என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
    பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் ஜுராசிக் பார்க், வார் ஆப் த வேல்டு, த போஸ்ட், ஜாஸ், ரெடி இன் ப்ளேயர், முனிச், த போஸ்ட், எம்பயர் ஆப் த சன் உள்ளிட்ட படங்களை இயக்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதையும் 2 முறை பெற்று இருக்கிறார். 

    1961-ல் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வந்த நிலையில் கொரோனாவால் பணிகள் முடங்கியது. இந்த நிலையில் அடுத்து தனது குழந்தை பருவ வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். 

    ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

    சிறுவயதில் அரிஸோனா மாகாணத்தில் வளர்ந்தபோது தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தின் திரைக்கதையை அவர் எழுதி இருக்கிறார். 1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பது போன்ற கதையம்சத்தில் படம் தயாராகிறது. இந்த படத்தில் மிச்செல் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

    சின்னா, ராஜ் பிரியன், காசிமாயன் நடிப்பில் வீரங்கன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கணேசாபுரம்’ படத்தின் விமர்சனம்.
    கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் திருடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் போல் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை தனது கைக்குள் வைத்து இருக்கிறார் ஜமீந்தார் பசுபதி ராஜ்.

    ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார். 

    இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க ஆரம்பிப்பதால், நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. நண்பர்களின் சண்டையால் திருட்டு தொழிலுக்கும் செல்லாமல் இருக்கிறார்கள். 
    விமர்சனம்

    இறுதியில் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சின்னா, அம்மாசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், காலரை தூக்கிவிடுவது, லுங்கியை தூக்கி கட்டுவது, பீடி பிடிப்பது என்று அடிக்கடி செய்வதால் எரிச்சலடைய வைக்கிறது. டிக் டாக் மூலமாக பிரபலமான ராஜ் பிரியன், சின்னாவின் நண்பராக நடித்திருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நண்பராக வரும் காசிமாயனின் நடிப்பு ஓகே தான். ஆனால், இவருக்கான காதல் காட்சிகள், பாடல் என இரண்டுமே படத்தோடு ஒட்டவில்லை. 

    கயல் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகி ரிஷா புதுமுகம் என்பதால் மன்னித்து விடலாம்.

    விமர்சனம்

    நட்பு, காதல், திருட்டு என கிராமத்து பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரங்கன். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் வெளியான பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. யூகிக்கும்படியான காட்சிகள், தந்துவ வசனங்கள், இரண்டாம் பாதியின் நீளம் ஆகியவை படத்திற்கு பலவீனம். 

    வாசுவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கணேசாபுரம்’ கவரவில்லை.
    சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மீண்டும் ரிலீசாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.
    சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்’. 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. படத்தை நந்தினி தேவி பிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது.

    சிலம்பரசன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டது.

    சிம்பு

    மன்மதன் படத்தில் சிலம்பரசனுடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார். இப்படம் மீண்டும் ரிலீசாகவிருப்பது சிலம்பரசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேச்சுலர்’ படத்தின் முன்னோட்டம்.
    ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘பேச்சுலர்’. திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என்ற பரபரப்பான பிரச்சினையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் ஜீ.வி.பிரகாசுடன் திவ்ய பாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். டில்லிபாபு தயாரித்துள்ளார். 

    படத்தை பற்றி இயக்குனர் சதிஸ் கூறியதாவது: “இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொள்ளாச்சியில் இருந்து வேலைக்காக பெங்களூருக்கு போகும் இளைஞரை பற்றிய கதை. அவர் அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார். இரு வருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

    ஜீ.வி.பிரகாஷ், திவ்யா பாரதி

    இது சினிமா போல் இருக்காது. காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கும். சென்னை, பொள்ளாச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தை தியேட்டர்களில் திரையிட முயற்சித்து வருகிறோம்”.
    சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயீஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டெடி’ படத்தின் விமர்சனம்.
    அதிபுத்திசாலி இளைஞரான ஆர்யா, எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர். மறுபுறம் கல்லூரி மாணவியான சாயீஷா, ஒரு விபத்தில் சிக்குகிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு ஒரு கும்பல் செய்யும் சதிச் செயலால் சாயிஷா கோமா நிலைக்கு செல்கிறார். அவரை கடத்திச் செல்கின்றனர்.

    கோமா நிலைக்கு செல்லும் போது அருகில் இருக்கும் டெடி பியர் பொம்மையை சாயீஷா கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது. இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டெடி விமர்சனம்

    நாயகன் ஆர்யா, புத்திசாலி இளைஞனாக நடித்திருக்கிறார். அவரது வழக்கமான துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தாமல் மிடுக்கான வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். 

    நாயகி சாயீஷாவிற்கு படத்தில் சின்ன ரோல் தான். ஆரம்பத்தின் ஒரு காட்சியில் வரும் அவர், பின்னர் கிளைமாக்ஸில் தான் வருகிறார். அவருக்கு பெரிதாக ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு இப்படத்தில் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

    டெடி விமர்சனம்

    பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரது குரல் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கருணாகரன், சதீஷ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

    அனிமேஷன் கதாபாத்திரமான டெடி, படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். படம் முழுக்க ஆர்யாவுடன் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த டெடியை பார்க்கும் போது அனிமேஷன் போல் அல்லாமல் ஒரு பொம்மை நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளனர். 

    டெடி விமர்சனம்

    இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்தின் மைனஸ். மற்றபடி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார்.

    யுவாவின் ஒளிப்பதிவும் டி இமானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் யுவா, ஒவ்வொரு காட்சியை கண்களை கவரும் வகையில் வண்ணமையமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். டி இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கின்றன.

    மொத்தத்தில் ‘டெடி’ அழகு.
    இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’, ‘லாபம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துகளை உடைய படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவருடைய இயக்கத்தில் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இடதுசாரி ஆதரவாளரான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் இயக்கிய முதல் படமான ‘இயற்கை’ தேசிய விருதை வென்றது.

    இவர் இயக்கத்தில் அடுத்து விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிப்பில் ‘லாபம்’ படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். 

    நேற்று மதியம் எடிட்டிங் பணிகளில் இருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

    எஸ்.பி.ஜனநாதன்

    அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவரிடம் உதவியாளராக பணியாற்றி வரும் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான தகவல் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் ஆடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    பிரபாஸ் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆதிபுருஷ்’ படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.
    பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். 

    படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்கிறார். 

    சன்னி சிங், பிரபாஸ், கீர்த்தி சனோன்

    ராமாயண கதைப்படி சீதாவின் கதாபாத்திரமும் முக்கியமானது தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்துவந்த படக்குழு, தற்போது பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், சீதையாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் லட்சுமணனாக நடிக்க இந்தி நடிகர் சன்னி சிங் ஒப்பந்தமாகி உள்ளார்.
    நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கியவரும், விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

    நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தீ இவன் படக்குழு

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில், 45 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் கவர்ச்சி நடன பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விக்ரம், துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்குகிறார். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

    பாபி சிம்ஹா

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஜிகர்தண்டா படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


    குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
    தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

    அண்ணனுடன் ஹன்சிகா

    இந்நிலையில் நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறதாம். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளதாம்.
    ராசு ரஞ்சித் இயக்கத்தில் ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘தீதும் நன்றும்’ படத்தின் விமர்சனம்.
    ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந்தவர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள். இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.

    ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே காதல் மலர்கிறது. அபர்ணாவின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் இவருக்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள்.

    தீதும் நன்றும் விமர்சனம்

    ஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. சந்தீப்ராஜு தப்பி ஓடுகிறார். ராசு ரஞ்சித்தையும், ஈசனும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.

    ராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

    தீதும் நன்றும் விமர்சனம்

    இவருடைய நண்பரான ஈசனுக்கும், அபர்ணாவுக்குமான நெருக்கமான காட்சிகள், மோகத்தீ மூட்டுகிறது. சுகத்தையும், சோகத்தையும் அபர்ணா ஆழமும், அகலமுமான கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவருக்கு சரியான போட்டி, லிஜோமோள். நடை, உடை, பாவனைகளில் வசீகரிக்கிறார். வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு. 

    இயக்குனர் ராசு ரஞ்சித்திற்கு இது முதல் படம். படம் முழுக்க அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பினும், கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். படத்தொகுப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதையும் ராசு ரஞ்சித் தான் செய்துள்ளார்.

    தீதும் நன்றும் விமர்சனம்

    தாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளையை திரைக்கதையாக கொண்ட படம் என்பதால் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் கெவின்ராஜ். இசையமைப்பாளர் சத்யா, பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். 

    மொத்தத்தில் ‘தீதும் நன்றும்’ விறுவிறுப்பு.
    விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘99 ஸாங்ஸ்’.
    ‘99 ஸாங்ஸ்’ தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். ஏனெனில் இப்படத்திற்கு அவர் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரே கதையும் எழுதி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படம், 2015ல் தொடங்கப்பட்டது. இதில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.  

    99 ஸாங்ஸ் பட போஸ்டர்

    இந்நிலையில், ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 16-ந் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இசையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×