search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்- ரோகித் சர்மா
    X

    யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்- ரோகித் சர்மா

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    Next Story
    ×