என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்காதே படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் ஹீரோயினாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

    சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார் என்றார்.
    ஆர்.அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நோ என்ட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘நோ என்ட்ரி’. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சினிமா கற்ற ஆர்.அழகு கார்த்திக் இயக்கியிருக்கிறார். ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் முதன் முதலாக படமாக்கப்பட்ட தமிழ்படம் இதுதானாம். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஆபத்தான மலைப்பிரதேச காட்சிகளையும், அதிக மழை பெய்யும் காட்சிகளையும் சிரபுஞ்சியில், 45 நாட்கள் முகாமிட்டு படமாக்கி உள்ளனர்.

    ஆண்ட்ரியா

    மனித நடமாட்டம் இல்லாத மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில், ஒரு இளம் தம்பதிகள் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 வெறிநாய்களிடம் அந்த தம்பதிகள் சிக்கிக் கொள்கிறார்கள். நர வேட்டையாடும் நாய்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் இழந்தார்களா? என்பதை திகிலுடன் சொல்லும் கதைதான், ‘நோ என்ட்ரி’. படத்துக்காக 15 ஜெர்மன் செப்பர்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளனர்.
    ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
    காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.எம்.ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்குனராக ஜி.துரைராஜ் பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களை ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக் ஆகியோர் எழுதி உள்ளனர். நடன இயக்குனராக ராஜு சுந்தரம், ஷோபி பணியாற்றி உள்ளனர்.
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டம்.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். வருகிற அக்டோபர் 30ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாக உள்ளது.
    நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்” படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

    இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

    கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் முன்னோட்டம்.
    கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

    ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த படத்தில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. தாமரை, விவேக், பா.விஜய் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்றி உள்ளார்.
    பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் முன்னோட்டம்.
    ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம்‘பன்றிக்கு நன்றி சொல்லி’. முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலா அரன். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். 

    இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

    பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழு

    இத்திரைப்படத்தின் கதைக்களம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
    பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் பிரியாமணி நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்தின் முன்னோட்டம்.
    பிரியாமணி நடிக்கும் திகில் படத்துக்கு ‘கொட்டேஷன் கேங்க்’ என்று பெயர் வைத்துள்ளனர். தாதாக்கள், ரவுடிகளை பற்றிய படமாக தயாராகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கின்றனர். இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்குகிறார். இதில் தன்யா, ரபியா, விஷ்ணு வாரியர், அக்‌ஷயா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

    சில இந்தி நடிகர்களும் நடிக்கிறார்கள். ஒரு தொழில்முறை கொலைகாரனை பற்றிய திகில் படமாக தயாராகிறது என்று இயக்குனர் விவேக் தெரிவித்தார். காயத்ரி சுரேஷ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.
    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படத்தின் முன்னோட்டம்.
    ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள். 

    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    ஆயிரம் பொற்காசுகள் படக்குழு

    படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு உருவாகியுள்ளது என்றார்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்கிறார்.

    படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: "இது சந்தானத்தின் 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். சரித்திர காலத்து ஆடைகள், பல்லக்கு, வாள், கத்தி போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. படத்தில் 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும். 

    சந்தானம்

    இதற்காக 500 நடிகர், நடிகைகள் சரித்திர கால உடை அணிந்தே நடித்துள்ளனர். பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.
    அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் பல்லு படாம பாத்துக்க படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பல்லு படாம பாத்துக்க படக்குழு

    ஜாம்பி கதைக்களத்தை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது.
    ×