என் மலர்
சினிமா

தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு.
படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. தனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வைப்பார்கள்.
ஆனால் அதையும் மீறி சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுவது உண்டு. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63-வது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த கதையின் விவரம்:-
கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.

அப்போது கொலைக்கு பின்னால் பயங்கர சதித்திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே விஜய்யின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வந்தது. அதை விட விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
Next Story






