என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்சார் அரசியலில் ஜனநாயகன் - Silent Mode-ல் திரைத்துறை!
    X

    சென்சார் அரசியலில் ஜனநாயகன் - Silent Mode-ல் திரைத்துறை!

    அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

    இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

    எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம்ம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள 'பராசக்தி' படத்திற்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் ஜனவரி 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்திற்கான முன்பதிவை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த 2 முக்கிய படங்களுமே சென்சார் வாரியத்தின் இழுத்தடிப்பால் சிக்கலில் மாட்டி உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி மோகன் ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    அதேபோல ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு நேரும் இத்தகு சிக்கல் சினிமாவை திட்டமிட்டுக் கொலை செய்யும் செயல் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தமிழ் திரையுலகம் பெரும் ஆபத்தில் உள்ளது என இயக்குநர் ரத்ன குமார் கூறியுள்ளார்.

    இதேபோல ஜனநாயகனுக்கு ஆதரவாக பல திரைபிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆனால் இது எதையும் குறித்து தயாரிப்பு நிறுவனங்களோ, தயாரிப்பாளர்களோ, அல்லது தயாரிப்பாளர் சங்கமோ இதுவரை வாய் திறக்கவில்லை.

    ஒரு படம் குறித்த நேரத்தில் வெளியாகாதது தயாரிப்பாளர்களுக்கே பெரும் பின்னடைவாகவும் நஷ்டமாகவும் அமையும்.

    அப்படியிருக்க தமிழ் சினிமாவில் இரு பெரும் படங்கள் குறிவைக்கப்படுவது குறித்து ஏன் ஒரு கண்டனம் கூட தயாரிப்பு வட்டாரங்களில் இருந்து வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பேசினால் மத்திய அரசை விமர்சிப்பதாகிவிடும் என மௌனம் சாதிக்கின்றனரா அல்லது விஜய் அரசியல் வருகையால் அவருக்கு நேரும் பிரச்சனை குறித்து பேசாமல் இருந்து தமிழகத்தில் ஆளும் திமுகவை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனரா என்று கருத வேண்டி உள்ளது.

    அதேபோல இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றும் சினிமா விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரம் குறித்து ஏதும் பேசாதிருப்பதும் மேற்கூறிய ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    சினிமாவில் அரசியல் சண்டை, அரசியலில் சினிமா கூத்து என்பதற்கிணங்க இந்த பொங்கல் தமிழ் சினிமாவுக்கு பேரடியாக அமைந்துள்ளது.

    Next Story
    ×