என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்று வருகின்றன.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் தேர் பவனி நடந்தது. தேரின் பின்னால் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.

    இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேரில் நல்லமிளகு, உப்பு மற்றும் மலர் மாலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


    சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இறுதி நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறும் புனித சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கேப் ரோட்டில், செம்மாங்குடி ரோடு சந்திப்பில் இருந்து ரெயில்வே ரோடு சந்திப்பு வரை தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதே போல இந்த ஆண்டும் கேப் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் சவேரியார் பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததால் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. 
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை தேர் பவனி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 9-ம் நாள் திருவிழா ஆகும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. 3-ந் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்கேற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.

    நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் பீச்ரோடு, ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிகுளம் சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3-ந் தேதியன்று திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு.
    லூக்கா 13 : 6..9

    “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

    தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.

    திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?

    இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.

    தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.

    அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.

    இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.

    மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.

    இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.

    இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.

    இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?

    கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.

    அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.

    இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.

    கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.

    அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலய 4-ம் நாள் திருவிழாவையொட்டி சமய நல்லிணக்க விழா நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கோட்டார் சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 24-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடந்தது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை நடத்தின.

    விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். பேராலய அருட்பணி பேரவை செயலாளர் ஆன்டனி சவரிமுத்து, குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.

    சவேரியார் பேராலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 5-ம் நாள் திருவிழா நகர வியாபாரிகள் சார்பில் நடக்கிறது. விழாவையொட்டி கணேசபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில்வே ரோடு வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கி மகிழ்கிறார்கள். 
    ‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.
    ‘உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார், அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்’. (செப்பனியா 3:17)

    பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின் மையத்தில் அருமை ஆண்டவரை நீங்கள் வைக்க வேண்டும். அப்போது அவருடைய அளவற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் காண முடியும். நம்மில் அநேகர் குடும்பம், பிள்ளைகள், வேலை, தொழில், படிப்பு, நண்பர்கள், கடைசியில் ஆண்டவர் என தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தை ஆண்டவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள்.

    உங்களை உருவாக்கின சர்வ வல்லவருக்கு ஒரு மூலையை அல்ல, உங்கள் வாழ்வின் மையத்தில் அவரை வைக்க வேண்டும். அப்போது தான் அளவுகடந்த ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து பெறமுடியும்.

    பரிசுத்தம் பண்ணும்போது...

    ‘தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (II கொரிந்தியர் 6:16,17)

    ஆம், நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர். ‘நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என I பேதுரு 1:16 கூறுகிறது. உங்கள் வாழ்வில் பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது உங்கள் மத்தியில் தங்கியிருக்கவும், உங்களுக்குள்ளே உலாவி வரவும் அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.

    அன்றைக்கு யோசுவா ஜனங்களைப் பார்த்து ‘இன்று உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்’ என கூறியதை யோசுவா 3:5 ல் வாசிக்கிறோம்.

    ‘அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள், அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்’. (நியாயாதிபதிகள் 10:16)

    துதித்துப் பாடும்போது...

    ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு, இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (சகரியா 2:10)

    நம்முடைய கர்த்தர் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கிறார். எங்கு துதி ஆராதனை இருக்கிறதோ அங்கு அவர் நடுவில் வருவார். அது மட்டுமல்ல, ‘என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’. (யாத்திராகமம் 20:24)

    நாம் கெம்பீரித்துப் பாடி தேவனைத் துதிக்கும்போது அவர் நம் நடுவில் தங்கியிருப்பது எத்தனை ஆசீர்வாதம்.

    பவுலும் சீலாவும் நடு இரவில் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் பாடி துதித்தபடியால் அங்கு தம்முடைய வல்லமையோடு இறங்கி வந்தார். கட்டுகள் கழன்றது. சிறைச்சாலைக் கதவுகளும் திறந்தது. துதி ஆராதனைக்கு அவ்வளவு வல்லமையுண்டு.

    மேலும், பாடித் துதிக்கும்போது நம் நடுவில் அவர் இறங்கி வருவாரென்றால் நமக்கு விரோதமாய் வருகிற சகல எதிரிகளையும் அசுத்த ஆவிகளையும் அவர் விரட்டி நமக்காக யுத்தம் செய்யவும் சத்துருவை மடங்கடிக்கவும் வல்லவராயிருக்கிறார். ஆகவே அவரை ஒவ்வொரு நாளும் துதிக்க மறவாதீர்கள். அப்போது அவர் உங்கள் நடுவில் வருவார். அதிசயங்களைக் காண்பீர்கள்.

    ‘பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்’. (II நாளாகமம் 20:22)

    ஜெபம் பண்ணும்போது...

    ‘இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்’. (மத்தேயு 18:20)

    நம் அருமை ஆண்டவரை நம்முடைய வாழ்வின் மையத்திற்குக் கொண்டுவர மற்றொரு முக்கியமான வழி, கூடி ஜெபிப்பது ஆகும். அதாவது குடும்ப ஜெபத்தைக் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர் கூடி வந்தால் நிச்சயம் அவர்கள் நடுவில் அருமை ஆண்டவர் வருவார். ஏறெடுக்கும் ஜெபத்தை நிச்சயம் கேட்பார்.

    குடும்ப ஜெபம் ஒரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும். குடும்ப ஜெபம் இல்லாத வீடு, நான்கு சுவரும் இல்லாத வீடு என பேட்ரிக் ஜோஷ்வா என்ற தேவ மனிதன் கூறுகிறார்.

    குடும்ப ஜெபம் செய்ய முடியாதபடி சத்துரு பல தந்திரங்களைக் கொண்டு வருவான். ஆனால் அதை மேற்கொண்டு அனுதினமும் கூடி ஜெபிக்க அர்ப்பணிக்க வேண்டும்.

    அன்றைக்கு சாத்ராக், மேஜிக், ஆபேத்நேகோ என்ற தேவமனிதர்கள் அக்கினிச் சூளையில் போடப்பட்டாலும் அவர்கள் நடுவிலே நம் ஆண்டவர் உலாவினார். காரணம் அவர்களுடைய ஒருமனப்பாடு.

    உங்கள் குடும்பத்தில் ஜெப வாழ்க்கையை கட்டி எழுப்புவீர்களென்றால் ஆண்டவர் உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார். நிச்சயம் நீங்கள் வேண்டிக் கொள்ளுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார். எனவே உங்கள் தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், தொழிலில், படிப்பு, வேலை எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மைய இடத்தை ஒதுக்கிவிடுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவீர்கள்.

    ‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
    சோதனைகள் நம் எதிரில் நிற்கும்போது, நாம் நம்முடைய நினைவுகளைத் தூக்கத்தாலோ, வேறுவகை தவறான சிந்தனைகளாலோ, மது, போதை போன்றவைகளின் உதவியை நாடியோ அவைகளினின்று தப்பியோடப் பார்க்கிறோம்.
    பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன், எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாக செயல்படக்கூடியவர். எந்த வேலையையும் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் உடையவர். அவர் ஒருபோதும் காலம் தவறியதில்லை. ஆனால் அவருடைய தளபதிகளோ, குறிப்பிட்ட நேரத்தில் வருவதை அசட்டையாய் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் நெப்போலியன் தன் படை வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் பெரிய விருந்து ஏற்பாடு செய்து அன்போடு அழைப்பு விடுத்தார். விருந்து நேரம் வந்தது, தளபதிகள் வழக்கம்போலவே சற்று தாமதமாகவே வந்தார்கள். ஆனால் நெப்போலியனோ தனியாக உட்கார்ந்து, விருந்தை சாப்பிட்டு முடித்துவிட்டார்.

    அவர் கை கழுவும்போது, ஒவ்வொரு தளபதியாக வந்தார்கள். நெப்போலியன் அவர்களைப் பார்த்து, ‘என் அருமை தளபதிகளே, உணவு நேரம் முடிந்துவிட்டது, இப்போது நம் கடமைக்காக புறப்படும் நேரம் தொடங்கிவிட்டது, இனி ஒரு நிமிடம் கூட தாமதம் செய்ய முடியாது, வாருங்கள் போவோம்’ என்று அழைத்துச் சென்றார்.

    மலைத்து நின்ற தளபதிகள் தலைவனின் வார்த்தையை தட்டவும் முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் வேறுவழியின்றி பசியோடு யுத்தத்திற்கு சென்றார்கள்.

    அன்றுமுதல் அவர்கள் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாகவே செயல்பட வேண்டும் என்ற பாடத்தை நெப்போலியனிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.

    தன் வாழ்வின் மிகுந்த சோதனையான சூழ்நிலையில் இயேசு தன் சீடர்களிடம் ‘சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்கிறார்.

    கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

    ஆண்டவர் இயேசு தன் சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘நான் அங்கே போய், இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்’ என்று அவர்களிடம் கூறிவிட்டு, தம் நெருங்கிய சீடர்களான பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேரை தம்முடன் கூட்டிச்சென்றார்.

    அப்போது அவர் துயரமும், மிகுந்த மனக்கலக்கமும் அடைந்தவராய் அவர்களிடம், ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு விழித்திருங்கள்’ என்று கூறினார்.

    பிறகு அவர்களையும் விட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்று முகங்குப்புற விழுந்து, ‘என் தந்தையே, முடிந்தால்; இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்’ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

    உறங்கிக் கொண்டிருந்த சீடர்கள்

    மன்றாட்டுக்கு பின் இயேசு தம் சீடர்களிடம் வந்தார். அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவினிடம், ‘ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்குட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்றார்.

    மீண்டும் சென்று, ‘என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்’ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

    அவர் திரும்பவும் வந்தபோது, சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மறுபடியும் சென்று, இதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

    பிறகு அவர் சீடர்களிடம் வந்து, ‘இன்னும் ஓய்வெடுக்கிறீர்களா?, பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார், எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்’ என்று கூறினார்.

    விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்

    ஆண்டவர் இயேசு, ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’ என்று சொல்லி மன்றாடத் தொடங்குகிறார். தனது வாழ்வின் துயர் மிகுந்த தருணத்தில், அவரது வியர்வை பெரும் ரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுமளவிற்கு உருக்கமாய் இறைவனிடம் வேண்டினார். தம் சீடர்களும் சோதனையினிமித்தம் மிகுந்த துயர் கொள்ளாதபடிக்கு, ‘விழித்திருந்து இறைவனை வேண்டுங்கள்’ என்கிறார்.

    சோதனைகளும், வேதனைகளும், அதன் நிமித்தம் உருவாகும் ஆழ்துயரங்களும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவைகளே. இவைகள் மனித வாழ்வில் குறுக்கிட்டு, அதன் ஓட்டத்தையும், நோக்கங்களையும் முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஓர் எதிரி.

    ஆண்டவர் இயேசு முற்றிலும் பாவமற்றவர், தந்தையாம் கடவுளுடன் நெருங்கிய உறவில் இருந்தவர். எனினும், அவருக்கும் சோதனைகள் வந்தது. இதனால், ஆண்டவரின் மனித வாழ்வு முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. இறைமைந்தன் மனிதனானார் என்பதால், அவருடைய மனித வாழ்வின் எந்தத் துயரங்களும் எளிதாக்கப்படவில்லை.

    ஆண்டவரின் வேதனையான சூழ்நிலையில் அவருடன் விழித்திருக்கவும் இயலாத நித்திரை மயக்கம் சீடர்களை ஆட்கொண்டது. சோதனைகள் நம் எதிரில் நிற்கும்போது, நாம் நம்முடைய நினைவுகளைத் தூக்கத்தாலோ, வேறுவகை தவறான சிந்தனைகளாலோ, மது, போதை போன்றவைகளின் உதவியை நாடியோ அவைகளினின்று தப்பியோடப் பார்க்கிறோம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் சீடர்களின் நித்திரை. நாமும் அப்படியிராமல், ‘விழித்திருந்து இறைவனிடம் வேண்டுவோம். விவேகத்துடன் ஆழ்துயர்களை வெல்வோம்’.

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் சார்பில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    2-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்கத் தூதுவர் குழுவினர் நிறைவேற்றும் அற்புத குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதேபோல் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி நடக்கிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் நிறைவேற்றி, மறையுரையாற்றுகிறார்.

    வருகிற 1-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    2-ந் தேதி 9-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    தேர்பவனியின்போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார், தேவமாதா தேர்களுக்கு பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

    விழா ஏற்பாடுகளை கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்கு தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு தந்தை ஆன்றனி பிரபு மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    படிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.
    ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வதுதான் தேவனுடைய சித்தம்.

    ‘தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும், அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்’ (பிரச.5:19) என வேதம் தெளிவாக கூறுகிறது.

    அநேகர் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மிகுந்த மனவேதனையுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். ஒரு பக்கம் பணவீக்கமும் மறுபக்கம் விலைவாசி உயர்வும் அநேக தேவ பிள்ளைகளின் விசுவாசத்தை தடுமாறச் செய்து கொண்டிருக்கிறது. இதனால் கடன்பாரம் மற்றும் சமாதான குறைவுகள் ஏற்பட்டு சஞ்சலத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    ‘நீ உன் கையின் பிரயாசத்தை சாப்பிடுவாய்’ என்ற உன்னத தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிறைவேற வேண்டும் என்பது தான் என்னுடைய ஜெபம். அதே வேளையில் இவ்வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேற நீங்கள் பாத்திரவான்களாய் இருப்பது மிக மிக முக்கியம்.

    விசுவாசத்தோடு வேலை செய்யுங்கள்

    ‘ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்’. (2.தெச.3:8)

    பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் காரணமில்லாமலும், திடீரென்றும் ஒருவரை ஆசீர்வதிப்பது இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நம்முடைய வாழ்வு அமையும் போது நிச்சயம் தேவனுடைய ஆசீர்வாதமும், ஐசுவரியமும் நம்முடைய வாழ்க்கையில் தங்கும். தேவனுடைய ஐசுவரியத்தை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலை செய்யாத சோம்பேறித்தனமாகும். நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என வேதம் தெளிவாக கூறுகிறது.

    பவுல் வல்லமையுள்ள அப்போஸ்தலனாக இருந்தும் ‘இரவும் பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்’ என கூறுகிறார்.

    குடும்பங்களில் வறுமைக்கு மற்றொரு காரணம், கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, மனநிறைவோடு செய்யாமல் ஏனோதானோ என அசட்டையாக செய்தல். இன்னும் சிலரை நான் கண்டிருக்கிறேன், தான் விரும்பின வேலை கிடைக்கும் வரை மற்ற எந்த வேலையும் செய்ய மனதில்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.

    அன்பானவர்களே, விதைக்காமல் எப்படி அறுக்க முடியும்? அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும்? சிந்தித்துப்பாருங்கள், நீங்கள் எப்படி?

    பவுல் சொல்லுகிறார், ‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்’. (2.தீமோ.2:6.)

    ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்கு கொடுத்த பெலன், ஞானம், அறிவின்படியே கட்டாயம் வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். அப்போது தான் தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்.

    தேவ சித்தப்படி வேலை செய்யுங்கள்

    “அதற்குச் சீமோன்: ‘ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்றான்”. (லூக்.5:5)

    மேலே குறிப்பிட்டுள்ள வசனம் பேதுரு தம் வாயினால் கூறின வார்த்தை ஆகும். இது தோல்விக்குரிய வார்த்தையே தவிர ஜெயத்திற்குரிய வார்த்தை இல்லை.

    நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வேலை செய்து பிரயாசப்படவேண்டும். அதே வேளையில் நாம் செய்கிற வேலையோ, தொழிலோ தேவ சித்தப்படி செய்கின்றோமா? என்பது மிக மிக முக்கியம்.

    பேதுரு இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாமல் வெறுமையான வலை, படகோடு கரை திரும்பினார்.

    எத்தனை பரிதாபம், நம்மில் அநேகர் வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள், அதனிமித்தம் தங்கள் பிரயாசத்தின் பலனையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அவர்கள் காண முடியவில்லை.

    இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழில் செய்கிறவர்களும் கூட நஷ்டமடைந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டு, தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனை குறைகூறவும் தயங்குவதில்லை.

    நாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திலும், வேலையிலும், தொழிலிலும் தேவ சித்தத்தை கட்டாயம் அறிய வேண்டும்.

    ‘ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’. லூக்.5:4

    ஆண்டவர் கொடுத்த வார்த்தையின்படியே பேதுரு ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்ட போது அவன் கையின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதித்தார் என வேதம் கூறுகிறது. ‘அதன்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’. லூக்.5:6

    இம்மட்டும் தேவ சித்தத்தை அறியாமலேயே நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை மறந்து விடக்கூடாது. நன்றாக ஜெபம் பண்ணி தேவனுடைய சித்தத்தை தெளிவாக அறிந்து, பெரிய வேலையோ அல்லது சிறிய வேலையோ, பெரிய தொழிலோ அல்லது சாதாரண தொழிலோ எதுவானாலும் சரி சந்தோஷமாக செய்யுங்கள்.

    படிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.

    பழைய தோல்வியை மறந்துவிட்டு விசுவாசத்தோடு தேவ சித்தத்தை அறிந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு தக்க பலனை ஆண்டவர் தாமே கட்டளையிடுவார். அதுமாத்திரமல்ல, ‘உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்’ என்ற வாக்குத்தத்தம் உங்களில் நிச்சயம் நிறைவேறும்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’,
    சென்னை-54.
    சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார்.
    அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

    “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,

    ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

    பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

    பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

    விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்

    இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

    சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே.

    இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.
    இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது.
    1. அன்பு

    ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள், சிந்தனைகள் எல்லாமே அன்பு எனும் அச்சாணியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய அன்பு நமக்குள் பிறக்க வேண்டும்.

    2. பணிவு

    கால்நடைகளுக்கான ஒரு மரத் தீவனத் தொட்டியில் பிறந்து, மரங்களோடு வாழும் ஒரு தச்சனாக வளர்ந்து, சிலுவை மரத்தின் உச்சியில் உயிரை விட்டு, பணிவை தனது வாழ்வால் விளக்கியவர் இயேசு. பசியோடும், சோர்வோடும் வாழ்ந்தாலும் பணிவோடும், துணிவோடும் வாழத் தவறவில்லை. கொலைக்களத்தில் துணிச்சலாய் பேசிய இயேசு, சீடர்களின் கால்களைக் கழுவும் அன்பினைக் கொண்டிருந்தார். தனது கால்களைப் பிறர் கழுவுவதில் அல்ல, பிறருடைய கால்களை தான் கழுவுவது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்த்தினார். அத்தகைய பணிவு நமக்குள் பிறக்க வேண்டும்.

    3. உண்மைத்தன்மை

    பாவிகளை அரவணைத்த இயேசு, புனிதர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டவர்களைப் புறக் கணித்தார். விபசாரியைக் கூட மன்னித்து அன்பால் அறிவுரை சொன்னவர், தலைவர்களை நோக்கி ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே…’ என கர்ஜித்தார்.

    உண்மைத் தன்மையை இயேசு நேசித்தார். ‘நான் பாவி’ என வருபவர்களை எப்போதும் அவர் புறம்பே தள்ளவில்லை. ‘நான் சுத்தமானவன்’ எனும் கர்வத்தோடு வருபவர்களை நிராகரிக்கத் தயங்கவும் இல்லை. இயலாமைகளை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் உண்மைத்தன்மை நமக்குள் பிறக்க வேண்டும்.

    4. உறுதி

    லட்சியத்தில் உறுதியாய் இருப்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கை போதிக்கிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுவதே அவரது மனித வடிவின் நோக்கம். அந்த நிலையிலிருந்து இம்மியளவும் அவர் விலகவில்லை. மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார்.

    தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.

    5. ஜெபம்

    இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது.

    கர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம்! சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.
    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது.
    இயேசு வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை உவமைகளாகப் போதித்தார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும்.

    “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது”. (மார்க் 4:26-29)

    விதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது.

    விதை இருப்பது அவசியம்

    விதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு எளிதாகக் கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

    விதைத்தல் அவசியம்

    விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

    நிலங்கள் அவசியம்

    விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

    கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை.

    காலம் அவசியம்

    விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

    கட்டாயப்படுத்த முடியாது

    சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது.

    விதை முளைப்பது தெரிவதில்லை

    எந்தக்கணத்தின் விதையின் தோடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது?, எந்தக்கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது?.... யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார்.

    எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.

    மூன்று நிலைகள்

    முளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.

    இரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.

    மூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமை யடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை.

    பயனளிப்பது நிலம்

    விதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும்? இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் தொடங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.

    அறுவடை பயன்

    மனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.

    தூய ஆவியெனும் விதை

    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    -சேவியர், சென்னை.
    ×