என் மலர்tooltip icon

    தரவரிசை

    மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேட்மேன் படத்தின் விமர்சனம்.
    சூப்பர் ஹீரோவாக உருவாகி குற்றம் செய்பவர்களை கண்டு பிடிப்பவர் பேட்மேன். ஒரு சீரியல் கில்லர் தொடர்ச்சியாக முக்கிய நபர்களை கொலைசெய்கிறான். காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் பொதுவெளியில் கொலைகளை செய்து அனைவரையும் அச்சுறுத்துகிறான். அக்கொலையின் போது சில புதிர்களை விட்டு செல்கிறான். பேட்மேன் சூப்பர் ஹீரோவாக மட்டுமில்லாமல் புலனாய்வு வல்லுனர் போன்று அவருக்கு கிடைத்த புதிர்களை வைத்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். 

    இறுதியில் கொலையாளியை பேட்மேன் கண்டு பிடித்தாரா? அந்த நகரை காப்பாற்றினாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    வழக்கமான பேட்மேன் படங்கள் போல் இல்லாமல், கொலை நடக்கும் இடங்களுக்குச் செல்கிறார், விசாரிக்கிறார். ஒரே இடத்துக்குப் பல முறை செல்கிறார், விசாரிக்கிறார் எனக் கதையின் சம்பவங்களும், திரைக்கதை அமைப்பும் 'ஜோடியாக்', 'ட்ரூ டிடெக்டிவ்' பாணியை நினைவூட்டுகின்றன. 

    இயக்குனர் மேட் ரீவ்ஸ், இதுவரை இல்லாத சூப்பர் ஹீரோவை புலனாய்வு துறை பாணியில் காண்பித்து படத்தை சுவாரசியப்படுத்தியுள்ளார். திரைக்கதையின் மூலம் அனைவரின் கவனத்தையும் சிதறவிடாமல் படத்தினுள் தொடரவைத்திருக்கிறார்.

    விமர்சனம்

    ராபர்ட் பேட்டின்சன் அவருடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் இக்கதைக்கு தேர்ந்ததுப்போல் இல்லை என்று ரசிகர்களின் முணுமுணுப்பாகவுள்ளது. 

    மொத்தத்தில் ‘தி பேட்மேன்’ சாகசம் குறைவு.
    பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹே சினாமிகா படத்தின் விமர்சனம்.
    நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவ்வும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் துல்கர் சல்மானின் குணம், அதிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாதிக்கிறது. இதனால், சைக்காலஜிஸ்ட்டான காஜல் அகர்வாலிடம், தனது கணவரை காதலிப்பது போல நடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார் அதிதி ராவ்.

    துல்கர் காதலில் விழுந்தால் அதை காரணமாக வைத்து அவரைப் பிரிந்துவிட நினைக்கிறார் அதிதி. முதலில் தயங்கும் காஜல் அகர்வால், துல்கர் சல்மானை நெருங்க ஆரம்பிக்கிறார். இறுதியில், துல்கர் சல்மானை அதிதி ராவ் பிரிந்தாரா? காஜல் அகர்வால் துல்கர் சல்மானை காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துல்கர் சல்மான், பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் பேசியே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பேசுவது மட்டுமில்லாமல் கணவராக நடித்து இளம் பெண்களை ஏங்க வைத்திருக்கிறார். 

    காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்த அதிதி ராவ், இந்த படத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில பெண்களின் குணத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம். அதை உணர்ந்து சரியாக நடித்து இருக்கிறார். சைக்காலஜிஸ்ட்டாக வரும் காஜல் அகர்வால், வழக்கம் போல் தன்னுடைய அழகால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். 

    விமர்சனம்

    பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. மதன் கார்க்கியின் கதையும், திரைக்கதையும் படத்திற்கு பலம். 

    விமர்சனம்

    கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'ஹே சினாமிகா' இளமை துள்ளல்.
    போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை படத்தின் விமர்சனம்.
    மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை கடத்துகிறார்கள்.

    இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். ஒருநாள் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித். அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித்.

    விமர்சனம்

    இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் அஜித். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் அஜித்.

    வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 

    விமர்சனம்

    போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத். விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர். பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது. கிரைம் திரில்லர் மட்டுமில்லாமல், அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து ரசிகர்களும் கவரும் விதத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ஆடவும், அம்மா பாடல் உருகவும் வைத்திருக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் 'வலிமை' வீரமானவன்.
    டாம் ஹாலண்ட், மார்க் வால்ல்பெர்க் நடிப்பில் ரூபன் பிளீஷர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அன்சார்டட் படத்தின் விமர்சனம்.
    மெஜல்லன் கடற்பயணம் குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது டிரேக் சகோதரர்கள் இருவரும்
    மாட்டிக் கொள்கிறார்கள். காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, மூத்த சகோதரன் சாம் டிரேக் தன் 10 வயது சகோதரான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்ல நேருகிறது.

    15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் தம்பி நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாகிறார். இவர்கள் சாம் டிரெக் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணத்தை மேற்கொள்ள நினைக்கிறார்கள். இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, இவர்களுடன் தோழி க்ளோயி சேர்ந்து கொள்ள, இந்த பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது. 

    விமர்சனம்

    இந்த அட்வென்சர் பயணத்தில் பல சிக்கல்களும், போராட்டங்களும் நடக்கிறது. இறுதியில் இந்த அட்வென்சர் பயணம் என்ன ஆனது? புதையலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஸ்பைடர்மேன் நடித்த டாம் ஹாலண்ட் இப்படத்தில் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். காமெடி டிபார்ட்மென்ட்டைக் கூட சீனியரான மார்க் வால்பெர்க்கிற்குத் தாரை வார்த்துவிட்டு நாதன் டிரேக்காக கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். ஆனால், பல இடங்களில் ஸ்பைடர்மேனைத்தான் அவர் நியாபகப்படுத்துகிறார்.

    முதல் பாதி டிராமா கலகலவென நகர்கிறது. சோபியா அலியின் கதாப்பாத்திரம் பாத்திரம் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. டூம்ப் ரெய்டர், அசாசின்ஸ் க்ரீட், பிரின்ஸ் ஆஃப் பெர்சியா, ரெசிடன்ட் ஈவில், ஹிட்மேன் உலக வரிசையில் மற்றுமொரு உலகப் புகழ்பெற்ற ‘அன்சார்டட்’ (Uncharted) வீடியோ கேமை திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள்.

    விமர்சனம்

    நாட்டி டாக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கேமை ஒரு சாகசப் படமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் ‘ஜோம்பி லேண்ட்’ படப்புகழ் இயக்குநர் ரூபன் பிளீஷர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியை க்ளூக்களை வைத்துப் புதையலைக் கண்டறியும் ஒரு கேம் போலவே வடிவமைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘அன்சார்டட்’ அல்டிமேட்.
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வீரபாண்டியபுரம்’ படத்தின் விமர்சனம்.
    திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.

    இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

    விமர்சனம்

    சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெய்யின் தோற்றம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நியாபகப்படுத்துகிறது. நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் பாலசரவணன். ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    விமர்சனம்

    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தானா இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்ற ஆச்சரியம் பார்வையாளர்களுக்கு எழுகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை பார்த்த பழிவாங்கும் கதையை தூசி தட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. 

    இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கும் ஜெய்க்கு பாராட்டுகள். ஆனால், இவரது இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. அஜிஸின் பின்னணி இசை படத்திற்கு பலம். திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

    மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வீரம் குறைவு.
    விஜய் தமிழ்செல்வன் இயக்கத்தில் கிஷன், நந்தினி ராய், ஸ்ரீதா சிவதாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அஷ்டகர்மா படத்தின் விமர்சனம்.
    நாயகன் கிஷன் மனதத்துவ நிபுணர். இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார். அப்போது பேய் இல்லை என்று கூறும் கிஷனை ஒரு வீட்டில் தங்கும் படி கேட்கிறார்கள். கிஷனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

    பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு செல்லும் கிஷனுக்கு அனுமதி மறுக்கிறது. இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? கிஷனுக்கு அனுமதி மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் என்ற அந்தஸ்து இல்லாமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கிஷனுக்கு உதவியாளராக வரும் நாயகி நந்தினி ராய், பதட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதா சிவதாஸ், பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் ஓரளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்.

    செய்வினை, சூனியம் வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன். திகில் படங்களுக்கு உண்டான திரைக்கதை ஓரளவிற்கு இருந்தாலும், இது பேய் படமா... மந்திரவாதி படமா... என்ற குழப்பம் ஏற்படுகிறது. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. ஆனால், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தாலும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    விமர்சனம்

    முத்து கணேஷ் இசையில் ஒரேயொரு புரமோ பாடல் மட்டுமே படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பாடிய அந்த பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். குரு தேவின் ஒளிப்பதிவு நன்று.

    மொத்தத்தில் ‘அஷ்டகர்மா’ மிரட்டல் குறைவு.
    மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் கடைசி விவசாயி விமர்சனம்.
    ஒரு மரத்தை குலதெய்வமாக கும்பிடும் குக்கிராமம், அது. அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி, மாயாண்டி. தனக்கு சொந்தமான நிலத்தை தானே உழுது விவசாயம் செய்கிறார். அவருடைய நிலத்தை கையகப்படுத்த இரண்டு பேர் பணத்தை காட்டி, ஆசை வார்த்தை பேசுகிறார்கள். 

    அதற்கு மாயாண்டி மயங்காமல் விவசாயம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். ஆசை வார்த்தை பேசியவர்கள், மயில்களை கொன்று மாயாண்டியை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். பிரச்சினை கோர்ட்டுக்கு போகிறது. மாயாண்டி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டாரா?, இல்லையா? என்பதே மீதிக்கதை.

    விமர்சனம்

    மாயாண்டியாக நல்லாண்டி என்ற முதியவர் வாழ்ந்து இருக்கிறார். அவர் நடித்தது போலவே இல்லை. அவரை நடமாடவிட்டு படம் பிடித்தது போல் இருக்கிறது. அவர் தொடர்பான வசனங்களும், காட்சிகளும் இயல்பாக உள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லாமலே வசன காட்சிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. கோர்ட்டில் வெள்ளந்தியாக அவர் பேசும்போது, சிரிக்கவும் வைக்கிறார். சிந்திக்கவும் தூண்டுகிறார்.

    விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். கைகளில் துணிப்பைகளை தூக்க முடியாமல் தூக்கி வரும் பாதி மனநோயாளியாக அனுதாபத்தை சம்பாதிக்கிறார். அவருடைய முடிவு, எதிர்பாராதது.

    விமர்சனம்

    யானைப்பாகனாக யோகி பாபு, மாஜிஸ்திரேட்டாக ரேய்ச்சல் ரெபேக்கா ஆகிய இருவரும் இதயம் கவர்ந்த இதர கதாபாத்திரங்கள். இந்தக் கதைக்கும் ஒரு கிளைமேக்ஸ் உண்டு என்று காட்டியிருப்பது சுவாரஸ்யம். மணிகண்டனே ஒளிப்பதிவு செய்திருப்பதால் இன்னும் அழகாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பல இடங்களில் பொருத்தமாக ஒலிக்கிறது. 

    பல ஆண்டுகளாகப் பயிர்கள் மீது அமிலத்தை ஊற்றியிருப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன். இரண்டரை மணி நேரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் மணிகண்டன். இந்த கதைக்களத்தில் கிராமத்தின் நாடி நரம்புகளையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நுழைந்திருக்கிறது என்பதையும், ரசாயன உரங்களின் தாக்குதல் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கடைசி விவசாயி’ உயிரோட்டம்.
    மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் எப்.ஐ.ஆர் படத்தின் விமர்சனம்.
    சென்னையில் கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக பல கம்பெனிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால் (இர்பான் அகமது). இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். 

    இதே நேரம் அபு பக்கர் என்னும் தீவிரவாதியை தேசிய புலனாய்வு நிறுவனம் தேடி வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் செல்போன் விமான நிலையத்தில் காணாமல் போகிறது. இந்த செல்போனை வைத்து விமான நிலையம் அருகே வெடிகுண்டு வெடிக்கிறது. இதையடுத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் அபு பக்கர், விஷ்ணு விஷால்தான் என்று முடிவு செய்து கைது செய்யப்படுகிறார்.

    விமர்சனம்
    விஷ்ணு விஷால் - ரெபா மோனிகா

    இறுதியில் போலீஸ் பிடியில் இருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? உண்மையான தீவிரவாதி அபு பக்கர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இஸ்லாமிய இளைஞராக நடித்து அசத்தி இருக்கிறார். வழக்கமான விஷ்ணு விஷாலாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்திருக்கிறார். சாது, பாசம், ஆக்‌ஷன் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக, மதத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    விமர்சனம்
    மஞ்சிமா மோகன்

    விஷ்ணு விஷாலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் கௌதம் மேனன். என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு நிறுவனம்) அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். தனக்கே உரிய பாணியில் ஸ்டைலிஷாக பேசி அசத்தி இருக்கிறார். என்.ஐ.ஏ.வின் மற்றொரு அதிகாரிகளாக வரும் ரைசா வில்சன், ரெபா மோனிகாஜான் ஆகியோர் ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார்கள். வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்
    கவுதம் மேனன்

    துப்பறியும் ஆக்‌ஷன் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஷ்ணு விஷாலை கதாபாத்திரத்திற்காக திறம்பட தயார் படுத்தியிருக்கிறார். முஸ்லிம் மதத்தினரை சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். குறிப்பாக இந்தியன் முஸ்லிம் நாட்டு நலனுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்பதை சொல்லியதற்கு பெரிய பாராட்டுகள். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதையால் ரசிகர்களை கட்டிவைத்திருக்கிறார் இயக்குனர்.

    விமர்சனம்
    ரைசா வில்சன்

    அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இவருடைய பின்னணி இசை படத்திற்கு பலம். அதுபோல், ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் கடுமையாக உழைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘எப்.ஐ.ஆர்.’ பையர்.
    பிரயான் பி ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, பிரவீன், ஜனனி நடிப்பில் வெளியாகி இருக்கும் கூர்மன் படத்தின் விமர்சனம்.
    செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு, ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.

    இவரின் திறமையை தனக்கு சாதகமாக்கி வருகிறார் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறார் ஆடுகளம் நரேன். அந்தக் குற்றவாளி ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு கட்டளையிடுகிறார்.

    விமர்சனம்
    பால சரவணன் - ராஜாஜி

    இறுதியில் ராஜாஜி தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடித்தாரா? போலீஸ் வேலையில் இருந்து ராஜாஜி சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, கோபம், காதல், பாசம், ஆக்ரோஷம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். வசனங்கள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக வரும் பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    விமர்சனம்
    ராஜாஜி - ஆடுகளம் நரேன்

    நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பால சரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

    வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தில் இடம்பெறும் பண்ணை வீடும் அதன் சுற்றியிருக்கும் இடங்களும் அழகு. 

    விமர்சனம்
    ஜனனி

    சைக்கோ திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் 'கூர்மன்' கூர்மை.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் மகான் படத்தின் விமர்சனம்.
    காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் (விக்ரம்). சிறுவயதிலேயே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகளை தந்தையால் சொல்லிகொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார். எந்தவித ஆசையையும் அனுபவிக்காமல் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் விக்ரம். 

    இவருக்கும் காந்தியக் கொள்கைகளை கொண்ட சிம்ரனுக்கும் திருமணம் நடந்து குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் இவர்கள் வெளியூருக்கு செல்லும் போது, விக்ரம் தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ நினைக்கிறார். இந்நிலையில், சிறு வயது நண்பனான சத்யவான் (பாபி சிம்ஹா) மற்றும் அவரது மகன் ராக்கி (சனந்த்) இருவரையும் சந்திக்க நேர்கிறது. அத்துடன் விக்ரமின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. 

    விமர்சனம்

    இருவரும் சேர்ந்து மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுவிடுகிறார்கள். விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்னும் ஒரு போலீஸ் அதிகாரி (துருவ் விக்ரம்) வடிவில் பல சிக்கல் வருகிறது. இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அந்த போலீஸ் அதிகாரியை எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

    வழக்கம்போல் தன்னுடைய பாணியில் நடித்திருக்கிறார் விக்ரம். எந்த குறையும் சொல்லமுடியாதளவிற்கு அவருடைய நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிபடுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. விக்ரமிற்கு ஈடுகொடுக்கும் வகையில் துருவ் விக்ரமின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில காட்சிகளில் ரசிகர்களை நடிப்பின் மூலம் மிரட்டுகிறார். தனிகவனம் செலுத்தும் அளவிற்கு பாபி சிம்ஹாவின் நடிப்பு அமைந்துள்ளது. அவருடைய கதாப்பாத்திரத்தின் கெட்டப் மிகவும் கச்சிதம்.

    விமர்சனம்

    படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பிளாஷ்பேக் காட்சிகள் போன்ற இடங்களில் இவருடைய இயக்குனர் பணி நல்லபடியாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களை உருவாக்கிய விதமும், அவர்களிடையே வேலை வாங்கிய விதமும் அருமை.

    தன்னுடைய பணியை அழகாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா. கதையின் காட்சிகளை அவருக்கே உரித்தான வடிவமைப்பின் மூலம் காட்சிபடுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டை காட்சிகளில் இவருடைய இசை அதிக சுவாரசியத்தை கொடுத்து இருக்கிறது.

    மொத்தத்தில் ‘மகான்’ சிறந்தவன்.
    சந்தீப் சாய் இயக்கத்தில் வெங்கட், உபசனா நடிப்பில் வெளியாகி இருக்கும் யாரோ படத்தின் விமர்சனம்.
    தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் வெங்கட். இவர் கடலோரத்தில் ஒரு மிகப்பெரிய பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பங்களாவில் தன்னுடன் யாரோ ஒருவர் இருப்பதாக உணர்கிறார் வெங்கட். இதனால், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்க சொல்கிறார். அவர்களும் பங்களாவை பார்த்து இங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர்.

    ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் பெரியவர் ஒருவரை கொலை செய்வதை கண்டு வெங்கட் அதிர்ச்சியடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.

    விமர்சனம்

    இறுதியில், அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்? கொலை செய்யப்பட்ட நபர் யார்? வெங்கட்டை சுற்றி வரும் மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். ஒட்டுமொத்த கதையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. தயாரிப்பாளரும் இவராகவே இருப்பதால், படம் முழுவதும் இவரே அதிக நேரம் பயணிக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான மெனக்கெடலை செய்திருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் உபசனா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    விமர்சனம்

    படத்தின் முதல் பாதி திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியை ஓரளவிற்கு ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய். தேவை இல்லாமல் இடம்பெற்றிருக்கும் பல காட்சிகள் படத்திற்கு பலவீனம். இறுதியாக யார் அந்த கொலையாளி என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

    திகில் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கே.பி.பிரபு கொடுத்திருக்கிறார். அதேபோல், கோஸ் ப்ராங்க்ளின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘யாரோ’ மனதில் நிற்கவில்லை.
    பாலா அரன் இயக்கத்தில் நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், செல்லா, வியன், பாஸ்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் விமர்சனம்.
    சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு கதை எழுதி வைத்து தயாரிப்பாளரை தேடி வருகிறார் கதாநாயகன். இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்கும்படி கேட்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத கதாநாயகன் வேறு தயாரிப்பாளரை தேடி நகர்கிறார்.

    இதனிடையில் 1000 ஆண்டுகள் பழமையான பல கோடி மதிப்பு கொண்ட பஞ்சலோக பன்றி வடிவ சிலையை கடத்துவதற்காக ஒரு ரவுடி கும்பல் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் அந்த சிலையை தேடுகிறார்கள். இந்த கும்பலிடம் கதாநாயகன் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் இந்த கும்பலில் இருந்து நாயகன் தப்பித்தாரா? சிலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், செல்லா, வியன் மற்றும் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 

    கிரைம் காமெடியில் எழுதப்பட்ட கதையை, சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் பாலா அரன். படத்தில் வடிவமைத்திருக்கும் சில திருப்பங்கள் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

    விமர்சனம்

    விக்னேஷ் செல்வராஜின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஈர்க்கிறது. சுரேன் விகாஷின் பின்னணி இசை சில இடங்களில் படத்தின் நீரோட்டத்தில் சுவாரசியத்தை கூட்டுகிறது.

    மொத்தத்தில் 'பன்றிக்கு நன்றி சொல்லி' சிறப்பு.
    ×