும் கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். இறை சமூகத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். இவர்கள் உடன்படிக்கைக்கு அன்னியர்களாய் இருந்தனர். இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள், கடவுளற்றவர்களாக இருந்தார்கள்.

    கடவுள் இஸ்ரயேல் மக்களின் மூலமாக பிற இனத்தாரை தனக்குரியவர்களாக மாற்ற முயல்கிறார். பிற இனத்தவர்களை அவர் புறந்தள்ளவில்லை. இருவரையும் இணைக்கும் கருவியாக இறைமகன் இயேசுவின் சிலுவை மரணம் இருந்தது. ‘மீட்பு யூதர்கள் வழியாக வருகிறது’ என விவிலியம் சொல்வதன் பொருள் இது தான்.

    நம்மை சமீபமாக்கிய ரத்தம் என்ன செய்கிறது?. ஒப்புரவாக்கும் பணியைச் செய்கிறது. யாரெல்லாம் அவர் மீது விசுவாசம் வைக்கிறார்களோ அவர்களை ஒப்புரவாக்குகிறது. பழைய ஏற்பாட்டில் அழிக்க விரும்பிய கடவுள், இப்போது அழைக்க விரும்புகிறார். அதற்காக தனது ரத்தத்தை செலவிட்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்குகிறார்.

    பழைய ஏற்பாடு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சட்டங்களால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. ஆனால் இறைமகன் இயேசுவின் பலியோ தடுப்பை உடைத்து நம்மை அவரோடு இணைக்கும் பணியைச் செய்தது.

    இறைவனோடு இணைவோம், மீட்பை அடைவோம்.

    அருட்பணி வெலிங்டன் ஜேசுதாஸ். 
    எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.
    ஏசு கிறிஸ்துவின் பாடு, மரண காலங்களில் இன்று நாம் அவசரத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று பார்க்கலாம். நாம் வாழும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் அவசர அவசரமாய் ஜனங்கள் ஓடித்திரிவதையும், அதனால் அவர்கள் அவஸ்தைபடுவதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

    பரிசுத்த வேதாகமத்தில் 2 சாமுவேல் 4:4-ல் ஒரு சம்பவத்தை காணலாம். சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது அவன் 5 வயதுள்ளவனாயிருந்தான். அப்போது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள். அவர் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்.

    அவனுக்கு மேவிபோசேத் என்று பேர். வாழ்வில் ஒரு சில மனிதர்களுடைய அவசரம் அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் செயல்படாதவராக, முடவராக மாற்றிவிடும். தாதி என்றால் வளர்ப்பு தாய் என்று அர்த்தம். ஒரு வளர்ப்பு தாயின் அவசரம், அந்த சிறு குழந்தையின் எதிர்காலத்தை பாதித்துவிட்டது. இந்த சிறு குழந்தையை பெற்றவர்கள், சுற்றத்தார் எவ்வளவு வருந்தி இருப்பார்கள். என் தாதி அவசரப்படாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வராமல் இருந்திருக்குமே என்று அந்த சிறுவனே நினைத்து இருக்கலாம்.

    இன்றும் ஏராளமானோர் இப்படித்தான் யோசித்து வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். எதிலுமே அவசரம் வேண்டாம். நீ சந்தோஷமாக இருக்கும் போதும், மிகுந்த வேதனையோடு இருக்கும் போதும், அவசரப்படாதே. சந்தோஷமாக இருக்கும் போது கொடுக்கும் வாக்குறுதியும், வேதனையோடு இருக்கும் போது எடுக்கும் முடிவும் தவறாய் போவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் அவசரம் வேண்டவே வேண்டாம்.

    உங்களுடைய அவசரம் பிறரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடலாம். அவர்களுடைய எதிர்காலம் உங்களால் கண்ணீர் சிந்துகிறதாய், வருந்தக்கூடியதாய் காலமெல்லாம் துக்கப்படுகிறதாய் மாற்றிவிடலாம். இந்த சிறு குழந்தை அவனது மரண நாள் மட்டும் முடவனாய் வாழ்ந்து இறந்தான். ஒரு முடவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததே. நமது தொழிலிலும், வேலையிலும், வியாபாரத்திலும், வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் அவசரம் மட்டும் வேண்டாம் என்று அறிந்துகொள்வோம்.

    எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்படுவோம். பொறுமைக்கு அடையாளம் ஏசு கிறிஸ்துவே. அவர் சிலுவையில் பட்ட பாடுகளில் பொறுமையோடு இருந்தார். எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

    - போதகர் பவுல்ராஜ்.
    மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.
    தவக்காலம் என்பது வசந்தகாலம் போன்றது. பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய வாழ்வின் துளிர்கள் வரவேண்டும் என்பதற்காகவே தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் உருவாகவேண்டும் எனும் சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

    அந்த மாற்றத்தை நமக்குப் பெற்றுத் தருவது இறைமகன் இயேசுவின் சிலுவை. மீட்பு என்பது நிலைவாழ்வு. இறைவன் தரும் நிறைவாழ்வு. அந்த நிலைவாழ்வை அடையவேண்டு மெனில் நாம் கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும். மனம் வருந்துதல், மனம் திரும்புதல், பாவ மன்னிப்பு பெறுதல், மீட்பைப் பெற்றுக் கொள்தல்.

    மனம் வருந்துதல் அதாவது மனஸ்தாபம் முதலில் வரவேண்டும். அது தான் நம்மை மனம் திரும்புதலை நோக்கி வழிநடத்தும். மனம் திரும்புதல் பாவ மன்னிப்பை நோக்கி நம்மை வழி நடத்தும். பாவ மன்னிப்பு நம்மை மீட்பை நோக்கி வழிநடத்தும்.

    மனஸ்தாபமே அடிப்படை. மனஸ்தாபம் படும்போது தான் தந்தையின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணிக்க முடியும். ஆனால் வெறும் மனஸ்தாபம் மட்டுமே நம்மை மீட்புக்குள் கொண்டு செல்லாது.

    இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபின் மனம் வருந்தினான். மனம் வருந்திய அவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான். அவனுடைய மனஸ்தாபம் அவனை மனம் திரும்புதலுக்கு கொண்டு செல்லவில்லை. வெறுமனே மனஸ்தாபம் கொள்வது மீட்புக்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதன் உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

    மனம் திரும்புதல் என்பது, மனதிலிருக்கும் பாவங்களை ஒத்துக் கொள்வதும், மனதிலும் செயலிலும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்' (லூக்கா 13:3) என்கிறார் இறைமகன் இயேசு.

    நினிவே நகர மக்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களை அழிக்க இறைவன் முடிவெடுத்தார். அதை அறிந்த மக்கள் மனஸ்தாபப்பட்டு, மனம் திரும்பினார்கள். அவர்கள் மனம் திரும்பியதைப் பார்த்த இறைவன் மனஸ்தாபப்பட்டார். அது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது.

    கெட்ட குமாரன் உவமையில் இளைய மகன் தந்தையிடமிருந்து சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு வெளியூர் போய் அனைத்தையும் அழிக்கிறான். கடைசியில் வாழ வழியின்றி தவிக்கிறான். தனது தவறை உணர்ந்து மனம் வருந்துகிறான். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிடு கிறான். உடனே மீட்பைப் பெற்றுக்கொள்கிறான்.

    இளைய மகன் பாவியாய் வரும்போது தந்தை மனதுருகுகிறார். தனது ஸ்தானத்தை விட்டு இறங்கி ஓடோடிச் சென்று அவனை அரவணைக்கிறார். மனம் வருந்தி, மனம் திரும்பி, பாவமன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு நாம் வரும்போது இறைவன் மனம் இரங்கி வருகிறார், தனது நிலையை விட்டும் இறங்கி வருகிறார்.

    1. மனம் திரும்புதலின் அழைப்பு இறையரசுக்கானது!

    மனம் திரும்புதலுக்கான அழைப்பு பரலோக ராஜ்ஜியத்தை முன்வைத்து அழைக்கப்படுகிற அழைப்பாக இருக்கிறது. 'மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது' என இயேசு தனது போதனைகளில் அடிக்கடி குறிப்பிட்டார்.

    இயேசுவின் காலத்தில் மக்கள் ஒரு பூலோக அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் இறைமகன் இயேசுவோ, இறை அரசுக்கான வாழ்க்கைக்கு மக்களை தயாரிக்க வந்தார். எனவே தான் இயேசு தனது போதனைகளின் முதல் அறை கூவலாக, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்றார்.

    இயேசு மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் மனம் திரும்புங்கள் எனும் செய்தியையே பறை சாற்றுகின்றனர். பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதத்தோடு நமது கிறிஸ்தவ வாழ்க்கை நின்று விடக்கூடாது. நம் மூலமாக இறையரசின் செய்தியை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    2. மனம் திரும்புதலின் அழைப்பு மகிழ்ச்சிக்கானது

    யார் ஒருவர் இந்த மனம் திரும்புதலின் அழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகிழ்ச்சியை பெற்றுக் கொள் கிறார்கள். கூடவே அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

    கெட்ட குமாரனின் கதையிலும் அந்த மனம் திரும்பிய மகனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தது. அத்துடன் தந்தையையும், கூட இருந்தவர்களையும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    'கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங் களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்' என்கிறது (ஏசாயா 55:7) விவிலியம்.
    3. மனம் திரும்புதலின் அழைப்பு தேசத்தின் நன்மைக்கானது.

    'நீங்கள் மனம் திரும்பினால் தேசத்தின் நன்மையைக் காண்பீர்கள்' என்கிறது ஏசாயா நூல். எங்கெல்லாம் மனமாற்றம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தேசம் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுக் கொள்கிறது.

    மோசே தனியே வாழ்ந்து கொண்டிருந்தபோது கடவுள் அவரை அழைத்தார். எரியும் முட்செடியில் அவரிடம் பேசு கிறார். எரியும் முட்செடி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பானது. அவர்கள் கண்ணீர் கவலை துக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் மடிந்து போகவில்லை. அந்த மரண வேதனையில் இருக்கும் மக்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என இறைவன் விரும்பினார்.

    மோசே எனும் மனிதனுடைய மனமாற்றம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு காரணமாயிற்று. யோனா எனும் ஒரு இறைவாக்கினரின் மனமாற்றத்தால் நினிவே தேசம் நன்மையைப் பெற்றுக் கொண்டது.

    தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.

    இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.
    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,
    வேளச்சேரி, சென்னை.
    ×