search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பணத்தை சாக்கடையில் வீசுகிறது ஆர்சிபி.. கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தயாள்- தந்தை நெகிழ்ச்சி
    X

    பணத்தை சாக்கடையில் வீசுகிறது ஆர்சிபி.. கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தயாள்- தந்தை நெகிழ்ச்சி

    • ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
    • முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

    ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற வேண்டிய நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த சிஎஸ்கே வெற்றி பெற 219 ரன்கள் இலக்காக இருந்தாலும், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் விளையாடினர்.

    கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை டோனி சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த பந்து ஸ்டேடியத்தை தாண்டி வெளியே சென்றதால், புதிய பந்து வழங்கப்பட்டது. அது பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தால், அடுத்த பாலில் டோனி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ரவிந்திர ஜடேஜாவால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை.

    அத்துடன் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆர்சிபிக்காக கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். முதல் பந்தை டோனி சிக்சர் அடித்த பின்னர், அவர் பொறுமையாக மீதமுள்ள 5 பந்துகளையும் வீசிய விதம் பாராட்டை பெற்றது.

    இதே யஷ் தயாள் தான், கடந்த முறை குஜராத் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ரூ. 5 கோடி கொடுத்து ஆர்சிபி 2024 சீசனுக்காக வாங்கியது.

    இந்நிலையில் தனது மகனின் மோசமான ஆட்டத்திற்காக முன்பு கேலி செய்தவர்கள், சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் பாராட்டு தெரிவிப்பதாக, ஆர்சிபி பவுலர் யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    யஷ் தயாள் குறித்து அவரது தந்தை கூறியதாவது-

    ஆர்சிபி யஷ் தயாளை ரூ.5 கோடிக்கு வாங்கியபோது, ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு நிறைய நல்ல செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

    முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். கடவுளே, இன்று என் குழந்தைக்கு ஆதரவளிக்கவும், இது மீண்டும் நடக்கக்கூடாது என்று பிரார்த்தித்தேன்.

    முதல் பந்திற்குப் பிறகு எனது மகன் பொறுமையைக் கடைப்பிடித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகிறார்கள்.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×