search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீ டூ விவகாரம் - உண்மை வெல்லும் என வைரமுத்து மகன்கள் அறிக்கை
    X

    மீ டூ விவகாரம் - உண்மை வெல்லும் என வைரமுத்து மகன்கள் அறிக்கை

    உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.



    மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

    ‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.

    சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

    அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.

    படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

    அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

    அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.

    தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu

    Next Story
    ×