search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஓடிப்போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது - 2.0 படத்தில் ரஜினியின் அரசியல் சரவெடி
    X

    ஓடிப்போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது - 2.0 படத்தில் ரஜினியின் அரசியல் சரவெடி

    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னர் வெளியான பல படங்களில் ‘பஞ்ச்‘ வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய “நான் ஒரு தடவ சொன்னா... 100 தடவ சொன்ன மாதிரி” என்கிற வசனத்தை பேசாதவர்களே இருக்க முடியாது.

    அதேபோல ‘முத்து’ படத்தில் காரசாரமாக அரசியல் நெடி கலந்த ‘பஞ்ச்‘ வசனங்களை ரஜினி பேசி இருப்பார். “நான் எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்”னு அவர் பேசிய பஞ்ச் வசனம் அரசியல் பிரவேசத்தின் முன் அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.

    இப்படி தனது படங்கள் அனைத்திலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பஞ்ச் வசனங்கள் தெறிக்க விடுவதாகவே அமைந்து வந்துள்ளது.



    இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் வெளியான ‘காலா’ படத்திலும் நிச்சயமாக அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம் பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அந்த படம் முற்றிலும் மாறுபட்ட ரஜினி படமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமே காணப்பட்டது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத் தில் வெளியாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

    முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராபிக்ஸ் காட்சிகளால் மிரட்டலாக படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற படத்தில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் “ரோபோ ரஜினி”யை பஞ்ச் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்.



    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னர் அரசியல் தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன். என்னால் எம்.ஜி.ஆர். தந்த ஆட்சியை தர முடியும் என்பது போன்ற பேச்சுக்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

    ஆனால் ரஜினி இன்னும் புதுக்கட்சியை தொடங்காமலயே உள்ளார். இது தொடர்பாக ரஜினி கூறும்போதெல்லாம், நான் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினி புது கட்சியை தொடங்கமாட்டார் என்கிற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கு 2.0 படத்தில் ரஜினி பதிலடி கொடுத்துள்ளார். “ஓடிப்போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது” என்று சரவெடியாக வசனம் பேசி இருப்பதின் மூலம் தமிழக அரசியலில் தனது இடத்தை தலைவர் உறுதி செய்து வைத்திருப்பதாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன்மூலம் தான் அரசியலை விட்டு எங்கும் ஓடிப்போய் விட மாட்டேன் என்பதை ரஜினி உறுதிபட கூறி இருப்பதாகவே ரசிகர்கள் கூறியுள்ளனர்.



    சிட்டியாக வரும் ரஜினி பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். ஒரு காட்சியில் “செத்து பிழைக்கிறது தனி சுகம்” என்று சொல்லும்போது ரஜினி உடல்நலம் இல்லாமல் சென்று மீண்டு வந்ததை நினைவுபடுத்தி ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.

    “நம்பர்-1, நம்பர்-2 எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐ ஆம் தெ ஒன்லி ஒன் சூப்பர்” என்று பேசும் வசனம் கைதட்டலை அள்ளுகிறது. இதன் மூலம் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மற்ற நடிகர்களுக்கு பாடம் நடத்தி இருப்பதாகவே ரசிகர்கள் உற்சாகம் அடைகின்றனர்.

    குட்டி ரோபோவாக வரும் லட்சக்கணக்கான குட்டி ரஜினிகள் “சிங்கம் நினைச்சா கொசுவை ஒண்ணும் செய்ய முடியாது ஆனா கொசுக்கள் நினைச்சா சிங்கத்தை என்ன வேணா செய்யலாம்” என்று வில்லனாக வரும் அக்‌‌ஷய்குமாரிடம் பஞ்ச் வசனம் பேசுவதும் ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறது.

    ஆயிரக்கணக்கான ரோபோ ரஜினிக்களிடம் சிட்டி ரஜினி ‘டேய் அந்த குருவிய சுடுங்கடா என்று ஆர்டர் கொடுக்கும்போதும், வசீகரனிடம் அடங்கி நடப்பது போல வசனம் பேசிவிட்டு கைவிரலை நீட்டி தொடு பார்க்கலாம் என்று சவால் விடும்போதும் விசில் சத்தம் எழுகிறது.

    சிட்டி ரஜினி காதலி நிலாவிடம் ‘வசீகரன் படைச்சதிலேயே அற்புதமான வி‌ஷயங்கள் ரெண்டு. ஒண்ணு நான். இன்னொண்ணு நீ’ என்று வசனம் பேசும்போதும் கைதட்டல்கள் விழுகின்றன.

    படத்தின் இறுதியில் 3.0 குட்டி ரோபோ ரஜினி ‘ஐ ஆம் குட்டி. பேரன்’ என்று சொல்லும்போதும் ரசிகர்கள் பெரிதாக ரசிக்கிறார்கள்.

    இப்படி 2.0 படம் ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் 100 சதவீதம் திருப்திபடுத்தியுள்ள படமாகவே அமைந்துள்ளது.

    இது நிச்சயம் ரஜினியின் அரசியல் பயணத்துக்கு உத்வேகமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #Shankar
    Next Story
    ×