என் மலர்
முன்னோட்டம்
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி வரும் வனம் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.
சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெபி அமலன், ஜெபி அலெக்ஸ் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் கூறியதாவது: “இது, மறுபிறவி கதையம்சம் கொண்ட திகில் படம். கதாநாயகன், கலைக்கல்லூரி மாணவர். கதாநாயகி, காட்டுவாசி. இன்னொரு நாயகி, டாகுமென்டரி படம் எடுப்பவர். ரான் ஏதன் யோஹான் இசையமைக்கிறார். இவர், ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் தேனி மாவட்டம் குரங்கனி பகுதியில் படமாக்கப்பட்டன”.
தேவகுமார் இயக்கத்தில் மேக்னா எலன், நரேன், மனோ பாலா நடிப்பில் உருவாகி வரும் ‘நான் வேற மாதிரி’ படத்தின் முன்னோட்டம்.
மதுர்யா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் வேற மாதிரி'. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை பற்றி இயக்குனர் தேவகுமார் கூறுகையில், “நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் 'சிக்னல்' என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும்.

நாயகி மேக்னா எலன் முதன்முறையாக கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா, முத்துக்காளை மற்றும் புதுமுகங்கள் மனோ கிருஷ்ணா, ரமேஷ் குமார், கார்த்திக் ராஜா, தாணு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
நாயகியை மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள் ஏன் எதற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். படத்திற்கு பரிமள வாசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கார்த்திகேயன், பாடல்கள் விவேகா மற்றும் கார்கோ, நடனம் ஜாய்மதி.
படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராமர் நடிப்பில் உருவாகி வரும் மிடில் கிளாஸ் படத்தின் முன்னோட்டம்.
'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ், அடுத்ததாக ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.
அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதையை எழுதி, இயக்குகிறார் கிஷோர் எம்.ராமலிங்கம்.

'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றார்கள். எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் பாப்பிலோன் படத்தின் முன்னோட்டம்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.
அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் இப்படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக சுப்பு அழகப்பன் பணியாற்றி உள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோபி கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார்.

இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது: ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.
இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை” என்றார்.
கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு” படத்தின் முன்னோட்டம்.
கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் நிறைந்த சமூக படமாக உருவாகிறது. கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசை அமைக்கிறார். பிரமாண்டமான அரங்குகளை கலை இயக்குனர் M.சிவா யாதவ் அமைக்க, எடிட்டிங் ராஜா முஹமது, அதிரடியான சண்டைக்காட்சிகளை திலீப் சுப்ராயன் அமைக்க உள்ளார். A.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை ஏற்கிறார்.
லைன் புரொடியூசராக செல்வக்குமார்.S. மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டு உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் A.மணிவேல் இயக்குகிறார். இவர் காக்கி என்னும் குறும்படத்தை இயக்கியவர். இப்படம் கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்.
மதிவாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் ஒற்று படத்தின் முன்னோட்டம்.
சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஒற்று’. ‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார், என்பதை குடும்பபாங்காகவும், திரில்லர் ஜானரிலும் சொல்லுவதே ஒற்று.

மனதை வருடும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாடல்கள் மற்றும் காதல், காதல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஊட்டு, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது நிறைவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீமணி இயக்கத்தில் தமன்குமார், மியா ஸ்ரீ, மானஸ்வி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் பேய் கதைகளுக்கு இன்னும் வரவேற்பு இருந்துகொண்டுதான் உள்ளது. அதிலும் நகைச்சுவையும் கலந்த பேய் படங்கள் ரசிகர்களை வெகுவாக சமீப காலங்களில் கவர்ந்து வருகிறது. இதில் எஸ்.எம்.எஸ் பிக்சர்ஸ் மற்றும் வனஜாக்ஷி கிரியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கண்மணி பாப்பா’ என்ற திகில் படத்தை தயாரித்துள்ளன.

இந்த திரைப்படத்தில் தமன்குமார் கதாநாயகனாகவும், மியா ஸ்ரீ கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கதையின் முக்கிய பாத்திரமாக இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமணி இயக்கி உள்ளார். ஸ்ரீசாய்தேவ் இசையமைத்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் சிங்கம் புலி நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் வழங்கும் புதிய படமான வென்றிடபழகு டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாஸ் வழங்கும் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் தயாரிப்பில் தொடங்க இருக்கும், புதிய தமிழ் திரைபடத்தின் தலைப்பை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்களால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தனபால் கணேஷ் இயக்க உள்ளார்.
வென்றிடபழகு என்ற இத்திரைப்படத்தின் தலைப்பு ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தலைப்பை போலவே படமும் ஒரு நல்ல சமூக கருத்து கொண்ட படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது.
தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண் என்ற படத்தின் முன்னோட்டம்.
888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண்' திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது.
2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையான சாந்தி செளந்தரராஜன் வாழ்வை எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. குறிப்பிடத்தக்க வகையில், சாந்தி செளந்தரராஜனும் மதுரை மாவட்டத்தின் ADSP-ஆன S.வனிதா ஆகியோர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.
எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் முன்னோட்டம்.
ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் படம் அலேகா. ஆரி அர்ஜுனா நாயகனாக அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகா, யுகபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதி உள்ளனர். ஆர்.விஜயகுமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.






