search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    10 ஓவர்களில் 113 ரன்கள்.. அதிக ரன்கள் விட்டு கொடுத்த பவுலர் ஆனார் ஆடம் சாம்பா
    X

    10 ஓவர்களில் 113 ரன்கள்.. அதிக ரன்கள் விட்டு கொடுத்த பவுலர் ஆனார் ஆடம் சாம்பா

    • தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை.
    • ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். பத்து ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.

    ஆடம் சாம்பா பந்துவீச்சில் மட்டும் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆடம் சாம்பா படைத்து இருக்கிறார். 50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 45 மற்றும் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரசி வேன் டெர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்களை குவித்து அசத்தினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 13 பவுண்டரிகளும், 13 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஆடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 416 ரன்களை குவித்து உள்ளது.

    Next Story
    ×