என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. மாலையில் செபமாலை, மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடந்து வந்தது. அப்போது மீன்கள் அதிகமாக பிடிபடும் காலம் என்பதால், தேரோடும் வீதியில் மீன்கள் உலர வைக்கப்படும். இதனால் தேர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பங்குமக்களின் வசதிக்காக 10 நாட்கள் நடக்கும் திருவிழாவை டிசம்பர் மாதத்துக்கு மாற்றியமைத்தனர். ஆனால் பழைய திருவிழாவினை நினைவுகூறும் வகையில் பாரம்பரியமுறைப்படி செப்டம்பர் மாதம் 2 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு செபமாலை, மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல், மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி போன்றவை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பங்குத்தந்தை ஜோசப்ரொமால்ட் தலைமையில் நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில்மைக்கேல், செயலாளர் சந்தியா வில்வராயன், உதவி செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. வேதநகர் பங்குதந்தை பெலிக்ஸ் கொடியேற்றி வைக்கிறார். மறை மாவட்ட அன்பிய ஒருங்கிணைய இயக்குனர் வலேரியன் தலைமை தாங்குகிறார். குறும்பனை துணை பங்குதந்தை சகாய கிளாசின் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    9-ம் திருவிழாவன்று காலை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் செபமாலைக்கு கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருள் ஆனந்த் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கேல் பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று காலை கோட்டார் மறைவட்ட முதன்மை குரு மைக்கேல் ஆஞ்சலுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி முடிவில் நற்கருணை ஆசீர், தொடர்ந்து சிறுசேமிப்பு ஆண்டு விழா, பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
    நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் ஓய்வு பெற்ற கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் எம்மானுவேல் ராஜ் தலைமையில் திருப்பலியும், 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி போன்றவையும் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருக்குடும்ப நவநாள், திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, மறையுரையும், இரவு 8.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மார்க்கோனி ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்துள்ளனர். 
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள அதிதூதர் மிக்கேல் ஆலய குடும்ப விழா வருகிற 21-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் அதிதூதர் மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட விழா வருகிற 21-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் செபமாலை, திருப்பலி நடக்கிறது.

    இதற்கு அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். ராஜாவூர் பங்குதந்தை ரால்ப் கிராண்ட் மதன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி தொடங்குகிறது. அருட்பணியாளர் ஆல்வின் ஜூடி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆரோக்கியம் மற்றும் அசிசி ஆஸ்ரம துறவிகள் மறையுரை, சிந்தனையாற்றுகின்றனர்.



    9-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. குலசேகரன்புதூர் பங்குதந்தை ஜாண் அமலநாதன் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குதந்தை பிரான்சீஸ் எம்.போர்ஜியா மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் மாலை ஆராதனைக்கு புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்பியங்கள் மற்றும் குடும்ப நலப்பணிக்குழு இயக்குனர் வலோரியன் தலைமை தாங்குகிறார்.

    மறை மாவட்ட ஆற்றுப்படுத்தும் பணி இயக்குனர் பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு மேய்ப்புபணிப் பேரவை, பங்குதந்தை ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 14-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சிலுவை இல்ல அருட்தந்தையர்கள் கொடியேற்றி வைத்தனர்.

    கடந்த 15-ந் தேதி மாலை நவநாள் திருப்பலியும், அதனை தொடர்ந்து மேலப்புதூர் மரியானூஸ் ஐசக்கின் பல்சமய உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எட்டரையில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    பின்னர் மேலப்புதூர் ஆயர் இல்ல செயலாளர் செபாஸ்டின், திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தை எட்வர்ட் ராஜா செய்திருந்தார். 
    திசையன்விளை அருகே செம்மண் தேரியால் சூழப்பட்ட சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய தேர்ப்பவனி நடைபெற்றது.
    திசையன்விளை அருகே செம்மண் தேரியால் சூழப்பட்ட சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி சேவியர் டெரன்ஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மன்றாட்டு மாலையும், திருப்பலியும் நடந்தது. 9-ம் திருநாளன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், அன்னையின் தேர்ப்பவனியும் நடந்தது. 10-ம் திருநாள் காலையில் திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது.

    நேற்று காலையில் நன்றி திருப்பலி நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மற்றும் பங்கு நிதிக்குழுவினர், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர். 
    கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது.

    யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும். புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி.

    என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார். அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள்.
    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள். நம் ஒவ்வொருவரின் வாழ்வும், அடுத்தவரின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது என்பதனை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் இறைமகன் இயேசுவின் வாழ்வு எடுத்து சொல்கிறது. தான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நொடிப்பொழுதும் தனக்கென சிந்திக்காதவர், மக்கள் சமூகம் என்பதிலே நிறைவு கண்டவர், அதற்கு பரிசுதான் சிலுவை மரணம். அச்சிலுவை மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

    தவக்காலத்தின் தியாகங்களை புரிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள இந்நாளில், நமக்காக தியாகங்கள் பல புரிந்த மேன்மக்களை நினைத்து பார்ப்போம். நாம் உயிர் வாழ உயிர் கொடுத்த தாயையும், நமது வாழ்க்கைத்தரம் உயர கடுமையான தியாகங்களை மேற்கொண்ட தந்தையையும் நினைப்போம். நாம் நல் உடை உடுத்த வேண்டும் என்பதற்காக ஆடைகளை தயாரிக்கிற மனிதர்களையும், உணவு அளிக்கிற விவசாயிகளையும் நினைப்போம்.

    அவர்களின் தியாகத்துக்காக இந்நாளில் நன்றி சொல்வோம். நமது வாழ்வின் மிகச்சிறிய தேவைகளில்கூட அடுத்தவரின் தியாகம் அடங்கி இருக்கிறது. தியாகமே மனித சமுதாயத்தின் அச்சாணி. பல நல்மனிதர்களின் தியாகத்தால்தான் நாம் உயிர்துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கிறோம். நாம் பிறரிடமிருந்து பெற்று கொண்டதை பிறருக்கு அளிப்பதுதானே நீதி. உயிர் கொடுக்கும் தியாகங்களை செய்யவில்லையெனினும் உயிர் காக்கும் தியாகங்களை செய்ய முன் வருவோம்.

    வரலாற்றில் வாழ்ந்து மாமனிதர்களான புத்தர், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றோரெல்லாம் பிற உயிருக்கு தீங்கு நினைக்கக்கூடாது என்பதனையே மாபெரும் வாழ்வு விழுமியாக போற்றினர். தன்னைப்போல் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்க துணிந்த இவர்களின் தியாகம் நம்மை தொடட்டும். இதேபோன்று இறைமகன் இயேசுவின் தியாகத்தையும் ஆழமாக நினைத்து பார்ப்போம். வாரந்தோறும் இயேசுவின் சிலுவைப் பயணத்தில் பங்கெடுத்து ஜெபித்துக் கொண்டிருக்கிற நாம் பிற உயிரினங்களையும் நமக்கு சமமானவர்களாக பாவிப்போம்.

    உடல் ஒறுத்தல்கள் செய்து நம்மை தூய்மைப்படுத்துவது போன்று, உள்ளத்திலும் ஒறுத்தல்களையும் மேற்கொள்வோம். வார்த்தைகளில் கட்டுப்பாடு, வாய்ப்பு இருக்கும் சமயங்களில் கைவிடப்பட்டோரை சந்தித்தல், ஆலயத்தில் ஜெபம் பொருட்களை பகிர்தல், தேவைகளை குறைத்து கொள்ளுதல், உணவு, தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், இயற்கை உயிரினங்களை போற்றுதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளில் அதிக அக்கறையுடன் இறங்குவோம். நமது செயல்பாடுகளும், தியாகங்களும் ஏராளமான மனிதர்களுக்கு இயேசுவை காண்பிக்கட்டும். நாள் தவறாது நல்லதைச் செய்ய முனைப்போடு இறங்குவோம். இயேசுவின் தியாகமான “சிலுவைமரணம்”நமது வாழ்வின் முகவரியாகட்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்.
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.

    கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம்.
    தேர்வு நாட்களில் தேவன் தாமே தம்முடைய ஞானத்தினாலும், ஞாபகசக்தியினாலும் உங்களை நிரப்பி இவ்வருடம் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் கட்ட ளையிடுவார். உங்களுக்காக ஜெபத்தோடு நான் எழுதியுள்ள தேவனுடைய செய்தியை ஜெபத்தோடு வாசியுங்கள். நிச்சயம் தேவனுடைய அற்புதங்களைக் காண்பீர்கள்.

    நம்புங்கள் நீரே என் நம்பிக்கை. சங்கீதம் 39:7

    இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கலாம் அல்லது தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். தயவு செய்து உங்களுடைய சுய பெலத்தையோ, ஞானத்தையோ நம்ப வேண்டாம். உங்களுக்கு வெற்றியை அருளுகிற ஜீவனுள்ள தெய்வம் ஒருவர் இருக்கிறார். அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை நீங்கள் முதலாவது நம்ப வேண்டும்.

    நம்புவது என்றால் என்ன? எனக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார், தன் ஜீவனையே எனக்காக கொடுத்தார். மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் இன்றும் ஜீவிக்கிறார் என்ற மாறாத இந்த சுவிசேஷத்தை நம்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

    மேலும், ‘கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங்கீதம் 40:4) என்று தாவீது ராஜா கூறுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பாக தேர்வு காலங்களில் எந்த மனுஷனுடைய ஞானத்தையும், அறிவையும் நம்பாமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

    விடாமுயற்சி

    ‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’. பிரசங்கி 9:10

    மேற்கண்ட வார்த்தையை தேவன் அருளின ஞானத்தோடு சாலொமோன் ராஜா கூறுகிறார்.

    பிரியமானவர்களே, அற்புதங்களை செய்கிறவர் தேவன்தான் என்றாலும், நாம் செய்ய வேண்டியதை நாம் தான் செய்ய வேண்டும் அல்லவா? இந் நாட்களில் கர்த்தருடைய ஆவியின் ஏவுதலினால் உங்களுக்கு நான் கூறும் மற்றொரு முக்கிய ஆலோசனை உங்கள் பாடங்களை கருத்தோடு முயற்சி எடுத்துப் படியுங்கள். அதிக உணவுக்கும், அதிக நித்திரைக்கும் இடங்கொடாதிருங்கள். இவை இரண்டும் சோம்பலையும், அசதியையும் கொண்டு வரும்.

    உங்களால் முடிந்தவரைக்கும் முயற்சிபண்ணுங்கள். உங்கள் இயலாமையைக் குறித்து மனவேதனைப்படாமல் ஆண்டவரிடம் அர்ப்பணித்து விடுங்கள். தேவன் அதை பொறுப்பெடுப்பார். பிரயாசப்படும் போதுதான் அதின் பலனை அடையமுடியும்.

    ஆயத்தம்

    ‘குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும்’. நீதிமொழிகள் 21:31

    எந்த ஒரு அற்புதங்களையும், வெற்றியையும் நாம் அடைவதற்கு ஆயத்தம் அவசியம் தேவை. அதைப்போல தேர்வு நாட்களில் உங்கள் பாடங்களை கருத்தோடு படிக்க நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க வேண்டிய நேரங்களில் டெலிவிஷன், நண்பர்கள், உறவினர்களை சந்தித்தல் இவையனைத்தையும் முற்றிலுமாய் தவிர்த்து தேர்விற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மேலே குறிப்பிட்ட வசனத்தை கவனித்தீர்களா? குதிரையை யுத்தம் செய்வதற்கு ஆயத்தப்படுத்தினால் தான் வெற்றியை கர்த்தர் அருள முடியும். ஆயத்தமாயிருக்க வேண்டிய காலங்களில் ஏனோதானோ என்று வீணாக காலங்களைக் கழிக்காதீர்கள்.

    நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்

    ‘நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’. எபேசியர் 5:16

    எனக்கன்பான மாணவ, மாணவியரே! உங்கள் வாழ்க்கையில் காலங்களும் நாட்களும் மிகவும் முக்கியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலங்களை கர்த்தர் வைத்திருக்கிறார்.

    நம்முடைய கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கவும், ஞானத்தையும், அறிவையும் அருளவும் வல்லவராயிருக்கிறார் என்றாலும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் உண்டு, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வதுதான் அந்த முக்கியமான காரியம்.

    முதலாவது வேத வசனத்தை வாசித்து ஜெபிப்பதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள். அதன்பிறகு உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் முயற்சி எடுத்துப் படியுங்கள். இந்நாட்களில் உங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியம். டெலிவிஷன் பார்ப்பது, சமூக தளங்களில் நேரத்தை வீணடிப்பது, நண்பர்களை சந்திப்பது... இவையனைத்தையும் முற்றிலும் தவிர்த்து படிக்க வேண்டிய காலங்களில் படித்து, ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் ஓய்வெடுத்து கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருங்கள்.

    கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    “ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.
    ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.

    படிக்கும் போது ஒரு அதிர்ச்சியை உருவாக்கும் வாசகம் இது. ஆனால், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது.

    “நான் விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு” என்றார் இயேசு. யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?” என அவர்கள் முணுமுணுத்தனர்.

    ‘தன்னுடைய உடலை எப்படி இவர் உண்ணத் தரமுடியும்? இதென்ன போதனை...’ என இயேசுவுக்கு எதிராக அவர்கள் சிந்தித்தார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு சட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள்.

    ‘ரத்தம் என்பது உயிர், அதை யாரும் சாப்பிடக் கூடாது’ என்பதை விவிலியம் சொல்கிறது. ‘ரத்தத்தைப் பருகக்கூடாதெனில் எப்படி இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது? இவர் எப்படி இதைச் சொல்லலாம்’ என அவர்கள் சிந்தித்தனர்.

    பாவத்தைக் கழுவத்தான் ரத்தம் பயன்பட்டு வந்தது. ஆனால் அது உணவாக உட்கொள்ளக் கூடியது அல்ல. இறைவனின் சமூகத்தில் சிந்தப்பட வேண்டியது மட்டுமே என்பதே வழக்கம்.

    இப்போது அது, “எனது ரத்தத்தைக் குடியுங்கள்” என மாறுகிறது. அதன் பொருள் என்ன? விலங்கின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து கழுவியது எனும் நிலை, இன்று இயேசுவின் ரத்தம் பாவத்தைக் கழுவியதுடன் மீட்பும் கொடுத்தது என மாறியது.

    “அவர் பலியாகப் படைத்த ரத்தம்... அவரது சொந்த ரத்தமே” (எபி 9:12) என்கிறது விவிலியம். இது நித்திய மீட்பு. இந்த ரத்தத்தின் வழியாக நாம் கடவுளின் மீட்பில் இணைகிறோம்.

    அது நாம் என்றென்றைக்கும் பிழைக்கும்படியான ரத்தமாய் மாறுகிறது. இந்த ரத்தம், தொலைவில் இருந்த நம்மை அருகில் கொண்டு சேர்க்கிறது. அது நம்மை இயேசுவோடு இணைக்கிறது.

    ஆலயத்தில் திருவிருந்தில் பங்கு பெறும் முன் நாம் தாழ்மையின் செபத்தைச் சொல்கிறோம். அதன் பொருள், நாம் இறைவனை விட்டுத் தொலைவில் இருக்கிறோம், இப்போது இறைவனுக்கு சமீபமாய் வருகிறோம் என்பது தான்.

    நாம் திருச்சபையில் சேர்வதன் அடையாளம் திருமுழுக்கு. சுயமாய் இறைவனோடு இணைவதன் அடையாளம் திரு விருந்து.

    இயேசுவின் ரத்தம் நம்மை இறைவனின் அருகில் கொண்டு வருவதுடன், அவரில் நிலைத்திருக்கவும் செய்கிறது.

    நிலைத்திருத்தல் நமக்கு எதையெல்லாம் தருகிறது?

    1. பிதாவோடு உறவு

    “உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” (யோவான் 15:1) என்கிறார் இயேசு.

    உயிர்த்தபின், “என் பிதாவும் உங்கள் பிதாவும்” என விண்ணகத் தந்தையை நமது தந்தையாய் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.

    அதனால் நம்மை அவர் சகோதரர், சகோதரியர் என அழைத்து மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறார். கடவுளுடைய சகோதரர்களாய் உருமாறும் பாக்கியம் வேறெங்கும் கிடைக்காதது.

    2. வார்த்தையோடு உறவு

    “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்” (யோவான் 15:7 ) என நிலைத்திருப்பது என்பது இறைவார்த்தையோடு நிலைத்திருப்பது என விளக்குகிறார். அப்படி இருக்கும் போது தான் நாம் கனி கொடுப்பவர்களாக மாற முடியும்.

    3. சீடரெனும் உறவு

    “நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவான் 15:8) என நம்மை அவரது சீடர்களாக மாற்றுகிறார். நிலைத்திருத்தல் என்பது சீடராதல் எனும் புரிதலை நமக்குத் தருகிறது.

    4. அன்பில் இணையும் உறவு

    “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:9) என நிலைத்திருத்தல் என்பது அன்பில் நிலைத்திருத்தல் என இயேசு புரிய வைக்கிறார். அப்படி நாம் அவரில் பெற்றுக்கொள்ளும் அன்பை பிறருக்குப் பகிர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    5. கட்டளைகளோடு உறவு

    “நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10) என நிலைத்திருத்தல் என்பது கட்டளைகளைக் கடைபிடித்தல் என இயேசு விளக்கம் சொல்கிறார்.

    “ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.

    “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என இயேசு (யோவான் 15:11) சொல்லி இறைவனின் நிலைத்திருத்தலே மகிழ்ச்சியில் நிலைத்திருத்தல் என்பதையும் விளக்குகிறார்.

    அவரில் நிலைத்திருப்போம். 
    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத்தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
    “பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது” என்பதே அனைத்து சமயத்திலும் காணப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஆகவேதான், பாவங்களுக்கு பரிகாரம் செய்து மன்னிப்பு பெற நாம் ஆலயங்களைத் தேடிச் செல்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தமது இறைத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் விதமாக பாவங்களை மன்னித்தார். இஸ்ரயேலில் தோன்றிய எந்தவொரு இறைவாக்கினரும் (தீர்க்கதரிசி) இத்தகைய செயலைச் செய்ததாக விவிலியத்தில் நாம் பார்க்க முடிவதில்லை.

    மக்களை கடவுளுக்கு உரிய வழியில் நடத்திச் செல்வதே இறைவாக்கினர்களின் நோக்கமாக இருந்தது. விபசாரம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகளையும், உண்மை கடவுளுக்கு எதிரான சிலை வழிபாட்டையும் அவர்கள் எதிர்த்தனர். எளியோரை நசுக்கியவர்களும், வறியோரை ஒடுக்கியவர்களும் மனம் திரும்ப வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர். அடக்குமுறையில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், பணக்காரர்களும் கடவுளின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இறைவாக்கினர்களின் குரலுக்கு செவி கொடுத்த இஸ்ரயேல் மக்கள், மனந்திரும்பி சாக்கு உடை உடுத்தி நோன்பு இருந்தனர். தங்களை வருத்திக் கொண்டு கடவுளிடம் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவர்கள் மன்னிப்பு பெற்றனர்.

    இறைவாக்கினர் கூறியதை புறக்கணித்த வேளையில், மன்னரும் மக்களும் வேற்று நாட்டவரின் அடக்குமுறைக்கு ஆளாகி துன்புற்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, மன்னிப்பு என்பது இறைவாக்கினரிடம் இருந்தல்ல, கடவுளிடம் இருந்தே வருகிறது.

    இயேசுவுக்கு முன்பு இஸ்ரயேல் மக்கள் நடுவில் தோன்றிய இறைவாக்கினர்கள் அனைவரும் பல அற்புதங்ளைச் செய்ததாக வாசிக்கிறோம். ஆனால் ஒருவர் கூட மற்றவரின் பாவத்தை மன்னித்ததாக நாம் காணவில்லை. மக்களை மனம்மாறத் தூண்டுவதே எல்லா இறைவாக்கினரின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது.

    இயேசுவைச் சுட்டிக்காட்ட வந்த திருமுழுக்கு யோவான் கூட, “மனந்திரும்பி திரு முழுக்கு பெறுங்கள்” என்றே அழைப்பு விடுத்தார். ஏனெனில், ‘திருமுழுக்கு’ என்பது இறையருளின் வெளி அடையாளமாக உள்ளது.

    இயேசுவின் காலத்தைச் சேர்ந்த யூதர்கள், அவரை இறைவாக்கினர்களில் ஒருவராக பார்த்தனர். ஆனால், தாம் இறைவாக்கினரிலும் மேலான ‘இறை மகன்’ என்பதை இயேசு தமது செயல்கள் வழியாக நிரூபித்தார். இவ்வுலகில் மானிட மகனாக தோன்றிய இயேசு, தம்முடைய இறைத்தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு மக்களின் பாவங்களை மன்னித்தார். ஆகவே, இயேசுவை ஏற்று அவரை நாடிச் செல்வோர் பாவங்களில் இருந்து விடுபடுவது உறுதி.

    ஒருமுறை இயேசு கோவிலில் அமர்ந் திருந்தபோது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டுவந்து நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

    இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்” என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

    இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். இயேசு அவரிடம், “அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை ஐயா” என்றார். இயேசு அவரிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

    ‘பாவி’ என்று மக்கள் சுட்டிக்காட்டிய ஒரு பெண்ணை இயேசு காப்பாற்றுவதை இங்கு காண்கிறோம். இயேசுவின் அதிகாரத்தை ஏற்காத சமயத் தலைவர்கள், அவரை சோதிக்கவே அப்பெண்ணை அவரிடம் இழுத்து வந்தனர். இயேசு மாசற்ற இறைமகனாய் இருந்ததால் அப்பெண்ணைத் தீர்ப்பிடும் உரிமை அவருக்கு இருந்தது. இருப்பினும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர் திருந்தி வாழ அழைப்பு விடுத்ததால் இயேசுவின் இறைமாட்சியைக் கண்டுணர்கிறோம்.

    இயேசு பாவங்களை மன்னித்ததாக கூறியதை, யூத சமயத்தலைவர்கள் தெய்வ நிந்தனையாக கருதினர். இயேசுவோ, மானிட மகனாக வந்தாலும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.

    அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

    பின்னர் அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

    இயேசுவின் அதிகாரம் விண்ணகத்தைச் சார்ந்தது. ஏனெனில், இறைத்தந்தையின் ஒரே மகனாக அவர் என்றென்றும் இருக்கின்றார்.

    “தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறுகிறார்.

    எனவே, நமது பாவங்களை மன்னிக்கவும், அதற்கு தண்டனை வழங்கவும் அதிகாரம் கொண்டவர் மானிட மகனாக தோன்றிய இறை மகன் இயேசுவே. பிறர் குற்றங்களை நாம் மன்னித்தால், நமது குற்றங்களை கடவுள் மன்னிப்பார் என்பதே இயேசுவின் போதனை.

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தமது திருத்தூதர்களுக்கு அளித்தார்: “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பீர்களோ, அவை மன்னிக்கப் படாது” (யோவான் 20:23).

    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத் தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். பாவிகளின் மனமாற்றத்தை விரும்பும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வது உறுதி.

    -டே. ஆக்னல் ஜோஸ், சென்னை. 
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண விளக்குகள் மல்லிகை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குதந்தை யூஜின்டென்சிங் அடிகளார், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர், அன்பியங்கள், பங்குமக்கள் செய்திருந்தனர். 
    ×