search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகி ரஜினியின் 2.0 புதிய சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்
    X

    உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகி ரஜினியின் 2.0 புதிய சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படம் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகி சாதனை படைத்துள்ளன. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். ரோபோவை மையமாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

    இந்த படத்தின் அடுத்த பாகத்தை 2.0 என்ற பெயரில் உருவாக்க 2014-ம் ஆண்டு முடிவு செய்தனர். 2015-ம் ஆண்டு தொடங்கிய 2.0 படம் இன்று வெளியானது.

    இந்தியத் திரையுலகிலேயே முதன்முறையாக 3டி கேமராவில் முழுப்படத்தையும் ஷூட் செய்திருக்கிறார்கள். உலகத்தில் முதன்முறையாக 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலியமைப்பை உருவாக்கி இருக்கிறார் ரசூல் பூக்குட்டி.

    இந்தியாவில் முதல் முறையாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே சுமார் 500 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.

    ‌ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியின் ‘2.0’ திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 10,500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ‘பாகுபலி 2’ 9000-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ‘2.0’ தற்போது முறியடித்துள்ளது.



    வட இந்தியாவில் மட்டும் 5000 தியேட்டர்களில் ‘2.0’ திரையிடப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1100, தமிழகத்தில் 900, கேரளாவில் 450, கர்நாடகாவில் 400 என இந்தியாவில் மட்டும் 7,800 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று பதிப்புகளையும் சேர்த்து 800 தியேட்டர்களில் வெளியாகின. படத்தின் வரவேற்புக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை கூடலாம். கனடாவில் மூன்று மொழி பதிப்புகளுக்கும் சேர்த்து 50 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில் மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்த படங்களில், ரஜினி படங்களே நான்கு உள்ளன. இதில் ரஜினிக்கு போட்டியே இல்லை. ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘கபாலி’, ‘காலா’ படங்களைத் தொடர்ந்து ‘2.0’வும் மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மலேசியாவில் 140 தியேட்டர்களில் ‘2.0’ வெளியாகின. இங்கு ‘கபாலி’யின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அதே போல, பிரிட்டனில் எந்திரனின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அங்கு ‘2.0’ 297 தியேட்டர்களில் வெளியாகின.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் 300லிருந்து 350 தியேட்டர்களில் ‘2.0’ வெளியானது. இங்கு மட்டும், முதல் நாளில், 700-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிகிறது. இது சமீபத்தில் வெளியான அமீர்கானின் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தானின்’ முதல் நாள் காட்சிகளை விட அதிகமாகும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் 155 தியேட்டர்களில் வெளியாகிறது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அங்கு அதிகம் வசூலித்த படமாக ‘பாகுபலி 2’ இருக்கிறது. அடுத்த இடத்தில் ‘கபாலி’ இருக்கிறது.



    ரஜினி தனது 2.0 படக்குழுவிற்கு டுவிட்டர் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் அவர், “படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அந்த மகத்தான நாள் வந்து விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று காலை 2.0 படம் வெளியானது. அதிகாலை 4 மணிக்கு சில தியேட்டர்களிலும் 7 மணிக்கு சில தியேட்டர்களிலும் வெளியானது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 8.30 மணிக்கு வெளியானது.

    இன்றைய காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் திறக்கப்பட்ட நேற்று முன்தினமே விற்கப்பட்டு காலியாகின. சில தியேட்டர்களில் இன்று காலை கவுண்டர்களில் டிக்கெட் கிடைத்ததால் அந்த தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.

    2.0 படம் 3டியில் வெளியானதால் 3டி கண்ணாடி அணிந்து ரசிகர்கள் உற்சாகமாக பார்த்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையும் 2.0-வுக்கு கிடைத்துள்ளது.

    இந்தியத் திரையுலகில் பிரமாண்டமான சயின்ஸ் பிக்சன் படங்கள் வெற்றி என்றால் ‘எந்திரன்’ மட்டுமே. ‘ரா ஒன்’ இந்திப் படம் தோல்வியைச் சந்தித்தது.

    இதனால் ‘2.0’ படமும் வெற்றி பெற்றால் இன்னும் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் மதிப்பு பலமடங்கு உயரும். நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    Next Story
    ×