என் மலர்
முன்னோட்டம்
டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் திகில் படங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் மாயத்திரை என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இதில் அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார்.
குஷ்பு, சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது, “மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள்.

தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேயாக வருகிறார். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய் படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது” என்றார்.
எம்.முருகன் இயக்கத்தில் எஸ்.பிரதீப் வர்மா, ஐஸ்வர்யா சிந்தோஷி, ரவிஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் ரவிஷங்கர் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை அடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா, இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஷி நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம்தேவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மஞ்சு நடனம் பயிற்சியையும்,
சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி ஆகியோர் அசோசியேட் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மர்மம் மற்றும் திகிலான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் உருவாகும் ‘ஓட்டம்’ படத்தின் படப்பிடிப்பு படத்தை
போலவே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘கர்ணன்’ படத்தின் முன்னோட்டம்.
தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். திலீப் சுப்புராயன் ஸ்டாண்ட் பணிகளை கவனித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் முன்னோட்டம்.
உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒருநாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.
தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.
துவாரக் ராஜா இயக்கத்தில் கார்த்திக், லிங்கா, மோனிஷா, கல்பிக்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரோல்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.‘பரோல்’ படத்தில் கார்த்திக் மற்றும் லிங்கா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை முனீஸ் கவனிக்கிறார்.
சிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.
சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டேக் டைவர்ஷன்’. ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகன் சிவகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். 'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .
மேலும் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். இவர் 'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பை விது ஜீவா கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ' டேக் டைவர்ஷன் ' என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றார்.
சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கும் அனுக்கிரகன் படத்தின் முன்னோட்டம்.
அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் 'அனுக்கிரகன்'.
இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார். முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளார். 'ரெக்க' படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா பாடலில் வருபவரும் 'மாரி 'படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார்.
இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கிறார்கள். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்ய, ரெஹான் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் தாஸ் இயக்கத்தில் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வரிசி’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் தாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘வரிசி’. இதில் கார்த்திக் தாஸ் உடன் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, அனுபமா குமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுவாஜொகர், சந்திரசேகர் மாணிக்கம், ப்ரியா சீனிவாசன், கார்த்திக் கணபதி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் தாஸ் கூறியதாவது: “ஒரு ஊரில் மென்பொருள் பணியாளர், சமூக ஊடகத்துக்கு அடிமையான ஒருவர், சி.பி.ஐ. அதிகாரி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான சம்பவம் அவர் களின் வாழ்வை புரட்டிப் போடுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள்? என்பதை திகிலாக சொல்வதே, ‘வரிசி’ என்கிறார், அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் தாஸ்.

அவர் மேலும் கூறுகையில், “பொதுவாகவே திகில் படங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும். அந்த வகையில், ‘வரிசி’யும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்” என்றார்.
அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முன்னோட்டம்.
கூர்கா படத்தை தயாரித்த 4 மங்கீஸ் ஸ்டுடியோ எனும் தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.
கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை – விஜய் தென்னரசு, நடனம் – தீனா, சண்டைப்பயற்சி – ஆக்ஷன் நூர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி இயக்கத்தில் ஆதித்ய வர்மன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ படத்தின் முன்னோட்டம்.
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் “மஞ்ச சட்ட பச்ச சட்ட” திரைப்படத்தை எழுதி இயக்கி உள்ளார், அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி. இந்த படத்தின் ஒளிப்பதிவை எம் ஆர் எம் ஜெய்சுரேஷ் கவனிக்க, இசையை கணேஷ் ராகவேந்த்ரா அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் ஏற்று நடிக்க, புதுமுகம் ஆதித்ய வர்மன் மற்றும் ரேணு சௌந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும் சுயநல கார்போரேட் ப்ரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

பணம் சம்பாதிக்க தெரியாத கதநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்னும் இக்கதையை ஒரு தோல்பாவைக் கூத்து வழியாக சொல்லி இருக்கிறார்கள்.
பா.பாண்டியன் இயக்கத்தில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கால் டாக்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.
இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.
இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் BFA கலை இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது. பென்ச்மார்க் பிலிம்ஸ் சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஶ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.






